மறக்கப்பட்ட புன்னகை, எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்

[அ]

நூற்றாண்டு கண்ட எழுத்தாளர். அவரது ஒரே ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை. அவரது பூர்வீகம், உறவினர்கள் எதைப்பற்றியும் தகவல் இல்லை. அவரது நூற்றாண்டில் அவர் எழுதிய நூல்களை தேடிப்பிடித்து மறுபிரசுரம் செய்கிறார் ஓரு பதிப்பாளர். நூல்களைப்பற்றிய தகவல்களையும் பிரதிகளையும் தந்துதவுபவர் எழுத்தாளரின் இறுதிக்காலத்தில் சிலநாட்களை சேர்ந்து கழிக்க வாய்ப்பு கிடைத்த இன்னொரு எழுத்தாளர். முந்தையவரின் ஆக்கங்களின் காப்புரிமையும் இவரிடம்தான் இன்னும் இருக்கிறது. அந்த எழுத்தாளரின் ஆகச்சிறந்த ஆக்கம் எழுதப்பட்டு நாற்பது வருடங்கள் பிரசுரமாகாமலேயே நண்பரான எழுத்தாளரிடம் தங்கி விட்டது. எழுத்தாளர் இறந்து இருபது வருடம் கழித்து அது முதன்முறையாக அச்சேறி பரவலான கவனத்தை கவர்கிறது.

இது ஒரு போர்ஹெஸ் கதை அல்ல. தமிழ் எழுத்தாளர் எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் உண்மைக்கதை. எம் எஸ் கல்யாணசுந்தரம் 28.03.1901 ல் மதுரையில் ஒரு செளராஷ்ட்ர குடும்பத்தில் பிறந்தார்.பஞ்சாப் பல்கலைகழகத்தில் பி ஏ பட்டமும் ஹிந்தியில் பிரபாகர் பட்டமும் பெற்றார். மாண்டிஸோரி அம்மையாரிடம் கல்விப்பயிற்சி பெற்றார். உருது தெலுங்கு வங்காளி சம்ஸ்கிருதம் குஜராத்தி மொழிகள் அறிந்தவர் அவர். ஹிந்தி- தமிழ், ஆங்கிலம் ஹிந்தி அகராதிகள் தயாரித்திருக்கிறார். தந்தி இலாக்காவில் வெள்ளை அரசின் கீழே வேலைபார்த்தார். அப்போது இந்தியாவின் பல பகுதிகளில் சென்று வாழ அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

எம் எஸ் கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான பாதிப்பை நிகழ்த்தியவர் காந்தி. அன்றைய தந்தி இலாகாவேலை மதிப்பு மிக்கது. அதில் முன்னேற பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் எம் எஸ் கல்யாணசுந்தரம் காந்தியின் அழைப்பை ஏற்று வேலையை துறந்து கிராம நிர்மாண திட்ட்ங்களில் சேவையாற்றினார். இறுதிவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. பின்தங்கிய உள்நாட்டு பகுதிகளில் நோயாளிகளுடன் வாழ்ந்தமை காரணமாக அவர் தொழுநோய்க்கு ஆளானதாகவும் வாழ்வின் இறுதிப்பகுதியில் மிகுந்த சிரமங்களை அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவரது இறுதிநாட்கள் கோடைக்கானலில் கழிந்தது. இலக்கிய சேகரிப்பாளரான கி ஆ சச்சிதானந்தம் அவர்களுக்கு எம் எஸ் கல்யாணசுந்தரம் சென்னையில் சிறிதுகாலம் வாழ்ந்த நாட்களில் அவருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.எஸ் கல்யாணசுந்தரம் ஹிந்தியிலும் தமிழிலும் அன்றைய இதழ்களில் நிறையவே எழுதியிருக்கிறார். அவை ஓரளவு கவனமும் பெற்றிருக்கின்றன. அவரது இருபது வருடங்கள் அன்றைய விமரிசகர்களால் பாராட்டவும் பெற்றது.

எம் எஸ் கல்யாணசுந்தரம் காந்தியவாதி என்ற அடிப்படையில் சி சு செல்லப்பா போன்றவர்கள் அவரை பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால் அடுத்த நவீனத்துவ, முற்போக்கு காலகட்டம் வந்தபோது எம் எஸ் கல்யாணசுந்தரத்தை நினைவூட்ட யாருமின்றி போயிற்று. ஆனால் தமிழில் ஒரு முக்கியமான விஷயம் உண்டு, இங்கே முக்கியமான எவருமே மறைவது இல்லை. எம் எஸ் கல்யாணசுந்தரம் போன்ற ஒருவர் மறு கண்டடையப்பட்டது இயல்பே. எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் நண்பரன கி அ சச்சிதானந்தம் அவரது பிரதிகளை காப்பாறி வைத்திருந்தார். தமிழினி வசந்தகுமார் அவரது மூன்று நூல்களை அவரது நூற்றாண்டு மறுபதிப்பாக 2002ல் வெளியிட்டுள்ளார். ‘இருபது வருடங்கள் ‘ நாவலும், ‘பொன்மணல் ‘ சிறுகதை தொகுதியும் நாற்பது வருடம் கழித்து மறுபதிப்பாகியுள்ளன. எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் ‘பகல்கனவு ‘ எழுதப்பட்டு நாற்பது வருடம் கழித்து, ஆசிரியர் இறந்து இருபது வருடம் கழித்து அச்சாகியுள்ளது. அவருடைய மொத்த படைப்புலகமே இவ்வளவுதான்

விரிவான அளவில் தமிழில் படித்தவன் என என்னைப்பற்றி நான் எண்ணிக் கொள்வதுண்டு. ஆனால் கல்யாணசுந்தரத்தின் எந்த நூலையும் நான் படித்தது இல்லை. அவரது பெயர் விமரிசகர்களால் முன்னிலைப்படுத்தப் படாமையும், நூல்கள் கிடைக்காமலேயே போய்விட்டமையும் தான் காரணங்கள். தமிழில் என் தலைமுறையில் மட்டுமல்ல முந்தைய தலைமுறையில்கூட பெரும்பாலும் எவருமே எம் எஸ் கல்யாணசுந்தரத்தைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள் இது ஒரு வருந்தத் தக்க நிலையே.

[ ஆ ]

பொன்மணல் தொகுதிக்கு சி சு செல்லப்பா எழுதிய திறனாய்வு ஒன்று இப்படி துவங்குகிறது ‘சமீபத்தில் ‘ஹிந்து‘ பத்திரிகையில் ஒரு கடிதம் ரசமாக இந்தது. பள்ளி மாணவர்கள் எலக்டிரிக் டயிலில் கதவோரம் தொத்திக்கொண்டு நிற்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சென்னையில் உள்ள பள்ளிக்கூட உபாத்தியாயர்கள் பிள்ளைகளிடம் இதைப்பற்றி எடுத்துசொல்லவேண்டும். விடாமல் இதைசெய்யும் அசடுகளுக்கு வேண்டுமானால் கெளரவ இளம் கதவுக்காப்பாளன்[ ஹானனரரி ஜூனியர் டோர் கீப்பர்] என்று பட்டம் கொடுக்கலாம் என்று கண்டிருந்தது. அதை எழுதியவர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம். அவர்தான் அப்படி எழுதக்கூடியவர்‘

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் அடிப்படை இயல்பை செல்லப்பா இந்த தொடக்கம் மூலம் தொட்டுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இக்கடிதத்தின் நோக்கம் உண்மையான ஆதங்கமே ஒழிய கிண்டல் அல்ல. ஆனால் அதிலும் அவரை அறியாமல் ஒரு புன்னகை குடியேறிவிட்டிருக்கிறது. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ஆக்கங்களின் கருக்கள் அக்காலகட்டத்துக்குரியவை. ஆனால் அவற்றை இன்றுவரை பழையவையாகாமல் காக்கும் அம்சம் இந்த நகைச்சுவைக்கூறுதான்.

