அறம்- வாசிப்பு

அறம் விக்கி

அறம் என்பது நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையைக் குறிப்பிடும் சொல் -ஒரு மனிதக்குழு அல்லது ஒரு தனி மனிதன் தனக்குள் உருவாக்கிக் கொள்ளும் நெறிகள், இறுதியாக வகுத்துக் கொண்ட நடத்தைகள், செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, செய்தே ஆக வேண்டியவை அடங்கிய ஒரு வழி காட்டித் தொகை – அதுவே அறம்.

2014, ஜனவரி புத்தகக் கண்காட்சியில் எல்லா ஸ்டால்களிலும் அழகாக அடுக்கிவைக்கப் பட்டிருந்தது அந்தப் புத்தகம். இரண்டு முறை கையிலெடுத்து, நானூறு பக்கங்கள் என்றவுடன் கீழே வைத்துவிட்ட புத்தகம் – நண்பர் சந்துரு, எதிர்பாராத ஒரு நொடியில், பரிசாகக் கொடுத்து என்னை வியக்க வைத்த புத்தகம் ஜெயமோகனின் “ அறம் “ ! வம்சி வெளியீட்டில் ‘ சிறுகதைகள் ‘ தொகுப்பு – தனது இணையதளத்தில் தொடர்ச்சியாக எழுதி வாசகர்களைக் கட்டிப்போட்ட உண்மைக் கதைகள். நேரடியாகவும், மறைமுகமாகவும் நம் கண்முன்னே ரத்தமும், சதையுமாக உலவிய பல ஆளுமைகளின் ‘ அறநெறி ‘ சார்ந்த கதைகள். அவற்றில் புனைவு என்பது, ஜெயமோகன் கதை சொல்லும் முறை மட்டுமே! பத்துப் பக்கம் படித்தால், கண்மூடி, இதயத்தினூடே கசியும் ஏதோ ஒன்று – வருத்தம், மகிழ்ச்சி, வெறுப்பு, ஆச்சரியம், பச்சாதாபம் – மனம், உ̀டல் அனைத்திலும் படர்ந்து நம்மை செயலிழக்கச் செய்கிறது ! அட, மானுட வெற்றி தோல்விகளில் இத்தனை அறம் சார்ந்த நிகழ்வுகளா !

கி.ரா., நாஞ்சில் நாடன், பூமணி, சொ.தருமன், பெருமாள் முருகன் – இவர்கள் சொல்லும் வட்டாரக் கதைகள் போன்றே இந்தக் கதைகள், கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம் சார்ந்த ( கேரள மணத்துடன் கூடிய தமிழ் நாடு ) மனிதர்களைப் பேசுகின்றன. சாதி, மத பேதமின்றி, அனைத்துத் தரப்பிலும் – எந்தத் துறையிலிருந்தாலும், வாழ்வின் எந்தத் தட்டிலிருந்தாலும் அறம் சார்ந்த மனித இயல்புகளை நடு நிலையுடன் விவரித்துச் செல்கின்றன. நாட்டார் தமிழ், தமிழ் கலந்த மலையாளம், மலையாளம், பிராமண பாஷை என பிரமிக்க வைக்கிறது கதை மாந்தர்களின் உரையாடல்கள் – அதுவே கதைக் களத்திற்கு வாசகனை கை பிடித்து அழைத்துச் செல்லும் மந்திரக்கோலாகிறது !

புத்தகத்தின் இறுதியில் சுவாரஸ்யமான கதை போல இக்கதைகளில் வரும் சில ஆளுமைகள் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு இருக்கிறது. அதில் குறிப்பிடாமல் விடப்பட்ட சில ஆளுமைகளை ஓரளவுக்கு யூகிக்கலாம் – சமூக, கலாச்சார விதிகள் கருதி, அவை சொல்லாமல் விடப்பட்டிருக்கலாம் ! அது ஜெயமோகன் அவர்களின் அறம்!

“ இலட்சியவாதத்தில் ஊன்றி வாழ்ந்த உண்மை மனிதர்களின் வாழ்க்கை வழியாக, அவர்களை மதிப்பிடும் கண்கள் வழியாக என் வினாக்களை நானே எழுப்பிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். இந்தக் கதைகள் அனைத்தும் அந்த பொதுத் தன்மையில் அமைந்தவை “.
“ இலட்சியவாதம் நிற்கும் சுழலின் இருட்டுடனும் குப்பையுடனும் அது கொள்ளும் உரையாடலையே இக்கதைகள் முன்வைக்கின்றன “ என்கிறார் ஜெயமோகன். இலட்சியவாதம் என்னும் பிரம்மாண்டம், சில ஆளுமைகளின் தனித் தன்மையாக ஒளிர்வதையும், அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் ஏமாற்றங்களையும் சார்பின்றி விவரித்துச் செல்வதிலேயே ஜெயமோகனின் அறம் நம்மை முழுமையாக ஆட்கொண்டுவிடுகின்றது !

