தளிருலகு

நித்ய சைதன்ய யதியிடம் பின்னாளில் பல ஆண்டுக்காலம் பலரும் நினைத்து கேலிசெய்யும் கேனத்தனமான கேள்விகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். அவற்றில் முதன்மையானது அவர் குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடுவதைப் பற்றி நான் கேட்டதுதான். ”நீங்கள் துறவி, துறவிகள் குழந்தைகளிடமும் பெண்களிடமும் பழகக்கூடாது என்பது துறவின் நெறி அல்லவா?”

நித்யா “நான் குழந்தைகள் முன் வெறும் கிழவன்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். எனக்கு அவர் சொன்னது புரியவில்லை. வெவ்வேறு புகைப்படங்களில் அவர் குழந்தைகளுடனும் சிறுமிகளுடனும் விளையாடும் காட்சி உள்ளது. அப்போதிருக்கும் சிரிப்பும் உடல்மொழியில் வெளிப்படும் எடையற்ற தன்மையும் அவரிடம் வேறெப்போதும் இருப்பதில்லை.

பின்னர் துறவு பற்றி இன்னொரு ஆய்வாளர் விளக்கினார். “துறவு என்பது ஒன்று அல்ல. எல்லா மரபுகளுக்கும் துறவின் நெறிகளும் ஒன்றல்ல. சைவ வைராகிகளுக்கு பெண்களும் குழந்தைகளும் முழுக்கமுழுக்க விலக்கப்படவேண்டியவர்கள். உண்மையில் அவர்களுக்கு பொன்,வெள்ளி, அருமணிகள், பூஜைக்குரியவை அல்லாத மங்கலப்பொருட்கள் அனைத்துமே விலக்கப்படவேண்டியவைதான்”

”ஆனால் சைவ வைராகிகளின் நெறிகளை கடைப்பிடிக்கும் சைவ ஆதீனகர்த்தர்கள் பொன்பொருள் அனைத்தையும் கையாள்வதில் தடையில்லை என்றும் நெறியுள்ளது. அவர்கள் பொன்னால் ஆபரணம் அணிந்துகொள்கிறார்கள். பொன்னால் மூடி அவர்களை வழிபடுவதையும் காண்கிறோம்” என அந்த ஆய்வாளர் தொடர்ந்தார்.

“துறவுநெறிகள் என்பவை அந்த மெய்யியல் கொள்கையின் அடிப்படையில், அதற்குரிய பயிற்சிகளின் அடிப்படையில், அத்துறவிகள் ஆற்றவேண்டிய பணிகளின் அடிப்படையில் வகுக்கப்படுகின்றன. செயல்களுக்கேற்ப, தனிநபர்களுக்கு ஏற்ப விதிவிலக்குகள் அளிக்கப்படாத எந்த துறவுநெறியும் எங்கும் இல்லை.”

முழுமையான உலகியல் துறவு என்னும் கருதுகோள் மகாபாரதத்திலேயே இருந்தாலும்கூட அன்று அது மையமான போக்காக இருக்கவில்லை. மகாபாரத ரிஷிகள் மணம்புரிந்துகொண்டவர்கள், பலர் ஊனுணவு உட்பட அனைத்தும் உண்பவர்கள். முழுத்துறவை மையப்போக்காக நிறுவியவர்கள் சமணர்கள். பின்னர் பௌத்தர்கள். பௌத்த சங்கத்தின் நெறிகளே இன்று இந்து மத துறவியர் மடங்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவத் துறவியர் மடங்களுக்கும் மரபென வகுக்கப்பட்டுள்ளன.

அந்த துறவுநெறிகளுடன் பௌத்த மடங்களாகத் திகழ்ந்த அஜந்தா குகைகளில்தான் பேரழகிகளின் படங்கள் உள்ளன. அவற்றை வரைந்தவர்கள் பௌத்த துறவியரே என நம்பப்படுகிறது. அதை பலவாறாக விளக்கியிருக்கிறார்கள் என்றாலும் மிகச்சிறந்த விளக்கம் அவை உலகியலை கலையினூடாக உன்னதமாக்கிக் கொள்பவை என்பதுதான்.

