புத்தனாகப் போகிறவன்
அன்பின் கரங்களிலிருந்து
விடுவித்துக்கொண்டு
அடர்கானகம் புகுந்தான்.
ஒரு இறுகிய முஷ்டி
ஒரு கணம் திறப்பது போல
திறந்து
அறிவின் வனம்
அவனை மூடிக்கொண்டது.
அவன் பின்னால்
அவனை
திரும்ப
அழைக்கும் குரல்கள்
கேட்டுக்கொண்டே இருந்தன.
தாயின் குரல்.
தந்தையின் குரல்.
காதலின் குரல்.
மகளின் குரல்.
அவன் தடுமாறினான்.
அவன் கண்ணீர்த்துளிகள்
காட்டு மலர்களைக் கருக்கின.
அவன் தளர்ந்து
ஒரு நதியோரம் அமர்ந்தான்.
அழுதான்.
அவன் அருகே யாரோ அமர்ந்தார்கள்.
ஒரு வன்புலி.
ஆனால் அதற்கு மனிதக்கண்கள் இருந்தன.
அது புழையில்
தன் உருவத்தைப் பார்த்தபடியே
நெடு நேரம் அமர்ந்திருந்தது.
பிறகு அவன் பக்கம் திரும்பி
தன் கைகளைக் காண்பித்தது.
“நீ ஏன் அழுகிறாய்?
இன்னும் அறியவில்லையா நீ?
நகங்களை நீட்டும்முன்பு
புலியின் கை போல்
மென்மையானதொன்று
புவிமேல் கிடையாது”
போகன் சங்கர்
அண்மையில் எழுதப்பட்ட மிகச்சிறந்த தமிழ்க்கவிதைகளில் ஒன்று இது. என்றும் எங்கும் கவிதையின் முதன்மை அறைகூவல் மானுடனின் என்றுமுள தேடல்களையும் தத்தளிப்புகளையும் அவற்றின் விளைவான சிந்தனைகளையும் கொள்கைகளையும் தரிசனங்களையும் தன் அழகியலினூடாக எதிர்கொள்வதே. நாமறிந்த மகத்தான உலகக் கவிதைகளெல்லாம் அவ்வகைப்பட்டவையே. கவிஞன் ஞானியின், தத்துவ அறிஞனின் அருகமரும் தருணங்கள் அவை. தமிழ்ப்புதுக்கவிதையிலேயே அத்தகைய அரிய படைப்புகளின் ஒரு தொகை உள்ளது.
ஆனால் நம்மைச்சுற்றி எழுதப்படும் கவிதைகளில் மிகப்பெரும்பாலானவை மிகமிக எளிமையான அன்றாட உணர்வுகளால் ஆனவை. உறவும் பிரிவுமென, அறிதலும் மயக்குமென இங்கே நடந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை திரும்ப நமக்கே சொல்பவை. அறிந்தவற்றை அவற்றில் கண்டுகொண்டு, ஆம் நானுமறிவேன் என்று சொல்வதையே இங்கே எளிய கவிதைவாசகர் கவிதையனுபவமென அடைந்துகொண்டிருக்கிறார்கள். உச்சங்கள் என எழும் கணங்களை அடையும் கவிதைகள் அரிதாகிக்கொண்டிருக்கின்றன. மெய்மைநாட்டத்தையும் மெய்மையைத் துறத்தலையும், அறிதலையும் அறிதலின்மையில் அமைதலையும் முன்வைக்கும் ’சற்றே ஆழ்ந்த’ கவிதைகளை எப்போதோதான் வாசிக்க இயல்கிறது.
ஏனென்றால் வாசகர் அறிவை அல்ல, கவிஞனிடமிருந்து தங்கள் அறிதலுக்கொரு சான்றை விரும்புகிறார்கள். அறிந்ததை அறிவதென்பது அறிவல்ல, பலசமயம் அது அறிந்தவற்றைக் கொண்டு கவசங்கள் செய்து அறிதலை தடுத்துக்கொள்ளும் முயற்சிதான். எந்த இலக்கியப்படைப்பும் நாம் சற்றுமறியாத ஒன்றைச் சொல்லப்போவதில்லை. நாம் அறிந்த துளியை பெருக்கி மலையென நிற்கச்செய்வதே இலக்கியத்தின் வழி. நம் புறம் அறிந்தவற்றில் இருந்து நம்மை நம் அகமறிந்தவற்றை நோக்கி படைப்புகள் கொண்டுசெல்கின்றன. அவற்றை உணரும் கூருணர்வு கொண்ட வாசகர் சிலரே எச்சூழலிலும் இருக்க இயலும். ஆகவே பெருவாரியானவர்கள் விரும்புவது ஒருபோதும் கவிதையென ஆவதில்லை. கவிதை ஒரு சூழலின் பொதுரசனையின் எல்லைக்கு நீடுதொலைவு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வழிகாட்டி விண்மீன்.
கவிதையின் மிகப்பெரிய தடை அன்றாடமே. நாம் அனைத்தையும் அன்றாடப்படுத்தியிருக்கிறோம். அனைத்தையும் புழக்கப்பொருளாக ஆக்கிவிட்டிருக்கிறோம். அன்றாடத்தில் இருந்து கவிதை விலக முடியாது. ஏனென்றால் அதன் வேர் உலகியலில் உள்ளது. இங்கே இன்று என்பதே எந்த மகத்தான கவிதைக்கும் தொடக்கம். இங்கே இன்று என்பதில்லை என்பதனாலேயே மீபொருண்மைக் கவிதைகள் [Metaphisical Poetry ] ஒரு படி கீழானவை என விமர்சகர்களால் கருதப்படுகின்றன.
ஆனால் அன்றாடத்தை அன்றாடத்தில் இருந்து எழுந்து நின்று நோக்கவில்லை என்றால் கவிதை நம் சூழலில் ஒலிக்கும் பலநூறு குரல்களில் ஒன்றென ஆகிவிடும். கவிதையின் சிறப்பென்பதே அது பிறிதொன்றிலாத தன்மை கொண்டிருத்தல்தான். அடிக்கோடிடப்படுகையில் மட்டுமே சொற்கள் கவிதையாகின்றன. தனித்து ஒலிக்கும்போது மட்டுமே கவிதையின்மேல் அர்த்தங்கள் படியத் தொடங்குகின்றன. எளிய கவிதைகள் சலிப்பூட்டுவது அவற்றைப்போல பிற பல உள்ளன என்பதனால்தான். எளிய கதை, எளிய கட்டுரை சலிப்பூட்டுவதில்லை. தனித்தன்மை அற்ற கவிதை கவிதையற்ற கவிதையே.
இக்கவிதை என்றுமுள புதிர் ஒன்றை எதிர்கொள்கிறது. அன்பென்றும் அறிதலென்றும் நாமறியும் இரு மகத்துவங்களும் ஒன்றின் மகத்துவத்தை இன்னொன்று கிழித்துக்காட்டும் விளையாட்டில் இருக்கின்றன.
[புலிப்பாணி, நான் இக்கட்டுரைக்குப் போட்ட தலைப்பு]