ஸ்ரீராகமோ- கடிதம்

ஸ்ரீராகமோ- சினிமாவில் இருந்து மேடைக்கு

அன்புள்ள ஜெ,

இன்று நான் உங்கள் பதிவை வாசித்தேன். தங்களுடன் பேசியதும் நினைவில் வந்தது. இசையமைப்பாளர் சரத் அவர்களின் மலையாள பாடல்கள் ரசித்தும், ஆர்வத்துடனும்  கேட்டிருக்கிறேன்.  சங்கீதத்தில் உள்ள கடினமான பிரயோகங்களும் மற்றும் புதுமையும் தனது இசையமைப்பில் முயற்சிக்கும் இவரை என் தந்தை “ராட்சசன்” என்று குறிப்பிடுவார். இவர் மெட்டுக்களை சங்கீதப் பயிற்சி இல்லாமல் பாடுவது கடினம் என்பதால் எல்லோராலும் பிரபலமாக பேசப்படவில்லை. தேவதாசி படத்தில் உன்னிகிருஷ்ணன் பாடிய “சுதா மந்த்ரம்” மற்றும் மேகதீர்த்தம் படத்தில் சரத் பாடிய “பாவயாமி பாடும் எண்டெ”  பாடல்களில் சைத க்ரஹபேத பிரயோகம் உதாரணங்களாக சொல்லலாம்.

கிரகபேதம் என்பது சம இடைவெளிகள் உள்ள சுரங்களால் ஆன ராகத்தில் செய்யக்கூடிய சுரபேதம். பழைய தமிழ் இசை முறையில் இதை பண்ணு பெயர்த்தல் என்றும், ஐரோப்பிய இசை முறையில் மாடல் ஷிப்ட் (model shift or modes in scales) எனலாம்.  இசைஞானி இளையராஜா அவர்கள் பல பாடல்களின் இடையிசையில் கிரகபேதம் செய்திருப்பார். ஆனால் சரத் பாட்டின் மெட்டில் அதை செய்திருப்பார். இவை அல்லாது, சரத் இசை அமைப்பில் ஒரு பரிசோதனை முயற்சி இருக்கும். தேவதாசி  படத்தில் யேசுதாஸ் பாடிய “சலல் சன்சல சிலம்பொலியொ” அதற்கு ஒரு உதாரணம்.  பாவனி ராகத்தில் அமைத்திருப்பார். இசைஞானி இளையராஜா  குணா படத்தில் அமைத்த  பார்த்த விழி பார்த்த படி’ பாடலுக்கு  பிறகு வந்தது. சரத் அமைத்த இந்த பாடல் அமைப்பும் அதன் சுர பிரயோகமும் மிகக் கடினமானவை.

இப்படி பரவலாக அறியப்படும் இவர், எளிமையாக மனதில் இறங்க கூடிய இசையும் அமைத்துள்ளார். இந்த பாடல் அவற்றில் ஒன்று.

சென்ற வருடம் கோவிட் சூழலில் இவர் செய்த பேஸ்புக் காணொளியில் இந்த பாடல் உருவானதைப் பற்றி பேசி உள்ளார். இயக்குனர் டி கே ராஜீவ் குமார் இந்த பாடல் காட்சியை பற்றி  இவரிடம் இவ்வாறு கூறினார் – “நாயகனின் குடும்பத்தின் அன்னியோனியத்தை காட்டும் காட்சி, அதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நெடுமுடி வேணுவும் வருவார். அவர் ஒரு சங்கீத பிரியர்”.  இதை மனதில் வைத்து சரத் அக்காலத்தில் கேரளத்தில் மிகவும் கேட்கப்பட்ட “பக்கல நிலபடி” எனும் தியாகராஜ கீர்த்தனையின் ராகமும் மற்றும் தாளத்தை வைத்து இந்த பாடலை அமைத்தார். இந்தப் பின்புலத்தை வைத்துப் பார்த்தால் பின்னணி இசையொழுக்கில் வரும் பக்க வாத்தியங்கள் கர்நாடக சங்கீதத்தில் வரும் ஜதிகளை தான் மேற்கோள் காட்டி உள்ளன.  திரு யேசுதாசும் மெட்டை பாராட்டி மிக உற்சாகமாய் பாடினார். பின்னர் சரத் இடம் காட்சிப்படுத்தப்பட்டது சுமார் என்று வருந்தினார்.

ஆனால் அதை பின்னணி இசை இல்லாமல்  ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் பாடியதை கேட்டபோது தான் பாடல் வரிகள் என்னுள் ஆழ்ந்த உணர்வை ஏற்படுத்தி மனதை மலர செய்தது. மீண்டும் மீண்டும் இவ்வாறு கேட்கும்போது “ப்ரணயம்” எனும் மலையாள சொல் மனதை நிரப்பியது.

நம் மனதிற்கு இனியவர்களோடு கழித்த அந்த நாட்கள், பேசிய தருணங்கள், சொல் இன்றி நெடுநேரம் நடந்த பாதை, அந்த சூழல் இவை எல்லாம் மனதை நிரப்பி என்னை ஓர் இறகாய் காற்றில் மிதக்கச் செய்தது. இத்தகைய வாழ்வின் நுண்ணிய தருணங்களை மிக இயல்பாகவும், அழகாகவும் வர்ணிப்பது மலையாளப் பாடல்களின் தனிச் சிறப்பு. இவற்றை கடந்த கால ஏக்கத்தை விட என்றும் மலரும் நினைவுகள் என்று சொல்வதே சரி என்று தோன்றுகிறது.

அதை ஹரீஷ் சிவராமகிருஷ்ணன் பாடிக்காட்டி உள்ளார். ஹரீஷ் பாடியபோது கரகரபிரியா ராகத்தில் அமைந்த இன்னொரு கீர்த்தனையை அகம் மீட்டி எடுத்தது. டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா பாடிய “பேரிடி நின்னு பெந்சினவாரெவரெ (பெயர் இட்டு உன்னை வளர்த்தவர் யாரோ)” எனும் தியாகராஜ கீர்த்தனை. சிறு வயதிலிருந்து கேட்ட பாடல். எஙகள் வீட்டில் உள்ள எல் பி ரெக்கார்டில் கேட்டவை. அந்த பாடல் மெட்டு அமைப்பு இந்த ப்ரணயத்திற்கு மிக பொருத்தமானது என மனம் சுட்டிகாட்டியதும் கீர்த்தனத்தின் பொருளை புரிந்து கொள்ள முயன்றேன். பிறகு தோன்றியது, ராமன் மீது பக்தியில் தொய்ந்திருக்கும் ப்ரணயம் தான் அது!

ப்ரணயத்தில் தோய்ந்திருந்தது இன்றைய நாள் !

மிக்க அன்புடன்,

கணேஷ்

***

Youtube Reference Links

Sharreth FB Session

Peridi Ninnu – L P Record version

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- லோகமாதேவி
அடுத்த கட்டுரைவேதாளம்- கடிதங்கள்-1