சடம் [சிறுகதை] ஜெயமோகன்
அன்புள்ள ஜெ
இந்தக்கதையின் முக்கியமான அம்சம் என்பது ஜடம் என்று நம்மைச் சூழ்ந்து கொண்டிப்பது உண்மையில் என்ன என்னும் கேள்விதான். ஜடம் என்று இந்த பிரபஞ்சம் சொல்லப்படுகிறது. அது எப்போது உயிர் கொள்ளும் ?அதில் சித்தம் இணையும்போது. நாம் காண்பது சித்தமும் ஜடமும் இணைந்த சிஜ்ஜடம். அதை அந்தச் சித்தர் சொல்லும் இடத்தில்தான் கதை தொடங்குகிறது அந்த இடத்தில் அதை அவருடைய பைத்தியக்காரத்தனத்தை அடையாளம் காட்டுவதற்காக சம்பந்தமில்லாததாகச் சொல்கிறது இந்த கதை. மெல்ல மெல்ல கதை விரிந்து சென்று முதலில் சொல்லப்பட்ட அந்த தத்துவம் முழுக்க நம் மனதிலிருந்து மறைந்த பின்னர் பிணத்தை அறிமுகம் செய்கிறது. முடிவில் ஓர் உலுக்கலாக இந்தக்கதை அந்த தத்துவத்தை நினைவுபடுத்துகிறது. சிறுகதை என்ற வடிவம் உண்மையில் எதற்காக என்று காட்டும் கதை இது.
இந்த பிரபஞ்சம் அதில் நமது சித்தம் இணையவில்லை என்றால் வெறும் ஜடம்தான். அதை உயிர் பெற வைப்பது பிரம்மம். பிரம்மம் நாம்தான்.நம் சித்தம் தான். அதுவே வெளியே உள்ள ஜடப் பிரபஞ்சத்தினை உயிர் கொள்ள வைக்கிறது .ஓர் அரிய தத்துவ சிந்தனை .ஆனால் கொடூரமான ஒரு கதை வழியாக அது சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் போலீஸ்காரரின் உள்ளிருக்கும் உக்கிரமான காமம் ஜடத்தை உயிர்கொள்ள வைக்கிக்கிறது. அந்த காமம்தான் உயிரின் ஆதி விசை. குண்டலினி சக்தி. ஆங்கிலத்திலே அது இட் என்று சொல்லப்படுவது. அந்தத் தீவிரமான விருப்பம் அதை காமம் என்று சொல்லலாம். அதுதான் ஜடப்பொருள் மேல் உயிரை கொண்டு சென்று சேர்க்கும்சக்தி
நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய அத்தனை பொருள்களும் அர்த்தம் கொள்வது நம்முடைய உள்ளிருக்கும் அந்த திருஷ்ண என்று சொல்லக்கூடிய விஷயத்தால்தான். விஷயம் விஷயி என அதை வேதாந்தம் சொல்லும். பௌத்த மரபிலேயே திருஷ்ணை காமம் என்றும் சொல்லக்கூடிய வழக்கம் உண்டு. இங்கே போலீஸ்காரர் கொள்ளும் காமம் ஜடத்தை உயிர் கொள் உயிர்கொள் என்று முட்டுகிறது. அது உயிர்கொள்கிறது.ஒவ்வொரு உயிரிலும் இருக்கக்கூடிய காமமே அந்த உயிருக்கான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது
எங்கெங்கோ தொட்டுச் என்று விரிந்து பல கோணங்களில் யோசிக்க வைத்த அரிய கதை.
எஸ்.திருவாசகம்
அன்புள்ள ஜெ
ஜடம் கதையில் அந்தப் போலீஸ்காரருக்கு என்ன ஆகும்? அவர் இப்போது ஜடம். இதன்பின் அவர் சைதன்யம் ஆவாரா? இந்தக்கதை நீங்கள் உண்மையில் எங்கேயோ கேட்டது. திருவனந்தபுரத்தில் ஒரு போலீஸ்காரர் பேச்சிப்பாறைக்கு போய் ஒரு பிணத்தை தேடிவிட்டு திரும்பும்போது அப்படியே அங்கேயே வேறிரு சாமியாரிடம் சீடனாக இருந்து சாமியாராகி சித்தராகி மறைந்தார். அதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். மௌனகுரு சாமியார் என்னும் அவரைப்பற்றி திருவனந்தபுரம் வட்டாரத்தில் பல கதைகள் உண்டு. அந்தக் கதையைத்தான் திரும்பத்திரும்பச் சொல்லி பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன். ஜடம் மிக வலுவாக வந்துவிட்டது
வி.ராமானுஜன்