வினயா ஒரு பெண்காவலரின் வாழ்க்கைக்கதை வாங்க
அன்புள்ள ஜெயமோகன்,
கடந்த வாரம் குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்ப்பில் “வினயா. ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை” என்ற நூலை வாசித்தேன். இது கேரளாவின் வயநாடு பகுதியை சேர்ந்த ஒரு பெண் காவலரின் வாழ்க்கைப் பதிவுகள் என்று வரையறுக்கலாம். ஒரு சுயசரிதை வடிவம் என்று கொள்ளலாம். பொதுவாக சுயசரிதை என்பது வெற்றியாளர்கள் என்று கருதப்படுபவர்களின் வெற்றி சூத்திரங்களை ஆவணப்படுத்தும் பக்கங்கள் என்பது தான் எனது எண்ணம்.
அதீதமான அறிவுரை நோக்குடனோ இல்லை கழிவிரக்கம் கோருபவையாகவோ இல்லை, ஒரு கருத்தியலை மறைமுகமாக பறைசாற்றும் எண்ணத்துடனோ எழுதப்பட்டதல்ல இந்த நூல். காவல்துறையை சார்ந்தவர்கள் இதற்கு முன்னர் சுயசரிதை எழுதியிருந்தாலும் பொதுவாக அது ஐ.பி.எஸ் அல்லது துறையின் உயர்பதவிகளை அங்கீகரித்தவர்களால் எழுதப்பட்டது. பெரும்பாலும் அது ஒரு நேர்மையான தனிமனிதன் ஒரு அமைப்புக்குள் சந்திக்கும் சிக்கல்களை ஓரளவுக்கு எடுத்துக் கூறுவதுடன் தன் எல்லையை சுருக்கிக் கொள்ளும் வகையில் தான் எழுதப்பட்டுள்ளன. முதல் முறையாக (எனக்குத் தெரிந்தவரை) காவல் துறையில் மிகவும் தொடக்க நிலையில் இருக்கும் ஒருவரால் எழுதப்பட்டதும் அதுவும் அவர் ஒரு எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த பெண் என்பதும் தான் இந்த புத்தகத்தை வாசிக்கத் தூண்டியது. இந்த நூலை மொழிபெயர்ப்பு செய்ய. நீங்கள் பரிந்துரை செய்ததாக யூசுப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலைப் பற்றி சுருக்கமாக கூற வேண்டும் என்றால் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளரும் ஒரு இளம்பெண் தன்னளவில் தான் வாழும் சூழலில் அவதானிக்கும் நிகழ்வுகளில் இருந்து பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இந்த சமூகம் திட்டவட்டமாக வரையறுத்து வைத்திருக்கும் விதிகளின் அபத்தங்களை தன்னளவில் கண்டு உணர்கிறாள். இந்த நிலையில் அவள் காவலர் பணிக்கு சேர்கிறாள். பிறகு அந்த காவல்துறை என்ற அமைப்பிற்குள் ஒரு பெண் எவ்வாறு நடத்தப்படுகிறாள் என்பதை என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். மேலும் தன்னுடன் பணிபுரியும் ஒரு சக காவலனை திருமணம் செய்து கொள்கிறாள். வழக்கமான காவல் துறையில் நிலவும் ஆதீத ஒழுக்கம் சார்ந்த தண்டனைகள், எவ்வித கருணையும், மனிதாபிமானம் இன்றி மேலதிகாரிகள் நடத்தும் விதம், சக காவலர்களில் இருந்து உச்சபட்ச மேலதிகாரி வரை பெண்காவலர்களை நடத்தும் விதம் என்று ஒவ்வொரு நிலையிலும் தன்னுடைய உள்ளுணர்வால் உந்தப்பட்டு அந்த பாகுபாடுகளுக்கு முடிந்தவரை எதிர்வினையாற்றுகிறாள். சில மாற்றங்களையும் சாதிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் கேரள டி.ஜி.பிக்கு எதிராக ஒரு வழக்கு தொடுக்கும் நிலைக்கு சென்று விடுகிறது. அதன் காரணமாக ஏற்படும் நெருக்கடிகளால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறாள். ஒரு கட்டத்தில் அவருடைய கணவருக்கு வாழ்க்கை திரும்பப் பெற அழுத்தம் கொடுக்கிறார்கள். அவளுடைய சுயத்தையும், அவளின் சமதத்துவ தேடலையும் உணர்ந்து அவளுக்கு முழு ஆதரவு கொடுக்கும் கணவன் ஒரு கட்டத்தில் அந்த வழக்கை திரும்ப பெறாவிட்டால் தனக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று கூறுவதை கேட்டு உடைந்து போவதுடன், வேறு வழியில்லாமல் வழக்கை திருப்ப பெற்றுக் கொள்கிறாள். எந்த சமூக விதிகள், ஆசாரங்கள் போன்றவற்றை எதிர்த்து போராடினாளோ இறுதியில் அந்த விதிகளுக்கு பணிந்து விடுகிறாள். இந்த நூலைப் பற்றி இன்னும் விரிவாக எழுதி விவாதிக்க வேண்டும். அதற்கு முன் எனக்கு சில வினாக்கள் உள்ளன. உங்கள் கருத்துக்களை அறிய விழைகிறேன்.
