சடம் கடிதங்கள்-4

சடம் [சிறுகதை] ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

தங்களுடைய ‘சடம்’ கதையை வாசித்தேன். தொடர்ந்து வந்த வாசகர் கடிதங்களையும் வாசித்தேன். பூடகமான முடிவைக் கொண்ட கதையை விட வாசகர் கடிதங்கள் மனதில் அதிக  அதிர்ச்சிகளைத் தந்ததால் இக்கடிதம். எனது கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லாதிருப்பின் அதையும் புரிந்து கொள்வேன்.

“ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான்”என்ற சாமுவேல் சான்சன் அவர்களின் கூற்றுக்கு அமைய எனது கருத்தினையும் முன்வைக்க விரும்புகின்றேன்.

‘காட்டின் நடுவே அந்த பாதை ஒரு பெரிய சிவப்பு கொடிபோல கிடந்தது’ என்பதை ஒத்து இயல்பான உரையாடல்களோடும் காட்டின் அழகுகளுடனும், மானுட  நடத்தை  விந்தைகளுடனும்  நீளும் கதையில் பல இடங்களில் மனம் இடறி வீழ்ந்தது. கீறல்களால் காயமடைந்தது. அவை யாவும் பெண்மையை அதன் வலியை கீழ்த்தரமாக ரசிக்கும் ஆணிய மனப்பான்மை கொண்ட கதாபாத்திரங்களின் உரையாடல்களால் ஏற்பட்டது. கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை மதித்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையினரில் சிலர் இவ்வாறு கொடூரசிந்தை கொள்வதுண்டு.உண்மை.

உதாரணத்துக்கு சில…

” அந்த மேனோன் குட்டிக்கு கொரங்குக்குட்டி பிறந்தா நல்ல சேலாட்டு இருக்கும் இல்லவே?”

நாராயணன் “ஹிஹிஹி” என்று ஓசையிட்டு சிரித்தார்……”

“ரெண்டாயிரம் கொறையாது”…

“உள்ள அது அரைச்சவமாட்டு கிடக்குது. பாயில நல்ல ரெத்தம் வேற… கிட்டப்பன் ஆளு நல்ல எருமை மாதிரியாக்கும். அவன் அடிச்ச அடியிலே அப்டியே குட்டிக்குப் போதம் போயிட்டுது.  நான் போனப்ப முளிச்சுக்கிட்டு பயந்து அலறுது… எந்திரிச்சு ஓடப்பாத்துது. பிடிச்சு போட்டு ஏறிட்டேன்… அது ஒரு அனுபவம்டே… அவ அலறிகிட்டே இருந்தா. அறுக்கப்போற கோளி சிறகடிச்சு கத்துறது மாதிரி…”

“அய்யோ!” என்றபடி நாராயணன் நின்று விட்டார். முகம் புன்னகையில் மலர்ந்திருந்தது….

“குட்டி நல்லா பயந்து கதறி அழுது கூப்பாடுபோட்டு துள்ளிச்சாடி மறிஞ்சாத்தான் ஒரு ரெசம்”

தங்கள் தளத்திலிருந்து சில வாசகர் கருத்துகள்…

‘சித்தமும் ஜடமும் இணைந்த சிஜ்ஜடம்’

‘சிவம்தான் சித்தம். ஆகவே சிவம்தான் ஜடத்தை சிஜ்ஜடம் ஆக்குகிறது’

‘அந்தப் பிணம் பெண்ணாகும் தருணம்தான் கதையின் உச்சம்’

‘அந்தக்காமம் அழகுணர்வாக வெளிப்படுகிறது. அவர் அந்தப்பிணத்தை புணர்கிறார். அது உயிர் கொள்கிறது.’

‘அந்தப் போலீஸ்காரரின் உள்ளிருக்கும் உக்கிரமான காமம் ஜடத்தை உயிர்கொள்ள வைக்கிக்கிறது. அந்த காமம்தான் உயிரின் ஆதி விசை. குண்டலினி சக்தி’.