வாசித்து அனுபவிக்கவேண்டியவை அறம் கூறும் கதைகளும், அவற்றின் வாழ்க்கைப் போராட்டங்களும் –

‘அறம்’ – பதிப்பாளரின் மனைவி ‘ஆச்சி’ தொடுக்கும் அறப்போராட்டத்தின் வலியையும் அதன் வெற்றியையும் விவரிக்கிறது. “லச்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணு பாப்பான்னு சொல்லுவாங்க.. நீங்க பெரியவரு. என் வீட்டு முற்றத்துலே நிண்ணு கண்ணீர் விட்டுட்டீங்க…அந்தப் பாவம் எங்க மேலே ஒட்டாம உங்க சொல்லுதான் காக்கணும்னு சொன்னா. என்னா ஒரு சொல்லு, தங்கக் காசுகளை எண்ணி எண்ணி வைக்கிறா மாதிரி… முத்துச்சரம் மாதிரி.. “ அறமே அந்த ஆச்சியிடம்தான் இருந்ததாக முடிக்கிறார்.

‘வணங்கான்’ அப்பா வைத்த காரணப் பெயர் – கண்முன்னே பிரிட்டிஷ் ராஜ்ஜியம், ஜமீந்தார்கள் ஆதிக்கம், அரசு அலுவலில் ஒடுக்கப்பட்ட ஒருவர், எழுச்சிமிக்க வழக்கறிஞர் எனக் காட்சிகள் விரிகின்றபோது, நாமும் அந்தக் காலத்திற்கே ஒரு பார்வையாளராகச் சென்றுவிடுகின்றோம். ‘ நாடார்களிலே பல தரங்கள் உண்டு ‘; ‘சொந்தமாகப் பெயர் வைத்துக்கொள்வது கூட ஆடம்பரம் – நாய்க் குட்டிக்குப் பேர் வைப்பதைப் போல ‘ என்கிறார். அதிலும் ‘சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெரு நாய்களைச் சொன்னேன்’. அன்றைய சமூக அவலங்களை இப்படி இடித்துரைக்கிறார் ஆசிரியர் !

‘யானை டாக்டர்’ – உலகப் புகழ்பெற்ற விலங்கியல் மருத்துவர், தமிழக வனத்துறையில் பணியாற்றியவர், விலங்குகளின் குணாதிசயங்கள் பற்றி ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி. யானைகளுக்கு மயக்க ஊசி போட்டு, விழவைத்து மருத்துவம் செய்வதில் நிபுணர். அதிகமான யானைகளுக்குப் பிரசவம் பார்த்தவர் ! அவரது வாழ்க்கை வனங்களையும், அங்கு வாழும் மிருகங்களையும் சுவாசித்து உயிர்த்த ஒன்று. “ அங்கே வலி உண்டு. நோய் உண்டு. மரணம் உண்டு. ஆனால் கீழ்மை இல்லை. ஒரு துளிகூடக் கீழ்மை இல்லை. உன்னை நன்கறிந்த எவரும் அருவெறுத்து விலகுவர். உயிர் கொண்ட கீழ்தரப் புழுதியே நீ “ என்னும் யானை டாக்டரின் அறம் மனிதர்களினும் மேலான விலங்குகள் சார்ந்தது. ஒருநாள் இரவு, யானை வாசம் அறிந்து, வாசலில் வந்து நிற்கும் யானைக்குட்டியின் வலியறிந்து சிகிச்சை அளிக்கிறார் – வனத்தில் சுற்றுலா வந்த பயணிகள் வீசிய உடைந்த பீர் பாட்டில் காலில் குத்தி, காயப்படுத்தியிருந்தது. சிகிச்சைக்காக டாக்டரைத் தேடிப் பல மைல்கள் வலியுடன் நடந்து வந்திருக்கும் யானைக்குட்டியும், சிகிச்சை முடிந்து நன்றியுடன் திரும்பும் குட்டியை அழைத்துச் செல்லும் இருபதுக்கும் மேற்பட்ட யானைகளின் மகிழ்ச்சியும் வியப்பூட்டுகின்றன! யானைகளுடன் டாக்டர் ஏற்படுத்தியிருக்கும் பந்தம் பிரமிப்பூட்டுகிறது.

‘சோற்றுக்கணக்கு’ – கெத்தேல் சாகிப், மனித உருவில் தெய்வம். வயிற்றுப் பசிக்கு சாதி,மதம்,ஏழை,பணக்காரன் வேற்றுமை கிடையாது என்பதை உணர்ந்தவர். அவரது அன்பு முரட்டுத்தனமானது. அவரைச் சுற்றிச் சுழலும் கதையில் வரும் பாத்திரங்கள் வறுமையின் ருசியறிந்தவை; வறுமை உரசி உரசி மூளை மழுங்கியவை – இவர் தாராளமாய்த் திணிக்கும் சோற்றுக்கும் கறிக்கும் நன்றியுடன் இருப்பவை. காசு கூட எதிர்பாராமல், வயிறு முட்ட முட்டச் சோறு போடும் கெத்தேல் சாகிப் அறம், மனித நேயத்தில் தோய்ந்தது.

