விஷ்ணுபுரம் விழா, கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ,

தங்களுடைய விஷ்ணுபுரம் விருது விழா மின்னஞ்சலைக் கண்டவுடனேயே, வீட்டை விட்டுத் தப்பிக்கும் மகிழ்ச்சியில், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னேயே ரயிலில் முன்பதிவு செய்துவிட்டேன். தற்செயலாக பத்து நாட்கள் கழித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, காவியமுகாம் ஞாபகத்தில் டிக்கெட்டை மேட்டுப்பாளையம் வரை போட்டிருக்கிறேன். அங்கிருந்து ஊட்டி போவதற்காக. சரி, கோயமுத்தூரில் இறங்கிக் கொண்டால் போகிறது என்றால், விழாவிற்கு முதல் நாளே அங்கு வந்து சேருவதுபோல போட்டிருக்கிறேன். ஒருநாள் முழுதாகக் கையில். முக்குர்தி வனவிலங்குகள் சரணாலயம் செல்லலாமா? என்று கதிரிடம் கேட்டேன். அனுமதி கிடைப்பது மெத்தக் கடினமென்றார். குருவாயூர், திரிசூர் எங்காவது போகலாம் என்றால் ‘தொற்று’ச் செய்திகள் அதிகமாக இருந்தன. வேறுவழியில்லை, பலமுறை ‘பார்த்த’ ஊட்டிதான். ஒரு மாறுதலுக்காக இதுவரை பயணிக்காத மலைரயிலில் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் வர முன்பதிவு செய்து கொண்டேன். ஏறுவதற்கு ஆறுமணி நேரம், இறங்க மூன்று மணி நேரம்தான்.

ஊட்டிக்குப் பேருந்தில், பார்க்காத கோத்தகிரி வழியாக. வழக்கமாக பேருந்தில் ‘திம் திம்’  மென்று அதிரும் பாடல்ஒலி அன்று மென்மையாக ஒலித்தது ஆச்சரியமாக இருந்தது.  அதைவிட ஆச்சரியம் பக்கத்தில் இருந்தவர் பாடல் சத்தத்தைக் குறைக்கச் சொல்லி சத்தமிட்டது. பிறகுதான் கவனித்தேன், ரயிலில் போர்வை கிடையாதென்பதால் காதில் வைத்து நன்றாக அடைத்து விட்டிருந்த பஞ்சை எடுக்க மறந்திருந்தேன். அதனால்தான் எல்லாமே ‘அளவாக’க் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறது. பயணிகள் அநேகமாக எல்லோரும் உள்ளூர்ப் பயணிகள்தான். கோத்தர்கள், தோடர்கள், படுகர்கள். வட்டமுகம், உருண்டை மூக்கு எல்லோருக்குமே. படித்தால் அரசு வேலை கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன். வழியில் கோடப்பமந்து, மேல கோடப்பமந்து போன்ற ஊர்களைப் பார்த்தேன். ‘மந்து’ என்றால் கோத்தர்களின் குடியிருப்பு. ஒற்றைக்கல் அருகில் இருந்ததால் ‘ஒற்றைக்கல் மந்து’. அது பின்னால் ஆனது ‘ஒட்டக்க மண்ட்’. அது ‘ஊட்டி’ யும் ஆனது பிற்பாடு.(நன்றி: தியடோர் பாஸ்கரன்).