1. பாலின சமத்துவமின்மை இந்திய சமூகத்தில் திட்டவட்டமாக நிலைபெற மதம் தான் முதற்காரணமா?? என்னுடைய ஐயம் முழுக்க முழுக்க நிகழ்காலம் சார்ந்தது. இந்து மதத்தை வெறும் சடங்காக மட்டும் இருக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி இல்லை ஆச்சாரங்களை கடை பிடிக்கும் சமூகமாக இருந்தாலும் சரி, பாலின சமத்துவத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் இயங்குகின்றன. பாலின சமத்துவம் என்ற கருத்தியலை உள்வாங்க நாம் நம்முடைய மரபுக்கு வெளியே நம்மை நிறுத்தி கொள்ள வேண்டுமா?
2. என்னுடைய 30+ வருடத்தில் நான் கற்ற, நம்புகின்ற பல்வேறு விஷயங்கள் வெகு ஆழத்தில் சென்று பார்த்தால் பெரும்பாலும் அவை பாலின சமத்துவமின்மையின் மீது தான் கட்டி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணம் அம்மா மதுக்கடைக்கு சென்று மது அருந்தி விட்டு வருவதும் அப்பா சமையல் செய்து விட்டு காத்து கொண்டிருப்பதுமாக என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
3. குழந்தைகளுக்கு எவ்வாறு பாலின சமத்துவத்தை கற்றுக்கொடுப்பது?
ஆழமாக யோசிக்கும் போது சில நேரங்களில் ஒருவித சோர்வு வந்துவிடுகிறது. ஆதனால் தான் தங்களிடம் கேட்கிறேன். உடல். நலம் பேணிக்கொள்ளவும்
கோபி செல்வேந்திரன்
***
அன்புள்ள கோபி,
மேலே சொன்ன கேள்விகளுக்கெல்லாம் விடைகளை நீங்களே யோசிக்கலாம். பாலினச் சமத்துவமின்மையை மதம் கற்பித்து நிலைநிறுத்துகிறதா? பாலியல் சமத்துவத்தை நாம் நம் வாரிசுகளுக்குக் ‘கற்பிக்க’ வேண்டுமா? இவற்றை மானுடப்பரிணாமத்தின் பொதுச்சித்திரத்தில் வைத்தாலொழிய நாம் எதையும் சிந்திக்க முடியாது.
சமத்துவமின்மைகள் எப்படி உருவாகியிருக்கலாம்? அவை மனிதனை அடிமைப்படுத்துவதற்காக, சமூகத்தை கட்டிப்போடுவதற்காக உருவாக்கப்பட்டவை என நம்புவது ஒரு பார்வை. ஆனால் அது ஒருவகை சோர்வுப்பார்வை. மானுடசமூகம் எப்போதும் வளர்ச்சிமுகமாகவே உள்ளது. அது இதுகாறும் வளர்ந்து வந்துள்ளது என்பதும் கண்கூடு. ஆகவே வளர்ச்சிக்கு உதவுவன மட்டுமே இதில் நீடித்திருக்க முடியும். எனவே அதிலுள்ள எல்லா நம்பிக்கைகளும், ஒழுங்குகளும், எண்ணங்களும் அது தன் வளர்ச்சிக்காக உருவாக்கிக்கொண்டவை, சோதனைகளில் தேறி நிலைகொண்டவை என எண்ணுவதே சரியான பார்வை.
இதுவரையிலான மானுட வரலாற்றை ஒட்டுமொத்தமாக ‘சமூக உருவாக்கத்தின் காலம்’ என வரையறை செய்யலாம். மானுட இனம் பிற உயிரினங்களைப் போலவே தனிமனிதர்களாக, குருதிசார் குழுக்களாக, இடம்சார் குழுக்களாக பிரிந்திருந்தது. ஒன்றோடொன்று கடுமையாகப் போரிட்டது. பிறிதை அழித்துத் தான் வாழ முயன்றது. தொல்மானுட வரலாற்றை எழுதும் ஆய்வாளர்கள் உக்கிரமான வன்முறையின் சித்திரத்தை அளிக்கிறார்கள். நியாண்டர்தால் போன்ற ஒப்பீட்டளவில் ஆற்றல்மிக்க தொல்மானுட இனங்கள் பிற இனங்களை முற்றாகவே அழித்ததை விவரிக்கிறார்கள்.
அந்த குருதிப்பெருங்களத்தில் இருந்து மெல்லமெல்ல பெரிய மானுடத்தொகுப்புகளை உருவாக்கிக் கொண்டனர். அதையே தொல்சமூகங்கள் என்கிறோம். அவை குருதி சார்ந்த குழுக்களாகவும், அக்குழுக்கள் இணைந்த சமூகங்களாகவும், பின்பு பல சமூகங்கள் இணைந்த பெருஞ்சமூகங்களாகவும், அதன்பின் தேசங்களாகவும், மதங்களாகவும், இனங்களாகவும் தங்களை தொகுத்துக்கொண்டன. மொழி, இன அடையாளம், நிலம் போன்றவை பொதுவான தொகுப்புக்கு உதவின.
