விஷ்ணுபுரம் பதிப்பகம்
அன்புள்ள ஜெயமோகன்,
புனைவு களியாட்டத்தில் துளி சிறுகதையை வாசித்தேன். ஒரு வரியில் அக்கதையை சொன்னால் “நாமெல்லாம் ஒன்று ஆனா வேறு வேறு, வேறு வேறு ஆனா ஒன்று”
பணிக்காக 2016 இல் சிங்கப்பூர் சென்றிருந்தேன். ஒருமுறை அங்கிருந்த அறிவியல் மையத்தில் டார்வினின் Natural Selection பற்றிய டாக்குமெண்டரி பார்த்தேன்.அதன் முடிவில் ஒரு காட்சி வரும். எல்லா உயிரினங்களும் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.அன்று உணர்ந்தது We are all connected. தேடியபின் அதன் டிரைலர் யூடூபில் கிடைத்தது. https://www.youtube.com/watch?v=KcwSiCVNIJQ
2019 ஈரோடு விவாத அரங்கில் மனதின் நான்கு அடுக்குகள் பற்றி சொன்னீர்கள்.ப்ரக்ஞை, ஸ்வப்னம்,சுஷுப்தி,துரியம். அன்று எனக்கு பெரிதாக புரியவில்லை.உங்கள் தளத்தில் பல பதிவுகளை படித்தபின் ப்ரக்ஞை மற்றும் துரியம் ஓரளவு புரிகிறது.இன்று உணரமுடிகிறது நாம் எப்படி இணைக்கப்பட்டுளோம்? நாம் துரியத்தில் இணைக்கப்பட்டுளோம். பிரம்மத்தின் ஒரு துளி. அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு துளி.ஒன்றான துளி, வெவ்வேறாக வளர்ந்த துளி. துரியத்தை உணரத்தானே ஞான மார்க்கம், பக்தி மார்க்கம்,கர்ம மார்க்கம் நமக்கு வழங்கப்பட்டது.இதில் பக்தி மார்க்கம் இறுதியில் அடையப்பட்டதாக இருக்கவேண்டும்.அப்படியென்றால் மனித வரலாற்றின் பெரும்பான்மையான மக்களுக்கு பயன்படும் பெரும் கண்டுபிடிப்புகளில் பக்தி மார்க்கமும் ஒன்று.ஞான மார்க்கத்தையும், பக்தி மார்க்கத்தையும் மின்சார விளக்கை வைத்து புரிந்துகொள்கிறேன்.இருவருக்கும் ஒளி தேவைப்படுகிறது. முதலமானவர்க்கு அதன் பின்னுள்ள தத்துவமும் வேண்டும், இரண்டாமானவருக்கு அதை பயன்படுத்தும் அனுபவ அறிவு மட்டும் தேவைப்படுகிறது.ஒளிதான் இலக்கு. விலங்குகளுக்கு அது வாசனை மார்க்கம்.கோபாலகிருஷ்ணனும், கொச்சுகேசவனும் தங்களை வேறுவேறாக உணர்கிறார்கள். கருப்பன் அதை முகர்ந்து விட்டான். இருவரையும் ஒன்றாக்க துரியத்தின் ஒருதுளியை இருவர் மீதும் தெளிக்கிறான். இருவர் மனதும் அதை உணர்ந்து கொள்கிறது.இதேதான் மனிதர்களுக்கும்.சாதியிலும்,மதத்தாலும் சண்டைபோட்ட அவர்கள் கண்ணாம்வீட்டு சரோஜாவின் பழைய நினைவால் ஒன்றென உணர்கிறார்கள்.
கதைசொல்லியின் அப்பாவும், தங்கையா நாடாரும் தங்கள் சாமிக்காக சண்டைபோட்டாலும் அந்தோணியாருக்கு வேண்டிக்கொள்கிறார்கள்.இந்த மனதை என்னால் அப்படியே உணரமுடியும். நான் ஏழாவது அல்லது எட்டாவது படிக்கும்போது என் தம்பி காணாமல் போய்விட்டான். உண்மையில் அவன் காணாமல் போகவில்லை.எங்கள் ஆத்தா(அம்மாவின் அம்மா) அவனை திட்டிவிட்டதால் அருகிலிருக்கும் அவன் நண்பன் வீட்டுக்குச் சென்றுவிட்டான். நாங்கள் பயந்து தேட ஆரம்பித்துவிட்டோம். அவனை தேடும் போது இந்து மதத்தில் பிறந்த நான் என் இஷ்டதெய்வங்களையும், ஏசுவையும், அல்லாவையும்,புத்தரையும், மஹாவீரரையும் வேண்டிக்கொண்டேன். அன்று என் மனதில் இருந்தது இவை மதங்கள்.அவர்கள் அந்த மதத்தின் தெய்வங்கள். அத்தருணத்தில் தம்பியின் அண்ணனாக எனக்கு தெரிந்த தெய்வங்களெல்லாம் அவனை காத்தருளட்டும் என்று மட்டுமே நினைத்தேன். அத்தனை தெய்வங்களும் எனக்கானது என்றுணர்ந்த தருணம்.
ஒருநாள் தம்பியிடம் கேட்டேன். மனிதனுக்கு கடவுள் முக்கியமா? மனிதன் முக்கியமா?. அவன் கடவுளென்று சொன்னான். நான் தர்க்கத்தோடு, உதாரணம் கொண்டு மனிதன்தான் முக்கியமென சொன்னேன். இன்றும் மனிதனுக்கு மனிதன் தான் முக்கியம்.மனிதன் முக்கியமென உணர கடவுள் முக்கியம் .
அன்புடன்
மோகன் நடராஜ்