நாளை மற்றுமொரு நாளே- கிறிஸ்டி

நாளை மற்றுமொரு நாளே வாங்க

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஷாகுல் அண்ணன் மூலமாக என் வாழ்வில் நிகழ்ந்ததை அறிந்துகொண்டீர்கள் எனத் தெரிந்துகொண்டேன். நிற்க.

இந்த 2022 புதிய வருடத்தின் துவக்கத்தில் ஜி.நாகராஜன் அவர்கள் எழுதிய “நாளை மற்றுமொரு நாளே” என்ற நாவலை எதிர்பாராது வாசிக்க நேர்ந்தது. க.நா.சுப்ரமண்யம் அவர்களின் “ஒரு நாள்” நாவலைப்போல் இதுவும் ஒருவனின் ஒருநாள் வாழ்க்கையைச் சொல்லிச் செல்வது. அந்த நாவலாகட்டும் இந்த நாவலாகட்டும், அந்த ஒருநாளில் அந்நாவலில் வரும் அனைத்து கதாமாந்தர்களின் அன்றாட வாழ்க்கையை தரிசிக்க முடிவதுதான் ஆச்சர்யம்! இந்நாவலின் முடிவில் நிகழ்வதென்னவோ அவனின் அன்றைய நாளைக்கு முந்தைய நாட்களில் அவன் செய்த வினைகளின் பயனைத்தான் அனுபவிக்கிறான் என்றாலும் ஒருநாளில் அவனின் வாழ்க்கை ஆரம்பித்து அன்றைய இரவுக்குள் அவனின் வாழ்க்கை முடிவதுபோல அற்புதமாக கதையை நகர்த்திச் சென்றிருப்பதுதான் நாகராஜன் அவர்களின் எழுத்துவன்மையாக எனக்குப்பட்டது. அதை நான்  நாவலை முடிக்கையில் கண்டு ரசித்தேன்.

நாவலின் முன்னுரைகள், அந்நாவலுக்கு எழுதப்பட்டிருந்த பெரிய எழுத்தாளர்களின் மதிப்புரைகள் இவற்றை வாசிக்கையிலேயே எனக்கு உள்ளூற ஒரு நெருடல் அரும்பியது. ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே  எதிர்மறையாக வாழ்க்கையை அணுகுவதுபோல் எழுதப்பட்டிருக்கும் ஒரு நாவலையா வாசிப்பது என்று. ஆனாலும் என்னதான் எழுதப்பட்டிருந்தாலும் நம் மனதை சிதறவிடக்கூடாது என ஒருவாறு என் மனதை தயார்படுத்திக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து முழுமூச்சாக விடாமல் வாசித்தால் ஒன்றிரண்டு மணிநேரங்களில் வாசித்து முடித்துவிடலாம்தான். ஆனால் எனக்கு அப்படி நேரம் தொடர்ந்து கிடைக்காததால் நான்கு நாட்கள் எடுத்துக்கொண்டேன்.  அப்படி கிடைத்த நேரங்களிலும் தொடர்ந்து என்னால் வாசிக்க இயலா அளவுக்கு அழுத்தமும் ஆழமும் மிக்க வரிகள் என்னை வாசிப்பதை நிறுத்தவைத்து  அந்த கணத்தைக் கடக்க இயலாமல் அந்த மனபாரத்திலிருந்து என்னைத் தப்பிவித்துக்கொள்ள அமைதியான உறக்கத்தைத் தேடவைத்தன.

பின் ஒரு க்ஷணத்தில் திடுமென மீண்டும் எழுந்துகொண்டு தொடர்ந்து வாசிக்க ஆரம்பிப்பேன். ஒரு சராசரி மனிதன் தன் அன்றாட வாழ்வில் இவ்வுலகில் இச்சமுதாயத்தில் சந்திப்பதென்ன என்பதை ஒரு தனிமனிதனின் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதன்மூலம் மிகவும் இயல்பாகக் கூறிச் சென்றிருக்கிறார். அவன் சந்திக்கும் அத்தனை பேரிடமிருந்தும் நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். எத்தனை ஏமாற்றங்களும் தோல்விகளும் வந்தாலும் அவற்றை எப்படி சமாளிப்பது என்றும் தெரிந்துகொள்ளலாம். அதேசமயம் எத்தனை உயரத்திற்கு சென்றாலும் அதை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்றும் கற்றுக்கொள்ளலாம். ஒருவன் தன் ஒவ்வொரு அடியையும் எத்தனை கவனமுடன் எடுத்துவைக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ அடிசறுக்கியிருந்தாலும் தன்னை எப்படி மீட்டெடுத்துக்கொள்வது என்றும் கற்றுத் தருகிறது இந்நாவல்.

