சில வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டுக்கு பெரியப்பா வந்திருந்தார். எங்கள் அம்மாவின் அக்கா கணவர். வந்திருந்தார் என்பதை விட எங்கள் அப்பா அவரை வழியில் கண்டடைந்து கூட்டி வரப்பட்டிருந்தார்.இந்த 76 வயதிலும் எங்கள் அம்மாச்சி தன் 60 வயது மூத்த மகள் பற்றி தீரா கவலையும் நடுக்கமும் கொண்டிருக்க காரணம் எங்கள் பெரியப்பா.அத்தகைய குணம் உடையவர். அவர் குறித்து நானறிந்த ஒவ்வொரு தகவலும் எனக்கு பயத்தையும் வெறுப்பையும் மட்டுமே தந்திருக்கிறது. அத்தகையவர் எங்கள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
பாதயாத்திரை செல்கையில் பசியில் மயங்கி விழுந்திருந்தவரை எங்கள் அப்பா கண்டு அழைத்து வந்திருந்தார்.கிட்டத்தட்ட பரதேசி கோலம். எங்கள் அம்மா வெகு விரைவாக அவருக்கு சுட சுட சமைத்து உணவிட்டார். ரசமும் பருப்பு துவையலும். அவர் அப்படி ஒரு ஆவலுடன் அதை உண்டார். உணவுண்டு முடித்த பின் தன் முகத்தை மூடிக் கொண்டு பெருங்குரலெடுத்து அழுதார்.சௌரியமா இரு என்று மட்டும் சொல்லிவிட்டு விடு விடுவென்று வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.எங்கள் பெரியப்பா நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்பட்டது என் அன்னை வாழ்க்கை தான். அன்று என் அன்னையிடம் ஒரு அபூர்வமான சோபை இருந்தது.துளி வெறுப்பும் கோபமும் அற்ற கண்கள்.தாய் என்ற நிலையிலிருந்து ஒரு அணுவளவு அவர் கீழிறங்கவில்லை.ஒரு வேளை உணவிட்டதின் வழி அவர் தன்னை அது வரை தீண்டியிருந்த அத்தனை கொடிய நஞ்சினையும் மாணிக்கம்மாக்கி ஒளிர விட்டிருந்தார்.அன்றைய அந்த எளிய உணவின் ருசி அதன் பிறகு இன்று வரை அது போன்றதொரு உணவில் அமையவில்லை என்று என் அன்னையிடம் கூறிக் கொண்டே இருப்பேன். அது பசியாற்ற செஞ்சதுல்ல என்பார் என் அம்மா.
அறம் எனக்கு பிடித்தமான ஜெயமோகனின் சிறுகதைகள் தொகுப்பு நூல். அறம் எத்தகைய மகத்தான மானுட உணர்வு. அது நமக்குள் தொட்டெழுப்பும் உணர்வுகளுக்கு வார்த்தைகள் இல்லை. சிலவற்றை உணர்வென மட்டுமே அறிதல் முடியும். சொல் வடிவில் அடங்காது. அறம் குறித்தான என் அறிதல் அத்தகையது.நெகிழ்ந்து கண்ணீர் பெருக பெருக நான் வாசித்திருக்கிறேன். இன்னும் இன்னும் அத்தீரா மானுட பேரன்பின் மீது பெருங்காதலும் பெரும்பற்றும் கொண்டு என்னை மேம்படுத்திக் கொள்கிறேன்.
அறம் தொகுப்பில் சோற்றுக்கணக்கு சிறுகதை எனக்கு மிக பிடித்தது.எழுத்தாளரின் பார்வையில் விரியும் இக்கதையில் அனைவரையும் ஆட்கொள்ளும் கதை தெய்வம் கெத்தேல் சாகிப்.திருவனந்தபுரத்தில் அசைவ உணவகம் நடத்தும் கெத்தேல் சாகிப் உணவிடுவதற்கு பணம் வாங்குவதில்லை. இயன்றவர்கள் கடை வாசலில் இருக்கும் உண்டியலில் தாங்கள் விரும்பிய தொகையினை போடலாம். கதைசொல்லி கிராமத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு படிக்க வருகிறான். மாமா வீட்டில் தங்கியிருக்கும் அவனுக்கு மனம் நிறைந்து உணவிடுவதில்லை அவன் மாமி. அவன் வீட்டிலும் கேட்கும் சூழல் இல்லாத வறுமை. பசி நிரந்தர உணர்வென அவனுடன் இருந்துக் கொண்டேயிருக்கிறது.தொடர்ந்த அவமதிப்புகளால் அவன் மாமா வீட்டிலிருந்து வெளியேறுகிறான்.படிப்பு பகுதி நேர வேளை என்று ஓயாது உழலும் அவன் கிட்டத்தட்ட ஒரு வேளை உணவு மட்டும் உண்கிறான்.அப்போது தான் கெத்தேல் சாகிப் கடை பற்றி அறிகிறான். ஆரம்பக்கட்ட தயக்கங்களையும் மன உளைச்சல்களையும் கடந்து அவன் அங்கு தொடர்ந்து உணவுன்கிறான்.