இவ்வாறு சமூக உருவாக்கம் நிகழும்போது அதை தலைமுறை தலைமுறையாக மாறாதவையாகவே அமைத்தனர். அல்லது அப்படி தலைமுறை தலைமுறையாக மாறாமல் நீடித்தவையே பயன் அளித்தன. பழைய சமூகங்களில் நிலைத்த தன்மையே ஆற்றல் எனப்பட்டது. பழைய நூல்கள் மாறாமல் நிலைகொள்வதை மாபெரும் பண்புநலனாகக் குறிப்பிடுகின்றன. ‘பதி எழு அறியா பழங்குடி’ நிறைந்தது பூம்புகார் என்கிறது சிலப்பதிகாரம்
மாறாதது குருதி. ஆகவே எதுவுமே பிறப்படிப்படையில் எப்போதைக்கும் உரியதாக நிறுவப்பட்டது. சொத்துரிமை, நிலத்தின்மீதான ஆதிக்கம், அடையாளங்கள் எல்லாமே பிறப்பு சார்ந்தவையாக இருந்தன. அவ்வண்ணம் நீடிக்கும் பிறப்புசார்ந்த அடையாளங்கள் அவற்றுக்குரிய நம்பிக்கைகளை, மனநிலைகளை, தொன்மங்களை, குறியீடுகளை உருவாக்கிக்கொண்டன. அவை மதங்களாகவும் பிற பண்பாட்டுக்கூறுகளாகவும் ஆக்கப்பட்டு மேலும் உறுதிப்படுத்தப்பட்டன.
மதங்கள் உருவாவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மானுடர் பிறப்புசார் அடையாளங்களை உருவாக்கி அவற்றின் அடிப்படையில் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர். குலக்குறிகள் (Totem) என்பவை பிறப்படிப்படையில் உருவான அடையாளங்கள் மனிதர்களை குழுக்களாக ஆக்கின. அவையே பின்னாளில் மதச்சின்னங்களும் தெய்வ வடிவங்களும் ஆயின.
உறுதிப்படுத்தல், நிலைநிறுத்தல் ஆகியவையே சமூக உருவாக்கக் காலகட்டத்தின் மையச்செயல்பாடாக அமைந்தன. அன்றைய எல்லா மனநிலைகளும் அதன் அடிப்படையில் அமைந்தவை. தங்கள் அமைப்பை திட்டவட்டமாக வகுத்து உறுதிப்படுத்திக்கொண்ட சமூகங்கள் ஆற்றல்மிக்கவையாக மாறி பிறவற்றை அடக்கி ஆண்டன. அல்லது அழித்தன. வெற்றிபெற்ற எல்லா சமூகங்களும் மாறாநெறிகளால் ஆனவை. இதுவே மானுட வரலாற்றின் சமூகவியல் சித்திரம்
ஒவ்வொருவரின் தனித்தன்மைகளைக்கொண்டு அவரவருக்கான பணியை, இடத்தை வரையறை செய்து நிலைநிறுத்திக்கொண்டே இருந்தது சமூக உருவாக்கக் காலகட்டம். அவ்வாறுதான் பிறப்பு அடிப்படையிலான தொழில்கள் பிரிக்கப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் சமூகப்படிநிலைகளும் அதிகாரமும் வகுக்கப்பட்டன. இந்தியாவில் அவை சாதிகளாக ஆயின. உலகமெங்கும் எல்லாச் சமூகங்களிலும் பிறப்படைப்படையிலான பிரிவினைகள்தான் அடிப்படைச் சமூகக் கட்டுமானத்தை உருவாக்கும் நெறிகளாக இருந்தன.
(இன்று உயிரியியல் ஆய்வுகள் காட்டும் சித்திரம் என்னவென்றால் பெருந்திரளாகச் செயல்படும் எந்த உயிரினமும் (எறும்புகள் உட்பட) பிறப்பு அடிப்படையிலான கடமைப்பிரிவினையையும் அதற்கான நடத்தைகளையும் மாறாமல் நிறுவிக்கொண்டுதான் செயல்படுகின்றன என்பதே)
இவ்வாறுதான் நம் உறவுகள் எல்லாம் உருவாகி வந்திருக்கின்றன. தந்தை மைந்தர் உறவு, மூத்தோர் இளையோர் உறவு, அரசன் குடிமகன் உறவு, ஆண்டை அடிமை உறவு என பல உறவுகள் பலவகைகளில் இன்றும் நீடிக்கின்றன. அரசமுறை அடிமைமுறை போன்றவை மறைந்தாலும் உளநிலைகள் நீடிக்கின்றன. அவ்வாறு உறுதியாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடம். அவ்வாறு உறுதியாக கடமைகளையும் உரிமைகளையும் உறவுகளையும் நிறுவிக்கொள்ளவேண்டிய தேவை சமூகங்களுக்கு இருந்தது.
