அசோகமித்திரனும் புவியரசுவும்-சக்திவேல்

புவியரசு ஆவணப்படம் – கடிதம்

புவி 90 ஆவணப்படம்

அன்புள்ள ஜெ

நேற்று கவிஞர் புவியரசு அவர்களை பற்றிய விஷ்ணுபுரம் ஆவணப்படத்தையும் இன்று அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படத்தையும் பார்த்தேன். இருவரையுமே அவர்களின் படைப்புகளின் வழி சிறிதே அறிந்துள்ளேன்.

கவிஞர் புவியரசு அவர்களை பெரும்பாலனவர்களை போலவே அவரது ஓஷோ மொழியாக்கங்கள் வழியே அறிமுகம். அந்த மொழியாக்கங்கள் மிக பிடித்தவை. ஓஷோவே தமிழில் நம்மோடு உரையாடுவது போல் உணர வைப்பவை. அதன் பிறகு சென்ற ஆண்டு படித்த கரமசோவ் சகோதரர்கள் நாவல். தஸ்தாயெவ்ஸ்கியின் அந்த நீண்ட தன்னுரை பாய்ச்சல்களை உணர வைப்பவை. மாபெரும் விசாரணை பகுதியும் இவானின் மனப்பிறழ்வு நிலையும் இருவகை உச்சங்கள். அவையிரண்டும் தமிழில் வாசிக்கும் எனக்கு மொழியாக்கத்தின் வழி கிடைத்த செல்வங்கள்.

இவை மட்டுமே புவியரசு அவர்களது மொழியாக்க நூல்களின் வழி நான் அறிந்தவை. இந்த ஆவணப்படம் அவரது வெவ்வேறு முகங்களை சுருக்கமாக செறிவாக காட்டி செல்கிறது. மிக நல்ல அனுபவம்.

இதற்கு அடுத்து இப்போது கண்ட அசோகமித்திரனின் ஆவணப்படம் மிக பிரமாதம். சென்ற மாதம் தான் அவரது தண்ணீர் நாவலை வாசித்தேன். நான் வாசிக்கும் அவரது முதல் படைப்பு. உங்களுக்கு அடுத்து இத்தனை நெருக்கமாக உணர்ந்த இன்னொரு எழுத்தாளர் அவரே. என்னை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை. அங்கிருந்து எழும் அற்புதமான வாழ்க்கை தருணங்கள். அன்றாடத்தை இத்தனை நெருக்கமும் நுண்மையும் கொண்டு காட்சியாக்குவது ! சில நாட்கள் அவரது நினைவே இருந்தது. இந்த படம் அவரை கண்டு மகிழ அரியதொரு ஆவணம். அந்த தகவல்களை நான் புத்தகங்களில் இருந்து அறிந்து கொள்ள முடியும். ஆனால் காலத்தில் கரைந்து சென்றுவிட்ட அந்த குரலையும் நடையையும் முக பாவனைகளையும் என் தலைமுறையை சேர்ந்தவர்கள் இனி இவ்வண்ணம் மட்டுமே அறிய முடியும்.

இவர்களிருவரையும் பார்க்கையில் ஆச்சரியமாக ஒரு விஷயத்தை உணர்ந்தேன். புவியரசு அவர்கள் பேசுவதை காண்கையில் பத்தாண்டுகளுக்கு முன் பார்த்த என் தாத்தாவின் அதே சாயல். குரலில் மட்டுமல்ல, ஒரு சம்பவத்தை அவர் விவரிக்கும் முறையில், கருத்துகளின் மேலான அவரது பிடிப்புணர்வை பார்க்கையில் எல்லாம் தாத்தாவே நினைவுக்கு வருகிறார்.

அதேபோல அசோகமித்திரனை கேட்கையில் எங்கோ அவரது அந்த குரலையும் பாவத்தையும் என் இளமையில் கண்ட உணர்வே ஏற்படுகிறது. இந்த உணர்வுகள் ஒருவகையில் அவர்களை அணுக்கமாக உணர செய்கிறது.

இவற்றை சொல்லி வருகையில் எனக்கொரு கேள்வி எழுகிறது. உங்களது நீண்ட பயணத்தில் இதேபோன்று இதைவிட தீவிரமாக அனுபவங்களை அடைந்திருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாழும் மனிதர்களில் இருக்கும் ஓரே போன்ற அம்சங்கள் அந்த காலக்கட்டத்தில் வாழும் முதன்மையான ஆளுமைகளிலும் வெளிப்படுவது எப்படி ? அதன் வேறுபாடு எவ்வண்ணம் துலங்கி வருகிறது ?

இப்போது இந்த கேள்வியை சரியாக கேட்டதாகவே எனக்கு தோன்றவில்லை. ஏதோ ஒன்றை இன்னும் சரியாக கேட்க முடியாத, சொல் திரளா வினாவாகவே உள்ளது அது. இந்த கடிதத்தில் இருந்து நீங்கள் அந்த தயக்கத்தை கண்டுபிடித்து விடுவீர்கள்.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைதம்பி- ஒரு வாசிப்பு
அடுத்த கட்டுரைஊர்!