டிப்டிப்டிப்- கோவர்தனன் மணியன்

டிப் டிப் டிப் வாங்க

அன்றோரு நாள் அதுலம் வகுப்பில் கவிஞர் என்றால் யாரென்று கேட்டபொழுது கவிஞர் ஆனந்த குமாரின் இளையமகன் அர்ஜுன் கிருஷ்ணா சொன்னான் “கவிஞர்னா போட்டோகிராபர்”.. இந்த கவிதையை வாசித்து பொழுது அவனது சொற்களே அலையடித்தது…

படக்கருவி முன் நின்றவர்
மொத்தமாய் மூடிவிட்டார்
தன்னையல்ல
பதிவு செய்யப்படும்
தன்னைப் பற்றிய
பதற்றம் அவருக்கு
தன்னில் எந்தக் கோணம்
மற்றவருக்கு தெரியப்போகிறதென
அவர் குழம்புகிறார்
நான் ஒரு
சிரிப்பை அழைத்தேன்
அது அவருள் முட்டிமோதி
தத்தளிக்கிறது
வாழ்ந்த தருணமென
கண்களில் மின்னிமறைகிறது
இனிய நாட்களாக
உதட்டில் அலைமோதுகிறது
அவருக்கோ
எதுவும் உறுதியாய் தெரியவில்லை
முகத்தில் ததும்புகிறது
அவரின் மொத்த வாழ்வும்
இப்போதே வெடித்துச்சிதறி
பலவண்ணப் பறவைகளாய்
பறந்துவிடும் என்பதுபோல்

 ஆனந்தகுமார் டிப்டிப்டிப் கவிதை நூலிலிருந்து….

அவ்வளவு கவிதைகளும் அவ்வளவு அழகு.அம்மும்மாவோடு சேர்ந்து மாத்திரைகளை சுற்றி பொதிந்திருக்கும் குமிழ்களை உடைத்துக் கொண்டிருக்கும் அந்த குழந்தை, அம்மும்மா என இரண்டு குழந்தைகள் தரும் சித்திரம் என கவிதைகளனைத்தும் வெகு பிரியமாயிருக்கிறது.

தான் தரப்போகிற பரிசை ரகசியமாய் பொத்தி வருகின்ற குழந்தை அதை ரகசியமாய் திறந்து பார்க்கின்றதாக கவிதை ஒன்று வரும். கவிதைகளும் அப்படித்தானோ? நாம் ரகசியமாய் பொத்தி வைத்திருக்கின்ற ஒன்றை ரகசியமாய் திறந்து பார்ப்பதை போல… ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகாலம் கல்லூரியில் வளர்ந்த மாணவர்களோடே எனது நாட்கள் நகர்கின்றது. ஒன்றைத்திரளாக வகுப்பில் அவர்களை உரத்த குரலின்றி கட்டுப்படுத்த இயலாது.மென்மையான வார்த்தைகளுக்கு அங்கு வரவேற்பு குறைவுதான். தனித்த ஒரு மாணவன் வேறு. ஆனால் அதுலம் முற்றிலும் வேறுமாதிரியானது ஒரு சின்ன சீறலான மூச்சு கூட குழந்தைகளை சுருங்கச் செய்து விடும். அதுலமும், கவிதைகளும், வாசிப்பும், இலக்கியமும் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என்றோ காலச்சக்கரத்தில் அரைபட்டு புழுதியென்றாயிருப்பேன்.

“அலை தீண்டிப் போன பின்பு அங்கே வானம் வந்தமர்கிறது” என்கிற கவிதையை வாசித்த பொழுதும் வானம் அங்கே வந்தமர்ந்தது. யதார்தத்தின் பேரழகு மிளிர்கின்ற கவிதைகள். கவிதை நூலின் அட்டையையும் கூட ஒரு கவிதையை போல வடிவமைத்திருக்கிறார்கள். அக்கறை, வடிவநேர்த்தி என வேறு எதையும் நிகர் சொல்லமுடியாத அளவில் நூலின் தரம், இருக்கிறது.

தன்னறம் நூல்கள் பெற

https://thannaram.in/buy/

அழகியல் நாணயத்தின் அடுத்த பக்கம் – டிப் டிப் டிப் – ஆனந்த் குமார் -தன்னறம் நூல்வெளி வெளியீடு

ஆனந்த்குமார் ‘அணிலோசை’- மயிலாடுதுறை பிரபு

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- கடிதங்கள் 10
அடுத்த கட்டுரைவேதாளம் [சிறுகதை]