வேதாளம்- கடிதங்கள்-4

வேதாளம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வேதாளம் கதையை வாசித்துவிட்டு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். கதையின் சுவாரசியம், உரையாடல்களின் வழியாக உள்ளூர உருவாகிவரும் பலவகையான குணச்சித்திரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க கதையின் மையம்தான் என்ன என்ற கேள்வி வந்தது. நான் சொன்னேன். அவரவவர் தோள் வேதாளம்தான் என்று. சடாட்சரத்துக்கு அவர் தோளில் ஒரு வேதாளம் இருக்கிறது. நமக்கு நம்முடைய வேதாளம்.

வேதாளம் என்பது ஆவிதான். இங்கே சடாட்சரம் சுமக்கும் துப்பாக்கி ஒரு பிணம். ஆனால் அது பயனற்றதும் அல்ல. அவருக்கு அது துணை. இக்கட்டில் அவர் அதை நம்பித்தான் இருந்திருக்கிறார். அவருக்கு அது அடையாளம். எதிரிகள் அதைக்கண்டு பயப்படவும் செய்கிறார்கள். அதனால் சுடமுடியாது. ஆனால் பயனற்றதும் அல்ல. அல்லது பயன் என்பது சடாட்சரம் உருவாக்கிக்கொள்வது. இப்படிப்பட்ட பிணங்களை நாம் தூக்கிச் சுமக்கவில்லையா? சாதி மதம் கொள்கை கட்சி என எவ்வளவு பிணங்கள். வேலை, பொறுப்பு, குடும்பப்பெருமை. சமூகத்தில் ஸ்தானம் என எவ்வளவு வேதாளங்கள்.

வேதாளம் சுமப்பவனின் வலியை வலியே இல்லாமல் சொல்கிறது என்பதுதான் இந்தக்கதையின் அழகு என நினைக்கிறேன்.

அருண்குமார்

 

அன்புள்ள ஜெ,

வேதாளம் கதையை வாசித்தபோது அது அளித்தது ஒரு திடுக்கிடலை. தூக்கு என சிறு குழந்தைகள் நீட்டுவதுபோல தாணுலிங்கம் கை நீண்டு நின்றது என்னும் வரி. அவர் அதை தூக்கிக்கொள்கிறார். வேறுவழியில்லை. ஆனால் அப்போதுகூட கதையின் சாராம்சம் கொஞ்சம் விலகி நின்றது. ஆனால் இன்று அந்தக்கதையை யோசித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு தோற்றம். துப்பாக்கி ஒரு வேதாளம். தாணுலிங்கம் இன்னொரு வேதாளமாக ஆகிவிட்டார். துப்பாக்கிய ஊன்றி புதிய வேதாளத்தை சடாட்சரம் தூக்கிச் செல்கிறார். இனி இவன் நினைவு வேதாளமாக அவர் நினைவில் இருக்கப்போகிறது. இந்த குற்றவுணர்ச்சி அவர் வாழ்க்கை முழுக்க தோளில் சுமையாக இருக்கும். ஒருவேளை வேலை போகலாம். நடவடிக்கைகள் வரலாம். ஆனால் இன்னொரு வேதாளத்தை ஏற்றிக்கொண்டாயிற்று. ஓய்வு பெறுவது வரை கூடவே இருப்பது துப்பாக்கி. ஓய்வுக்குப்பிறகு தாணுலிங்கம். விடவே விடாதவை இந்த வேதாளங்கள்.

சரவணக் கதிரேசன்

வேதாளம் – கடிதம்

வேதாளம்- கடிதங்கள்-1

முந்தைய கட்டுரைவெண்முரசு அறிமுகங்கள்- கடிதம்
அடுத்த கட்டுரைபோழ்வும் இணைவும்- கடிதம்