நகைச்சுவையில் பல்வேறு போக்குகள் உண்டு. புதுமைப்பித்தனின் நகைச்சுவை விமரிசனம் கொண்டது. நக்கல் எள்ளல் ஆகியவற்றுக்கு அடியில் பொறுமையின்மையும் ஆதங்கமும் நுரைத்துக் கொண்டிருப்பது அது. தமிழில் பிற்பாடு மிக பிரபலமானதாக ஆனது இந்த நகைச்சுவையே. சுந்தர ராமசாமியின் ஆரம்ப காலக் கதைகள் இதேபாணியை முன்னெடுத்தன. நாஞ்சில்நாடன் இப்பாணியின் சிறந்த தளத்தை தன் கதைகளில் எட்டியிருக்கிறார். [நாஞ்சில்நாடனின் சமீபத்திய சிறுகதை ‘பாம்பு‘ இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒரு சாதனை]. இன்னொரு வகையான நகைச்சுவைக்கு அசோகமித்திரனின் கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். நாசூக்கான மென்மையான அங்கதம் இது. வரண்ட, கரிய நகைச்சுவை. மனிதர்களைப்பற்றியும் வாழ்க்கையைப்பற்றியும் உள்ளார்ந்த கசப்பு கொண்ட விமரிசனம் இவற்றில் உள்ளது. இவ்வகை எழுத்துக்கு தமிழில் இரு தொடர்ச்சிகள் உண்டு. திலீப்குமார் இதேபாணியில் சற்றுகுறைவான கசப்புடன் எழுதுகிறார். கோபிகிருஷ்ணன் அதிகமான வெளிப்படைத் தன்மையுடனும் கசப்புடனும் எழுதுகிறார். இந்திராபார்த்த சாரதி, ஆதவன் ரக அறிவுபூர்வமான ஏளனம் இன்னொரு பாணி. கி.ராஜநாராயணனின் கதைகளில் வரும் கிராமியத்தனமான குணச்சித்தரிப்பு ஒருவகையான நகைச்சுவையை உருவாக்குகிறது. கி.ராஜநாராயணன் இதை சமத்காரமாக சொல்லும்போது வெகுளித்தனமாக எழுதும் வேறு சில உதாரணங்களும் உள்ளன.

மிகவும் பிரபலமான ஒரு வகை நகைச்சுவை கல்கியினுடையது. மேலே குறிப்பிடப்பட்ட இலக்கியத்தன்மை கொண்ட நகைச்சுவை முறைகளுக்கும் அதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. இவ்வேறுபாட்டினை எறத்தாழ எல்லா வாசகர்களுமே உணர்ந்திருப்பார்கள் என்றாலும் வரையறை செய்வது கடினமே. இப்படிச் சொல்லலாம். இலக்கிய நகைச்சுவையானது இரண்டு அடிப்படைகள் கொண்டது. ஒன்று அது மிக முக்கியமான ஆழமான ஒரு விஷயத்தை நேரடியாக சென்று தொடமுடியாத நிலையில் மொழியையோ, கோணத்தையோ திருகலாக்கிக் கொண்டு சென்று தொடமுனையும் ஒரு முயற்சியாகும். அதாவது நல்ல நகைச்சுவை ஒரு முக்கியமான விஷயத்தை முன்வைக்கிறது, அதை அது நகைச்சுவைமூலமே அதேயளவு தீவிரத்துடன் முன்வைக்க முடியும். இரண்டாவது அடிப்படைக் குணம் இந்த தீவிர நோக்கம் காரணமாக இலக்கிய நகைச்சுவையானது ஒருவித அந்தரங்கத்தன்மையையும் கொண்டிருக்கும். அந்த ஆசிரியனே தனக்குத்தானே சிரித்துக் கொள்வதுபோல. நாம் அதில் பங்கு கொள்கிறோம், அவ்வளவுதான். மாறாக வணிக எழுத்தின் நகைச்சுவை வெளிப்படையாகவே வாசகனை மகிழ்விக்கும் நோக்கம் கொண்டது. அதற்காக அது அவனது பலவீனங்களையோ சமூகத்தின் பலவீனங்களையோ பயன்படுத்திக் கொள்கிறது.கல்கி முதல் சுஜாதா வரையிலான நகைச்சுவை பொதுவாக இத்தன்மை கொண்டது. [அதற்காக இவர்கள் எழுதியவை அனைத்துமே இப்படித்தான் என்று சொல்ல முற்படவில்லை] முரண்நகை [Irony], அங்கதம் [Satire] பகடி [Wit] நகை [Humor] போன்றவை இலக்கியத்தன்மை கொண்டவை என்றும் சிரிப்பூட்டுதல் [Joke] கேளிக்கை எழுத்து சார்ந்தது என்றும் சொல்லலாம்.

எம்.எஸ். கல்யாணசுந்தரத்தின் நகைச்சுவை இவற்றிலிருந்து சற்று மாறுபட்டது. முக்கியமான அம்சம் அதில் சற்றும் கசப்பு இல்லை என்பதே. ஆகவே ஒரு பிரகாசமான புன்னகை அவர் உலகில் இருந்துகொண்டே உள்ளது. வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையுடன், காதலுடன், நல்லியல்புகள் மீதான குன்றாத பற்றுடன் அணுகக் கூடியவை அவரது ஆக்கங்கள். தமிழில் கல்யாணசுந்தரம் மறக்கப்பட்டமைக்கு முக்கியமான காரணமும் இந்த நேர்நிலையான அணுகுமுறைதான். ஏனெனில் தமிழில் அவரது ஆக்கங்கள் வருவதற்கு முன்னரே புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், மெளனி ஆகியோரால் உருவாக்கப்பட்ட நவீனத்துவ யுகம் ஆரம்பித்துவிட்டது. அதன் அடிப்படை இயல்பு மனிதன் மீதான ஆழ்ந்த அவநம்பிக்கையே என்றால் அது மிகையல்ல. அம்மனநிலையில் இப்படைப்புகளை படிக்கும் ஒரு நல்ல வாசகன் கூட ‘இனிமையான பகல்கனவுகள்‘ என்று இவற்றை எளிதில் நிராகரித்துவிட வாய்ப்பு உள்ளது. அக்கூற்று உண்மையே. அல்லது உண்மையின் ஒரு பக்கம். இதேபோன்றே புதுமைப்பித்தனின் அவநம்பிக்கையும் மெளனியின் இருண்மையும் ஒரு பக்க உண்மைமட்டுமே என்ற உணர்வு நமக்கு தேவை.

சொல்லப்போனால் ஆச்சரியம்தான், தனிவாழ்க்கையை வைத்துப் பார்த்தால் எம்.எஸ்.கல்யாணசுந்தரம்தான் இருண்ட மனநிலை கொண்ட ஆக்கங்களை எழுதியிருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் இருந்தவர்களைவிட அவர்தான் அதிகமான அழகிய குடும்ப சித்திரங்களை அளித்திருக்கிறார். பகல்கனவின் மூர்த்தி, இருபது வருடங்களின் கேசவராவ் ஆகிய கதாபாத்திரங்களின் குடும்பவாழ்வைப்பற்றிய சித்திரங்கள் மிக நுட்பமும் அழகும் கொண்டவை. நகைச்சுவை ஒரு துக்கத்தை அல்லது கோபத்தை அல்லது இக்கட்டையே எப்போதும் தன் ஆத்மாவில் கொண்டிருக்கிறது என்பார்கள். அது ஏறத்தாழ சரிதான் என்று இந்தத் தருணத்தில் படுகிறது. கல்யாணசுந்தரத்தின் இனிமையான, அழகான நகைச்சுவை அவரது மனம் உலாவிய இருண்ட பாதைகளுக்குத் துணையாக அவரே ஏற்றிக் கொண்ட சுடர்தானா? அந்நிலையில் அது நிழலோ வெம்மையோ இல்லாத ஒளியாகமட்டுமே இருக்க நியாயம் உண்டு. இந்த தன்மையே கல்யாணசுந்தரத்துக்கு தமிழிலக்கியத்தில் எவராலும் புறக்கணித்துவிடமுடியாத ஓர் இடத்தை அளித்துவிடப் போதுமானது என்று படுகிறது.