பெண்ணழகு, பொன்னழகு, மலரழகு, நகர்களின் அழகு என இவ்வுலகில் நம்மைக் கவரும் அனைத்தும் கலையென மாறும்போது தூய கருத்துருவமாக ஆகின்றன. பொருள்வய அழகென அவை திகழும்போது கொள்ளவும், வெல்லவும் தூண்டும் விழைவுகளை உருவாக்குகின்றன. அந்த விழைவுகளை முற்றாக அகற்றி அவற்றிலுள்ள அழகை மட்டுமே முன்வைப்பவை அந்த ஓவியங்கள்.

கலையின் வழி அதுவே.   Sublimation. உன்னதமாக்கல். ஆகவேதான் கடுந்துயர் நமக்கு உலக அனுபவமென அமையும்போது அதை விலக்கவும் கடக்கவும் துடிக்கிறோம். ஆனால் இலக்கியமென, கலையென ஆகும்போது அதில் திளைக்கிறோம்.

அத்வைத மரபுகளில் வெவ்வேறு வகையான துறவுநெறிகள் உள்ளன. சில மரபுகள் முழுக்கமுழுக்க கலையையும் இலக்கியத்தையும் இசையையும் விலக்குபவை. உன்னதமாக்கல் நிகழ அனுமதிக்காமல் அவ்வண்ணமே உலகியலை அணுகுபவை. கலையிலக்கியத்தை அனுமதிக்கும் மரபுகளின் நெறிகள் வேறு. நாராயண குருகுலம் என்றும் கலையிலக்கியத்திற்கு இடமுள்ளது. அஜந்தா குகைகளைப் போல.

நித்யா பின்னர் குழந்தைகளைப் பற்றிச் சொன்னார். “நான் தூய இருப்பாக உணரும் தருணம் குழந்தைகளிடமும் மலர்களிடமும் அமைவதே. ஒவ்வொரு நாளும் மலர்களைப் பார்க்கும் வாழ்க்கையே உயர்ந்தது என எண்ணுகிறேன். குழந்தை என மலர் என வந்து நம் முன் நிற்பது பிரம்மத்தின் தூய தருணங்களில் ஒன்று”

“குழந்தையை உணர முதுமை தேவையாகிறது” என்று நித்யா சொன்னார். “இளமையில் நம்மை நாம் எனும் ஆணவம் நிறைந்திருக்கிறது. நாம் ஆற்றப்போகும் செயல்கள், நமது வெற்றிகள் நம் மேல் ஏறி அமர்ந்திருக்கின்றன. மெல்லமெல்ல காலம் நம்மை இறுக்கம்தளரச் செய்யும்போது நாம் குழந்தைகளைக் கண்டடைகிறோம். இங்கு ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மகத்தான நிகழ்வை கண்கூடாகக் காண ஆரம்பிக்கிறோம்”

அன்றும் அதை யோசித்திருக்கிறேன். உணர்ந்ததில்லை. இன்று, ஓர் இலக்கியவிழாவில், ஒரு பொது நிகழ்வில் குழந்தை ஒன்றை காண்கையில் உள்ளம் மலர்ந்துவிடுகிறது. இச்சொற்கள் எவற்றுக்கும் பொருளில்லை என்று அப்போது தோன்றிவிடுகிறது. குழந்தைகளின் உலகத்திற்குள் செல்வதைப்போல நிறைவென வேறொன்றும் தோன்றுவதில்லை.

குழந்தைகளின் உலகுக்குள் பெரியவர்கள் செல்வதற்கு முதன்மையான வழி என்பது பெரும்பாலும் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டிருப்பதுதான். குழந்தைகளுடன் நாம் ‘விளையாட’ ஆரம்பித்தால் நாம் குழந்தைகளை நம்மை நோக்கி இழுக்க ஆரம்பிக்கிறோம். குழந்தைகள் நம்மை கவரும்படி நடந்துகொள்ள ஆரம்பிக்கின்றன. இல்லையேல் நம்மை தொந்தரவுசெய்கின்றன. ஏனென்றால் அவை உண்மையிலேயே பெரியவர்களாக விரும்புகின்றன.

