ஊ அண்டவா மாமா!

கத்தாழ கண்ணாலே

குத்துப்பாட்டுக்கள் எந்த கலாச்சரச் சுனையில் இருந்து ஊறி வருகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் தெருக்கூத்து, கரகாட்டம், கேரளத்தில் காக்காத்திக்களி, ஆந்திராவில் ஜாத்ரா என பாலுணர்வைத் தூண்டும் வகையிலும், சீண்டும் வகையிலும் ஆடும் நடனங்கள் குறைந்தது சிலநூறு ஆண்டுகளாக நம் பண்பாட்டில் இருந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஒரு மரபும் அவற்றுக்குரிய அழகியலும் உள்ளது. ஐரோப்பாவில் இந்த வகையான ஆட்டங்கள் ஜிப்ஸிகளுக்கு உரியவையாக இருந்தன.

[அவை பண்பாட்டின் பகுதிகளா, உயர்பண்பாடு மட்டும்தான் பண்பாடா, மக்கள் கலைகளில் இருக்கும் இந்தக் கூறுகளை நாட்டார்ப் பண்பாடாக எடுத்துக்கொள்வதா, நாட்டார்ப் பண்பாட்டுக்கும் பரப்பிய கேளிக்கைப் பண்பாட்டுக்குமான வேறுபாடு என்ன என்பதெல்லாம் வேறு விவாதங்கள்]

பதினாறாம் நூற்றாண்டில் மேடைநாடகக்கலை வணிகநோக்குடன் விரிவானபோது இந்த ஆட்டங்கள் நாடகங்களுக்குள் நுழைந்தன. சாதாரணமாக நாடகங்களினூடாக இவை புகுத்தப்பட்டன. செவ்வியல் நாடகங்களில் நாடகம் தொடங்குவதற்கு முன்பு, அதாவது பெண்கள் வந்துசேர்வதற்கு முன்பு, இவை நடத்தப்பட்டன. இந்த ஆட்டங்களை தாங்கள் அனுமதித்ததில்லை என ஔவை டி.கே.சண்முகம் அவரது தன்வரலாற்றில் [எனது நாடக வாழ்க்கை] சொல்கிறார்.

பின்னர் சினிமாவில் இவை இடம்பெற்றன. ஊமைப்படங்கள் முதல் இந்தவகையான ஆட்டம் இருந்திருக்கிறது. மிகப்பழைய தமிழ்ப் படங்களில் குறத்தியாட்டம் போன்ற வடிவங்களில் இவை உள்ளன. பின்னர் இவை ‘கிளப் டான்ஸ்’ என்னும் பெயரில் சேர்க்கப்பட்டன. எண்பதுகளின் இறுதிவரை கிளப் டான்ஸ் என்பது சினிமாவின் தவிர்க்கமுடியாத அம்சம். விஜயலலிதா முதல் டிஸ்கோ சாந்தி வரை பல தலைமுறை கிளப் டான்ஸ் நடிகைகள் இருந்திருக்கிறார்கள். பின்னர் அவை வெவ்வேறு வகையில் உருமாறின. தெருவில் ஊர்க்காரர்கள் மற்றும் நண்பர்கள் சூழ கூட்டமாக ஆடுவது, திருவிழாவில் ஆடுவது என வடிவமைக்கப்பட்டன. இன்று கதைநாயகிகள் ஆடுகிறார்கள்.

இந்த மாற்றங்களையேகூட சமூகமாற்றங்களுடன் இணைத்துப் பார்க்கலாம்..முதல் உலகப்போரை ஒட்டி தமிழகம் முழுக்க வெள்ளைய ராணுவ முகாம்கள் உருவாயின. இவற்றில் ராணுவ வீரர்களை மகிழ்விக்கும் நடனங்கள் நடைபெற்றன. அவை ஜிப்ஸி நடனங்களின் மாதிரியில் அமைந்தவை. தொடக்க காலத்தில் ஆங்கில இந்தியப் பெண்கள் இவற்றை ஆடினர். பின்னர் தமிழ்க்குடிப் பெண்களும் ஆடினர். தாசியாட்டம் என்றும் கரகாட்டம் என்றும் சொல்லப்பட்ட நாட்டுப்புற நடனங்களும் ஜிப்ஸிகளின் மரபுவந்த மேலைநாட்டு பரப்பிய மெட்டுகொண்ட பாடல்களும் இணைந்தன.

