தன்னறம் நூல்வெளிக்கான வேண்டுதல்…

பால்யகாலத்தில் நான் எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நேரில் சந்திக்க நேர்கையில், அவர் தன்னுடைய நண்பரொருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் குரலைக் கேட்க நேர்ந்தது. அப்போது சுந்தர ராமசாமி, “ஒரு புத்தகம் என்பது நூறு வருடங்கள் ஆயுள் கொண்டதாக இருக்கவேண்டுமெனில், அதற்குரிய நல்நேர்த்தியும் மெனக்கெடலும் அவசியம். படைப்புமுயற்சியில் மட்டுமல்ல, பதிப்புமுயற்சியிலும் நமக்குப் புதுமை தேவை, சமரசங்களற்ற புதுமை. தமிழ்ச்சூழலில் அந்த கவனம் எழவேண்டும்” என்றார். பதிப்புச்சூழல் குறித்த ஆழங்கள் அப்போது அறியாவிடினும்கூட, சுராவின் அந்த சொற்பிரயோகம் எனக்குள் வேர்விட்டு நின்றுகொண்டது.

நேர்மறையான கருத்துகளையும், செயலிலாழ்த்தும் தத்துவங்களையும், போற்றத்தக்க விழுமியங்களையும் சமகாலத்திய இளையமனங்களிடம் கொண்டுசேர்க்கும் நற்கனவில் முளைத்தெழுந்ததுதான் ‘தன்னறம்’ பதிப்பகம். அதேபோல, தமிழ்சூழலில் குழந்தைகளுக்கு வண்ணங்களாலும் கதைகளாலும் அமைந்த அற்புதமான ஓவியவுலகத்தை அறியச்செய்ய வேண்டும் என்கிற பெருவிருப்பத்தின் சிறுவெளிப்பாடே ‘தும்பி’ சிறார் மாத இதழ்.

படைப்புகளுக்கான உட்பக்க மற்றும் அட்டை வடிவமைப்பு, அச்சுக் காகிதத்தின் தேர்வு, அச்சின் தரம், தூதஞ்சலுக்கான புத்தகப்பெட்டகம் என ஒவ்வொரு படிநிலையிலும் தேர்ந்த நேர்த்தியைத் தேடித்தேடிக் கண்டடைகிறது தன்னறம் நூல்வெளி. இயன்றவரை இன்றளவும் இம்முயற்சியை சமரசமின்றி தொடர்ந்துவருகிறோம். அதற்கான இழப்புகள் வருத்தந்தருவதெனினும், நற்படைப்பின் முழுமைக்கு அதற்குரிய மூலப்பொருட்களை ஈந்தாக வேண்டும் என்ற எளியபுரிதல் இன்னும் அகம்விட்டு விலகவில்லை.

சிலசமயங்களில் ஒரு புத்தகம் உருவாகுவதற்கு ஆறுமாத காலம் வரைகூட நாங்கள் எடுத்துக்கொள்வதுண்டு. உதாரணமாக, சுதந்திரத்தின் நிறம் மற்றும் உப்புவேலி ஆகியவை அப்படி உருவானவையே. எண்ணிக்கையைப் பொறுத்தவரை மிகக் குறைவான நூல்களையே வெளியிட்டிருக்கிறோம். ஆனால், இந்த குறுகிய காலகட்டத்தில் தமிழ்ச்சூழலில் தன்னறத்திற்கு கிடைத்திருக்கும் நம்பிக்கை என்பது நாங்கள் வணங்கத்தக்க அளவிற்கானவை. பல புதிய முயற்சிகளை முயன்றுபார்த்து பரவலாக்குவதற்கான முன்தடமென சில சூழ்நிலைகளில் தன்னறம் அறியப்படுவதை தற்போதறிகிறோம்.

அண்மைக்காலங்களில், மிகக் குறைவான அளவு புத்தகப் பிரதிகளை அச்சுப்படுத்தும் POD (Print On Demand) அச்சுமுறை பெருகியிருக்கிறது. இது பல நெருக்கடிகளை எளிமைப்படுத்தியிருப்பது உண்மைதான். நூறு அல்லது இருநூறு என்றளவில் ஓர் புத்தகத்தின் மொத்தப்பிரதிகள் இம்முறையில் அச்சிடப்படுகின்றன. ஆகவே, சில வருடங்கள் கழிந்து அத்தகைய புத்தகங்கள் அச்சின்மை நிலைக்குச் சென்றுவிடுகிறது. புத்தகங்களை இருப்பில் வைத்துக்கொள்ளும் சவாலை பதிப்பகங்கள் ஏற்கத் தயங்குவதன்பொருட்டு சிலநூறு பிரதிகள் அச்சில் எஞ்சி வாசகர்களை அடைகிறது.