தொல்சமூகங்கள் பெரும்பாலும் வேட்டைச்சமூகங்கள். பின்னர் அவை போர்ச்சமூகங்களாக மாறின. அங்கே வேட்டைக்காரனுக்கும் படைவீரனுக்கும்தான் முதன்மை இடம். அதிகாரம், உரிமைகள் எல்லாம் அவனுக்கே. குடும்பத்தைப் பேணுவது, குடியடையாளத்தை நீட்டிப்பது, குழந்தைகளை பெற்றுத்தருவது ஆகியவையே பெண்களின் இடம் என வகுக்கப்பட்டது. ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே என்னும் ஔவையார் பாடல் இதையே குறிக்கிறது.
பெண்ணுக்கு இரண்டாம் இடம்தான். ஆனால் அது அடக்குமுறையால் உருவானது அல்ல, அது ஒரு நடைமுறைத் தேவையின் பொருட்டு உருவான அமைப்பு. அது வெற்றிபெற்றது. அந்தமுறை இருந்த சமூகங்களே வென்று நீடித்தன என்பதே அதன் நடைமுறைத் தேவைக்கான சான்று. பெண்ணுக்கு இரண்டாமிடம் வழங்கும் நெறிகள் மதங்கள் தோன்றுவதற்கு முன்னரே அவை உருவாகி நிலைபெற்றிருந்தன. மதங்களுக்குள் கொண்டுசெல்லப்பட்டு மதநெறிகளாக ஆக்கப்பட்டன
போர்க்குடிகள் அல்லாத தொல்குடிகளில் பெண்ணின் இடம் சிறப்பானதாக இருந்தது. இணையானதாகவோ ஆணைவிட மேலானதாகவோ. ஆனால் புறச்சவால்கள் இல்லாத காடுகளில் வாழ்ந்த பழங்குடிகளில் மட்டுமே அந்த முறை நீடித்தது. அந்த முறையின் ஒரு சில ஆதாரங்கள் கேரளம், வடகிழக்கு பகுதிகளில் உள்ளன. ஆனால் போர்ச்சாதிகளாக அவை மாறியபோது மிக விரைவிலேயே பெண்களின் முதன்மை என்பது ஒருவகை ஆசாரமாக மாற்றிக்கொள்ளப்பட்டு ஆண்களைச்சார்ந்து அச்சமூகங்கள் உருமாறியதையும் காண்கிறோம்.
உறுதியான தொல்சமூகங்களில் ஒவ்வொரு சமூக உறுப்பும் ஒட்டுமொத்தத்தால் கட்டுண்டதுதான். ஒரு கட்டிடத்தில் எல்லா செங்கல்லும் மொத்தக் கட்டிடத்தால் பிடித்து வைக்கப்பட்டிருப்பதைப் போல. குழந்தைகள் பெற்றோருக்கு கட்டுண்டவர்கள். ஒவ்வொரு ஆணும் அவனுக்குமேலே உள்ள அதிகார அமைப்புக்கு கட்டுண்டவன். மேலே இருப்பவர்கள் அனைவருமே அதற்குமேலே இருப்பவர்களுக்கு கட்டுண்டவர்கள். அறுதியாக இருப்பவர் ஆசாரங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் கட்டுண்டவர்.
பலவகையான ஆசாரங்கள் வழியாக ஒவ்வொருவரையும் ஒட்டுமொத்தச் சமூகமும் சேர்ந்து உறுதியாக கட்டுப்படுத்தியது. அவற்றை மீறும் எண்ணம் அன்று இருக்கவில்லை. ஏனென்றால் அந்த கட்டுப்பாடுகள் வழியாக உருவாகும் ஒற்றுமையும் உறுதியான சமூக அமைப்பும் அவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கின, வாழ்க்கையின் சவால்களை கூட்டாக எதிர்கொள்ளச் செய்தன. அத்துடன் அன்று அவர்கள் தங்களை தனிமனிதர்கள் என்றும் தங்களுக்கு தனியுரிமைகள் உண்டு என்றும் எண்ணவில்லை.
அவ்வாறே பெண்ணும் குடும்பம், தந்தை, கணவன் என பலருக்கும் கட்டுண்டவள். அதாவது அவள் மட்டும் அடிமை அல்ல, அத்தனைபேருமே ஏதோ ஒருவகையில் அடிமைகளே. கீழே வர வர அடிமைச்சுமை அதிகம். அவ்வளவுதான். பெண்ணடிமைத்தனம் பற்றிப் பேசுகிறோம், இன்னமும்கூட நாம் நம் குழந்தைகள் சார்ந்த எல்லா முடிவையும் நாமே எடுக்கிறோம். அவர்களை அடிக்கவும் வசைபாடவும் செய்கிறோம். அந்த அடிமைத்தனம் நம் கண்ணுக்குப் படுவதுமில்லை.