என்ன, இந்த முறை Rack & Pinnion (இந்தியாவில் ஊட்டி மற்றும் டார்ஜிலிங்கில் மட்டுமே உள்ளது) முறையில் இயங்கும் மலைரயில் அனுபவம் மறக்கமுடியாத ஒன்று. இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பாகப் பெற வேண்டிய சற்றே திகிலூட்டும் (நடுவே ஏழெட்டு குகைகள், வண்டிக்கு முன்னே பாறை விழுந்து ரண்ணிமேடு வரை மூன்று கிலோமீட்டர் பின்னோக்கிப்பயணம் என்று பல கூடுதல் திகில் தருணங்கள் அன்று) அனுபவம். இருநூற்றைம்பது சிறு, குறும் பாலங்கள், அதன் கீழே நாம் காணும் அதல விதல சுதல பாதாளங்கள். பேருந்துகளில் சென்றால் நாம் காண முடியாத காடுகள், அருவிகள், மலைச்சிகரங்கள், சரிவுகள், வெயிலில் பொன்னொளிரும் பச்சைப் பாலைவனங்களாய்த் தேயிலைத் தோட்டங்கள், சிற்றோடைகள், மேகக்கூட்டங்கள். எங்கு நோக்கினும் ‘வானகமே, இளவெயிலே, மரச்செறிவே’ என்று இருக்கிறது. ‘செல்’லில் படம் எடுக்காது கண்ணால் எல்லாவற்றையும் பருகி எடுத்தவர்கள் பாக்கியவான்கள். லவ் டேல், கேத்தி, அரவங்காடு, வெலிங்டன், குன்னூர்,  ரண்ணிமேடு, ஹில் குரோவ்,கல்லார் என்று ‘ஸ்டேஷன்கள்’ இடையே. எங்கும் பயணியர் ஏற்ற இறக்கம் கிடையாது. ரயில் கடக்கும்போது பச்சைக்கொடியாட்டுவது மட்டுமே (அதாவது ஒரு நாளைக்கு இரண்டே முறை) ஒரே பணி அங்குள்ள ‘ஸ்டேஷன் மாஸ்டர்’ களுக்கு. ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கவேண்டிய லட்சியப் பணி இதுவே என்று நினைத்துக்கொண்டேன். அன்று இரவு கோவை வந்து காந்திபுரத்தில் ரூம் போட்டுத் தங்கி விட்டு டிச 25 ஆம் தேதி காலை 8.30 க்கு ராஜஸ்தானி பவன் வந்து சேர்ந்தேன்.
நான் கலந்து கொள்ளும் முதல் விஷ்ணுபுரம் விழா. இரண்டு நாட்கள் செறிவான இலக்கிய அனுபவம். தொடர்ந்து நல்ல அமர்வுகள், கேள்விகள். உங்களுடனான, நண்பர்களுடனான,பிற எழுத்தாளர்களுடனான இலக்கிய அரட்டைகள். உங்களுடைய நகைச்சுவையான, ‘வாத்தியாரே கவுத்துட்டயே!” (இந்தத் தலைப்பிலேயே தனியாக கட்டுரை எழுதலாம்) பொன்னியின் செல்வன் அனுபவங்கள். விக்கி அண்ணாச்சியின் குறும்படத்தில் அவர் துணைவியாரின் ‘நடிப்பு’ க்ளாப்ஸ் அள்ளியது. அதைப் பார்த்தபோது எனக்கு சிறுவயதில் (ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பதுகளில்) தூர்தர்ஷனில் பார்த்த பாரதிதாசன் துணைவியாரின் பேட்டி நினைவுக்கு வந்தது. அதாவது அடுத்த அறையில் படித்துக்கொண்டிருந்தவன் ‘புருஷன என்ன வாங்கு வாங்கறா பாரு?’ என்ற என் அப்பாவின் சத்தம் கேட்டு, ஓடிச் சென்று பார்த்தேன்.