POD முறையில் புத்தகங்களை அச்சுப்படுத்தத் தயங்கி இன்றளவும் நாங்கள் ஆப்செட் முறையில் குறைந்தது ஒவ்வொரு புத்தகமும் ஆயிரம் பிரதிகள் என்றளவிலேயே அச்சுப்படுத்தி வருகிறோம். இந்தத் தயக்கத்திற்கு முக்கியக்காரணம், குறைந்த எண்ணிக்கையில் புத்தகத்தை அச்சுப்படுத்துவது ஏதோவொரு தப்பித்தலுணர்வை மனதுக்குத் தருவதால்தான். ஆயிரம் புத்தகங்களை அச்சடித்து, இரண்டு அல்லது மூன்றுவருட காலத்தில் வெவ்வேறு தளங்களிலுள்ள மனிதர்களிடம் அதை ஒப்படைப்பதற்காக அகமடைகிற ஓர் பொறுப்பேற்றலை என்றும் நாங்கள் தக்கவைத்துக்கொள்ள விழைகிறோம்.

அதற்குக் காரணம், அப்படி நாங்கள் அச்சுப்படுத்தி வாசகமனங்களிடம் கொண்டுசேர்ப்பித்த சில புத்தகங்கள், சிறிது காலகட்டத்திற்குப் பிறகு பொதுவெளியில் அதற்குரிய உள்ளடக்கம்சார் உரையாடலையும், சலனத்தையும் எழுப்புவதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம். ‘தன்மீட்சி’யும், ‘இன்றைய காந்திகள்’ மற்றும் ‘உப்புவேலி’யும் அண்மைய உதராணங்கள் எனச் சொல்லலாம்.

பாவண்ணன், ஜெயமோகன், அரவிந்த் குப்தா உள்ளிட்ட மூத்த ஆசிரியர்கள் பலரால், ‘சர்வதேச பதிப்பகங்களுக்கு இணையாக தமிழ்ச்சூழலில் தன்னறம் பதிப்பகம் தனது நேர்த்தியால் வளர்ந்து வருகிறது’ என்று வாழ்த்துப் பெறுகையில், மகிழ்வைவிட பொறுப்புமும் அச்சமுமே மிகுகிறது. தன்னறத்தின் ஒவ்வொரு நலம்விரும்பிகளும் முகநூலிலும், தனிப்பட்ட முறையிலும் இப்பவரை வாழ்த்துரைத்து வருகிறார்கள். இதுவரையிலான அத்தனை ஆசிச்சொற்களையும் இக்கணம் நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘விலையில்லா பிரதிகள்’ முன்னெடுப்பு என்பது தன்னறத்தின் இன்றியமையாத ஓர் ஆத்மச்செயல்பாடு. இன்றுவரை, தோராயமாக மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் விலையில்லா பிரதிகளாக வாசகர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் தமிழ்ச்சூழலில் இம்முயற்சி சாத்தியம்தான் என்பதற்கு இந்த முன்னெடுப்பு முன்னுதாரணமாக மாறியுள்ளது… இவ்வளவு விரிவாக ‘தன்னறம் நூல்வெளி’ குறித்த இப்பதிவு நீள்வதற்கு காரணமிருக்கிறது.

2022ம் ஆண்டிற்கான சென்னைப் புத்தகக் கண்காட்சியானது, நோயச்ச சூழ்நிலைகளின் பாதுகாப்புக் காரணங்கள் கருதி காலந்தள்ளி ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த இரண்டாண்டுகாலம் மிகவும் தொய்விலிருந்த பதிப்பகச்சுமைகளை இப்புத்தகக் கண்காட்சி ஓரளவு மீட்டெடுத்துவிடும் என்கிற நம்பிக்கை சற்று தளர்ந்திருக்கிறது. தன்னறம் நூல்வெளி வாயிலாக இப்புத்தகக் கண்காட்சிக்கு பத்து புதிய நூல்கள் அச்சுப்படுத்தும் செயல் கிட்டத்தட்ட நிறைவடையும் சூழலிலுள்ளது.