கதையை ஜீரணித்த என்னால் வாசகர் கடிதத்தின் ல கருத்துகளை ஏற்க முடியவில்லை.  கதையின் ஆசிரியர் எதை நினைத்து எழுதினார் என்று கேட்பது நியாயமல்ல.

ஆனால் கொடூர வக்ர புத்தி கொண்ட காமுகனின் காமம் உயிரின் ஆதிசக்தியாகவும், சடத்தினை   உயிர்கொள்ள வைக்கும் சித்தமாக ஆன சிவமாகவும் உருவகமாவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

‘சிஜ்ஜடம்’ என்ற சொல்லால் தாங்களும் இக்கருத்தினையே வலியுறுத்த நினைத்திருந்தால் அதற்காகவும் வருந்துகிறேன்.

கொலையை விடக் கொடியது பாலியல் வன்புணர்வு. குற்றம் புரிந்தவனை விட உயிர்ப்புடன் இருக்கும் ஒரு பெண்மனதை சடமாக்கும் வல்லமை பாலியல் வன்புணர்வுகளுக்கு உண்டு. அந்த வலியை தன் நிலை யாகக் கொண்டு உணர்ந்தால் மட்டுமே புரியும்.

வாசகர் கடிதங்களின் படி,ஒரு சடலத்தை வன்புணர்ந்து ‘உயிர்ப்பித்தல்’  பெண்மைக்கு செய்யப்படும் மாபெரும் அவமானம்.அங்கு காமம் மட்டுமே இருந்தது. அழகுணர்வும் ரசனையும் கொண்டு பெண்மனதை உயிர்ப்பிக்கும் காதல் அங்கு இல்லவே இல்லை.

என்னைப் பொறுத்தவரை இக்கதையில் வரும்’மேனோனுக்க குலதெய்வம் இங்க எங்கியோ இருக்கு. வனதுர்க்கை….’என்ற வசனமே கதையின் மர்மமுடிச்சு எனக் கருதுகிறேன். அந்த காமுகனால் சித்தம் சரியில்லாத அந்தப் பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட அக்கிரமத்துக்கு பழிவாங்கும் முகமாக குலதெய்வமாகிய வனதுர்க்கையே இந்த உயிர்ப்பினை அல்லது ஊடுருவலை  அவள்பால்   நிகழ்த்தியதாக  நம்புகின்றேன்.

‘சட்டென்று ஒரு முனகலோசையுடன் அவள் உடல் அசைவுகொண்டது. கைகள் அவரை வளைத்து இறுக்கிக் கொண்டன’அவள் காமத்தால் உயிர்ப்புக் கொள்ளவில்லை. வனதேவதையின் ஆட்கொள்ளலால் அந்தக் காமுகனை சடமாக்குவதையே தன் சித்தமாகக் கொண்டாள் என்பதே உண்மையாக வேண்டும்.

இதே சம்பவம் நம் சமூகத்தில் நடந்திருந்தால் இதை அழகுணர்வின் கீழ் வகைப்படுத்தி இருப்போமா? நிச்சயமாக இல்லை. இது முன்னுதாரணமாகி விடக் கூடாது.

தலைப்பு ஞாபகத்தில் இல்லாவிடினும் தங்களது பல சிறுகதைகள்  கருவாலும் உருவாலும் ஞாபகத்தில் நிலைத்து நிற்கின்றன. ஆனால், சடம் சிறுகதையின் சித்தரிப்புகள்  மனித  இயல்புகளில் ஒரு பகுதி என்பது புரிந்தாலும், ஒரு புனைகதையாளராக  கதையின் மூலம் சொல்ல வரும் ‘சடலத்தின் உயிர்ப்பு’ என்ற  சேதியின் தாத்பரியம் என்னவாக இருக்கும் என்பது மட்டுமே மனதுக்கு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது.

அன்பான வாழ்த்துகளுடன்

ரஞ்ஜனி சுப்ரமணியம்

சடம் கடிதங்கள்-3

சடம் கடிதங்கள்-2

சடம்- கடிதங்கள்

முந்தைய கட்டுரைநாளை மற்றுமொரு நாளே- கிறிஸ்டி
அடுத்த கட்டுரைஇந்தியப் பயணம், கடிதங்கள்