நேர்நிலையான நகைச்சுவை இருதளங்களில் செயல்படும் என்று படுகிறது. ஒன்று களங்கமின்மையின் சித்திரங்களை அளித்து நம்மை சிரிக்கவும் நாம் வாழும் சிக்கல் மிக்க உலகைப்பற்றி எண்ணவும் வைக்கும். இன்னொன்று அறிவார்ந்த நுட்பமான இடக்குகள் வழியாக நாம் பழக்கம் காரணமாகவும் எதிர்காலம் மற்றும் நிலையின்மை காரணமான அச்சத்தினாலும் வாழ்க்கையை சிறுமைப்படுத்திக் கொள்வதை சொல்லிக்காட்டும். பி.ஜி.வோட்ஹவுஸின் நகைச்சுவையில் முதல் அம்சமும் ஸக்கியின் நகைச்சுவையில் இரண்டாவது அம்சமும் உள்ளது என்று சொல்லலாம். எனினும் முதல்வகை நகைச்சுவைக்கு என்னைப்பொறுத்தவரை மிகச்சிறந்த உதாரணமாக உள்ளவை மார்க் ட்வைனின் டாம் சாயர் கதைகள் மற்றும் வைக்கம் முகம்மது பஷீரின் கதைகள்தான். களங்கமின்மை எனும்போது வழக்கமாகவே மிருகங்கள் குழந்தைகள் ஆகியவற்றின் உலகம்தான் முக்கியமாக சொல்லப்படுகிறது. பசி, இருத்தலுக்கான போராட்டம், அறிதலுக்கான ஆர்வம் ஆகிய அடிப்படை இச்சைகள் எளிமையாகவும் நேரடியாகவும் வெளிப்படும் இவ்வுலகை துல்லியமாக சொல்லிவிட்டாலே அது நமது நாகரீகம் குறித்த புன்னகையையும் ஏந்திக்கொண்டு விடுகிறது. பஷீரின் குழந்தைகளும் மிருகங்களும் மனிதர்களை கிண்டல் செய்ய கடவுள் உருவாக்கிய கேலிச்சித்திரங்கள் போலுள்ளன.

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் மேற்குறிப்பிட்ட இரு தளங்களிலும் அதிகமாக புடைத்துத் தெரியாமல் வெளிப்பாடுகொள்ளும் நகைச்சுவையை கொண்டவர். ‘மேலே சொன்ன சாப்பாட்டை கிருஷ்ணா ராமா கோவிந்தா என்று சொல்லிக் கொண்டே முடித்துவிடுவேன் நாக்கில் நீர் ஊறாதபோது கண்களில் ஊறும்…‘ [பகல் கனவு] என்று ‘…அவர் கற்ற வசைமொழிகளெல்லாம் முள்ளம்பன்றியின் முட்கள் போல அதை அலங்கரித்தன..‘ [பொன்மணல் தொகுப்பு] ‘தம்பிடிக்கள் சில ஓரணாக்கள் சலசலவென்று விழும். அவற்றிலிருந்து சில வெங்காய வாடை மிளாகாய் நெடி, கருவாட்டு வாடை, கிரேசின் எண்ணை நாற்றம். ஜவ்வந்திப்பூ வாசனை எல்லாம் கிளம்பும் ‘[இருபது வருடங்கள்] ‘சாவித்ரியுடன் மாடிக்குசென்றாள். இருவரும் நாற்காலியில் அமர மறுத்துவிட்டு தரையில் விரித்திருந்த அழகிய பத்தமடை பாயில் உட்கார்ந்தார்கள். உடனே பாயின் அழகு அதிகரித்தது‘ [இருபது வருடங்கள்] சித்தரிப்பின் ஊடாக மிக இலகுவாக ஓடிச்செல்லும் இம்மாதிரியான நகைச்சுவையையும் நளினத்தையும் அவர் எழுத்து முழுக்க காணலாம்.

ஆயினும் அவரது நகைச்சுவையில் முக்கியமான இடம் வகிப்பது அவரது விரிவான தகவலறிவே. இந்தியாமுழுக்க சுற்றியவர், அறிவியல் விஷயங்களில் தணியாத தாகம் கொண்டவர், பல்வேறு மொழிகள் அறிந்தவர் என்றமுறையில் கல்யாணசுந்தரம் நாவல்களிலும் சிறுகதைகளிலும் தகவல்களை அள்ளிவைத்துக் கொண்டே செல்கிறார். சமையல் செய்திகள் ஒப்புநோக்க அதிகம். இருபது வருடங்கள் நாவலில் கேசவராவ் உலகப்போர் கைதியாக கீழ்கடல் தீவுக்கு சென்று அங்குள்ள பொருட்களைப்பயன்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள போராடும் கட்டம் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் தகவலறிவு வெளிப்படும் உச்சகட்ட சந்தர்ப்பம் என்று சொல்லலாம். ஆனால் இத்தகவல்களை அவர் எப்போதுமே மென்மையான நகைச்சுவையுடன், தற்செயலாக அவை வெளிப்படுவது போன்ற பாவனையுடன் சொல்கிறார் ‘ஒரு பஞ்சாபி அடிநாட்களில் பனாரஸ் சென்று ஹிந்துஸ்தானி கற்றான், ஊர் திரும்புகையில் அதை மறந்துவிட்டான். பிறகு தன் கற்பனையையும் கலந்து குர்முகி உண்டாக்கிவிட்டான் என்பது என் சொந்த அபிப்பிராயம் ‘[பகல்கனவு]‘, ‘ரேடியோவின் சூட்சுமத்துவத்தை அதிகரித்தால் ஆகாயத்திலுள்ள குப்பை ஒலிகளையெல்லாம் அழைத்துவரும்‘ [பொன்மணல் தொகுப்பு]

களங்கமற்ற நகைச்சுவை என்பதில் ஒரு கூர்ந்த அவதானிப்புத்தன்மை உள்ளது. வாழ்க்கையை கூர்ந்து கவனித்து நிகழும் சிறு சிறு வேடிக்கைகளைப் பொறுக்கி மனதில் ஒரு மூலையில் சேமிக்கும் மனம் இதற்கு அவசியம் ‘ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும் என்ற பாரதிவாக்கு ஆண்மை யொடியட்டும் என்று பாடப்படினும் மிக ரம்மியமாக இருந்தது’ [இருபது வருடங்கள்] போன்ற வரிகள் இத்தகைய அவதானிப்பிலிருந்தே எழுத முடியும். நர்சிங் ஹோம் பேச்சு வழக்கில் நரசிம்ம ஹோமம் ஆவதும்தான்.

இத்தகைய தகவலறிவும் நகைச்சுவையும் இணையும் தன்மை கொண்ட படைப்பாளி என்று கல்யாணசுந்தரத்துக்குமுன் தமிழில் ஓர் அளவு வரை மாதவையாவை சொல்லலாம். கல்யாணசுந்தரத்துக்கு பின்பு அதே பாணியை மேலும் விரிவாகவும் தீவிரமாகவும் எடுத்துச் சென்ற படைப்பாளி அ.முத்துலிங்கம். இப்போது எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் நூல்களை படிக்கும்போது அ.முத்துலிங்கம் நினைவு வந்தபடியே உள்ளது. கசப்பு இல்லாத மென்மையான அங்கதம், தகவல்களை பூடகமான முரண்நகைத் தன்மையுடன் புடைத்து தெரியாமல் சொல்லிச்செல்லும் பாங்கு ஆகியவை அ.முத்துலிங்கத்தின் இயல்புகளே. சமானமான பலவரிகளை சொல்லமுடியும். முக்கியமாக கதை துவங்கும் விதம்

சென்ற வருஷம் பெர்னாட் ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது ‘இவ்வூரில் பார்க்கத்தகுதியானவை என்னென்ன?‘ என்று விசாரித்தார்.

‘நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி ஊற்று, தபால்கார அப்துல்காதர்‘ என்றேன்

அ.முத்துலிங்கத்தின் பல கதைகள் இம்மாதிரியான ஒரு சம்பிரமமான துவக்கம் கொண்டிருக்கின்றன. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘புது ஆயுதம்‘ போன்ற ஒரு கதையை இன்று நாம் அ.முத்துலிங்கத்தின் உலகில் மட்டுமே காணமுடியும்.

