உதிர்பவை மலர்பவை

அகமும் புறமும் கவிதையில் எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன. முன்பு அகம் என்பது ஆண்பெண் உறவின் உலகு என வகுக்கப்பட்டது. இன்று அதை அகத்தே நிகழ்வன எனலாம். உறவும்பிரிவும் என, பொருளும் பொருளின்மையும் என அலைக்கழிப்பவை. புறம் அனைவருக்கும் உரிய உலகு. நிகழ்வனவற்றுக்கு உலகே சான்று அங்கே. அகத்திற்கு நம் அகம் மட்டுமே ஆதாரவெளி.

சங்கக் கவிதை அகத்துக்கும் புறத்துக்கும் வேறுவேறு வகையான படிமங்களைப் பயன்படுத்தியது. அகத்துக்கான படிமங்களின் வெளியை ஐந்து நிலம் என புறவயப்படுத்தி வரையறை செய்ய முயன்றது. வரையறுக்க ஒண்ணாததற்கு ஒரு சிறு புறவரையறையை அளித்துவிடும் முயற்சி அது என்று படுகிறது. அகத்தை ஒரு கூட்டத்தின் நடுவே, அரங்கில் நடித்துக் காட்டிவிடவேண்டுமென்ற நிகழ்கலைகளின் கட்டாயத்தால் அவ்வண்ணம் ஆகியிருக்கலாம். சங்கப்பாடல்கள் நடனத்துக்கானவை.

நவீனக் கவிதை அகத்துக்கும் புறத்துக்கும் ஒரேவகையான படிமங்களைப் பயன்படுத்துகிறது.  இலைநடுங்கும் பனி என்பது மெல்லிய அகவுணர்வு ஒன்றுக்கான படிமம். சிந்தனைகளின் சிடுக்கின்முன் திகைத்து நிற்கும் சமகாலத்தின் சாமானியனைப் பற்றிய கவிதையில் அது வருவது இயல்பானதாக ஆகிவிட்டிருக்கிறது.

ஆனால் அகவயப் படிமம் மேலுமொடு முன்னகர்வை அடைந்திருக்கிறது. மீண்டும் எதிர்பார்ப்புடன் மலர்ந்து விலக்கிக்கொள்ளப்பட்ட விரல்கள் போலத் தவிக்கும் மாலையின் மலர்கள். உளம் சோர்ந்து மெல்ல கூம்புபவை. மஞ்சள் ஒளியில் இருந்து இருளுக்குள் செல்பவை.

சதீஷ்குமார் சீனிவாசனின் இரு கவிதைகள்

இலை நடுங்கும் பனி

மோசமான ஞாபகம் மாதிரி

பனி இறங்குகிறது

இலைகளும் வீடற்ற உடல்களும்

குளிரால் துடித்தன

சகலத்திற்கும் தீர்வுண்டு என

அறிவித்தார்கள்

ஞானிகள்

அறிவுஜீவிகள்

கூடவே

எல்லாம் திரும்ப நிகழ்பவை

என்பதும் வாதத்தில் சேர்க்கப்பட்டது

முன்னர் நிகழ்ந்தவற்றிற்கே

ஒரு நியாயமும் இதுவரை இல்லை

என்றது இன்னொரு தரப்பு

புலப்படா சுழலில்

யாருக்கும் புரியாத மொழியில்

நாங்கள் விடுதலையின்

முடிச்சுகளை அவிழ்த்து அவிழ்த்து தோற்றோம்

இலைகளும் உடல்களும்

பனியில் நடுங்கியடி இருந்தன

இப்படித்தான் இந்த மாலையைக் கடந்தேன்

காற்றில் வரையும் விரல்கள்

மொழிகளற்று தவித்தன

மஞ்சள் வெளிச்ச பின்புலத்தில்

இன்னொரு செடியில்

இன்றுதான் பூக்கத் தொடங்கினேன்

மல்லிகையாக

ரோஜாவாக

பிச்சியாக

ஆனால்

காகிதப் பூ மலர்ந்திருக்கிறது

என்றார்கள்

நான் மீண்டும் மண்ணுக்குள் திரும்பினேன்

மஞ்சள் வெளிச்ச பின்புலத்தில்

தவித்தன மொழியற்ற விரல்கள்

விலக்கிக்கொள்ளப்பட்ட

கைகளின் விரல்கள்

இப்படித்தான்

இந்த மாலையைக் கடந்தேன்

கேள்விகள், விடைகள்

சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்

முன்னிலை மயக்கம்

பிறிதொன்று கூறல்

ஆடை களைதல்

சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிண்மீன்கள் – கடிதங்கள்