தன் கணவர் மீது கொண்ட வெறுப்பும் விலக்கமும் ஒவ்வொரு வார்த்தையிலும், உடல் மொழியிலும் பிரதிபலிக்கும் ஒரு பேட்டி. “ஆமாம், திடீர்னு அஞ்சு பேரைக்கூட்டிட்டு வருவாரு, வான் கோழி பிரியாணி செஞ்சு போடுன்னுவாரு. என்ன பண்ணுவேன், நானு ஒத்தப் பொம்பள” என்று மனம் குமைந்தார். கவிஞரின் பாடல் எதோ ஒன்றைக் கட்டுரையாளர் எடுத்துக்கொடுக்க அதை வேண்டாவெறுப்பாகப் பாடி முடித்தார். அவ்வளவு இல்லாவிட்டாலும் திருமதி விக்கிரமாதித்தனுக்கும் சொல்ல நிறைய இருக்கும் என்பது  குறும்படத்திலேயே பதிவு செய்யப்பட்டது சிறப்பு. சோ. தர்மனின் பேச்சைக் கேட்டபிறகு, ‘சிரிச்சுத்தான் ஆத்திக்கிடணும்’ என்று கி.ரா சொன்னதுபோல நினைத்திருப்பாரோ பகவதியம்மாள்?. ஆனால், எதுவும் கடந்துபோகும் என்று அவருக்கும் சிந்த ஆனந்தக்கண்ணீர் மிச்சமிருந்தது. விக்கிரமாதித்தன் அண்ணாச்சியோ  விசும்பி விசும்பிச் சிரித்துக்கொண்டிருந்தார்.  படம் முடிந்தபோது பலருக்கும் ஒரு உளம்பொங்கிய உணர்வு. நிறைவான விழா. விழாவின் ஆரம்பத்தில்தான் அந்தப்பெண் என்ன அழகாகப் பாடினாள்?  ஊருக்குக் கிளம்புமுன் விடைபெற்றுக்கொள்ளும்போது, எல்லோரும் உணரும்படி, நீங்கள் விம்மிப் பூரித்து மகிழ்ச்சியால் நிறைந்திருந்தீர்கள். இதுபோன்ற கணங்கள் தொடர்ந்து வாய்க்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
சிறுசிறு தவிர்க்கக்கூடிய குறைகள். ‘லிப்ட்’ கதவை யாருமே மூடுவதில்லை. ஒரு நாளைக்கு ஏழெட்டு முறையாவது நாலாவது மாடிக்கு ஏறிஇறங்குவது கடினமாகத்தான் இருந்தது. அதேபோல் அறையிலிருந்து கடைசியாக வெளியேறுபவர் சாவியை  தரைத்தள ‘செக்யூரிட்டி’ யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் முதலிலேயே கூறியிருந்தால் தாமதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். அதேபோல அமர்வுகளில் கேள்வி கேட்பவர்கள் ஒன்றுக்கு மேல் கேள்விகள் இருந்தால், முதல் கேள்விக்கு பதில் கிடைத்த பிறகு மட்டுமே இரண்டாவது கேள்வியைக் கேட்கவேண்டும் என்று அமர்வு ஆரம்பிக்கும்போதே அறிவுறுத்தப்பட வேண்டும். அல்லது நீங்கள் விழாவின் விதிகளிலேயே இதனைச் சேர்த்துக்கொள்ளலாம்.
திருமூலநாதன், ஜெயகாந்தன் ராஜு, ‘கவிஞர்’ கல்பனா ஜெயகாந்தன், அந்தியூர் மணி, கடலூர் சீனு என்று பழைய நண்பர்களோடு மீண்டும் அளவளாவ ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி.  பழவேற்காடு பூநாரை கூட்டத்தைக் கண்டு களித்தபோது (அந்த அனுபவத்தை ‘நீளகண்ட பறவையைத்தேடி’ என்று உங்கள் தளத்தில் நான் எழுதியிருக்கிறேன்) அங்கு எங்களை வழிநடத்திச் சென்ற பறவையியலாளர் திரு.சுப்ரமணியன் சங்கரை விழாவில் கண்டது ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