கடந்த புத்தகக் கண்காட்சியில் வெளியான ‘யதி: தத்துவத்தில் கனிதல்’ புத்தகத்தின் பலநூறு பிரதிகள் சேகரிப்புக்கிடங்கில் தேங்கிக்கிடக்கிறது. மேலும், தேவதேவன் கவிதைகளின் இரு பெருந்தொகுப்புகள் உள்ளிட்ட புதிய நூல்களையும், இருப்பிலிருக்கும் புத்தகங்களையும் புத்தகக் கண்காட்சி வாயிலாக நிறைய தோழமைகளிடம் சேர்ப்பிக்க இயலும் என்ற நம்பிக்கொண்டு இருந்தோம் நேற்றுவரை. ஆனால், ஜனவரி புத்தகக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்த பிறகு, கடன்சுமையின் பாரம் அழுத்தத் தொடங்கியிருக்கிறது. எப்படி இந்த இடர்காலத்தைக் கடக்கப்போகிறோம் என்று சத்தியமாகத் தெரியவில்லை.

ஆகவே, மீண்டும் நாங்கள் உங்கள் முன்பு எங்கள் கோரிக்கையை இறைஞ்சுதலாக முன்வைக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கிய ‘மீண்டெழ’ எனும் திட்டத்தின் நீட்சியை இவ்வாண்டும் செயல்படுத்துகிறோம். இத்திட்டத்தின்படி, வாசகத் தோழமைகள் தன்னறம் நூல்வெளியுடன் நிரந்தர உறுப்பினர்களாக இணைந்து, ரூ 3000 அல்லது ரூ 5000 தொகையை முன்கூட்டியே செலுத்துவது அவசியமாகிறது. இவ்வாறு முன்கூட்டியே தொகை செலுத்தும் நண்பர்கள் தன்னறம் நூல்வெளியின் சார்பாக ரூ 1000 அல்லது ரூ 2000 மதிப்புள்ள புத்தகத்தை கூடுதலாகப் பெறுவார்கள். அதாவது, ரூ 3000 செலுத்தும் நண்பர் ரூ 4000 க்கு புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். மற்றும் ரூ 5000 செலுத்தும் நண்பர் ரூ 7000 க்கு புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். தொகை செலுத்தி உறுப்பினரான ஒவ்வொருவரும் இரண்டு வருட காலத்துக்குள் தங்களுக்குரிய தொகைக்கான புத்தகங்களைப் பெற்றிருப்பார்கள்.

உதவிகோரலின் வழியாகவே இதுவரையில் தும்பியும் தன்னறமும் தன்னுடைய இருப்பை நீட்டுவித்து நகர்வதை கண்கூடாகக் கண்டுவருகிறோம். ஆகவே, இம்முறையும் உங்கள் முன்பாக இந்த கோரிக்கையை இறைஞ்சுதலாக முன்வைத்து காத்திருப்பதைத் தவிர உகந்த வழி ஏதுமில்லை எனக் கருதுகிறோம். உறுப்பினராகி இணைந்து தன்னறத்திற்கு செயல்பலம் தருகிற அத்தனை மனிதர்களையும் இக்கணம் நெஞ்சில்வைத்து வணங்குகிறோம். ஒரு பதிப்பகமாக தமிழ்ச்சூழலில் ‘தன்னறம் நூல்வெளி’ தரந்தாழாமல் செயலியங்கத் துணையிருங்கள்!

~

தும்பி /தன்னறம் வங்கிக்கணக்கு விபரங்கள்:

THUMBI

Current A/c no: 59510200000031

Bank Name – Bank of Baroda

City – Erode

Branch – Moolapalayam

IFS Code – BARB0MOOLAP (Fifth letter is “Zero”)

UPI ID – “thumbi@upi “

Gpay – 9843870059

உதவிபகிர விரும்புகிற தோழமைகள் மேற்கண்ட வங்கிக்கணக்கில் தொகை செலுத்திவிட்டு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9843870059 என்ற தொலைபேசி எண்ணிற்கோ உங்களுடைய முழுமுகவரியையும், பரிவர்த்தனைத் தகவல்களையும் அனுப்பவேண்டுகிறோம்.

~

கரங்குவிந்த நன்றிகளுடன்,

சிவராஜ்

தன்னறம் நூல்வெளி

9843870059 I www.thannaram.in

முந்தைய கட்டுரைஎழுத்தாளனும் பயணங்களும்
அடுத்த கட்டுரைவெண்முரசு ஒலிவடிவில்