விண்மீன்கள் – கடிதங்கள்

விண்மீன்கள் நிறைந்த இரவு-நித்யா

அன்புநிறை ஜெ,

குரு நித்யாவின் “விண்மீன்கள் நிறைந்த இரவு” வாசித்தேன்.

இயற்கையின் முன் உள்ளம் அடையும் எழுச்சியை மகிழ்ச்சியை நெகிழ்வை நினைவுறுத்தும் குருவின் சொற்கள்.

சில நாட்கள் முன் பார்த்த நூற்றுக்கணக்கான அல்லிகளும் தாமரைகளும் மலர்ந்த குளத்தின் காட்சியும் , ஆயிரக்கணக்கான விண்மீன்கள் நிறைந்த மலைகளின் இரவு வானமும் கண்முன் எழுந்தது. நூற்றுக்கணக்கான சிந்தனைகளும் உணர்வுகளும் மின்னி மறையும் மனித அகமும் ஒரு அற்புதம்தான்.

நம் எண்ணத்திலிருக்கும் மந்திரமே தன்னளவில் ஒரு தியானம் எனும் போது, இங்கு இயற்கையில் ஒவ்வொன்றும் தியானத்தில் இருக்கின்றன.  பிரபஞ்ச தியானம்.

அது –
நிலவிலும் விண்மீன்களிலும் வசிக்கிறது;
நிலவுக்குள்ளும் விண்மீன்களுக்குள்ளும் உறைகிறது;
நிலவாலும் விண்மீன்களாலும் அறியப்படாதது;
நிலவும் விண்மீன்களும் அதன் உடல்;
அதுவே நிலவையும் விண்மீன்களையும் உள்ளிருந்து ஆள்கிறது.
அதுவே உனது ஆத்மன்!
அழிவற்ற உன் ஆத்மனே
உன்னையும் உள்ளிருந்து இயக்குகிறான்.

அன்றாடத்தில் காலூன்றியபடியே விண்ணின் ஆயிரமாயிரம்  ஒளித்துளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் இவ்விரவு வேளையில் அதுவும் அங்கிருந்து  நம் உள்ளே இருக்கும் ஒன்றை நோக்கிக் கொண்டிருப்பது தெரிகிறது.  எல்லையற்ற இருள் வெளியில் தங்கத்துகள்கள் மினுங்கும் இரவு வானைப் போல, மலர்வதன் முன்னரே மொட்டுகளுக்குள் குடியேறிய நறுமணத்தைப் போல, மகத்தான சாத்தியங்களுடன்  அனைத்திலும் உறையும் அதை  ’ஹா’ என்ற வியப்பின் ஒலி கொண்டு அர்ச்சிக்கிறேன்.

”உபநிடதம் என்பதன் பொருளே அருகே அமர்தல். அன்புக்கும் அழகுக்கும் நட்புக்கும் இசைக்கும் அருகே சென்று நம்மை அமரச் சொல்வதே உபநிடதங்களின் செய்திகளுள் ஒன்றாகும்” – அது அமையட்டும் என்ற விண்ணப்பத்தோடு பிரபஞ்ச தியானத்தில் ஒரு துளியாகிக் கொள்கிறேன்.

மிக்க அன்புடன்,

சுபா.

அன்புள்ள ஜெ

விண்மீன்கள் நிறைந்த இரவு ஓர் அழகான கட்டுரை. அதிலுள்ளது புதிய கருத்துக்கள் அல்ல. தொன்மையான என்றுமுள்ள கருத்துக்கள்தான். விண்மீன்களைப்போல. அவை என்றும் அப்படியே அங்கேயே இருக்கும். நாம் நம்முடைய சின்ன வாழ்க்கையில் உழல்கையில் எப்போதாவது அண்ணாந்து பார்க்கிறோம். நம் மனம் திகைப்பும் பிரமிப்பும் அடைகிறது. நம் வாழ்க்கையின் அர்த்தமென்ன என்று சிந்திக்கிறோம். நம் அன்றாடத்தின் சிறுமைகளில் இருந்து சிறிது மேலெழுகிறோம். மீண்டும் நாம் சிறுமைக்கே திரும்பி வரலாம். ஆனாலும் அந்த மேல்ழும்தருணங்களே வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன.குருநாதர்கள் சிந்தனையாளர்கள் அல்ல. அவர்கள் புதியவற்றைச் சொல்வதில்லை. மேலே விண்மீன்களைப்போல எப்போதும் நம்மிடம் ஒன்றையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

ஸ்ரீனிவாஸ்

முந்தைய கட்டுரைஉதிர்பவை மலர்பவை
அடுத்த கட்டுரைசடம் கடிதங்கள்-5