புளியமரம் இருந்த ஊர்

நேற்று ஏதோ ஒரு சிறு குறிப்புக்காக ஒரு நூஉலை தேடியபோது ஒரு புளியமரத்தின் கதை அகப்பட்டது..1996 பதிப்பு. வெளிவந்து முப்பதாண்டுகளுக்குப்பின் காலச்சுவடு வெளியிட்ட முதல்பதிப்பு. எழுத்து அச்சு செங்குத்தாக, இணையத்திலிருந்து நகலெடுத்ததுபோல இருக்கிறது. அன்று கணினி அச்சு அவ்வளவு வேரூன்றவில்லை. சுந்தர ராமசாமியின் கையெழுத்து எனக்கும் அருண்மொழிக்குமாக.

சும்மா புரட்டி ஏதோ ஒரு பக்கத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.”மூத்த பிள்ளை மிகவும் எளிமையானவர். எளிமையாக இருப்பதிலுள்ள பெருமையை நன்றாக அனுபவித்தவர்” என்ற வரி புன்னகைக்க வைத்தது. 67 ஆம் பக்கம்.

அப்படியே வாசிக்க ஆரம்பித்தேன். புளியமரம் ஏலம் விடப்படும் காட்சி. பழைய நினைவுகள், நிகழ்காலத்தில் புளியங்காய்கள் களவுபோய்விட்டன. களவுபோகவில்லை, ஜனநாயகத்தால் ஊக்கம் அடைந்த மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டன.

என்ன ஒரு காட்சி. காட்சிக்கு அடியில் சென்று மேலதிகமாக பொருள் ஏதும் தேடாத எளிய வாசகர்கள் வெடிச்சிரிப்புடன் இப்பகுதியை வாசிக்க முடியும். மூத்தபிள்ளையின் நிதானம், அப்துல் அலி சாயபின் பதற்றம், சின்னப்பசங்களின் ஊடாட்டம், முனிசிப்பல் சிப்பந்தி வள்ளிநாயகம் பிள்ளையின் கெத்து. ஏலத்தின் நடைமுறைகளில் ஒவ்வொருவரின் குணமும் வெளிப்படும் விதம். அதிலேயே ஆயிரம் இருக்கின்றன ரசிக்க.

ஆனால் புனைவு என்பது வரலாற்றின், வாழ்க்கையின் ஒரு துளிப்பதம் என உணர்ந்த இலக்கியவாசகன் இந்த ஒரு காட்சி வழியாக அன்றைய வரலாற்றுத் திருப்புமுனையை, அதன் சிக்கலான உள்ளோட்டங்களை விரித்து விரித்து எடுக்க முடியும். புளியமரம் மகாராஜாவின் வருகையால் முச்சந்திக்கு வந்து அவையமர்ந்தது. அது ஒரு பட்டம்கட்டல், ஒரு பதவியளித்தல்தான். அதன்பின் அது நிழல்மரம். அதன்கீழே வணிகமும், நாகரீகமும், அதிகாரப் பூசல்களும், வணிகப்போட்டியும் தழைக்கின்றன.

அதை ஏலம்விடுவது ஓர் அரசுசார் நிகழ்வு. வழிவழியாக அரசுச்செல்வத்தில் கைவைப்பவர்களுக்கே அதில் உரிமை. தாழக்குடி மூத்தபிள்ளை வில்வண்டியில் வருகிறார். நிதானமான, கெத்தான, நையாண்டியான அதிகாரம். ஆனால் கால் அழுகிக்கொண்டிருப்பது. நிலப்பிரபுத்துவத்திற்கு உரிய ஒரு வகை ரத்தசொந்த சோஷலிசம். வண்டிக்காரன் நாகருபிள்ளை மூத்தபிள்ளைக்கு சொந்த மகன்போல. வள்ளிநாயகம் பிள்ளை உறவில்லாவிட்டாலும் மாப்பிள்ளை முறை. எக்சிமா பாதித்த கால்களுடன் வேட்டியை தூக்கிப்பிடித்தபடி மெல்ல வரும்போது அந்த பகுதியே தன்னுடையது என்னும் மிதப்பு. ‘மகாராஜாவ பாக்குறது உண்டுமா?’ என்னும் கேள்விக்கு ‘போனமாசம் இதே தேதியிலே பாத்து பேசிக்கிட்டிருந்தேன்’ என்னும் பதில்.