‘நூறு நாற்காலிகள்’ – தலைமுறைகள் சமுதாய மாற்றத்தை – வீட்டிலும், வெளியிலும் – எப்படி எதிர்கொள்ளத் தயங்கித் துன்புறுகின்றன என்பதை அழுத்தமாகச் சொல்கின்றது. ஜெயமோகனின் சொல்லாமல் புரியவைக்கும் திறமை, எழுதாத எழுத்தின் வலிமை இக்கதை முழுவதும் விரவியிருக்கிறது. காப்பாவுடன் சேர்ந்து நாமும் பதறுகிறோம், வலியறிகிறோம், அழுகிறோம், புகைக்கிறோம், மனதுள் புகைகிறோம்; இறுதியில் அதிகார நாற்காலிகளைக் கண்டு மிரளுகிறோம் !

‘பெருவலி’ – கோமல் சுவாமிநாதன் தமிழ் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் இதழாளர். அவருக்கு முதுகில் புற்று நோய். அதன் வலி கொடுமையானது. மரண அவஸ்தை – கண்ணெதிரே உடனேயே வந்த மரணத்துடன் பயணித்த அனுபவம். அந்தப் பெருவலியுடன் அவர் சென்றுவந்த கைலாச மலை யாத்திரை. வலியை மீறி அவர் வாழ்க்கை மீது கொண்டிருந்த தத்துவார்த்த நம்பிக்கை, அதன் ஏற்ற இறக்கங்கள் – கேட்கிறார் கோமல் : “ வலிங்கிறது வாழ்க்கை. வாழ்க்கை மேலே படியற மரணத்தோட அதிர்வு. வாழ்வும், மரணமும் இல்லாத எடத்துலே ஏது வலி ? “ கைலாச மலையைப் பார்த்து சொல்கிறார், ‘ எங்க இருக்கே ? இருக்கியா ? நீ இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு வாழ்நாளெல்லாம் ஆசைப்பட்டேனே. நீ இல்லாத எடத்திலே எதுவும் நடக்கலாம். நீ இல்லேன்னா எல்லாத்தையும் நியாயப்படுத்திடலாம். நீ இல்லேன்னா எல்லாத்துக்கும் வேற அர்த்தம் வந்துர்றது ‘. ஜெயமோகனோடு நாமும் கலங்குகிறோம்.

ஒவ்வொரு கதையும் ஒரு நாவலாகும் அளவுக்கு விபரங்கள். முழு தொகுப்பையும் வாசித்து முடித்தபோது, அதன் ஆளுமைகளின் அறநெறி ஜெயமோகன் அவர்களை முழுமையாக ஆட்கொண்டிருந்ததை உணர முடிந்தது. டாக்டர் சாமர்வெல் (ஓலைச்சிலுவை), காரிடேவிஸ் (உலகம் யாவையும்), பூமேடை ராமையா (கோட்டி) இவர்களைச் சுற்றிச் சுழலும் கதைகளில் சமூக அக்கறையே முக்கிய அறம் சார்ந்த இழை. தாயார்பாதம், மயில் கழுத்து இரண்டு கதைகளிலும் மறைதிருக்கும் ஆளுமைகள் இசை, இலக்கியம் சார்ந்தவர்கள் – மத்தறு தயிர் ஒரு பேராசிரியரின் அறம் குறித்தது. அறம், அறத்தை மீறிய வாழ்க்கை என முகத்தில் ஓங்கி அறையும் எழுத்து இந்தக் கதைகளுக்குச் சொந்தம்.

ஜெயமோகன் அவர்கள் சில முக்கிய மனிதர்களின் வாழ்க்கைச் சரிதங்களின் விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருந்தார் – அந்தப் புத்தகம் நாம் அறிந்த ஆளுமைகளின் அறிந்திராத பக்கங்களை, வியக்கும் வகையில் வெளிப்படுத்தியிருந்தது. ‘ அறம் ‘ நாம் அதிகம் அறிந்திராத ஆளுமைகளின் தர்மம் சார்ந்த வாழ்வினை ஒருவித தார்மீகக் கோபத்துடனும், கழிவிரக்கத்துடனும் சொல்கிறது – வாசித்து வெளியே வரும்போது உலகம் வேறு மாதிரியாகவும், உள்ளம் புழுக்கத்துடனும் மாறிவிடுவது, ஜெயமோகனின் வெற்றி ! ( இதை எழுதிய பிறகு படித்துப் பார்த்தேன் – அறம் வாசித்து முடித்தபோது ஏற்பட்ட கடல் அளவு உணர்வுகளின் ஒரு துளியைக் கூட என்னால் வெளியிட முடியவில்லை என்பதே உண்மை – முடியுமா என்பது விடையில்லாத கேள்வி

டாக்டர் ஜெ. பாஸ்கரன்

முந்தைய கட்டுரைகேளாச்சங்கீதம், கடிதங்கள் 12
அடுத்த கட்டுரைஇலக்கியம் பாடமாக- கடிதங்கள்