அ.முத்துலிங்கத்தின் கதைகள் பற்றிய என் விமரிசனத்தில் களங்கமில்லாத ஓர் உலகின் சித்திரங்கள் கொண்ட அவரது எழுத்தில் ஏன் குழந்தைகள் வரவில்லை என்று கேட்டிருந்தேன். எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ஆக்கங்களைப் பார்க்கையில் அவரது உலகில் – அது மிக சிறியது என்பதில் ஐயமில்லை — குழந்தைகள் முக்கியமான இடம் வகிப்பதைக் காணமுடிகிறது. இருபது வருடங்கள் நாவலில் ஜமுனா தமிழில் மிக அழகாக சித்தரிக்கப்பட்ட குழந்தைகளில் ஒன்று என்று படுகிறது. பெண்குழந்தைகளில் உள்ள பெண்தன்மை இத்தனை நுட்பமாக சொல்லப்பட்டதேயில்லை. ஒரு குறிப்பிட்ட வயதில், அதாவது ஐந்து ஆறு சுமாருக்கு– பெண்குழந்தைகள் தங்கள் கவர்ந்திழுக்கும் தன்மை குறித்து மிகுந்த பிரக்ஞை அடைகின்றன. பொட்டு போடுதல், பொருத்தமாக உடையணிதல் முதலியவற்றில் சிரத்தை கொள்கின்றன. பெரிய பெண்களை உற்று கவனித்து அதுபோல ஆக விழைகின்றன. இதன் ஒரு பகுதியாக தங்களை மாற்றிக் கொள்ளா அவை ஆசைப்படுவதும் உண்டு. தமிழகத்தில் கரிய நிறமுள்ள பெண்குழந்தைகள் ஆழமான தாழ்வுணர்வை அடைவதும் இப்போதுதான். இத்தனை விஷயங்களும் அவர்கள் தோழிகள் பங்கேற்புடன் நிகழ்கின்றன. இதன் அழகிய சித்திரம் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்த்தின் இருபது வருடங்கள் என்ற நாவலில் வருகிறது. யமுனா தன்னுடைய பேரை வித்யாகுமாரி என்று மாற்றிக் கொள்கிறாள். அந்த அத்தியாயத்தின் மொத்த உரையாடலும் குழந்தைமனதின் சிறப்பான சித்திரம்தான். இதற்கு நிகரான சித்திரத்தை கு.அழகிரிசாமியின் ‘ராஜாவந்திருக்கிறார்‘ என்ற சிறுகதை மட்டுமே அளித்தது. குட்டி வெங்கட் முழ உயரம் காட்டி ‘இத்தனை பெரிசு யானைக்குட்டியா‘ என்றுகேட்கும் இடமும் குழந்தைகளின் பேச்சையும் மனஇயக்கத்தையும் அழகாக காட்டுகிறது.

தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான உறவு அதற்கேயுரிய பரவசங்கள் கொண்டது. தமிழில் இந்த பரவசத்தை சற்றேனும் பதிவு செய்த நாவல்களே இல்லை என்றே நான் எண்ணுகிறேன். என் சொந்த வாழ்வனுபவத்திலிருந்து இதை சொல்கிறேன். தந்தைக்கு பெண்ணை கொஞ்சி திருப்தி வருவதேயில்லை. எனவே ஒரே பேரில் தன் பெண்ணை கூப்பிடும் தந்தைகளே குறைவுதான். அவரது அந்தரங்கத்திலிருந்து பெண்ணுக்கான பெயர்கள் பெருகி வந்தபடியே இருக்கும். பக்தனுக்கு இஷ்ட தெய்வத்தை பற்றி பேச ஆயிரம் பெயர்கள் தேவை என்பதைப்போலத்தான். என் பெண் சைதன்யாவுக்கு சைது சைதுட்டி சைதம்மா சைதோவ்ஸ்கி என்று துவங்கி எண்ணற்ற பெயர்கள் உண்டு. ‘சகஸ்ர நாம அர்ச்சனை’ என்றுதான் என் மனைவி சொல்வாள். இந்த சிறிய நுட்பமான விஷயம் தமிழ் இலக்கிய உலகிலேயே ஒரே ஒரு நாவலில் மட்டுமே பதிவாகியுள்ளது என்றால் அது ஆச்சரியம்தான். எம்.எஸ்.கல்யாணசுந்தரத்த்தின் இருபது வருடங்கள் நாவலில் கேசவராவ் தன் பெண் யமுனாவை தீராத பெயர்களால் அழைக்கும் இடம் [‘ஏன் அடிச்சா ஜம்மு பாய்? ஜம்முக்குட்டி ஏதாவது விஷமம் பண்ணித்தா? ‘ யமுனா ஜமுனா ஜம்முபாய் ஜம்முக் குட்டி எல்லாம் அவளுடைய சஹஸ்ர நாமங்களெளில் சில] என் மனதை அலாதியான ஓர் ஆனந்தத்துக்கு உள்ளாக்கியது. அது வாழ்க்கையில் நாம் காணும் பிரகாசம் ஒன்று அச்சிடப்பட்ட பக்கங்களில் கிடைப்பதன்மூலம் உருவாகும் பரவசம். இதைத்தான் இலக்கிய அனுபவம் இலக்கிய அழகு என்று வேறு பெயர்களில் சொல்கிறோம். அப்புன்னகையின் ஒளி மங்குவதற்குள் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் குழந்தைக்கு தந்தையாக வாய்ப்பே இல்லாதவர் ஒரு குழந்தையை தொட்டுதழுவ யோகம் இல்லாதவர் என்ற நினைப்பு வந்து மனதை பதைக்கசெய்கிறது.

இருபது வருடங்களில் அந்த நாய் பைரி அழகும் துடிப்பும் கொண்ட அரிய கதாபாத்திரம். அதன் உலகை மனிதர்களின் வாழ்க்கைக்கு பக்கத்தில் வைத்து காட்டுகிறார் எம்.எஸ்.கல்யாணசுந்தரம். தீவிரமாக அபிப்பிராய பேதங்கள் கூடிக்கூடி சர்ச்சை செய்யப்படும் வீட்டில் பைரி ஒவ்வொரு காலாக முகர்ந்து பார்த்து ‘புதுமாதிரி வியர்வை, அமிலம் அதிகம், காரம், பிடிக்கவில்லை‘ என்று சொல்லிக் கொள்கிறது [இருபது வருடங்கள்] உரையாடல்களில் கூர்மையையும் துடிப்பையும் கொண்டு வருவது கல்யாணசுந்தரத்தின் பாணி. இருபது வருடங்கள் நாவலில் எல்லா உரையால்களும் அறிவார்ந்த கச்சிதம் கொண்டவை. அதற்கு மாறாகவே சாதாரண மக்கள் பேசுகிறார்கள் என்றும் அவர் அறிவார். உதாரணமாக கேசவராவின் மனைவி, அவள் அன்னை தந்தை ஆகியோர். அவர்களுக்கு இவர்களுடைய பேச்சே புரியவில்லை. உடைத்து உடைத்து பேசுகிறார்கள் என எண்ணுகிறார்கள். ‘… வண்டியிலே ஏறினேன், ஏறினேனா, உடனே திடார்னு ஒரு சந்தேகம் வந்துடுத்து. என்ன சந்தேகம்னு கேளுங்கோ. வாசக்கதவை பூட்டி இழுத்துப் பாத்தேனா இல்லையான்னு சந்தேகம் கிளம்பித்து. பூட்டு சரியா விழாட்டா ஆபத்தில்லையோ? மனசு உதைச்சுண்டது. உதைச்சிக்காதே என்ன பண்ணும்? “போன்ற விளக்கமான உரையாடல்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் [இருபது வருடங்கள்]

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் நகைச்சுவையின் இயல்பைக்காட்ட ஒரு சிறந்த உதாரணம் இருபது வருடங்களில் உள்ளது. காசநோய் விடுதியில் உள்ள நோயாளிகள் ரேடியோவில்பாட்டு கேட்கிறார்கள். ஊருக்குள் தொலைவில் அதே பாட்டு வேறு ரேடியோவில் கேட்பது சில நொடிகள் தாமதமாக இங்கு கேட்கிறது. ஒருவர் விளையாட்டாக ‘என்ன நாயக்கரே பின்பாட்டுக் கோஷ்டியை தொலைவிலேயே உக்காத்தி வச்சுட்டாங்க? ‘ என்கிறார். நாயக்கர் ‘தொத்து நோயப்பா இது‘ என்று சொல்லி பகபகவென்று சிரிக்கிறார். கேட்டவருக்கு வருத்தமாக இருந்தது. இதுதான் துயரம் உள்ளூறிய கள்ளமற்ற எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் நகைச்சுவை.

