1935 ஆம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் வழிபாடு செய்த மறைமலை அடிகளார் அடங்கிய அறிஞர் குழு திருவள்ளுவர் தினமாக வைகாசி – அனுசம் – மே 18 ஆம் தேதியை அறிவித்தனர். இதை 1963 -ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவும் வைகாசி அனுசத்தையே திருவள்ளுவர் தினமாக அறிவிக்கிறார். அதுபோல் 1966 ஆம் ஆண்டும் ஐயா பக்தவத்சலம் அவர்கள் ஜூன் 2 வைகாசி அனுசத்தையே கடைபிடிக்கிறார். ஆனால் 1971 – ஆம் வருடம் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஜுன் 2 லிருந்து ஜனவரி 15, தமகழ் மாதம் தை 2 க்கு திருவள்ளுவர் தினத்தை எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் மாற்றினார். இதை சற்று விரிவாக இந்த பதிவில் வைகாசி அனுசத்தை திருவள்ளுவர் தினமாக முன்மொழிந்த அறிஞர்களின் கருத்துரைகளை கேட்போம்…!
இதுபற்றிய நீண்ட விவாதங்கள் நடந்து அவை ஓய்ந்தன என்றே சொல்லலாம். ஏனெனில் இது அத்தனை அரசியல் பின்னணியைக் கொண்டது. சரி மறைமலை அடிகள் அடங்கிய 500 பேர் கொண்ட குழு தையை புத்தாண்டாக அறிவிக்கவில்லை என்பதை எது நமது புத்தாண்டு என்ற பதிவில் பார்த்தோம். அவ்வகையில் 1935ல் வெளிவந்த “திருவள்ளுவர் நினைவு மலர்” என்ற நூலில் மறைமலை அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருவள்ளுவர் திருநாட்கழகத்தை சேர்ந்தவர்கள் எடுத்த முடிவுகளாக வெளிவந்த தகவல்களை வைத்து திருவள்ளுவர் பிறந்தநாள் எதுவென காண்போம்…!
1935 ல் திருவள்ளுவர் திருநாட்கழகத்தை சேர்ந்த பெரும்பான்மையான தமிழறிஞர்கள் வைகாசி அனுஷத்தையே திருவள்ளுவர் திருநாளாக கொண்டாட வேண்டும் என்ற வாதத்தை முன்னெடுத்துள்ளனர். அவ்வகையில் அக்கால பத்திரிகைகளில் வெளிவந்த தகவல்களை முதலில் பார்ப்போம். அதற்கு முன்பு அக்கழகத்தை சேர்ந்தவரகள் வைத்த வேண்டுகோள்களைப் பாரக்கலாம்,
- பத்திரிகைகள், சங்கங்கள், கல்வி நிலையங்கள் முதலான பொது நிலையங்கள் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை வைகாசி அனுஷத்தன்று கொண்டாட வேண்டும். இதனுடன் சில நாட்கள் சேர்த்து அந்த வாரம் முழுவதும் திருவள்ளுவர் வாரமாக கொண்டாட வேண்டும்.
- பத்திரிகைகள் யாவும் திருவள்ளுவர் திருநாள்மலர் வெளியடுதல் வேண்டும்.
3.சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள் முதலியன திருவள்ளுவர் திருநாளான வைகாசி அனுஷத்தன்று பெரும் விழாக்கள் நடத்த வேண்டும்.
- திருவள்ளுவர் திருநாளாகிய வைகாசி அனுஷத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
5.நாட்குறிப்பு,நாட்காட்டி முதலியன வெளியிடுவோர் வைகாசி அனுஷத்தை ஆண்டுதோறும் குறித்தல் வேண்டும்.
- யாவும் திருவள்ளுவர் தொடர் ஆண்டை வழங்குதல் வேண்டும்.