எனக்கு இந்நாவலை எனக்குகந்த நேர்மறை நாவலாகவே எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. இது அவருடைய உண்மை வாழ்க்கையோ அல்லது அவர் பிறரிலிருந்து கண்டெடுத்த புனைவோ எனக்கு அவையெல்லாம் அவசியமில்லாத ஒன்று. இந்நாவல் என் எதிர்கால வாழ்க்கைக்கு எத்தனை உறுதுணையாக இருந்து வழிகாட்டப்போகிறது என்பதுதான் முக்கியம். அந்தவிதத்தில் எனக்கு படிப்பினையாகவும் நான் என் வாழ்வில் சந்தித்த நபர்கள் என்ன தவறுகள் செய்தார்கள் , அவர்கள் இந்நாவலை வாசித்திருந்தால் ஒருவேளை இப்படி அவஸ்தைப்பட்டிருக்கவேண்டாமே, சுகமாக இவ்வுலக வாழ்வை அனுபவித்திருக்கலாமே என்ற ஆதங்கமும் வேதனையும்தான் தோன்றியது. என்னைப்போல சிலர் இப்படிப்பட்ட வாழ்க்கையை கனவில்கூட எண்ணிப்பார்த்திருக்கமாட்டார்கள். எனக்குத் தெரியவில்லை. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால் எனக்கு இந்நாவல் ஒரு புதிய வாழ்க்கை அனுபவம்.

இந்த நேரத்தில் இன்னுமொரு முக்கியமான விஷயத்தை நான் இங்கு பதிவுசெய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் ஜி.நாகராஜன் அவர்களைப் பற்றி எதிர்மறையாகக் கேள்விப்பட்டிருந்ததாலோ என்னவோ மிகவும் பயந்து ஒரு மனவிலக்கத்தோடேதான் ஒவ்வொரு பக்கங்களையும் ஒவ்வொரு வரிகளையும் வாசித்தேன். ஏனெனில் சில புதிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை மிகுந்த ஆர்வத்துடன் எடுத்து வாசிக்க ஆரம்பிப்பேன். ஆனால் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களையும் வார்த்தைகளையும் கண்டு மேற்கொண்டு அப்புத்தகத்தையே வாசிக்க மனம் ஒவ்வாமல்  அவர்களின் எந்த படைப்பையும் இனி  வாசிக்கவேகூடாது என்றெல்லாம்  வன்முடிவு எடுத்திருக்கிறேன். கெட்டவார்த்தைகளைக்கூட கேட்டுவிடலாம். வாசித்துவிடலாம். ஆனால் அசிங்கமா பேசினாலும் எழுதியிருந்தாலும் அது எனக்குப் பிடிக்காது.

உண்மையில் எங்கே இவரும் அப்படி ஏதாவது எழுதிவைத்து என் உள்ளத்தை சுக்குநூறாக்கி ஏமாற்றமடைய வைத்துவிடுவாரோ என்று பார்த்து பார்த்து வாசித்தேன். நல்லவேளை நான் பயந்தபடி அவரின் ஒரு சொல், ஒரு வார்த்தை கூட ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் இந்நாவல் முழுவதும் ஒரு கட்டுப்பாடற்ற கட்டற்ற வாழ்க்கைகளைத்தான் விவரிக்கிறது. அவமானங்களும் வலிகளும் ஏமாற்றங்களும் வேதனைகளும் நிறைந்த நாவல். வேசிகளும் காமுகன்களும் அனைத்து வகை சுரண்டல்காரன்களும் நடமாடும் நாவல்தான். ஆனால் அவர் உபயோகப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் பண்பாடான வார்த்தைகள். எந்தவொரு வார்த்தையும் சொல்லும் மனதை சுழிக்கச்செய்யவோ அசூயை உணர்வை ஏற்படுத்தவோ இல்லை. ஆனால் அங்கு நிலவிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு எண்ணத்தையும் என் உள்ளத்திற்கு கடத்தியது. என்னால் அங்கு நடப்பதை அங்குள்ளோர் மனதில் நினைப்பதை எழுத்தாளர் கூற வருவதை விவரிக்க முயல்வதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ரசனையிழை அறுபடாமல் தொடர்ந்து விரும்பி வாசிக்க இயன்றது. உண்மையில் அவரின் தமிழெழுத்துக்கு அத்தகைய வல்லமை இருக்கிறது போலும். இன்னும் இன்னும் அவரின் படைப்புகளை தேடி வாங்கி வாசிக்கவேண்டும் என்ற உந்துதல் கூட ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய எழுத்தாளர் தன் இன்னுயிரை இழக்குமுன் அவர் விரும்பிய உலகைக் கண்டாரா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக தன் உள்ளத்தை எழுத்தாக்கியதன் மூலம் இந்த மனிதனின் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் அவர் விட்டுவிடவில்லை, அவன்மீது அனுசரணையாகத்தான் இருந்திருக்கிறார் எனத் தெள்ளத் தெளிவாகிறது. அவரின் எழுத்துக்கள் இந்த மானுடம் உள்ளவரை அவனை வழிநடத்தும் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,

அன்புள்ள

கிறிஸ்டி.

முந்தைய கட்டுரைகல்குருத்தை வாசித்தல்
அடுத்த கட்டுரைசடம் கடிதங்கள்-4