[ இ ]

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் மாபெரும் இலட்சியவாத காலகட்டத்தைச் சேர்ந்தவர்.  பெரும் கனவுகளால் உந்தப்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை அதற்கேற்றபடி அமைத்துக் கொள்ளும் பொருட்டு உச்சகட்ட தியாகங்களை செய்த வரலாற்றுத்தருணத்தில் வாழ்ந்தவர். அதில் தானும் பங்கேற்றவர், இழப்புகளை அடைந்தவர்.  அவரது எழுத்துக்களும் இக்காலகட்டைத்தையே பிரதிபலிக்கின்றன. மனிதனின் ஆதாரமான நல்லியல்பு மீதான உண்மையான நம்பிக்கை இக்கதைகளில் தொனிப்பதற்கு வேறு காரணம் தேவையில்லை.  சில கதைகளில் அன்றைய கொள்கைகளைபிரச்சாரம் செய்கிறார்.  உதாரணம் புது ஆயுதம். அன்னியப்பொருள் பகிஷ்கரிப்பு போராட்டத்தைப்பற்றிய கதை– இன்று அப்படி யோசித்தால் மட்டுமே தெரியுமளவு பிரச்சார அம்சம் பூடகமாக உள்ளது. ஆனால் பெரும்பாலான கதைகளில் அவர் எதையுமே வலியுறுத்துவதில்லை.அவருக்கு அடிப்படையான நம்பிக்கை இருந்திருக்கக் கூடிய ஒழுக்க நெறிகளில் கூட அவர் நிலைப்பாடு எதையுமே பிரச்சாரம் செய்வதில்லை.  ‘மூன்றாம் சுமை ‘கதையில் திருடனாக மாறி தனக்குரிய வேதாந்தத்தை முன்வைக்கும் முன்னாள் மாணவனைக் காணும் ஓய்வு பெற்ற ஆசிரியர் எதையுமே அவனிடம் வலியுறுத்திச் சொல்லவில்லை.  இம்மாதிரியான செயல்கள், அதன் நியாயங்கள் நம்மை எப்படி மெல்ல மெல்ல அடிமைப்படுத்திவிடும் என்று மட்டுமே சொல்கிறார்.  ‘இந்த அளவில் போதும் என்று நிறுத்திக் கொள்வது கஷ்டம். பிறர் ஜேபியில் தங்கியிருக்கும் பணமெல்லாம் நம் நஷ்டக்கணக்கில் பதியப்படவேண்டிய தொகை என்று வருத்தம் தோன்றும்…’ எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் இலட்சியவாத பிரச்சாரம் அதிகபட்சம் செல்லும் எல்லை இதுதான்.

முழுநம்பிக்கை கொண்ட இலட்சியவாதியான கல்யாண சுந்தரத்தின் படைப்புலகு காட்டும் வாழ்க்கைச்சித்திரமும் அதற்கேற்பத்தான் அமைந்துள்ளது.  அதில் எதிர்மறைக்கூறுகளே இல்லை என்பது வியப்பூட்டுவது. காமம் குரோதம் மோகம் என்று நம் மரபு வகுக்கும் அடிப்படை மனித இயல்புகள் — அவற்றின் மீது தர்மம் மோதுகிறபோதுதான் காவியம் பிறக்கிறது என்பதுதான் நமது அழகியலே — இந்த எவையுமே கல்யாணசுந்தரத்தின் படைப்புலகில் இல்லை.  இருபது வருடங்களையே எடுத்துக் கொள்வோம். இலட்சியவாதியான டாக்டர் கேசவராவின் வெற்றி மற்றும் புகழுடன் இக்கதை துவங்குகிறது.  மரபுப்படி பார்த்தால் அவற்றுக்கு கடுமையான சவாலும் டாக்டர் கேசவராவ் அவர்களுக்கு பலதரப்பட்ட சோதனைகளும் வந்தாக வேண்டும்.ஆனால் எதுவுமே வரவில்லை.  அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான்.  அவரது அலைவரிசையுடன் ஒத்துப்போகாத மனைவி சரஸ்வதி பாய் அவரது ஆளுமைக்கு அடங்கியவளாகவே இருக்கிறாள். டாக்டரின் போக்குகள் மீது அதிருப்தி கொண்ட அவரது மாமனாரும் மாமியாரும் கூட அவர்மீது எளிமையான முணு முணுப்பை மட்டுமே முன்வைக்கிறார்கள். அவர் சிறை செல்லும் போது சிறை இனிமையான ஒரு சூழலாக இருக்கிறது.  கைதியான வைத்தியநாதய்யரிடம் அவரை பார்க்க வந்த மனைவியை அவர் பார்க்கவேண்டும் என்று மன்றாடுபவராக இருக்கிறார் ஜெயிலர். அவர் மீது பக்தி கொண்ட மைத்துனி ஜானகிக்கு வரும் கணவர்கூட டாக்டரின் ஆளுமையால் கவரப்பட்டவராகவே இருக்கிறார். ஆக மோதல்களே இல்லாத தூய இலட்சியவாதம் தான் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் காட்டுவது.

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் இலட்சிய வாதத்தின் அடிப்படை என்ன ? இக்கேள்வி மிக முக்கியமானது. ஏனெனில் இதன் அடிப்படையிலேயே அவர் பிற்கால முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து மாறுபடுகிறார். முற்போக்கு இல்டசியவாதங்களின் அடிப்படை மனிதாபிமானமே என நாம் அறிவோம். மனிதாபிமானம் இல்லாத இலட்சியவாதம் இல்லை.  ஆனால் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் இலட்சிய வாதம் இன்னொரு ஆழத்து அடிப்படையையும் கொண்டது. இந்த பூமியில் ஒரு நிறைவான மனித வாழ்க்கையை வாழ்வது குறித்த இலட்சியம் அது. அந்த நிறைவான வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றாகவே மனிதாபிமானம் கூட இங்கு பொருள்படுகிறது. ஏனெனில் சேவை பிறருக்கு எப்படி பயன்படுகிறதோ,  அதை செய்பவருக்கு சுயஅடையாளத்தையும் மனநிறைவையும் அளித்து அவரது வாழ்க்கையை பொருள் படுத்துகிறது. டாக்டர் கேசவராவையே எடுத்துக் கொள்வோம். அவரது மனிதாபிமானம் ஐயத்துக்கு இடமற்றது. அவர் ஆற்றிய சேவைகள் மகத்தானவை. ஆனால் சேவை அவருக்கு முழு நிறைவை அளிக்கவில்லை.  சேவையில் உள்ள சவால்கள்,  அல்லது தடைகள் தீர்ந்து விடும்போது அவர் அதிருப்தி கொள்கிறார். சிடுசிடுப்பு கொண்டவராகிறார். [எதிர்த்து நிற்க ஆட்டக்காரர்கள் கிடைக்காத குஸ்தி பயில்வான் போல அவர் தளர்ச்சி அடைந்தார்: இருபது வருடங்கள்] தன் ஆற்றல் முழுக்க வெளிப்படும் அடுத்த கட்டத்துக்கு நகர விழைகிறார்.  பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக சிறைசெல்ல அவர் தயாராவதும் சரி,  பிரிட்டிஷாருடன் சேர்ந்து போருக்கு செல்வதும் சரி உண்மையில் ஒரே நோக்கத்தை நிறைவேற்றவே. தன் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வாழ்க்கைக்காகவே. இந்த தனிப்பட்ட ஈடேற்றமே கேசவராவின் இலட்சியவாதத்தின் அடிப்படையாகும். பகல்கனவின் மூர்த்தியும் இதேபோன்ற ஒரு ஆளுமை ஈடேற்றத்தையே இலட்சியவாத அம்சமாக கொண்டிருக்கிறார்.