அவருக்குப் போட்டி சாயபு. அவருடையது அரண்மனைத் தொடர்பின் அதிகாரமல்ல, வணிகவலையின் அதிகாரம்.என்ன அதிகாரமிருந்தாலும் கடைசியில் அரண்மனைத் தொடர்பு வெல்வதன் பதற்றம். இன்னொருவர் வடசேரி பிரம்மானந்த மூப்பனார். நாடார் சாதி. அரண்மனைத் தொடர்பும் இல்லை, வணிக வலையுமில்லை. ஆனால் சாதி எண்ணிக்கை அளிக்கும் பின்புலம். பெருவட்டர், அதன் விளைவான தோரணையும் மிதப்பும். அந்தச் சக்திகள்தான் வழக்கமாக மோதிக்கொள்ளும், அவர்களில் ஒருவரே வெல்லமுடியும். மற்றவர்களுக்கு அந்த நாடகத்தைப் பார்க்கும் இன்பம் மட்டுமே.

சுதந்திரம் வந்துவிட்டிருக்கிறது. ஜனநாயகம் அறிமுகமாகிவிட்டது. தோட்டிகளுக்கு தங்கள் காலம் வந்துவிட்டது என்னும் எண்ணம். வள்ளிநாயகம் பிள்ளை ஒரு வார்த்தை கேட்கமுடியாது. அவர்களுக்கெல்லாம் ஓட்டு இருக்கிறது. அவர்களின் தலைவன் மாடசாமி தோழர் மாடசாமி ஆகிவிட்டான். அவர்கள் முன்பென்றால் புளியமரத்தடியில் நிற்கக்கூட மாட்டார்கள். அவ்வாண்டு மொத்தக் காயையும் பறித்துக் கொண்டுபோய்விட்டார்கள்.

என்னென்ன பகடிகள். “என்ன எளவோ தெரியல்ல இந்த வருசம் குருவி வெட்டுக்கிளி எலி பெருச்சாளி பல்லி கொசு எல்லாம் கூடுதலு பாத்துக்க’ என்னும்  மூத்த பிள்ளையின் நக்கல். ‘ஒரு ராஜ்யம்னா ஒருத்தன் சொல்லணும் அடுத்தவன் கேக்கணும். இது பயித்தாரக்கூத்தாட்டுல்ல இருக்கு. என் ஊட்லே நானும் சொல்வேன், அவளும் சொல்லுவா, புள்ளைகளும் சொல்லும், வண்டிக்காரனும் சொல்வான், பறைச்சியும் சொல்லுவா, சாம்பானும் சொல்லுவான்னு உண்டும்னா கேக்குததுக்கு யாரு’ என ஜனநாயகத்தை எண்ணி உளம் வெதும்பல்.

அப்படியே வாசித்துக்கொண்டே இருந்தேன். என் புத்தக அலமாரி அருகே நின்றபடியே157 பக்கத்தையும் படித்து முடித்தேன். தொடக்கத்தில் இருந்து மீண்டும்67 ஆம் பக்கம் வரை படித்தேன். இது இந்நாவலுக்கான என் எட்டாவது வாசிப்பாக இருக்கலாம். பெரும்பாலும் மனப்பாடமாகவே இருக்கிறது.

இந்தியாவின் தொன்மையான புராணப்பாரம்பரியத்தில் தொடங்கி சுதந்திரப்போர் வழியாக ஜனநாயகக் கூத்து வரை வந்து அதன் வெறுமையைச் சுட்டிக்காட்டும் இந்நாவல் சுந்தர ராமசாமி என்னும் அக்கால மார்க்சியர் எழுதியது. ஜனநாயகம் என்பது கும்பலின் அதிகாரம், இன்னொரு மெய்யான அதிகாரம் வந்து மக்களை விடுவிக்கவேண்டும் என்பதுதானே அன்றைய இடதுசாரிகளின் எண்ணம்.

