மொழியாக்கங்களை வாசிப்பது
அன்புள்ள ஜெ.
மொழியாக்கங்களை வாசிப்பது குறித்த தங்கள் கட்டுரையைப் படித்தேன். எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன். பல வருடங்களுக்கு முன் பொது நூலகம் ஒன்றில் சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரங்களின் கதை ( the tale of two cities ) நாவலின் தமிழாக்கம் கிடைத்தது. மொழிபெயர்ப்பு பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார். இது மாதிரி நிறைய மொழிபெயர்த்து வைத்திருந்தார். எனக்கு அவரைப்பற்றி எதுவும் தெரியாது.இருப்பினும் ஒரு துணிச்சலில் வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். நான் வேகமாக வாசிப்பவன். எவ்வளவு கடுமையாக முயற்சித்தும் நான்கு பக்கங்களுக்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. கடுமையான தலைவலி. காரணம் மிகக் கடுமையான தமிழ்நடை. வக்காளி என்னைத் தவிர ஒரு பய இத படிக்கக் கூடாதுடா இனிமே லைப்ரரி பக்கம் வருவீங்க என அப்பாத்துரையார் என்னைப் பார்த்து சிரிப்பதைப் போன்று இருந்தது. ஒருவேளை இந்த நாவலே இப்படித்தான் இருக்கும்போல என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். அதன்பிறகு சூடான பாலில் வாயை சுட்டுக் கொண்ட பூனை மாதிரி மொழிபெயர்ப்பு நாவல்கள் பக்கம் திரும்பியதில்லை.
நிற்க. சில மாதங்களுக்கு முன் கிண்டிலில் உலவியபோது the tale of two cities ஆங்கில நாவல் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. இந்த தடவை முயற்சித்துப் பார்த்து விடுவோம் என்று இறங்கினேன். வெண்ணெயில் சூடான கத்தி இறங்குவது மாதிரியான மொழிநடை. வழுக்கிக் கொண்டு போவது போல் உணர்ந்தேன். என்ன ஏது என உணர்வதற்குள் பத்து பக்கங்கள் படித்து முடித்திருந்தேன். தவறு என் மீதா, அப்பாத்துரையார் மீது என்று புரியவில்லை.
எளிய மொழிநடை கொண்ட மொழிபெயர்ப்பு புத்தகங்களை தாங்கள் பரிந்துரை செய்யலாமே. இது என் வேண்டுகோள்.
அன்புடன்
தண்டபாணி.
***
அன்புள்ள தண்டபாணி
தமிழில் உண்மையாகவே மொழியாக்க நூல்களில் பெரிய சிக்கல்கள் உள்ளன. ஒன்று, ஆங்கிலத்தின் சொற்றொடரமைப்பு தமிழுக்கு அன்னியமானது. அதை தமிழ்ச்சொற்றொடர்களாக திரும்ப அமைக்காவிட்டால் அந்த சொற்றொடர்கள் நம் மூளைக்கு புரிவதில்லை. ஆகவே ஒரு நூல் முழுக்கமுழுக்க தமிழாகவே அமையவேண்டும் என்பது மிக முக்கியம். முதல் இரு பக்கங்களை வாசியுங்கள். உண்மையில் தமிழ் மொழிக்கான ஓட்டம் இருந்தால் வாசியுங்கள். இல்லையேல் ‘கஷ்டப்பட்டு’ வாசிக்கலாமென எண்ணாதீர்கள். அந்த வாசிப்பால் பயனில்லை. இலக்கிய அனுபவத்தை இழந்துவிடுவீர்கள்.
இலக்கிய நுண்செய்திகளை மொழியாக்கம் செய்வதில் சில சவால்கள் உள்ளன. சில மொழியாட்சிகள் சில வகை சொலவடைகள் மொழியாக்கத்தில் தவறிவிடும். அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. தமிழிலேயே ஆனாலும் நாம் இலக்கிய ஆக்கங்களை கொஞ்சம் கற்பனை கலந்துதானே வாசிக்கிறோம். இன்னொரு பண்பாட்டையும் நம்மால் கற்பனையில் விரிவாக்கிக்கொள்ள முடியும்.
கொள்கைகள், கோட்பாடுகள் பற்றிய நூல் என்றால் கலைச்சொல்லடைவு உள்ளதா என்று பார்க்கவும். அதிலுள்ள கலைச்சொற்களில் சிலவற்றை கூகிளில் தேடி அங்கே பொருள் கிடைக்கிறதா என்று பார்க்கவும். ஏற்கனவே புழக்கத்திலுள்ள சொற்களெல்லாமே விக்ஸ்னரியில் உள்ளன. அப்படியன்றி ஆசிரியர் மனம்போன போக்கில் கலைச்சொல்லாக்கம் செய்திருந்தால் அந்நூலை தவிர்க்கவும். ஆனால் நாமறியா கலைச்சொல் கொண்ட நூலை வாசிப்பது கொஞ்சம் கடினம். முயற்சி எடுத்து பயிலவேண்டும். அந்நூல் முக்கியமானது என்றால் அதற்கான பயனும் நமக்குண்டு.
நல்ல மொழியாக்கங்களை நான் சுட்டிக்கொண்டே இருக்கிறேன். முழுப்பட்டியலை அளிப்பது நடக்காத காரியம்
ஜெ