இருபது வருடங்களில் கேசவராவ் உண்மையான மகிழ்ச்சியுடன் இருந்த நாட்கள் நியூ பிரிட்டன் தீவுக்கூடங்களில் அவர் வாழ்ந்த நாட்கள்தான். நாகரீக வசதிகள் ஏதுமில்லாத அந்த காட்டுத்தீவில் வாழ்க்கையின் ஒவ்வொரு சிறுதேவைக்கும் கற்பனையையும் உடலுழைப்பையும் முழுக்க பயன்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தபோது அவரில் சலிப்பை உணரக்கூடிய அளவுக்கு மனசக்தி ஏதும் எஞ்சியிருக்கவில்லை.  எனவே அங்கே செயல்கள் அளிக்கும் மகிழ்ச்சியை சலிப்பு வந்து குறைப்படுத்தவில்லை. அப்பகுதி நாவலில் மிகுந்த துடிப்புடன் உள்ளது. பின்பு நாடு திரும்பி தன்னுடைய இயல்பான வாழ்க்கைக்கு வந்தபிறகும் அந்த வாழ்க்கையின் நினவுகள் அவரை துரத்துகின்றன. தீராத வெறுமையுணர்வு கொண்டு அவர் வாழ்க்கை கனக்கிறது. தன் வழக்கப்படி டாக்டர் கைபோன போக்கில் ஒரு படத்தை வரைகிறார்.  அது செழிப்பான ஒரு மரம். ஆனால் அதன் அடியில் ஒரு பெரிய துவாரம். அதில் மருந்து தெளிக்கலாம், சிமிட்டி வைத்து அடைக்கலாம், வேண்டுமானால் மரத்தையே வெட்டி வீழ்த்திவிட்டு புதிதாகவும் நடலாம் என்கிறார் டாக்டர். ‘அந்த மரம் நியூ பிரிட்டன் காட்டிலிருக்கும்போது சந்தோஷமாக இருந்தது’ என்கிறார்.  டாக்டர்.கேசவராவின் இந்த மனநிலையை நாவலின் துவக்கத்தில் அவர் கொண்ட இலட்சியவாத உற்சாகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.சேவையே வாழ்க்கையாகக் கொண்ட டாக்டர்.கேசவராவ் ஒருவிதமான காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கையில்தான் முழு நிறைவைக் கண்டார் என்பது எளிய விஷயமல்ல.

லேவ் தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ என்ற மகத்தான நாவலின் கதாநாயகர்களில் ஒருவனான பியர் பலவகைகளிலும் டாக்டர் கேசவராவுக்கு சமானமானவன். பெரும் செல்வம் அவனுக்கு கிடைக்கிறது. தன் வாழ்க்கையை மனநிறைவும் முழுமையும் கொண்டதாக ஆக்கும் விஷயங்களைத்தேடி அவன் அலைகிறான். குடி போகம் முதலில். மனிதாபிமானம் சேவை பிறகு. மதம் அடுத்து. ஆனால் இறுதியில் ஜெர்மனியரிடம் போர்க்கைதி ஆகி நெடுந்தூரம் நடக்கச்செய்யப்பட்டு மிக குறைந்த அளவுக்கு உணவும் ஓய்வும் அளிக்கப்படும்போதே அவன் மனநிறைவை அடைகிறான். உழைப்பு உணவு ஓய்வு ஆகியவற்றிலேயே மனிதனுக்கு திருப்தி உள்ளது என்ற ‘காட்டுமிராண்டித்தனமான’ மெய்யறிதல் அவனுக்கு கிடைக்கிறது.  ஒருவேளை அந்நாவலின்,  தல்ஸ்தோயின் வாழ்க்கைத்தரிசனமே அதுதான் போலும். இந்தக் கோணத்தில் பார்த்தோமெனில் இருபது வருடங்கள் சேவையைப்பற்றிய நாவல் அல்ல, சேவையின் வெறுமையைப்பற்றிய நாவல். கலாச்சாரம் குறித்த நாவல் அல்ல, கலாச்சாரத்தின் உள்ளீடின்மை பற்றிய நாவல். இது ஆசிரியரின் சொந்த வாழ்க்கைமூலமே அடையப்பெறச் சாத்தியமான ஒரு தரிசனம். ஏனெனில் இலட்சியவாதம் உச்சகட்ட முக்கியத்துவம் கொண்டிருந்த ஒருகாலத்தில் இந்நாவல் இப்படி ஒரு தரிசனத்தை முன்வைத்தமை ஆச்சரியம் தருவது. இது உடனே மறக்கப்பட்டமைக்கு இதுவும் ஒருகாரணமாக இருக்கலாம்.

இந்நாவலில் மிக முக்கியமான இடம் கேசவராவின் பிற்கால வாழ்வில் அவர் உணரும் வெறுமையும் அதை அவர் பலவாறாக வெளிப்படுத்தும் வரிகளும். நேரடியாக அது வெளிப்படும் இந்த பத்தி மொழிநடையாலும் முக்கியமான ஒன்று ‘உதைக்குப் பயந்து குதிரைக்கு வைத்தியம் செய்தால் சம்பளம் குறைவு. அதே அறிவையும் மருந்தையும் கொண்டு ஆபத்தின்றி மனிதனுக்கு வைத்தியம்பார்த்தால் அதிக சம்பளம் வரும். ஆகவே என் மகனை மெடிக்கல் காலேஜுக்கு அனுப்புகிறேன்…. அந்த வைத்தியனிடம் ஒருவன் வயிற்றுவலி என்று சென்றால் அவன் நோயாளியின் வயிற்றைக்கீறி அழுகின சதையை களைந்தெறிந்து கீறின இடத்தை தைத்துவிட்டு கையை நீட்டுகிறான்.நூறோ இருநூறோ ஐநூறோ ரூபாய் கையில் விழுகிறது. அவன்மனைவி அந்தப் பணத்தையெல்லாம் எடுத்துச் சென்று தொந்தி பெருத்த ஒரு வைரவியாபாரிக்குமுன் கொட்டி காதும் மூக்கும் பல்லும் பளிச்சிட திரும்புகிறாள். வைரவியாபாரிக்கு வயிற்றுவலி வந்தால் ஆகாய விமானத்தில் வியன்னா பட்டணத்துக்கு சென்று பத்தாயிரம் இருபதாயிரம் கொடுத்து அங்குள்ள டாக்டரின் கத்தியின் கீழ் படுக்கிறான்.வியன்னா டாக்டரின் மனைவி சொந்த விமானத்தில் இந்தியாவுக்கு பறந்துவந்து இங்குள்ள களிம்பேறிய விளக்குநாச்சியார் பொம்மைகளை வீங்கிய விலைக்கு வாங்கிச்சென்று இந்திய நாகரீகத்தை பற்றி பளபளப்பான காகிதத்தில் அமெரிக்க பிரசுரமாக ஒரு புஸ்தகம் வெளியிடுகிறாள்.நாம் அதை இரவலாக வாங்கிப்படித்து ஆகா ஊகூ என்கிறோம்….இப்படி வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொண்டே போகிறோம்….’ அறிவியல் பொருளாதாரம் கலை இலக்கியம் அனைத்தையுமே நிராகரிக்கும் இந்த எதிர்மறையான வாழ்க்கைத்தரிசனத்தை டாக்டர் எந்த விதமான எதிர்மறை சக்திகளையும் சந்திக்காமலேயே அடைகிறார். டாக்டர் தன் மரண நிமிடங்களில் தன்னை ஆட்கொண்ட காந்தியையோ, தன் தொழிலான மருத்துவத்தையோ தன் சேவை நிறுவனங்களையோ தன் குழந்தைகளையோ நினைவுறவில்லை ‘ஹெர் ஷ்மிட், கனகா, நம்பர் டென்,புவாபுவா’ என்று நியூ பிரிட்டன் தீவு வாழ்க்கையைப்பற்றி மட்டுமே நினைவுகூர்கிறார்.

தன் அடுத்த நாவலில் சேவை போன்ற இலட்சியவாத அம்சங்களிலிருந்து விலகி முழுமையான தனிவாழ்க்கை அல்லது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை என்ற ‘பகல்கனவுக்குள்’ எம்.எஸ்.கல்யாணசுந்தரம் நுழைகிறார். இந்த கற்பனை எதிர்மறையான கூறுகள் எதுவுமே இல்லாமல் முழுமையடையும்போது அது சாத்தியமே இல்லை என்ற எண்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்துகிறது. இந்த வாழ்வின் வெற்றிக்கு அவசியமானது என்று நாவலாசிரியர் ஒரு வாழ்க்கைப்பார்வையை முன் வைக்கிறார்.  வாழ்க்கை இராக்கால கார்ப்பயணம் போல. தன் முன்விளக்கு ஒளியில் பாதையின் சில அடிதூரம் மட்டிலுமே தெரிந்தால் போதும்,  நம்பிக்கையுடன் போகபோக பாதை விரியும். அதுவே சிறந்த பயணத்தை அமைக்கும் என்கிறார்.  வெகுதூரம் பார்க்க முடிந்தால் நீண்டகால கனவுகள் உருவாகின்றன. அக்கனவுகளுக்கான திட்டங்கள் பிறக்கின்றன. அத்திட்டங்களிலேயே அப்போது வாழும் கணங்கள் அனுபவிக்கப்படாமல் செலவாகி விடுகின்றன. வாழ்க்கையில் எய்தப்பெறுபவை, இலக்காகிறவை என ஏதுமில்லை; வாழ்க்கை தன்னளவிலேயே அழகானது, முழுமையானது என்று சொல்கிறார் எம்.எஸ்.கல்யாணசுந்தரம். டாக்டர் கேசவராவின் தேடலை, வாழ்க்கை நோக்கை, முற்றாக நிராகரிக்கிறது இந்த நாவல் எனலாம். ‘மானசீகப் பிரயாணம் செய்ய ஆற்றலுள்ளவர்கள் பூத உடலில் ஊர் சுற்றத் தேவையில்லை. ஜெர்மனிய தத்துவ ஞானி இம்மானுவேல் கேன்ட் தான் பிறந்த இடத்திலிருந்தோ தான் வேலைசெய்த ஊரிலிருந்தோ ஏழு மைல் தொலைவைத்தாண்டி எங்குமே சென்றதில்லை ‘[பகல் கனவு] நாளையைப்பார்க்காதே இன்றில் வாழமுயற்சி செய் என்று சொல்கிறது பகல்கனவு. ஒருவேளை டாக்டர் கேசவராவ் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டங்களில் கண்டடைந்ததும் அதுதானோ ?

