உங்களுடய சில கட்டுரைகளில் ஒரு இலக்கிய வாசகன் நுண்ணுணர்வும் கூர்மையும் கொண்டவன் என்றும், அந்த நுண்ணுணர் பிறவியிலே வரும் என்கிறீர். ஆனால் புது வாசகன் தன்னுள் நுண்ணுணர்வும் இல்லாதவன் (இருப்பதை அறியாதவன்) அதை அடைவதற்கான வழிகள் ஏதேனும் உள்ளதா? அல்லது இதைபற்றிய கவலை அவனுக்கு அர்த்தமற்றத?
நன்றி
விஜய்
***
அன்புள்ள விஜய்
எந்தக் கலைக்கும் அதற்குரிய நுண்ணுணர்வை அடைய ஒரே வழி சிலகாலம் அதில் ஈடுபடுவதே. தொடக்ககால தத்தளிப்புகள், தாழ்வுணர்ச்சிகளை பொருட்படுத்தாமல் குறைந்தது இரண்டு ஆண்டு தொடர்ந்து வாசியுங்கள். உங்களுக்கே நுண்ணுணர்வுகள் உருவாகும்.
அத்துடன் இலக்கியம் சார்ந்த விமர்சனங்கள், விவாதங்களை கவனியுங்கள். (அரசியல், கோட்பாட்டு விமர்சனங்களை அறவே தவிர்த்துவிடுங்கள். நான் சொல்வது அழகியல் விமர்சனங்கள், ரசனை விமர்சனங்களை. அரசியல், கோட்பாட்டு விமர்சனங்கள் இலக்கியத்தை சடலப்பரிசோதனை செய்பவை. நுண்ணுணர்வுக்கு நேர் எதிரானவை) கூட்டுவாசிப்பு வழியாக நம் நுண்ணுணர்வுகள் மேம்படும்.
இவற்றுடன் ஒன்று, வாசிப்பை உங்கள் சொந்த அனுபவங்களுடன் நீங்கள் அறியும் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்த்துக்கொண்டே இருங்கள். இலக்கியம் என்பது வாழ்க்கைமேல் விமர்சனம், வாழ்க்கையின் விரிவாக்கம். வாழ்க்கை சார்ந்த நுண்ணுணர்வே இலக்கிய நுண்ணுணர்வு என்பது. ஒரு கதையில் ஒரு நிகழ்வை பார்க்கிறீர்கள், அது வாழ்க்கையில் அப்படி அல்ல என உணர்கிறீர்கள், ஆகவே அதை நிராகரிக்கிறீர்கள்- இதுவே நுண்ணுணர்வு. இலக்கியத்தை வாழ்க்கையாலும் வாழ்க்கையை இலக்கியத்தாலும் அர்த்தப்படுத்திக்கொண்டே இருங்கள்.
ஜெ