அதன்பின்னர் நகரமயமாக்கத்துடன் இணைந்து பல்வேறு கேளிக்கை விடுதிகள் உருவாயின. இந்நடனங்கள் அங்கே இடம்பெயர்ந்தன. 1980களில் பெங்களூர் பிரிகேட் ரோட்டில் இருந்த கிளப்களுக்கு முன்னால் அன்றைய கிளப் டான்ஸ் நட்சத்திரங்களின் படங்கள் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டிருக்கும் . நான் பெங்களூரிலும் எர்ணாகுளத்திலும் கிளப் டான்ஸ்களைப் பார்த்திருக்கிறேன்.

இந்த கிளப் டான்ஸ்களை சினிமா நடனமாக ஆக்கிக்கொண்டனர். கிளப் டான்ஸ் என்பது ஒரு பாவலாதான். கதைநாயகன் கிளப்புக்குச் செல்கிறான்.அங்கே சிலர் ஆடுகிறார்கள் என்னும் கதைச்சூழல் அமைக்கப்பட்டிருக்கும். அல்லது வில்லனின் ரகசிய இடத்தில் கிளப் டான்ஸ் ஆடப்படும். உண்மையான கிளப் டான்ஸ் என்பது ஆட்டமே அல்ல. சும்மா அரைநிர்வாணமாக ஒரு கூடத்தில் சுற்றித் திரிவதுதான். ஒரு மணிநேரம் ஆடுவார்கள். ஆட்டம் என்பது பத்து நிமிடம்கூட இருக்காது. விரைவான ஒழுங்கான பயிற்சிபெற்ற ஆட்ட அசைவுகளும் இருக்காது.

இதன் நடுவே இன்னொரு வகை கிளப் டான்ஸ் இங்கே ஒரு பாவனையாகவே அறிமுகமாகியது. வட இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்காலம் முதல் உருவாகி வந்த நடனமுறைகள் பல இருந்தன. பிரபுக்கள் அமர தொழில்முறை நடனக்காரிகளான தாசிகள் நடுவே வந்து ஆடுவது. நாட்ச் [Nautch] போன்ற நடனமுறைகள், அவற்றில் திறமைபெற்ற  தவைஃப் [Tawaif] போன்ற நடனக்காரிகள். முகலாயர்களின் அரசும் முகலாயப்பிரபுக்களின் ஆதிக்கமும் அழிந்தபோது அவை பொதுவான கேளிக்கை மையங்களாக ஆயின.

அந்தவகையான நடனமங்கையரும் நடனமும் இன்றும்கூட நீடிக்கின்றன. நான் காசியிலும் லக்னோவிலும் அவற்றைப் பார்த்திருக்கிறேன். பாவாடை வட்டவிசிறியாகப் பறக்க ஒரு கூடத்தில் நடுவே சுழன்று ஆடுவார்கள். சுற்றி தலையணைகளில் அமர்ந்து அதை பார்க்கவேண்டும். ஹூக்காவும் ஃபாங்கும் தருவார்கள். அந்த வகை நடனங்கள் இந்தி சினிமாவில் முக்கியமான பங்கு வகிப்பவை – கதையில்கூட. உதாரணம், தேவதாஸ். அமர்பிரேம் போன்ற படங்கள். அவற்றில் கதைநாயகன் சீரழிந்தோ சீரழியவோ சென்றடையும் இடம் அந்த நடனக்கூடம்தான்.  நடன மங்கை அவற்றில் முக்கியமான கதாபாத்திரம்.

நடனமங்கையின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் உம்ராவ் ஜான் ஒரு முக்கியமான படம். ரேகா நடித்தது. மிர்ஸா ஹாதி ருஸ்வா [ Mirza Hadi Ruswa] எழுதிய உம்ராவ் ஜான் அடா என்னும் [Umrao Jaan Ada] முக்கியமான நாவலை ஒட்டி முசாபர் அலி இயக்க 1981ல் வெளிவந்த வரலாற்றுப் படம் அது. மிக மெதுவாகச் செல்வதனால் தோல்வி அடைந்தது. ஆனால் மிகநுணுக்கமாக அந்தப்  பண்பாட்டைக் காட்டிய ஒரு ’கிளாஸிக்’ அது. அரிய பாடல்களும் கொண்டது. தமிழில் எவரும் அதைப்பற்றி எழுதி நான் பார்த்ததில்லை.