இவைதான் திருவள்ளுவர் திருநாட்கழகத்தில் வேண்டுகோளாக வைக்கப்பட்டவை. அடுத்ததாக மேலே கூறியதைப்போல் அக்காலத்தில் பத்திரிகையில் வந்த தகவல்களை பார்க்கலாம்,
செந்தமிழ்ச்_செல்வி:(1958 வைகாசி மாதம்)
திருவள்ளுவர் திருநாளானது பல பேரறிஞர்களின் முயற்சியால் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் 23.05.1953 முதல் 6 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நாட்கள் பொன்நாட்கள் என்று போற்றப்படவேண்டியதாகும். இதில் பல பேரறிஞர்கள் கலந்து திருக்குறளை மேற்கோளிட்டு விரிவுரை ஆற்றினார்கள். ஆக ஆண்டுதோறும் தவறாது வைகாசி அனுஷத்த்தன்று திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுமாறு மாந்தர்களையும், கழகங்களையும், நூல் நிலையங்களையும், பள்ளிகளையும் கேட்டுக்கொள்கிறோம்…!
ஆத்ம_ஜோதி : (1958 வைகாசி மாதம்)
திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுவதன் நோக்கம் அவரின் வாழ்க்கையிலும், வாக்கிலும் நாம் பிறவி எடுப்பதே ஆகும். தமிழர்கள் தங்கள் வாழ்வில் தினம் ஒரு குறளை சிந்திக்கவில்லை எனில் அந்நாள் அவர்களுக்கு பிறவா நாளே ஆகும். அவ்வகையில் திருவள்ளுவர் திருநாட்கழகத்தோரில் பெரும்பான்மையான பேரறிஞர்கள் ஏற்றுக்கொண்ட வைகாசி அனுஷத்தை நாம் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாட வேண்டும்.
இலங்கை தமிழர்கள் அதிஷ்ட்டசாலிகள். ஏனெனில் புத்தர் பெருமானின் பேரால் வைகாசி அனுஷத்தன்று அரசு விடுமுறை ஏற்கனவே உள்ளது. வைகாசி விசாகத்திற்கு விடுமுறை விடும் இந்திய அரசும் அதற்கு அடுத்த நாளும் விடுமுறை விட வேண்டும்….!
இது தவிர்து குமுதம், திருவள்ளுவர், ஆனந்தன்,கதிரொளி, தமிழோசை முதலான பல பத்திரிகைகள் இதன் ஒத்த கருத்துகளையே 53, 54களில் செய்தியாக வெளியிட்டுள்ளன. அடுத்தாக திருவள்ளுவர் திருநாட்கழகத்தில் பங்கேற்ற பேரறிஞர்களின் உரையையும் காணலாம்,
இதற்கான பேரறிஞர்களின் ஆதரவுரைகள் :
பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை :
24.02.1954 ல் எழுதியதாவது, திருவள்ளுவர் திருநாளை பெரும்பாலும் வைகாசி அனுஷத்தன்று தான் கொண்டாடுகிறோம். இவ்வாண்டும் 18.5.1954 துவங்கி அத்திருநாள் பல கழகங்களில் கொண்டாடப்படுவுள்ளது. சென்னை அரசாங்கம் திருவள்ளுவர் திருநாளை அரசு விடுமுறையாக மாற்றுவதற்கு இன்னும் சில காலம் செல்லும். தென்காசியில் 18.05.1954 ல் நடைபெறும் திருவள்ளுவர் திருநாளன்று நானும் கலந்துகொண்டு பேசுவேன்….!
மா.பொ. சிவஞான கிராமணி :
15.03.1954 ல் தமிழக மாநில கழகத்தலைவராக இருந்தபோது எழுதியதாவது, திருவள்ளுவர் திருநாள் பற்றி திருநாட்கழகம் எடுத்த முடிவை வரவேற்கிறேன். வைகாசி அனுஷத்தில் திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுவதில் நானும் தமிழக கழகத்தாரும் பரிபூரணமாக ஒத்துழைப்போம்….!
இப்படி இராமநாத செட்டியார், இராச மாணிக்கனார், கந்தசாமி முதலியார், கவியோகி சுத்தானந்த பாரதியார், வரத தஞ்சையன், வைநாகரம் இராமநாத செட்டியார் போன்ற பல பேரறிஞர்கள் வைகாசி அனுஷத்தை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாட அனுமதித்ததை திருவள்ளுவர் மலர் பதிவு செய்கிறது…!
அடுத்ததாக வைகாசி அனுஷத்தை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாட வேண்டும் என்பதற்கான அடிப்படை காரணங்கள் என்ன???