நவீனச்சமூகத்திற்கும் தொல்சமூகங்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. நவீனச் சமூகம் என நாம் சொல்வது சென்ற இருநூறாண்டுகளில் இந்தியாவில் படிப்படியாக உருவாகிவந்த ஒன்று. அதற்கு நூறாண்டுகள் முன்பு ஐரோப்பாவில் உருவானது. நவீனச் சமூகத்தின் மனநிலைகள் தொல்சமூகத்தில் ஏன் இல்லை என்று கேட்பதும் சரி, நவீனச் சமூகம் தொல்சமூகத்திற்கு எதிரி என நினைப்பதும் சரி, தொல்சமூகம் ஒரு கீழ்நிலை என நினைப்பதும் சரி, மானுடப்பரிணாமத்தை அறியாத சிந்தனைகள். நவீனச்சமூகம் தொல்சமூகத்தின் வளர்ச்சிநிலை, அவ்வளவுதான்.
நவீனச் சமூகத்திற்கும் தொல்சமூகங்களுக்குமான வேறுபாடுகள் என்னென்ன?
அ. நவீனச் சமூகம் உருவாவதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது போரில்லா நிலை. பெரிய நாடுகள் உருவாகி, அவற்றில் உறுதியான நிலையான அரசு உருவாகி, சமூகத்திற்குள் நிகழும் தொடர்போர்கள் இல்லாமலாகும்போது மட்டுமே நவீனச் சமூகங்கள் உருவாக முடியும். இனக்குழுச்சண்டைகள், நிலப்பகுதிச்சண்டைகள் முழுமையாக நின்றுவிடும்வரை நவீனச்சமூகம் உருவாகாது. அவ்வாறு போர் இல்லாமலாகும்போது போரை அடிப்படையாகக் கொண்டு உருவான அமைப்புகள் மற்றும் மனநிலைகள் மறையும். அதுவே நவீனச் சமூகம் உருவாகும் பாதை.
ஆ. போக்குவரத்து, செய்தித்தொடர்பு ஆகியவற்றில் உருவான பெரும்புரட்சி நவீனச் சமூகத்தை உருவாக்குகிறது. அவை பலகோடி மக்களை இணைந்து மாபெரும் சமூகங்களை உருவாக்குகின்றன. இந்தியாவில் இருநூறாண்டுகளுக்கு முன்புதான் மக்கள் அவரவர் சாதிக்குழுக்களை விட்டு வெளியே வந்து பொதுவான சமூகத்தை உணர ஆரம்பித்தனர். காரணம் ரயில், தபால், சாலைகள், செய்தித்தாள்,வானொலி, சினிமா. இவ்வாறாகத்தான் பொதுச்சமூகம் என்னும் அமைப்பு உருவாகிறது. அது மனிதர்கள் தங்கள் சாதி, இனக்குழு, தொழிற்குழு வட்டாரங்களுக்குள் வாழவேண்டிய தேவையை இல்லாமலாக்கியது.
இ. நவீனச் சமூகம் என்பது பொதுக்கல்வியால் உருவாக்கப்பட்டது. முன்னரும் கல்வி இருந்தது. ஆனால் அது தனிக்கல்வி. இனக்குழுக்களுக்குள் தொழிற்குழுக்களுக்குள் குடும்பத்திற்குள் அளிக்கப்பட்ட கல்வி. ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொன்று. அனைவருக்குமான பொதுக்கல்வியே சராசரி குடிமகன் என்ற அலகை உருவாக்கியது. இந்தியாவில் பிரிட்டிஷார் உருவாக்கியதுதான் பொதுக்கல்விமுறை.
இவ்வாறு உருவான நவீனச் சமூகத்தில்தான் ‘தனிமனிதன்’ என்னும் கருத்துருவம் உருவாகிறது. தனிமனிதனாக மனிதர்கள் தங்களை உணரும்போதுதான் தங்கள் உரிமைகளை அறிகிறார்கள். சமத்துவம் என்பது ஓர் உரிமை என்னும் எண்ணம் உருவாகிறது. இதெல்லாம் இந்தியாவில் சென்ற இருநூறாண்டுகளாக உருவான சிந்தனைகள்.
வலுவான அரசு, சீரான நீதி மற்றும் நிர்வாகமுறை, பொதுக்கல்வி ஆகியவற்றின் விளைவாகவே தனிமனிதன் என்னும் கருத்து உருவாகி நிலைகொள்ள முடியும். அதன்பின்னரே சமத்துவம் என்னும் கருத்து உருவாக முடியும். இந்தியாவில் தனிமனிதன் என்னும் கருத்து இன்னும்கூட முழுமையாக உருவாகவில்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணந்தால் அவன் குடும்பமும் சாதியும் அவனைக் கொல்லச் செல்வது இன்னும்கூட தனிமனிதன் என்னும் எண்ணம் நிலைகொள்ளாததனால்தான்.