நல்ல உணவு. மேடையில் நீங்கள் (மயிலாடுதுறை பிரபுவின் ஆகிருதியிலேயே இருந்த) விஜய் சூரியனின் பெயரைக் குறிப்பிட்டதை அவரிடம் கூறினேன். ‘அப்பிடி ஒரு தப்பு நடந்திருக்க வாய்ப்பில்லயே’ என்கிற முகபாவத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார். திரும்ப ‘அவர் பாராட்டினாருங்க’ என்று சத்தமாகக் கூறினேன். முகபாவத்தில் மாற்றமில்லை. கோயம்புத்தூர் குளிர் பிரதேசம்தான். ஒரு வாரத்தில் மீண்டுவிடுவார் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்

பிகு

இந்தக் கேள்வி விஷ்ணுபுரம் விழாவில் திருச்செந்தாழை அமர்வினை ஒட்டி. அமர்வின் முதல் கேள்வியை நான் கேட்டேன். ‘ஆபரணம்’ கதையில் தம்பியை ஏமாற்றி(சரியான வார்த்தையல்ல, அனுபவமில்லாத தம்பியின் வியாபாரத்தில் தலையிட்டு மட்டுறுத்தாமல்) அண்ணனும், அண்ணியும் ஆபரணங்களாகச் சேர்க்கிறார்கள். பாகம் பிரித்துச் சென்றும் விடுகிறான் தம்பி. கதை முழுதும், பாகம் பிரித்து தனியாய்ப் போன தம்பியைப் பார்க்க வரும் அண்ணன், அண்ணி மற்றும் தம்பி மனைவியின் மனஓட்டங்களும், மனஅவசங்களும் தான். பல உள் மடிப்புகள் கொண்ட, வாசகனின் முழு மனக்குவிதலையும் கோரும் ஒரு கதை. அதில் கதை ஏறக்குறைய முடியும் தறுவாயில் தம்பி தன் அண்ணனின் கணக்குப்பிள்ளையிடம் கூறும் ஒரு வார்த்தையில் புதிய பரிமாணத்தை அடைந்துவிடும். (நான் இப்போதும் அது என்ன என்று கூறவில்லை, சொன்னால் spoiler தான்). இந்த இடத்தில் கதை புரிந்தவர்கள், கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மில் Iteration Loop போல, மறுபடியும் முதலில் இருந்து கதையைப் படிக்காமல் இருக்க முடியாது. அவ்வாறு வாசகர்கள் கதையைத் திரும்பப் படிக்கவேண்டும் என்று ஒரு உத்தியாக தம்பியின் கூற்றை அப்படி வைத்தீர்களா, அல்லது தற்செயலாகவா? என்பதே நான் அவரிடம் கேட்ட கேள்வி. திருச்செந்தாழை சற்றே உளம்குவியாமல் இருந்தார் என்று நினைக்கிறேன், அவரால் சட்டென்று கேள்வியை உள்வாங்க முடியவில்லை. நானும் கதையைப் பாராட்டிவிட்டு அத்தோடு முடித்துக்கொண்டேன்.

இதனைத் தொடர்ந்து போகன் சங்கர் சரம்,சரமாக தொடர் கேள்விகளைக் கேட்டார். அநேகமாக எல்லாம் உரைநடை கவிதையாவதை, இரண்டுக்குமான இடைவெளி இல்லாமல் போவதைப் பற்றியவை. முக்கியமாக, கதாபாத்திரங்களின் பொதுஅறிவு மற்றும் நுண்ணுணர்வு பேச்சுமொழியில் (Dialogue)  எந்த அளவில் வெளிப்படுகிறதோ, அந்த அளவில்தான் கதையின் விவரணைகளிலும் (Narration) இருக்கவேண்டும் என்ற போகன் சங்கரின் கூற்று. என்னுடைய கேள்வி இதைப்பற்றியதே. போகனின் கூற்று எல்லாக் கதைகளிலும் சரியா? கதைசொல்லி கூறும் தற்கூறலாக உள்ள கதைகளுக்கு அவர் கூறுவது பொருந்தலாம். கதாசிரியன் படர்கையில் கூறும் கதைகளுக்கு, அதாவது ‘ஆபரணம்’ போன்ற கதைகளுக்கு அவர் கூற்று பொருந்துமா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,

இத்தகைய அவைகளில் எந்த விவாதமும் அங்கேயே முடிவடைவதில்லை. இதை நீங்கள் இன்னொரு முறை அவரிடம் கேட்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஅ.வெண்ணிலாவின் சாலாம்புரி-வெங்கி
அடுத்த கட்டுரைவரலாறு எனும் குற்றக்கதை- சௌந்தர்