பத்தாண்டுகளுக்குப் பின்பு இந்நாவலை சுந்தர ராமசாமி எழுதியிருந்தால் இதன் முடிவில் உள்ள நம்பிக்கையை, வருந்தலைமுறைக் குழந்தைகளைக் கண்டு கண்கலங்கும் கடலைத்தாத்தாவின் நெகிழ்வை எழுதியிருப்பாரா? மாட்டார். அவரை நவீனத்துவம் நம்பிக்கையிழப்பு நோக்கி, தன்னை நோக்கிய இறுக்கம் நோக்கி கொண்டு சென்றது.

ஐயமே இல்லாமல் பெரும் செவ்வியல் படைப்பு என தமிழில் என் தலைமுறைக்கு முன் ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால் ’ஒரு புளியமரத்தின் கதை’யைத்தான் சொல்லவேண்டும். 1991ல் அதைச் சொல்லப்போய் ஏகப்பட்ட வசைகள் வாங்கினேன். கூடுதலாகச் சொல்லிவிட்டேனோ என்ற ஐயம் எழுந்து நானே இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வாசித்துப் பார்க்கிறேன். மீண்டும் மீண்டும் தன்னை உறுதிப்படுத்திக்கொள்கிறது இப்படைப்பு.

இதன் முதன்மை வெற்றி என்ன? சுந்தர ராமசாமியே அருகே இருப்பதுபோல உணரச்செய்யும் படைப்பு இது. அவரை அறிந்து, இழந்த அவருடைய நண்பர்கள் மாணவர்கள் அனைவருக்கும் அவர் அழிவின்மையுடன் இருப்பதாக உணரச்செய்வது. ‘துப்பாக்கியில் இருந்து வெடியோசையுடன் வெளிவருவது இலவம்பஞ்சாக இருக்கமுடியாதே’ என்ற வரியை வாசிக்கையில் சிரித்து ’சார்!’ என ஒருகணம் கண்கலங்கிவிட்டேன். அவரை எண்ணி இத்தனை ஆண்டுகளுக்குப் பின் துயருறுவேன் என நினைக்கவே இல்லை.

”ஓய் நான் ஜெயிலுக்கு போணம்னு வக்கீல் படிப்பை முடிச்சுண்டு அவசரமா வரேன். அதுக்குள்ள சுதந்திரத்த வாங்கிட்டாரு வேய் இந்த காந்தி.நம்மள ஏமாத்திப்புட்டாருவே’ என்னும் வக்கீல் ஜனார்த்தனத்தின் குரல்மேல்தான் சுந்தர ராமசாமிக்கு முதன்மை விமர்சனம். மூத்தபிள்ளைவாள்களின் கையில் இருந்து ஜனார்த்தனங்களின் கைக்கு புளியமரத்தடி வந்து சேர்ந்ததன் கதை இது. புளியமரம் இல்லை, அந்த பெயர் மட்டும்தான்

இந்நாவலில்தான் சுந்தர ராமசாமியின் தன்னியல்பான மலர்தல் முழுமையாக நிகழ்ந்திருக்கிறது. அவருடைய பகடி, புறவுலகைக் கூர்ந்து பார்க்கும் அவருள் இருக்கும் அழியாச்சிறுவன், மனிதர்கள் மேல் பெரும்பிரியம் கொண்ட சுரா என்ற மாறாத இடதுசாரி. எங்கோ ஒருபுள்ளியில் சிந்தனை கடந்த ஒன்றை அகம் சென்று தொடும்போது எண்ணையில் தீ பற்றிக்கொள்வது போல அதை சென்றடையும் கவிஞர்.

ஒரு புளியமரத்தின் கதை- சுந்தர ராமசாமி வாங்க

முந்தைய கட்டுரைஇங்கே யார் நாம்?
அடுத்த கட்டுரைஇலக்கியமும் தேர்வுகளும்