சென்ற காலங்களில் இங்கே தனிமனித உரிமை, சமத்துவம் ஆகியவற்றுக்காக ஒவ்வொருவரும் போராடினர். அடித்தளச் சாதிகள் போராடினர். மிக மேல்மட்டத்தில்கூட அந்தப் போராட்டம் நிகழ்ந்தது. ஈமச்சடங்குகளைச் செய்யும் பிராமணர் மற்ற பிராமணர்களிடம் சமத்துவத்திற்காகப் போராடினர் என்பதெல்லாம் வரலாறு. அந்தப் போராட்டம் இன்றும் நீடிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம் தனியடையாளத்தை காக்க, நம் உரிமைகளுக்காக கொஞ்சமேனும் போராடிக்கொண்டிருக்க வேண்டியவர்களே.
பெண்கள் கல்வி கற்று தனிமனிதர்களாக உணரும்போது சமத்துவத்திற்கான குரல் எழுகிறது. இது பெண்களுக்கு மட்டுமான ஒரு தனிநிகழ்வு அல்ல. தொல்சமூகங்களில் இருந்து நவீனச் சமூகம் நோக்கி செல்லும் ஒவ்வொருவரும் நிகழ்த்தும் போராட்டம். பெண்களுக்கு ஆண்களை விட கட்டுப்பாட்டுச் சுமை அதிகம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இன்னும் அதிகம். பழங்குடிகளுக்கு இன்னும் அதிகம். விளிம்புநிலையாளர்களான மூன்றாம்பாலினம் போன்றவர்களுக்கு இன்னும் அதிகம்.
இந்தப்போராட்டம் நிகழ்கிறது என்பதே இங்கே மாற்றங்கள், வளர்ச்சிகள் நிகழ்கின்றன என்பதற்கான சான்று. நாம் மேலும் மேலும் நவீனச் சமூகமாக ஆகிறோம். மேலும் தனிமனிதர்களாகவும் சமத்துவம் கொண்டவர்களாகவும் ஆகிறோம். நம் தாத்தாவை விட நம் அப்பா சுதந்திரமானவர். நாம் மேலும் சுதந்திரமானவர்கள். நம் பிள்ளைகள் நமக்கிருந்த கட்டுப்பாடுகளையும் தாண்டியிருக்கிறார்கள். நம் பாட்டியை விட நம் அம்மா, நம் அம்மாவை விட நம் மனைவி, நம் மனைவியை விட நம் மகள் சுதந்திரமானவர்கள்தான்.
இந்த பரிணாமம் எதுவரை? நாம் இன்று உருவகிக்கும் நவீனச் சமூகம் என்பது ஓர் இலட்சியவடிவமா? அல்ல. இந்தப் பரிணாமத்தின் உச்சியில் இன்னொரு அதிநவீனசமூகம் உருவாகலாம். இன்று நாம் அதை முழுமையாகக் கற்பனைசெய்ய முடியாது. பாலியல் அடையாளங்களற்ற சமூகமாக அது இருக்கலாம். வேலைசெய்யாமல் இருக்கும் இயந்திர மயமாக்கப்பட்ட சமூகமாக இருக்கலாம். மனிதர்கள் ஒரே வகையானவர்களாக தரப்படுத்தப்பட்டிருக்கலாம். அல்லது மனிதர்கள் ஒவ்வொருவரும் முற்றிலும் தனித்தன்மை கொண்ட தனி அமைப்புகளாக இருக்கலாம். நாம் இங்கிருந்து அங்குநோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்.
நாளை உருவாகும் சமூகம், அதாவது இருநூறாண்டுகள் கழித்து வரும் ‘அதிசமூகம்’, பாலியல் அடையாளங்களில் இருந்து விடுபட்டிருக்கும். ஆண் அல்லது பெண் என்பது ஒருவர் தற்காலிகமாக சூடிக்கொள்ளும் அடையாளமாக, தன்னிலையாக இருக்கும். ஒருவர் வாழ்க்கையில் பலமுறை ஆணாகவும் பெண்ணாகவும் மாறி வாழநேரிடலாம். பாலடையாளமே இல்லாதவர்களும் இருக்கலாம். வழக்கமான பாலுறவும் பாலின்பமும் காலாவதியாகி வேறுவகை நரம்புத்தூண்டல்கள் வழியாக அவ்வின்பங்கள் அடையப்படலாம். இது என் ஊகம்
ஏனென்றால் ஐரோப்பாவில் இன்றுள்ள பல குறுங்குழுச் சமூகங்கள் அத்தகையவையாக உள்ளன. நவீன உயிரியல் தொழில்நுட்பம் அந்த போக்கை வலுப்பபடுத்தும். நான் நித்யாவின் மாணவரான ஓர் அமெரிக்க வெள்ளைய எழுத்தாளர் வழியாக அறிமுகம் செய்துகொண்ட ஒரு குறுங்குழுச் சமூகம் அப்படிப்பட்டது. நாம் திகைக்குமளவுக்கு விசித்திரமான பாலடையாளங்கள் கொண்டது. நான் ஒரு நாவலை எழுத அக்காலத்தில் எண்ணியதுண்டு.
