உணர்வுகள், உன்னதங்கள் கடிதங்கள்-2

உணர்வுகள், உன்னதங்கள்

அன்புள்ள ஜெ

உணர்வுகள் உன்னதங்கள் என்னும் கட்டுரை முக்கியமானது. இலக்கியவாசகனிடம் அந்த அனுபவமே இல்லாதவர்கள் அவன் இறுக்கமாக, மூளைக்குள் அரிவாளுடன் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவனுடைய உணர்ச்சிகளை கேலிசெய்து செண்டிமென்ட் என்கிறார்கள். இப்படி சொல்பவர்களை நான் பார்த்திருக்கிறேன். உணர்ச்சிநிலைகளை கேலி செய்பவர்கள் அல்லது ஆராய்பவர்களுக்கு எந்த இலக்கியப்படைப்பிலும் நுட்பம் என எதுவுமே பிடிகிடைப்பதில்லை. அவர்களுக்கே உரிய பிரைவேட் எக்ஸ்பீரியன்ஸ் என்பதும் இருப்பதில்லை. அவர்கள் மிகமிக பொதுவான அரசியல் கருத்துக்கள் அல்லது வடிவம் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.இலக்கியவாசகனுக்கு எது செண்டிமென்ட் என்று தெரியும். லக்ஷ்மி நாவலுக்கும் டால்ஸ்டாய் நாவலுக்கும் வேறுபாடும் தெரியும். அந்த வேறுபாட்டை இக்கட்டுரையில் வகுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். நானறிந்து தமிழ்நாட்டில் மட்டும்தான் வாசிப்பு நுண்ணுணர்வு இரண்டுமே கம்மியானவர்கள் இரண்டுமே அதிகமானவர்களுக்கு இலக்கிய ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நுண்ணுணர்வு இல்லாததனால்தான் சொல்கிறார்களோ என்னவோ.

அர்விந்த்குமார்

அன்புள்ள ஜெ

உணர்வுகள் உன்னதங்கள் கட்டுரையில் அளிக்கப்பட்டிருக்கும் பெயிண்டிங்குகளை பார்த்தேன். உதயம், bliss ஆகியவற்றின் வேறுவேறு நிலைகள். அவற்றை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து அவற்றுக்கு நடுவே உள்ள பரிணாமத்தை விளக்கும்பொருட்டு அளித்திருக்கிறீர்கள். பலர் கவனித்திருக்க மாட்டார்கள்.

சந்திரசேகர்

அன்புள்ள ஜெ

உணர்வுகள் உன்னதங்கள் வாசித்தேன். தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் உண்டு. எவ்வளவு குடித்தாலும் சோபர் ஆக இருப்பார்கள். சோபர் ஆக இருந்து மற்றவர்களை பார்க்கவே குடிப்பார்கள். இலக்கியத்திலும் அதுபோலத்தான். கருத்து மட்டுமே கண்ணுக்குப்படும். ஸ்கூலில் திரண்டபொருள் யாது என்று கட்டுரை எழுதிப்பழகிய கூட்டம். அழகும் உணர்ச்சியும் உன்னதமும் தெரியவே தெரியாது. நான் அவர்களை சிமிண்ட் பொம்மைகள் என்பதுண்டு. சுருக்கமாக சிமிண்ட்.  சிமிண்ட் அப்படித்தான் நெகிழவே நெகிழாது. உடைக்கத்தான் முடியும். ஒருமணிநேரத்தில் செட் ஆனால் வாழ்க்கை முழுக்க கல்தான். இவர்களும் அப்படித்தான். பதினைந்து பதினாறு வயதுக்குள் இறுகிவிடுகிறார்கள்.

எம்.அருண்குமார்

உணர்வுகள் உன்னதங்கள் கடிதங்கள்

முந்தைய கட்டுரைசடம் -ஒரு வினா
அடுத்த கட்டுரைஆழங்களில் எல்லாமே விதியாகிறது- விஷால் ராஜா