வேதாளம் – கடிதம்

வேதாளம் [சிறுகதை]

அன்பு ஜெ,

கடந்த வருடம் விக்ரமாதித்யனோடு முடிந்தது என்றால் புத்தாண்டு வேதாளம் சிறுகதையோடு ஆரம்பித்தது. வெடிச் சிரிப்புடனேயே தான் கதையை வாசித்தேன். இந்த கதாபாத்திரங்கள் எல்லாருமே என் புனைவுலகத்தில் மிகத்துலக்கமாக துலங்கி வருவதால் இப்பொழுதெல்லாம் அவர்களின் சிறு அசைவுகள், உணர்வுகள், பேச்சுமொழியின் ஒலி, தொனி ஆகியவையையும் துல்லியமாக என்னால் காண முடிகிறது. சடாட்சரத்தின் மொழியின் வழி அவனது உடல்மொழியையும், சிந்தனை ஓட்டத்தையும் பின் தொடர முடிகிறது.

பாயிண்ட் த்ரீ நாட் த்ரீ என்ஃபீல்டை வேதாளமாக சித்தரிக்க ஆரம்பித்து அதை மரபின் குறியீடாக விலக்க முடியாததன் குறியீடாக நீங்கள் சொல்லிக் கொண்டு வந்ததை பார்த்துக் கொண்டிருந்தேன். மெல்ல மெல்ல திருடன் ஒரு வேதாளமாக மாறும் ஒரு தருணத்தை நோக்கி கதை செல்வதாகப்பட்டது. இறுதியில் அவன் பிணமாகி வேதாளமாகி நின்றிருந்த தருணம் கதையில் ரைஃபிளைப் பற்றிச் சொன்னதையெல்லாம் மீள்வாசிப்பு செய்தேன்.

வேதாளத்திற்கு நிகராக இங்கு விக்ரமாதித்யனும் சடாட்சரத்தின் வழி சொல்லப்படுகிறான். ”நீ என்ன விக்ரமாதித்யனாவே?” என்பதிலிருந்து “அவனாவது காடாறுமாசம் நாடாறுமாசம்… ஏலே நமக்கு எப்பமும் காடுல்லா?” என்பது விக்கி அண்ணாச்சியைத்தான் நினைவுறுத்தியது.

ஒரு பக்கம் சடாட்சரத்தின் வழி உலகியலையும், மரபைப் பிடித்துக் கொண்டிருப்பவனாகவும், அதிகாரத்தை வியந்தோதுபவனாகவும், அன்றாடங்களில் சிக்கிக் கொள்பவனாகவும், பகடியும் கொண்டவனாக “விக்ரமாதித்யன்” பிம்பம் காட்டப்படுகிறது. “அது எப்பமும் அப்டியாக்கும். பூமிதாங்குத ஆமையாக்கும் கான்ஸடபிளுன்னு சொல்லப்பட்டவன். அவனாக்கும் கடைசி. அவனுக்க மேலேதான் அம்பிடுபேரும் இருந்து பேளுவாங்க…” அத்தகைய அழுத்தமான வாழ்க்கை. ஒரு வகையில் திறமையான கச்சிதமான வாழ்க்கை.

திருடுவது ஒரு கலை என்பார்கள். அதுவும் தாணப்பனின் திருட்டு என்பது ஒரு சுவாரசியமானது. அவன் கலைஞன், ரசிகன், வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்பவன். திருடனின் வழி எழுந்து வந்த வேதாளத்தின் சித்திரம் இப்படி இன்னொருபுறம்.

//மீண்டும் வந்த பாதையை பார்த்தார். அவ்வளவு தூரம் தூக்கிக்கொண்டு மேலேற முடியாது. தூரம் கூடுதலென்றாலும் இறங்குவது எளிது. தூக்கிக்கொண்டு மெல்ல மெல்ல இறங்கி தார்ச்சாலையை அடைந்தால் யாரையாவது பார்க்கமுடியும்.// என்ற இறுதி வரிகளும் கூட வெளிச்செல்லலா வீடு திரும்புதலா என்று  வியக்க வைக்கும் நம்பியை நினைவுபடுத்தியது.

இறுதிச் சித்திரத்தில் ஏனோ விஷ்ணுபுர விழாவில் பேசிய சோ தர்மன் ஐயாவின் உரையும் உங்கள் உரையும் நினைவிலெழுந்தது. கவிஞர் விக்ரமாதித்யனை வேதாளமாகத் தூக்கிச் சுமப்பவர்கள், அவர் தூக்கி சுமக்கும் வேதாளமான விடயங்கள், மனிதர்கள் என சித்திரம் விரிந்தது.

“அலைகடல் நடுவண் ஓர் அனந்தன்
மலையென விழி துயில் வளரும் மாமுகில்”

என்ற கம்பனின் வரிகள் நினைவிற்கு வந்தது. அதையொட்டி நண்பர்களுடன் செய்த சிறு விவாதமும் நினைவிலெழுந்தது. அரிதுயில்/யோக நித்திரை நிலையை மையமாகக் கொண்டால் அறிந்து இருக்கும் நிலையை ஒரு முனையாகவும் அறிதல் ஏதுமில்லாது துயிலும் நிலையை இன்னொரு முனையாகவும் கொள்ளலாம். இதை நான் உலகியல் எனத் திகழும் ஒரு முனைக்கும், கலையின் மறு முனையில் மதுரத்தின் உச்சத்தில் பித்து நிலையில் இருக்கும் இன்னொரு முனையையும் ஒப்பிட்டுக் கொண்டேன். இவை இரண்டுக்குமிடையேயான ஊசலாட்டத்தில் இருந்தால் மட்டுமே நிதர்சன வாழ்க்கையில் தொடர்ந்து செயலாற்ற முடியும். இதை நீங்கள் எப்போதுமே சொல்லிக் கொண்டு வருகிறீர்கள்.

//”ஒருத்தனுக்கு தண்டனை குடுக்கணுமானா இன்னொருத்தனுக்க பொணத்தோட அவனை சேத்து கட்டி தூக்கி ஆத்திலே போட்டிருவாங்க. அவன் பொணத்தோட நீந்தி கரைசேந்தா தப்பிச்சிடலாம்…”// என்ற வரிகளிலும் கூட இதையே கண்டேன். வாழ்வின் கரை சேருவதற்கு இந்த ஊசலாட்டம் அவசியம்.

கலையின் மதுரத்தின் உச்சத்தில் சடாட்சரத்தின் வரிகளான “சோறு திங்கனும்லா, சாவ முடியாதுல்லா” என்ற வரியே நம்மை இயக்க முடியும். ஒரு கால் உலகியலில் இருக்க வேண்டுமென எடுத்துக் கொள்கிறேன். இந்த வருடத்தின் இனிமையான ஆரம்பம். அருமையான கதை ஜெ. நன்றி

பிரேமையுடன்

இரம்யா.

முந்தைய கட்டுரைஆயிரம் ஊற்றுகள் -கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- சிவராஜ்