சமூகங்களின் உருவாக்கத்தில் அவை போராடி வாழும் சூழலே பெரும்செல்வாக்கைச் செலுத்துகிறது. அதேபோல இன்று தொழில்நுட்பம் பெரும்செல்வாக்கைச் செலுத்துகிறது. தொழில்நுட்பம் வளரும் வேகம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. ஆகவே சமூகங்கள் மாற்றமடையும் வேகமும் அதேபோல மாற்றமடைகிறது.
நீங்கள் சொன்ன நூலுக்கே வருகிறேன். அந்தப் பெண்மணி பழைய சமூகத்தின் மனநிலைகளும் மரபுகளும் நீடிக்கும் ஒரு சமூகத்தில் தன் உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடியவர். ஐம்பதாண்டுகளுக்கு முன் அவருடைய அன்னை பள்ளி சென்று படிக்கும் உரிமைக்காகப் போராடியிருப்பார். அவர் பாட்டி வெளியே நடமாடும் உரிமைக்காகப் போராடியிருப்பார். நூறாண்டுகளுக்குப்பின் அவருடைய பேத்தி தான் விரும்பும் பாலியல் அடையாளத்தைச் சூடிக்கொள்ள போராடலாம். இப்படித்தான் மானுடம் வளர்கிறது.
இந்தவகையான நூல்களை வாசிக்கையில் ஒட்டுமொத்த மானுடப்பரிணாமத்தை வரலாறு, மானுடவியல் சார்ந்து புரிந்துகொண்டு அதை வைத்து புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு உதவும் நூல்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்ச்சூழலில் அத்தகைய நூல்களுக்கான இடமே இல்லை. அவை இங்கே மொழியாக்கம் செய்யப்படுவதுகூட இல்லை.
அந்த வெற்றிடத்தில் நூறாண்டுகள் பழைமையான மார்க்ஸிய சமூகவியல் வாய்ப்பாடுகள் எளிமைப்படுத்தப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அந்த மார்க்ஸிய பாலபாடத்தையே மேலும் எளிமைப்படுத்தி, பாமரர்களுக்காக எழுதப்பட்ட ஈவேராவின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ போன்ற துண்டுப்பிரசுரங்கள் மட்டுமே பரவலாக படிக்கப்படுகின்றன. படித்தவர்கள் என நம்பிக்கொள்பவர்கள்கூட இவற்றை மட்டும் படித்து அவற்றையொட்டி சிந்திப்பதும், பொய்ச்சீற்றம் கொள்வதும் நிகழ்கிறது.
நான் பரிந்துரைக்கும் முக்கியமான நூல்கள் இரண்டு.
Prehistory and the Beginnings of Civilization. – Jacquetta Hawkes மற்றும் Sir Leonard Woolley. [நான்கு வால்யூம்கள்]
History of Mankind, Cultural and Scientific Development. Louis Gottschalk, Loren Carey MacKinney, Earl H. Pritchard [நான்கு வால்யூம்கள்]
இவை நூல்கள் என்பதைவிட நூல்வரிசைகள் என்று சொல்லலாம். சில ஆயிரம் பக்கங்களில் மொத்த மானுடப்பண்பாட்டின் வளர்ச்சிப்பரிணாமச் சித்திரத்தை அளிப்பவை இவை. 1962ல் யுனெஸ்கோ இந்நூல்களை உலகம் முழுக்க சிந்திக்கும் மாணவர்களுக்காகப் பரிந்துரை செய்தது.
இந்நூல்கள் ‘புதிய’ கண்டுபிடிப்புகளை முன்வைப்பவையோ புதிய பார்வைகளை வைத்து வாதிடுபவையோ அல்ல. இவை அதுகாறும் மானுடவியலும், சமூகவியலும், தொல்லியலும் அவற்றை உள்ளடக்கிய வரலாற்றெழுத்தும் தொகுத்துக்கொண்ட மானுடப் பண்பாட்டு வளர்ச்சியின் சித்திரத்தை அளிப்பவை. பொதுவாக ஏற்றுக்கொண்ட கருத்துக்களையும் தரவுகளையும் மட்டுமே முன்வைப்பவை.
இத்தகைய நூல்களை ஏன் வாசிக்கவேண்டும் என்றால் முதலில் தரவுகளாக, அடிப்படை கொள்கைகளாக நாம் மானுடம் பற்றிய ஒரு பொதுப்புரிதலை அடைந்திருக்கவேண்டும் என்பதனால்தான். அவ்வாறன்றி அவ்வப்போது கிடைக்கும் நூல்களை வாசிப்பது, விவாதங்கள் வழியாக உதிரிச்செய்திகளை அறிந்துகொள்வது, அரசியல்நோக்குடன் எழுதப்படும் நூல்களை மட்டுமே வாசிப்பது ஆகியவை நமக்கென சொந்தமான புரிதலோ சிந்தனையோ இல்லாமலாக்கிவிடும்.