வட இந்திய சினிமாக்களில் இருந்து அந்த வகையான நடனமுறை தமிழ் சினிமாவுக்கு வந்தது. பானுமதி ஆடிய ‘அழகான பொண்ணு நான்’ முதல் குமாரி கமலா நடித்த  ‘ஓ ரசிக்கும் சீமானே’ வரை பலவகையான நடனங்கள் தமிழ் சினிமாக்களில் வந்தன. அவை காலப்போக்கில் குத்துப்பாட்டுகளின் ஒரு வகைமையாக ஆயின

எம்.எஸ்.விஸ்வநாதன் குத்துப்பாட்டு படத்தில் இருக்கவேண்டும் என ஆர்வமாக இருப்பார் என்று சினிமாவில் சொல்வார்கள். “ஐட்டம் டான்ஸ் இல்லியா? ஐட்டம் டான்ஸ் இல்லேன்னா இந்த சினிமாவ எவண்டா பாப்பான்?” என்று வற்புறுத்துவார். ”ஒரே ஒரு பாட்டு வைடா…கிளாஸிக்கலா இருக்கும்” என்று மன்றாடுவார். ஒரு முறை எவரோ அதைப்பற்றிக் கேட்டபோது “ஐட்டம் டான்ஸிலேதாண்டா நான் புதிசா வெஸ்டர்ன்ல ஏதாவது செஞ்சுபாக்க முடியும்…” என்றார். மேலையிசையை அறிந்தவர்கள் எம்.எஸ்.வியின் குத்துப்பாட்டுகளில் மிகமிக அரிதான இசை பரிசோதனைகளை கண்டடைய முடியும். உதாரணம், கலைக்கோயில் படத்தில் வந்த முள்ளில் ரோஜா என்னும் பாடல்.

தேஜஸ்வினி பெகரா

சமீபத்தில் நான் ரசித்த குத்துப்பாடல் ஊ சொல்றியா மாமா. அதன் ஐந்து வடிவங்களையும் பார்த்தேன். மலையாளத்தில் ரம்யா நம்பீசன் பாடியது ஒத்தே வரவில்லை. பிரியாணியை ’கஞ்ஞி’யாக குடிப்பது போல இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு தமிழில் ஆன்ட்ரியா பாடியதுதான் சிறப்பு என்னும் எண்ணம் இருக்கிறது. எனக்கு தெலுங்கு வடிவமே பிடித்திருந்தது.

சிறப்பாகப் படமாக்கப்பட்ட பாடல் அது. பலர் அந்தப் படமாக்கலில் உள்ள நுட்பங்களை கவனித்திருக்க மாட்டார்கள். அதற்கு கொஞ்சம் ஆந்திரத்தின் அடித்தளக் கலாச்சாரம் பற்றிய அறிமுகம் தேவை.

ஆந்திரத்தில் சிறுநகரங்களில் இன்றும் இந்தவகையான குத்துப்பாட்டும் நடனமும் பரவலாக நிகழ்கிறது. ஜாத்ரா என்று அவர்கள் சொல்லும் பொதுமக்கள் திருவிழாவின் பகுதியாக இது நிகழ்கிறது. சில ஊர்களில் லாரிகளை கொண்டுவந்து முச்சந்திகளில் நிறுத்தி அவற்றின் பக்கப்பலகைகளை திறந்துவிட்டு மேடையாக ஆக்கி விளக்குகளைப் பொருத்தி ஆடச்செய்கிறார்கள். ரசிகர்கள் மனமுவந்து பணம் கொடுத்தால் போதும்.

பெரும்பாலும் நிர்வாண, அரைநிர்வாண நடனங்கள். நிர்வாணமாக ஒரு சில கணங்கள் தோன்றுவார்கள். இதற்கென்றே பிரம்மாவர் பகுதிகளில் பெண்கள் உண்டு. பெத்தாபுரம் போன்ற இடங்களில் வழிவழியாக இதைச்செய்யும் குடும்பங்கள் உண்டு. உண்மையில் இப்பெண்கள் பெரும்பாலும் அழகாக இருப்பார்கள். இவர்களில் இருந்து பலர் புகழ்பெற்ற நடிகைகளாக ஆனதும் உண்டு.

இணையத்திலேயே ஆந்திரா நடனம் என தேடினால் இந்த ஆடல்களின் செல்பேசியில் எடுக்கப்பட்ட தரமற்ற காணொளிப் பதிவுகளை காணலாம். இந்த ஆடல்களை கண்டவர்களுக்கு ஊ சொல்றியா மாமா பாடலும் ஆடலும் அந்த ஆடல்களின் உடல்மொழி, முகபாவனைகளின்படி அமைந்திருப்பது தெரியும்.

நாம் சினிமாக்களில் காணும் சாதாரண குத்துப்பாட்டுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? நம் குத்துப்பாடல்கள் நம்மூர் நாட்டுப்புற நடனங்களின் பாணியில் அமைந்தவை. நம்மூர் கரகாட்டம், தெருக்கூத்து ஆட்டங்களில் மிகச்சிக்கலான, விரைவான அசைவுகள் உண்டு. ஆகவே ஆடுபவர்களின் முகபாவனைகள் சிலம்பாட்டம் , சர்க்கஸ் போன்றவற்றிலுள்ள தோற்றம் கொண்டிருக்கும். சிரிப்பதுபோல அல்லது மூச்சுவாங்குவதுபோல திறந்த வாயுடன், அல்லது சுழித்த உதடுகளுடன், அல்லது நாக்கைக் கடித்தபடி ஆடுவார்கள்.