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் இந்த வாழ்க்கைத்தரிசனத்தில் அமெரிக்க சிந்தனையாளர் தோரோவின் பங்கு கணிசமானது. தோரோவின் தரிசனம் ஏற்கனவே இங்கே இருந்து கொண்டிருப்பதுதான். தோரோவே அதை இங்கிருந்துதான் பெற்றார்.  ஆனால் அக்காலகட்டத்தில் படித்தமேல்தட்டினர் அதை அழகிய ஆங்கிலம் வழியாக அவரிடமிருந்து கற்றனர். ‘ஹென்றி டேவிட் தோரோ.  எமர்சனின் நண்பர். எனக்கு புதியகண்களைகொடுத்தவர்’ என மூர்த்தி [பகல்கனவு] குறிப்பிடுகிறார்.

[ஈ ]

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் முக்கியமான ஒரு சிறப்பம்சம் என்று இப்போது படுவது அவரது பெண் கதாபாத்திரங்கள். தமிழில் பெண்களை ஆணின் காமத்திலிருந்து பிரித்துப் பார்க்க பெரும்பாலான எழுத்தளர்களால் முடிந்தது இல்லை. நம் நினைவுக்கு உடனடியாக ஓடிவரும் தி ஜானகிராமனின் கதாபாத்திரங்கள் அனைத்துமே ஆணின் காமத்தின் ஒளியால் துலக்கம் கொள்பவை. விதிவிலக்கான ஆசிரியர் அசோகமித்திரன். எளிய பெண்களின் சாதாரண வாழ்வை நுட்பமாக சொல்ல அவரால் முடிந்தது. ஆனால் இலட்சியவாத நோக்கும் தனித்தன்மையும் துணிச்சலும் அறிவுத்திறனும் மிக்க கதாபாத்திரங்களை நாம் கல்யாணசுந்தரத்தின் படைப்புலகில் காணமுடிகிறது. ஜானகி, சாவித்ரி [இருபது வருடங்கள்] சுமித்ரா ஆகிய கதாபாத்திரங்கள் அழகானவை

[உ]

சி சு செல்லப்பாவின் மதிப்புரையில் ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். சென்னையில் நடந்த ஓர் அகில இந்திய எழுத்தாளர் கருத்தரங்கில் உருவ உள்ளடக்க விவாதம் அதிகமாக விவாதிக்கப்பட்டபோது வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்த எம்.எஸ்.கல்யாணசுந்தரம் சி சு செல்லப்பாவிடம் அவர் பஞ்சாபில் சாப்பிட்ட அனுபவம் பற்றி சொல்கிறார். சுவையான சட்டினி ஒரு தட்டிலே அளிக்கப்படுகிறது. சட்டினி மட்டும்தானே இருக்கிறது, தொட்டு எதைச் சாப்பிட என்று கேட்டார். அவர்கள் சொன்னார்கள், அந்த தட்டுதான் சப்பாத்தி என்று. தொட்டுசாப்பிட்டபோது அது சுவையாகவும் இருந்தது. உருவமே உள்ளடக்கமாக இருக்கவேண்டும் என்றாராம் எம்.எஸ்.கல்யாணசுந்தரம்.

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் நாவல்களையும் சிறுகதைகளையும் வடிவரீதியாக அணுகும்போது அவை அவற்றுக்குரிய இயல்பான வடிவங்களை கொண்டிருக்கின்றன என்றே படுகிறது. சில எழுத்தாளர்களின் ஆக்கங்களில் அவற்றின் தோல்வி அவை கோரும் வடிவங்களை அடையாமல் போனதில் உள்ளது என்று படும்– உதாரணம் புதுமைப்பித்தனின் ஆரம்பகால கதைகள் சில. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் கதைகளின் வடிவம் குறித்த போதாமை அவரது படைப்புச் செயல்பாட்டின் ஒட்டுமொத்தப் போதாமை சார்ந்ததேயாகும். அவரது நாவல்களில் அனாவசிய வளர்த்தல்கள் இல்லை. விவாதங்கள், கருத்துரைகள் அளவாகவும் சலிப்பற்றவையாகவும் உள்ளன. அவரது சிறுகதைகளில் மேலும் சுருக்கமான விசாரங்களே உள்ளன. மொழிநடை இத்தனை வருடங்களுக்கு பிறகும் சலிப்பு தராததாக உள்ளது. வடிவரீதியாக கல்யாணசுந்தரம் மிக கவனமாகவே இருந்துள்ளார்.

அதையும் மீறி அவரது ஆக்கங்களில் காணப்படும் வடிவக்குறை அவற்றில் படைப்பின் நாடகத்தன்மை சற்றும் உருபெறவில்லை என்பதே. அவரது நாவல்களின் கதையை சொல்லப்போனால் ஒரு நாவலின் விரிவான முகாந்தரம் போலவே உள்ளன. ஊடு மட்டுமே உள்ள நெசவு அது. அவரது ஆக்கங்களின் அத்தனை வடிவப் பிரச்சினைகளையும் உருவாக்குவது இதுதான். அவற்றில் மனித மன இயக்கத்தின் மாறுபட்ட சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்படவில்லை. விரிவான வாழ்க்கைசந்தர்ப்பங்கள் இல்லை. பெரிய துயரங்கள் இல்லை. உத்வேகங்களும் இல்லை. மிதமான வேகத்துடன் சென்றபடியே இருக்கும் ஒரு வாகனம் போன்றது அவர் நூல்களை வாசிப்பது. நாவல்கள் ஆசிரியரால்தான் நகர்த்தப்படுகின்றன, ஏனெனில் கதையில் கதாபாத்திரங்களோ கருத்துக்களோ மோதிக் கொள்ளாதபோது இயக்கமே சாத்தியமில்லை. இரு நாவல்களும் ஒரு வகை வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் போலவே உள்ளன. இருபது வருடங்கள் உண்மையில் வாழ்ந்த ஒருவரின் சரித்திரம் என்றும் அதை சரித்திர நாவல் என்று சொல்லலாம் என்றும் கல்யாணசுந்தரமே சொல்கிறார். சிறுகதைகளில் செவ்வியல் வடிவம் பெரும்பாலும் சிறப்பாகவே வந்துள்ளது. மீன்சாமியார், தபால்கார அப்துல் காதர் போன்ற கதைகள் கச்சிதமானவை.

இந்த வடிவை கல்யாணசுந்தரம் தவிர்த்திருக்கமுடியாது என்றும் படுகிறது. இலட்சியவாதத்துக்கும் நிறைவான வாழ்வுக்கும் இடையேயான உறவை, அல்லது முரண்பாட்டை, அல்லது நிறைவுக்கு இலட்சியவாதம் அளிக்கும் பங்கை பற்றி கூறவந்த படைப்பாளி அவர். இலட்சியவாதிக்கு புறச்சவால்கள் அவனை செம்மைப்படுத்தி தூண்டும் சக்திகள். அவை இலட்சியவாதத்தை வலிமைப்படுத்தும். இலட்சியவாதம் ஒரே முனையில்தான் தோற்கும். அலுப்பின் முன். அந்த அலுப்பைப்பற்றி பேச முனைகையில் வேறு வழி சாத்தியமே இல்லை. கேசவராவுக்கு அவரது இலட்சிய வாதத்தில் பெரும் சவால்கள் வந்துகொண்டே இருந்தது என்றால் அதன் மறுஎல்லை என்ன என்று அவர் அறிந்திருக்கப்போவது இல்லை. அனைத்துமே வெற்றி என்ற நிலையில்தான் அதன் அப்பால் உள்ள சூனியம் தென்படுகிறது. இலட்சியவாதத்தை மீட்டி மீட்டி சோர்வின் விளிம்புவரை கொண்டு செல்ல பாவு இல்லாத தறியோட்டமே தேவையாகிறது.