முக்கியமாக திருமயிலையில் திருவள்ளுவர் கோயில் ஒன்று உள்ளதை நாம் அறிவோம். அறிவிலும், வீரத்திலும், கற்பிலும் சிறந்தோரை தெய்வமாக வழிபடுவது தமிழர்களின் மரபு. தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கா அமைக்கப்பட்ட திருமயிலைக்கோவிலைப்பற்றி பின்வருமாறு மறைமலை அடிகளார் கூறுகிறார்,
இன்றும் அவ்விருப்பை மரமும் அவர் தோன்றிய குடிலின் அடையாளமாக அம்மரத்தின் அருகே அவரது திருவுருவத்தை நிறுத்திய கோயில் திருமலையில் உள்ளது. 1837 ஆம் ஆண்டு திருத்தணிகை சரவணபெருமாள் ஐயர் பதிப்பித்த திருக்குறள் பதிப்பிலும் இக்கோயில் பற்றிய தகவல் உள்ளது. இக்கோயிலும் வைகாசி அனுஷத்தையே திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது என்றார்…!
அடுத்ததாக கழகத்தோர் வைத்த காரணங்கள்:
- தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக வைகாசி அனுஷத்தையே வள்ளுவர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
- 1935 லும் திருநாட்கழகத்தோர் வைகாசி அனுஷத்தையே வள்ளுவர் திருநாளாக கொண்டாடினர். அதற்கு அவர்கள் வைத்த காரணமும் பல நூற்றாண்டுகளாக வள்ளுவர் திருநாள் வைகாசி அனுஷமே என்பதாகும்.
- மறைமலை அடிகள், கல்யாண சுந்தரனார், வேங்கடசாமி நாட்டார் முதலிய பேரறிஞர்களும் திருவள்ளுவர் திருநாளாக வைகாசி அனுஷத்தையே முன்மொழிந்துள்ளனர்.
- கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக திருவள்ளுவர் திருநாட்கழகத்தோர் இதே நாளில் தான் திருவள்ளுவர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
- திருமயிலை திருவள்ளுவர் கோயிலும் பல்லாண்டுகளாக வைகாசி அனுஷத்தையே திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடி வருகிறது.
- திருவள்ளுவர் தொடர் ஆண்டை நிலை நிறுத்தவும், திருக்குறளின் கருத்துகளை பரப்பவும், திருக்குறள் நாட்குறிப்பை 1922லேயே வெளியிட முயன்ற சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தினரால் போற்றப்படுகிறது.
- மேற்கூறியபடியே கழக நாட்குறிப்புகளிலும், பஞ்சாங்கங்களிலும் குறிப்பிடப்பட்டு வருகிறது.
- சென்ற ஆண்டு தமிழ் மக்கள் வாழும் இடங்களில் உள்ள பல கழகங்களில் வைகாசி அனுஷத்தையே திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.
- சென்னை, திருச்சி, கொழும்பு போன்ற பல வானொலி நிலையங்களாலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
- இலங்கை அரசு விடுமுறை வழங்கி உள்ளதோடு தமிழ் மக்கள் வாழும் பல நாடுகளிலும் இவ்வழக்கமே பின்பற்றப்படுகிறது.
இறுதியாக பேரறிஞர்கள் அமர்ந்திருந்த அந்த அவையில் அண்ணாவும், ராமசாமி நாயக்கரும் கூட அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்கள் வைகாசி அனுஷத்தை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாட கூடாது என்றோ தை 2 ல்தான் கொண்டாட வேண்டும் என்றோ கூறியதாக எந்தவொரு குறிப்பும் இல்லை. அதோடு அண்ணா முதல்வராக இருந்த காலத்திலும் வைகாசி அனுஷத்தையே திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக தை 2 ல் தான் திருவள்ளுவர் திருநாள் வரும் என்பதற்கு ஆதாரமாக 1921ல் நடந்த பேரறிஞர்கள் குழுவை முன்மொழிவோருக்கு இந்த பதிவை காட்டுங்கள்….!
(Source : திருவள்ளுவர் திருநாள் மலர்)
– பா இந்துவன்.