இந்திராவதி சௌகான்

ஆனால் ஆந்திராவின் ஜாத்ரா ஆடல்களில் எளிமையான ஆட்டம்தான் இருக்கும். பெரும்பாலும் விதவிதமாக இடுப்பில் கை வைத்தபடியோ, கைகளை விரித்தபடியோ, உடலைத் திருப்பியபடியோ நிற்பதுதான் இருக்கும். ஒரு சிறு சதுரத்திற்குள் செல்வது வருவதுதான் முக்கியமாக அவர்களின் அசைவுகளை தீர்மானிக்கிறது. பெண்கள் களைத்துப்போய் வியர்த்து வழிவதோ மூச்சுவாங்குவதோ இல்லை. நளினமான அசைவுகளை மட்டுமே காட்டுவார்கள்.

ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு நிற்பதும், பார்வையை கூட்டத்திற்குள் சுழலவிடுவதும், ஜாக்கெட்டையும் தலைமுடியையும் சரிசெய்து கொள்வதும், குனிந்து காலில் கொலுசை சரிசெய்வதும்தான் ஆடல் என நடக்கும். பெண்ணின் இயல்பான அழகசைவுகளை நடத்திக்காட்டுவதுதான் அது. அவ்வப்போது உடலைக் குலுக்கி ஆடுவார்கள். நின்றபடியே தோளைக்குலுக்குவது அதில் முக்கியமான ஓர் அசைவு. அதில் ஆட்டப்பயிற்சியும் அதன் விளைவான நளினமும் இருக்கும். அரிதாக விரைவான தாளம் கொண்ட சிக்கலான நடன அசைவு நிகழும். அதை எதிர்பாராத ரசிகர்கள் கூச்சலிடுவார்கள்.

இந்த ஆட்டமுறை முழுக்க ஊ சொல்றியா மாமா பாடலின் ஆட்டத்தில் உள்ளது. குறிப்பாக ரசிகர்களில் ஒருவரை கைநீட்டி வரச்சொல்லி அழைப்பது, அவன் தயங்கும்போது அவ்வளவுதானா என கையை காட்டுவது ஆகியவை மிக அழகாக நடிக்கப்பட்டிருக்கின்றன. அவை ஜாத்ராவுக்கே உரிய பாவனைகள்.

அத்துடன் முகபாவனைகள். ஜாத்ராவில் ஆடுபவர்கள் ஒருவகையான சலிப்பு பாவனையையே பெரும்பாலும் கொண்டிருப்பார்கள். புன்னகைப்பதோ கண்சிமிட்டுவதோ மிகையாகச் சிரிப்பதோ வழக்கமில்லை. வெளிப்படையான பாலியல் அழைப்புகள் கூட இருக்காது. பார்வையும் சிரிப்பும் சீண்டுவதுபோல சட் சட்டென்று மாறும். ஏதோ ஒரு சீற்றம்கொண்டவர்களாக சிலசமயம் தோன்றுவார்கள். மெல்ல மெல்ல ஒரு களிவெறி கூடியபின்னர் சிரிப்பதும் கூச்சலிடுவதும் நிகழும். ஆனால் அது மிக அரிது.

இந்த ஆடலில் சமந்தாவின் பாவனைகளும் ஜாத்ராவின் நடனக்காரியின் இயல்பை, அசைவுகளை, முகபாவனைகளை அப்படியே சித்தரிக்கின்றன. நடன அமைப்பாளர் தேஜஸ்வினி பெஹரா மிகச்சிறப்பாக ஒருங்கமைத்து பயிற்சியளித்திருக்கிறார். தமிழில் ஆண்ட்ரியா பாடியிருப்பது ஒரு ஆங்கில பாப் பாடலின் பாவனையில் இருக்கிறது. தெலுங்கில் இந்திராவதி சௌகான் இந்த பாடலுக்கு தேவையான நாட்டுப்புறத்தன்மையுடன் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.

முகலாய நடனங்கள் பற்றிய கட்டுரைகள்

குத்துப்பாட்டு , இரு கடிதங்கள்

முந்தைய கட்டுரைகி.ரா. இணையதளம்
அடுத்த கட்டுரைவெண்முரசு அறிமுகங்கள்- கடிதம்