தன் நோக்கத்தாலேயே தன் செயல்பரப்பை வரையறை செய்துகொள்ள நேர்ந்த படைப்பாளி என்று கல்யாணசுந்தரத்தை சொல்லலாம். அந்த தளம் குறுகியது என்பதனால் அவர் முதன்மையான ஒரு படைப்பாளியாக ஆகவில்லை. அது சாத்தியமே இல்லை. ஆனால் கலாச்சார இயக்கத்தில் அவர் தொடும் இடங்கள் இன்றியமையாதவை. ஆகவே அவரது படைப்புகள் தமிழுக்கு என்றுமே குறையாத முக்கியத்துவம் கொண்டவை.

[ஊ]

இக்கணம் வரை நாம் நவீனத்துவம் உருவாக்கிய வாசிப்புப் பழக்கத்தை ஒட்டியே நமது இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறோம். இன்று நவீனத்துவம் காலத்தில் பின்னகர்ந்துவிட்டது. இதைச்சொல்ல நான் கோட்பாடுகளை எடுத்துமுன்வைக்கப்போவதில்லை, என் சொந்தவாழ்விலேயே அதை உணர்கிறேன். நவீனத்துவத்தின் இயல்புகளான புகைமூட்டம் கொண்ட எதிர்மறை எண்ணஓட்டங்கள், தனிமனித உண்மையை மொத்த வாழ்க்கைக்கும் போடும் சுயமையப் பார்வை, வரலாற்றின் சிக்கலான இயக்கம் பற்றிய உதாசீனம், மனிதனை சமூகத்துக்கும் வரலாற்றுக்கும் இயற்கைக்கும் இப்பால் நிறுத்தி அவற்றால் கைவிடப்பட்டவனாகவும் அடிப்படைமிருக உணர்வுகளால் மட்டுமே வழிநடத்தப்படுபவனாகவும் பார்க்கும் கோணம் ஆகியவை இன்று இலக்கியத்தில் செல்லுபடியாகாதவை. நவீனத்துவ படைப்புகள் இன்று முக்கியத்துவமிழந்துவிட்டன என்று சொல்ல வரவில்லை. பார்வைகள் காலாவதியானாலும் படைப்புகள் காலாவதியாவதில்லை. ஆனால் இன்றைய எழுத்தாளனின் சவால்கள் வேறு. இன்றைய வாசகனின் தேவைகளும் வேறுதான். அவர்கள் தனிமனிதன் என்ற கருத்துருவை வரலாறும் சமூகமும் சிதைத்து தொகுத்து ஆடும் மாபெரும் ஆட்டத்தை எழுதி வாசிக்க விரும்புகிறார்கள்.

இன்று நவீனத்துவம் பின்னகரும்போது நாம் நமது மதிப்பீடுகளை மீண்டும் பரிசீலனை செய்துகொள்ளவேண்டியுள்ளது. நவீனத்துவம் உருவாக்கிய மனநிலைகள் காரணமாக சில படைப்பாளிகளை நாம் மிகைப்படுத்தியிருப்போம். சில படைப்பாளிகளை உதாசீனமும் செய்திருப்போம். அது இயல்பும்கூட. நவீனத்துவம் கச்சிதமான வடிவ ஒருமையையும் கறாரான மொழியையும் தன் அழகியல் கொள்கையாக கொண்டுள்ளது. அதை மீறவேண்டுமானால் புகைமூட்டம் மிக்க தனிநபர் எண்ண ஓட்டங்கள் மட்டுமே வழி என எண்ணுகிறது. இவ்வழகியல் கோணம் காரணமாக நாம் இதற்கு ஒத்துவரும் படைப்புகளை ஏற்றுக் கொண்டிருப்போம். நவீனத்துவம் வடிவவாதத்தை வலுவாக முன்வைத்தது என்பதை நாம் மறக்கக் கூடாது. இலக்கியப்படைப்பை மதிப்பிடுவதற்கு வடிவம் மட்டுமே புறவயமான ஒரே அளவுகோல் என்றும், அதன் பேசுபொருள் நோக்கம் விமரிசனம் தரிசனம் போன்றவை முற்றிலும் அகவயமானவை என்றும் நம்பியது அது.ஆகவே வெறுமே கச்சிதமான நவீனத்துவ வடிவம் கொண்டிருக்கிறது என்பதற்காகவே பல படைப்புகள் நமது அங்கீகாரத்தை பெற்றன.இவ்வடிவை ஏற்காத முந்தைய காலகட்ட படைப்புகள் பல முதல்பார்வையிலேயே நம்மால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக மெளனி, நகுலன், ஜி நாகராஜன்,சம்பத் முதலியோரின் இலக்கிய இடம் நவீனத்துவ பார்வையினால் பெரிதும் மிகைப்படுத்தப்பட்டது என்பது என் எண்ணம். இப்படைப்பாளிகளைப் பற்றி தீவிரமான பாராட்டுகளை வெளிப்படுத்துபவர்கள் பெரும்பாலும் நவீனத்துவத்துக்கு வெளியே அதிகம் படிக்காதவர்கள்தான். பெரும் செவ்வியல் ஆக்கங்களில் அல்லது நவீனத்துவத்துக்கு பிந்தைய ஆக்கங்களில் அல்லது இன்றைய அறிவியல்புனைவுகளில் இவர்களுக்கு அறிமுகம் [பெயர்கள் சொல்வது எளிய விஷயம்] இருப்பதில்லை. இதேபோல நவீனத்துவ அழகியல் காரணமாக நிதரிசனப்பாங்குள்ள படைப்பாளிகளான நீல பத்மநாபன், சிதறிய வடிவம் கொண்ட ஆக்கங்களை உருவாக்கிய ப சிங்காரம் போன்றவர்கள் முழுமையான நிராகரிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே கவனமே பெறாத ‘நடைபாதை’ உதயன் போன்றவர்களை மீண்டும் படித்து மதிப்பிடவேண்டும் என்று எனக்குப் படுகிறது. எளிய முறையில் கேளிக்கையாளர் முத்திரை குத்தி ஒதுக்கப்பட்ட கல்கி சுஜாதா போன்றவர்களை மறுபரிசீலனை செய்து கறாராக மதிப்பிடுவதும் அவசியமாகிறது. அதேபோல தேவநேயப் பாவாணர் போன்ற தமிழறிஞர்களும் நவீனத்துவத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களே. இன்று புதிய வாசிப்பின் வழியாக இவர்களை மதிப்பிட்டு இவர்களுடைய இலக்கிய இடங்களை வகுக்கவேண்டிய தேவை உள்ளது. இதுசார்ந்து விவாதங்களும் தேவை.

நவீனத்துவப் பார்வையால் புறக்கணிக்கப்பட்டவர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம். அவரது இலட்சியவாதத்தின் மீது முதல்கணத்திலேயே நவீனத்துவத்தின் அலட்சியக்கண்தான் விழுந்தது. இன்று புதிய வாசிப்பின்மூலம் அவரை நாம் மீண்டெடுத்தாக வேண்டும். ஏனெனில் அடுத்த காலகட்டத்துக்கான விதை நவீனத்துவத்தின் குறுகலான பாத்தியிலிருந்துமட்டும் நமக்கு கிடைப்பதில்லை.

************************************************************************

கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்

1] இருபதுவருடங்கள்[நாவல்]

2] பகல்கனவு [நாவல் ]

3] பொன்மணல் [சிறுகதைகள்]

[தமிழினி பதிப்பகம், 342, டி டி கெ சாலை ,ராயப்பேட்டை ,சென்னை. 14 அணுக [email protected] ]

முந்தைய கட்டுரைசடம் கடிதங்கள் -5
அடுத்த கட்டுரைகோவை புதிய வாசகர் சந்திப்பு பற்றி