வேதாளம்- கடிதங்கள்-1

வேதாளம் [சிறுகதை]

அன்புள்ள ஜெ

வேதாளம் கதையை வாசிக்கும்போது ஒன்று தோன்றியது. நாம் பல இளைஞர்களின் புதிய படைப்புகளை வாசிக்கிறோம். அவற்றில் நமக்கு பல புதிய கோணங்கள் கிடைக்கின்றன. ஆனால் மாஸ்டர் டச் என ஒன்று உண்டு. அனாயாசமாக விழும் வடிவமும் ஃப்ளோவும்தான் அது. எழுதுவதுபோலவே தோன்றாமல் எழுதிவிடுவது. எங்கும் பிரயத்தனமே தெரியாமலிருப்பது. அப்படிப்பட்ட கதை வேதாளம். அதில் பெரும்பாலும் உரையாடல்கள்தான். கதை சரளமாகச் செல்கிறது. ஆனால் அந்த சூழல், அந்த கதாபாத்திரங்கள், அந்த நிலம். அங்குள்ள மக்களின் பண்பாடு எல்லாமே தெரிகிறது. டீக்கடை வைத்திருக்கும் பெண்ணின் தெனாவெட்டும் நையாண்டியும் அவளைப்பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறது. பல வரிகளில் வெடிச்சிரிப்புடன் வாசித்து முடித்தேன். அதென்ன ரப்பர் மரமா என்ற வரியை நினைக்க நினைக்க புன்னகைதான்.

வேதாளம் என்பது என்ன? போலீஸுக்கு அது துப்பாக்கி. துப்பாக்கி என்பது அரசாங்கம். பிள்ளைவாளின் வார்த்தைகளில் சொல்லப்போனால் மேலே இருந்து தலைமேல் பேளுகிறவர்கள். அர்த்தமில்லாத அதிகாரம். ஆனால் அவருக்குத்தான் அதில் அர்த்தம் இல்லை. மேலிடத்தில் இருப்பவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியும். அவர் தோளில் தொங்கும் வேதாளம் அது. இன்னொரு வேதாளத்தை கூட்டிக்கொள்கிறது. மொத்த அதிகாரமும் அஸ்திவாரக்கல்லின்மேல் ஏறி அமர்ந்திருக்கிறது.

எம்.பாஸ்கர்

***

அன்புள்ள ஜெ,

வேதாளம் ஒரு சரளமான அழகான சிறுகதை. என்ன நடக்கப்போகிறது என்றே சொல்லப்படவில்லை. ஆசிரியர் எங்கே என்றே தெரியவில்லை. உரையாடல்கள்தான். செய்திகளே சொல்லப்படாத உரையாடல்கள். ஆனால் அதன் வழியாக மொத்தக்கதையுமே உருவாகி வருகிறது. உரையாடலிலேயே எல்லா கதாபாத்திரங்களையும் பார்த்துவிட முடிகிறது. குறிப்பாக தாணுவின் கதாபாத்திரம். அப்பாவியான குற்றவாளி. இதயநோய் அவனை குற்றவாளியாக ஆக்குகிறது. பிள்ளைவாள் போலீஸிலும் அவன் திருட்டிலும் சிக்கிக்கொள்கிறார்கள். வேதாளம் என்பது என்ன? அவரவர் தோள்மேல் தொங்கிக்கிடக்கும் வாழ்க்கை அல்லவா?

ராம்குமார். எஸ்.

முந்தைய கட்டுரைஸ்ரீராகமோ- கடிதம்
அடுத்த கட்டுரைபுலிப்பாணி