குழந்தைகள் உலகத்தை அறிந்துகொண்டே இருக்கின்றன. புத்தம்புதிய உள்ளம் உலகை அறியமுயல்கையில் ஒரு புத்தம்புதிய உலகம் பிறந்தெழுகிறது. அந்த உலகம் நமக்கு புதியது. அதற்குள் நுழைவதற்கு குழந்தைகளை வெறுமே கவனிப்பதே மிகச்சிறந்த வழி.

இந்தியப்பெருநிலத்தில் நான் சென்ற எல்லா ஊர்களிலும் குழந்தைகளைக் கையிலெடுத்திருக்கிறேன். நான் கற்பனையே செய்யமுடியாத எதிர்காலத்து இந்தியாவை தொட்டு எடுப்பதுபோல என்று நினைத்துக்கொள்வேன். எத்தனையோ முகங்கள் நினைவிலெழுகின்றன. பூட்டானில் நான் விளையாடிய சிறுவர்களுக்கெல்லாம் இப்போது குரல் உடைந்திருக்கும். லடாக்கில் நான் கையிலெடுத்து கொஞ்சிய அந்தப் பெண்குழந்தை ’பேமா’ இப்போது பள்ளிக்குச் சென்றுவிட்டிருப்பாள்

அந்த உலகின் விந்தைகள் எப்போதுமே எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் ஆட்கொள்கின்றன. நான் முன்பொருமுறை அ.முத்துலிங்கம் அவர்களுக்கு எழுதினேன், ‘குழந்தைகள், விலங்குகளின் இயல்புகளை எழுதத்தெரியாதவர் பெரிய கலைஞர் அல்ல’. எனக்கு பிடித்தமான பெருங்கலைஞர்களின் உலகில் வரும் குழந்தைகளை நான் மறந்ததே இல்லை. அவர்களே குழந்தைகளாக மாறி நின்றிருக்கும் வடிவங்கள் அல்லவா அவை? நித்யாவின் சொற்களில் சொல்லப்போனால் இமையமலையே கூழாங்கல்லாக மாறி நம் கைகளுக்கு வந்து சேரும் நிலை.

அன்று அதை வியப்புடன் கேட்டுக்கொண்டு ‘நான் குழந்தைகளைப் பற்றி எழுதியதே இல்லையே’ என்று சொன்ன அ.முத்துலிங்கம் பின்னர் தன் பேத்தி அப்சரா பற்றி அற்புதமான சித்திரத்தை தன் கதைகளினூடாக உருவாக்கினார்.

தமிழ்க் கவிஞர்களில் முகுந்த் நாகராஜன், ஆனந்த் குமார் இருவரும்தான் அழகான குழந்தைச் சித்திரங்களை கவிதையில் உருவாக்கியவர்கள். ஆனந்த்குமாரின் மகனை ஈரோட்டில் ஓர் ஓட்டலில் சந்தித்தேன். மாபெரும் கதைசொல்லி. தன்நடிப்புடன் உற்சாகமாக தன் உலகைப்பற்றிச் சொன்னபோது ஆனந்த்குமார் சிறியவராக மாறி அப்பால் விலகிவிட்டார்.

“நீ போன அங்கெல்லாம் பாம்பு இருக்குமே. என்ன பண்ணினே?” என்று நான் கேட்டேன். “நான் காலை விரிச்சு விரிச்சு நடப்பேன். கதவு தொறந்திருக்குன்னு பாம்பு நடுவாலே போயிடும்” என்று அவன் சொன்னான்.

எத்தனை மகத்தான புனைகதையிலும் ஆசிரியனுக்கு புனைவேது மெய்யேது என்று தெரிந்திருக்கிறது. அது ஒரு குறைதான். குழந்தைக் கதைசொல்லிகளின் உலகம் உண்மை மாயை என்பது அழியும் இரண்டின்மையை எய்திவிட்டிருப்பது.

முந்தைய கட்டுரைமழை தழுவும் காட்டின் இசை
அடுத்த கட்டுரைஅருட்செல்வப் பேரரரசன்- பேட்டி