அத்துடன் இவற்றை வாசிக்க உண்மையாகவே சில ஆண்டுகள் கடும் முயற்சி தேவை. அறிவியக்கச் செயல்பாடு கொண்டவர் அதைச் செய்தே ஆகவேண்டும்.வெறுமே நூல்களை அவ்வப்போது சுட்டிக்காட்டுவது உதவாது. சீராக ஒவ்வொரு நாளுமென ஒரு முறைசார் கல்விபோலவே பயிலவேண்டியவை இவை.
Jacquetta Hawkes
ஆங்கிலத்தில் இத்தகைய மாபெரும் நூல்களை நான் வாசித்திருப்பேனா என்று கேட்டால் வாய்ப்பில்லை என்றே சொல்வேன். ஆனால் சி.அச்சுதமேனன் கேரள முதலவராக இருந்த காலகட்டத்தில் அவருடைய முயற்சியால் கேரள பாஷா இன்ஸ்டிடியூட் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யத் தொடங்கி இந்நூல்களைத் தொடர் தொகுதிகளாக வெளியிட்டது. பேராசிரியர் எம்.தாமஸ் மாத்யூ பொது தொகுப்பாளராக இருந்து செய்யப்பட்ட ஒரு பிரம்மாண்டமான பணி இது. நான் எதையாவது மொழியாக்கம் செய்யவேண்டுமென நினைத்தால் இதைத்தான் எடுப்பேன்.
நான் இவற்றை நான்காண்டுக்காலம் ஒவ்வொரு நாளுமென வாசித்து முடித்தேன். ஒரு பெரிய தவம் என இதை நிகழ்த்தினேன். கையால் பல ஆயிரம் பக்கங்கள் குறிப்புகள் எடுத்தேன். இன்றும் என் நூலகத்தில் அரசனைப்போல அமர்ந்திருக்கின்றன இந்நூல்கள். (இன்று முப்பதாண்டுகளுக்குப் பின் தாள்கள் ஒடியும்படி பழுப்பேறிய இந்நூல்களை எடுத்துப் புரட்டியபோது ஒரு பெரும் நெகிழ்வு உருவாகியது. இனி இவற்றை வாசிப்பதைப் பற்றி கற்பனைகூட செய்ய முடியாது) இன்று சமூகவியல் சார்ந்து தமிழில் பேசும் எவரிடமும் இல்லாத தெளிவு என்னிடம் இருக்கிறதென்று நான் அறிகிறேன். அதை உருவாக்கியவை இந்நூல்களே. நான் மேலே சொல்லியிருப்பது மிக எளிமையான ஒரு சமூகப் பரிணாமச் சித்திரம், ஆனால் அப்புரிதலை அடையவும் அதை எளிமையாகச் சொல்லவும் அந்த வாசிப்பு அவசியமானது.
என் வரையில் எந்த மொழியில் நாம் அன்றடம் பேசிக்கொண்டிருக்கிறோமோ அந்த மொழியில் இவற்றை பயில்வதே இயல்வது. ஆங்கிலத்திலேயே முனைவர் பட்டம் வரை சென்ற ஒருவர் கூட இந்நூல்களை ஆங்கிலத்தில் படித்து முடிக்க முடியுமா என்னும் ஐயம் எனக்கு உண்டு. பலர் படித்ததில்லை என்பதை அவர்களின் கட்டுரைகளின் பொதுவான ‘தரையரசியல்’ தரத்தைக் கொண்டே உணர்ந்திருக்கிறேன். இருப்பதிலேயே புதிய சில நூல்களை மேற்கோள் காட்டுவார்கள், ஆனால் அவற்றை மெய்யாக வாசிக்க வேண்டுமென்றால் இந்தவகையான அடிப்படை நூல்களில் கல்வி இருந்தாகவேண்டும். (ஆனால் நான் விவாதங்களில் பிறரின் படிப்புக்குறைவை ஓர் எதிர்வாதமாக முன்வைப்பதில்லை. எனக்கு மதிப்பில்லை என்றால் அவர்களை பொருட்படுத்தமாட்டேன்)
Sir Leonard Woolley.
இத்தகைய அடிப்படைக் கல்விக்கு பின்னரே நாம் ஒரு மார்க்ஸிய சமூக விமர்சனநூலையோ அல்லது யுவால்நோவா ஹராரி போன்றவர்கள் எழுதும் சமூகவியல் நூல்களையோ வாசிக்கவேண்டும். இன்று வந்துகொண்டிருக்கும் பலவகையான நவீன கருதுகோள்களை பற்றி விவாதிக்க இந்த அடித்தளம் தேவை. இந்த பொதுப்புரிதல் மேல் நின்றபடி சிந்திக்கும்போதுதான் நமக்கு மதிப்பிடவும் முடிவெடுக்கவும் தகுதி அமைகிறது. இல்லையேல் சட்டென்று ‘ஓண்ணுமே சரியில்லை’ என்றோ ‘எல்லாமே சதிவேலை’ என்றோ வழக்கமான வாய்ப்பாடுகளுக்குச் சென்று சேர்வோம்.
ஜெ
***