மொழியாக்கங்களை வாசிப்பது

ருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்

போரும் அமைதியும் மொழியாக்கங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தொடர்ச்சியாக தமிழ் இலக்கியங்கள் மட்டுமே வாசித்து வந்த நான் இப்பொழுது ஒரு மாறுதலுக்காக  பிறமொழி இலக்கியங்ககள் வாசிக்க முயல்கிறேன்.ரஷ்ய இலக்கியங்கள் பற்றியும் லியோ டால்ஸ்டாய் பற்றியும் உங்களது உரை கேட்டேன்.

பெரும்பாலானவர்களின் பரிந்துரையின் பேரில் லியோ டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நூலை வாங்கியுள்ளேன் .ஆனால் என்னுள் ஒரு சந்தேகம், ஒரு தயக்கம் ஏற்படுகிறது.

இது எதனால் இன்று விளக்க முடியுமா?

துரை தமிழ்குமரன்

அன்புள்ள துரை,

உங்கள் தயக்கத்திற்கான காரணங்கள் இவை. இவற்றை பலரும் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்

அ. நீங்கள் முன்னரே அறிந்த வாழ்க்கைச்சூழலை இங்குள்ள இலக்கியங்களில் வாசிக்கிறீர்கள். அறியாத சூழலுக்குள் செல்ல உளத்தடை இருக்கிறது

ஆ. அயல் இலக்கியங்களின் மொழிநடை, குறிப்பாக உரையாடல் அன்னியமாக இருக்கிறது

இ. அயல்மொழி இலக்கியங்களின் மையக்கதாபாத்திரங்களுடன் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

இம்மூன்று தடைகளையும் நாம் எளிதில் களையலாம். இன்னொரு வாழ்க்கைச்சூழலை அறிந்தபின் நாவலை வாசிக்கவேண்டியதில்லை. வாசித்துச்செல்லும்போது போகிறபோக்கில் மெல்ல அவை நமக்கு அறிமுகமாகட்டும் என்று விட்டுவிடலாம். ருஷ்ய இலக்கியம் ஒன்றை முடித்துவிட்டால் அதன்பின் ருஷ்ய இலக்கியங்களில் இச்சிக்கல் இருக்காது

அன்னியத்தன்மைகொண்ட மொழி ஒரு சிக்கல்தான்.ஆனால் அதை நாம் நம்முடைய உரையாடல்மொழியாக நமக்குள் ஆக்கிக்கொள்ள முடியும்.

அயல்நாட்டுக் கதாபாத்திரங்களின் புற அடையாளங்களை தவிர்த்து அவர்களின் அகத்தன்மை சார்ந்து ஓர் அடையாளத்தை உருவாக்கி கொள்ளலாம். உதாரணமாக, ஓர் இராணுவ வீரன் நமக்கு அன்னியன். ஆனால் அவன் ஒரு சந்தேகவாதி என்றால் நம்மால் அவனுடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

எந்தக்கலையும் அதில் ஈடுபடுவதன் வழியாகவே பயிலப்பட இயலும். ஒரு கலையை பயில சிறந்தவழி கண்ணைமூடிக்கொண்டு கொஞ்சநாள் அதில் இருப்பதுதான். அயல் இலக்கியங்களை வாசித்தே தீர்வேன் என ஒரு நாலைந்து நாவல்களை வாசித்தல்போதும், உள்ளே நுழைந்துவிடலாம்.

ஏன் அயல் இலக்கியங்களை வாசிக்கவேண்டும்? முதல் காரணம், நமக்கு பேரிலக்கியங்களை வாசிப்பதற்கான வாய்ப்பு குறைவு. எந்த மொழியிலும் பேரிலக்கியங்கள் பல உருவாக முடியாது. ஆகவே மொழியாக்கம் வழியாகவே அவற்றை அடையமுடியும். இரண்டாம் காரணம், வெவ்வேறு வாழ்க்கைமுறைகள் வாழ்க்கைநோக்குகளை நாம் அயல் இலக்கியம் வழியாகவே அறியமுடியும்

அயல் இலக்கியங்களில் நாம் வாசிக்க அணுக்கமானது ருஷ்ய இலக்கியமே. அது சீரான நல்ல மொழியாக்கங்களில் கிடைக்கிறது. ஐரோப்பிய பண்பாட்டை அது பேசினாலும் அதன் அடிப்படை உளவியல் கீழைநாட்டுத்தன்மை கொண்டது. ஆகவே நமக்கு அண்மையானது

ஆனால் மொழியாக்கங்களை வாசிப்பதற்கு முன் அவை சரளமான நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா என இன்னொரு வாசகரிடம் உறுதிசெய்துகொள்ளவும். தமிழில் ஏராளமான மொழியாக்கங்கள் மிகமிக மோசமான நடை கொண்டவை. வாசிக்கவே முடியாதவை.

ஜெ

வாழ்க்கையின் விசுவரூபம்

சாதாரண வாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்கு

மொழியாக்கம் ஒரு கடிதம்

அயல் இலக்கியங்களும் தமிழும்

மொழியாக்கம் பற்றி- ஸ்வேதா சண்முகம்

மொழியை பெயர்த்தல்

இரண்டாம் மொழிபெயர்ப்பு

போரும் வாழ்வும் – முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்

போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு

ஆகாயத்தில் ஒரு பறவை — போரும் அமைதியும் குறித்து…

போரும் அமைதியும் வாசிப்பும்

தல்ஸ்தோய் மனிதநேயரா?- எதிர்வினை- சுசித்ரா

ருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள்

முந்தைய கட்டுரைதிருவள்ளுவர் திருநாள் எது?- பா இந்துவன்.
அடுத்த கட்டுரைகார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு யுவபுரஸ்கார்