கெத்தேல் சாகிப் ஒரு அன்னையென அவன் மனமறிந்து உணவிடுகிறார்.அவன் படிப்பில் முதன்மை மாணவனாக திகழ்கிறான்.அவன் படித்த பல்கலைக்கழகத்திலே அவனுக்கு வேலைக் கிடைக்கிறது.இடையில் தான் வேலை பார்க்கும் கல்லூரியில் சீட்டு பிடித்து அவனிடம் பெரும் தொகை வருகிறது. அவன் அப்பணத்தை எடுத்துக் கொண்டு நேரே கெத்தேல் சாகிப் கடைக்கு செல்கிறான். அவன் மனம் தவிக்கிறது. தானும் ஓர் ஆளாகி விட்டதை கெத்தேல் சாகிப்பிடம் எப்படியாவது காட்ட விரும்புகிறார். உண்டியலை கொண்டு வர செய்து தன் கையில் இருக்கும் பணத்தை அதில் போடுகிறான். அது நிறைய இன்னொரு உண்டியல் வரவழைத்து அதிலும் போடுகிறான். ஆனால் ஒருமுறை கூட கெத்தேல் சாகிப் அவன் பக்கம் திரும்பவில்லை. புதிதாக கூச்சத்துடன் வந்த இரு பையன்களை மிரட்டி உணவுண்ண வைத்துக் கொண்டு இருக்கிறார். இவன் ஏமாற்றத்துடன் போய் அமர எப்போதும் போல் அன்றும் அவனுக்கு பிடித்த உணவை அவனை நேர்க் கொண்டு காணாது பரிமாறுகிறார். சட்டென்று அவனுக்கு புரிகிறது. அவர் கரங்கள் மட்டுமே அவனுக்கு சொந்தம். அதுவே அவன் அன்னையின் கரங்கள் என்று அவனை வளர்த்தெடுத்தவை என்றவன் கண்டடைகிறான்.
உணவிட்டு விருந்தோம்புவது என்பது பெண்ணின் படிமமாகவே பெரும்பாலும் காட்சிப்படுத்தப்படும்.முதன்முறையாக தேவதை கதைகளின் முதன்மை இடத்தில் ஒரு ஆண் சென்று அமருகிறார்.அம்மை தழும்புகள் நிறைந்த முகத்தில், குறைப்பாடுள்ள ஒற்றை கண் கொண்ட ஏழடி உயர ராட்சத உருவம் கொண்ட கெத்தேல் சாகிப்பில் எழும் மானுட அன்பும் கருணையும் காவியங்களில் காட்டப்படும் உணர்வுகளுக்கு இணையானது.அது தன்னியல்பில் வெளி வருகையில் நமக்கு காட்டும் உயரம் நம்மை வாழ்வில் பெரும் நம்பிக்கை கொள்ள செய்கிறது.ஆனால் அந்த தன்னலமற்ற அன்பின் நிலையினை அடைவதற்கு முன் நம் அத்தனை அக அழுக்குகளையும் எதிர்க் கொண்டு கடந்திடல் வேண்டுமல்லவா என்றும் தோன்றுகிறது.சில சமயம் இத்தகைய பேரன்பு நிலையை நம் அத்தனை சிறுமைகளையும் கடந்து நாம் சென்று தொட இயலுமா என்றும் ஐயம் எழுகிறது. ஆனால் அப்படியொரு நிலை அடைவதே அறம் சார்ந்த மானுட வாழ்வின் உச்சமல்லவா!!!
திவ்யா சுகுமார்