காதுகள், கடிதங்கள்

காதுகள் – சொற்பொருட் பேதத்தின் விளையாட்டுக் களம்- அந்தியூர் மணி

அன்புள்ள ஜெயமோகன்,

அந்தியூர் மணியின் “காதுகள்” குறித்த கட்டுரை அனுபவத்தின் விளைவாக எழுதப்பட்டதால் மேலும் உண்மைக்கு அருகமைந்தது.

கற்றலுக்கும் கேட்டலுக்கும் உள்ள வேறுபாடு மிகவும் விரிவானது‌.அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே ஆன பேதத்தினை நமது சாதாரண அறிவைக் கொண்டு முற்றிலும் புரிந்து கொள்ள இயலாது.

சமூகம் வரையறை  செய்யும தனிமனித ஒழுக்கத்திற்கும் தன் இயல்பான மன உடல் இயக்கங்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் வெற்றி பெற முழுவதுமாக தன்னை படைத்து இயக்கும் பரம்பொருளிடமே சரணடைவதே இந்த சுழலியில் இருந்து வெளிவர ஒரே வழி.

நெல்சன்

அன்புள்ள ஜெ

காதுகள் நாவலின் மீதான அந்தியூர் மணி அவர்களின் வாசிப்பு மிகச்சிறப்பாக இருந்தது.  மகாலிங்கத்தின் சிக்கல் சிசோபிர்னியா அல்ல. மனம் ஒரு டிராக்கில் இருந்து இன்னொரு டிராக்குக்கு போய்விட்டதுதான். வார்த்தை என்பது அர்த்தம் -ஒலி என்ற இரண்டில் இருந்தும் பிரிந்து மந்த்ரரூபமாக ஆகிவிட்டதுதான். தற்செயலாக இதுநிகழ்கிறது

“ஒருபுறம் தவறுதலாகத் திறந்துவிட்ட மந்திர தளத்தின் துளிக்குப்பின் வெளிவரத்துடிக்கும் பெருங்கடல்,அதை வெளிவராமல் தடுக்க முயலும் சமகால ஒழுக்க அளவுகோல்கள்” என்று மிகச்சிறப்பாக தொகுத்துச் சொல்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இப்படி ஒரு அபாரமான வாசிப்பு அந்நாவலுக்கு வந்திருக்கிறது.

சாரநாதன்

முந்தைய கட்டுரைநூறு நாற்காலிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉரைகள், கடிதங்கள்