விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்
அன்பு ஜெ,
விஷ்ணுபுரம் விழா பதிவுகள், படங்கள், உரைகளை எல்லாம் கேட்டேன். நிறைவாக இருந்தது. அமர்வுகள் மட்டுமே பதிவு செய்யப்படாது இருந்தது (அதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறீர்கள்). அதுவும் கூட சில நண்பர்களின் கடிதங்களில் நினைவில் இருந்து சிறப்பாக தொகுத்து எழுதப்பட்டிருந்தது. விழாவுக்கு வர முடியவில்லை என்ற ஏமாற்றத்தை இவை ஓரளவு போக்கின. ஆனால் நேரில் உங்களையும் நண்பர்களையும் ,பெரும் வாசக சூழலையும் சந்திப்பது எழுத்தில் நிகர் செய்ய முடியாத அனுபவம் தான்.
ஆவணப்படமும் சிறப்பாக வந்திருந்தது, ஆவணப்படம் இன்னும் விரிவாகவும் ‘ஆவணப்படுத்தும்’ தன்மையுடனும் இருந்திருக்க வேண்டும் என்று சில விமர்சனங்களை பார்த்தேன். ஆவணப்படங்களை விழாவுக்குக்கு, விவாதங்களுக்கும் கட்டுரைகளுக்கும் முழுமை அளிக்கும் வகையில் ஒரு supplement என்று தான் விளங்கிக் கொள்கிறேன். முழுநீள ஆவணப்படம் என்பது அதனளவில் ஒரு தனித்த முன்னெடுப்பு. விழா குறித்தும், ஆவணப்படம் குறித்தும் பேஸ்புக்கில் பதிவு எழுதியிருந்தேன்.
இந்த ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து உங்கள் குறிப்பு பார்த்தேன். நாட்டார் தெய்வங்களை முன்வைத்த உருவாகவிருக்கும் நாவல் தமிழுக்கு முக்கியமான பங்களிப்பாக இருக்கும். அசோகவனமும் கீதை உரையும் நெடுங்காலம் எதிர்பார்த்ததே.
உங்கள் விக்கிபீடியா சார்ந்த சிக்கல்களையும் வாசித்தேன். நான் விக்கி பங்களிப்பாளன் அல்ல ஆனால் தக்க காரணங்களோ, எச்சரிக்கையோ இல்லாமல் பதிவுகள் முற்றாக அழிக்கப்பட்டது தவறுதான். தமிழ் இலக்கியத்துக்கான தனி விக்கி அமைப்பதும் நல்ல முன்னெடுப்பு தான் பல பெரும் நிறுவனங்கள் தங்கள் நிறுவன தேவைகளுக்கு இது போன்ற தனிப்பட்ட விக்கிகளை ஏற்கனவே பயன்படுத்துகின்றன தகவல்களை ஏற்றுவதை விட அதை புதுப்பித்து படியே வைத்திருப்பதே கடினமான பணி. அதை கருத்தில் கொண்டு திட்டமிட்டு செய்தால் இந்த முயற்சி சிறப்பாக கைகூடும்.
இதை எழுதும் போதே நண்பர் சாகுல் அழைத்திருந்தார். நீங்கள் கையெழுத்திட்டு சாகுல் அனுப்பிய புத்தகங்கள் வந்து சேர்ந்திருந்தன. நன்றி. அடுத்த விழாவை நேரில் காணும் வாய்ப்பு அமையட்டும்.
அன்புடன்
கார்த்திக்
அன்புள்ள ஜெ,
நெடுநாட்களாக நினைத்த கனவொன்று நிறைவேறியதைப் போல விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டது இருக்கிறது. இரண்டாவது நாள் விழாவில் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது. ஆனால் இத்தனை ஆண்டுகள் எப்படி நடத்தியிருப்பீர்கள் என அறிந்து கொள்ள முடிந்தது.நான் நிறைய மார்க்ஸிய சிறு அமர்வு கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.அங்கு ஆழமான நிறைய விவாதங்கள் நடப்பதை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடிந்து விடுகிறதே என நினைத்து கவலைப்பட்டதுண்டு.விஷ்ணுபுரம் நிகழ்வு என்பது இலக்கியத்திற்கான ராஜபாட்டை . பல எழுத்தாளர்களும் பல வாசகர்களும் ஒரே இடத்தில் சங்கமமாவது இங்கு தான். நான் பார்த்து வியந்த விஷயங்கள்
- இளம் எழுத்தாளர்களை கெளரவிப்பது
2. உங்களை எவ்வகையிலும் முன்னிறுத்தாமல் ஒரு பார்வையாளனாய் இருத்திக் கொள்வது
- நிகழ்ச்சிக்கான நேர ஒழுங்கு குறிப்பாக ஒரு நிகழ்வு முடிந்தவுடன் அடுத்த நிகழ்வு தொடங்குவது.
4. நான் இயக்குனர் வசந்திடம் கேட்ட வினாவிற்கு மிக அருமையாக பதில் தந்தார். பலரும் திரையுலகில் எழுத்தாளர்களின் பெயரைக் கூட டைட்டில் கார்டில் போடுவதில்லை என்ற ஆதங்கத்தை தெரிவித்தார்.
5.ஒரு பெரிய எழுத்தாளர் என்ற எந்த பகட்டுமின்றி தேநீர் வர தாமதம் என்றதும் நீங்கள் அங்குமிங்கும் சென்று அதற்கான வழி தேடியதை அருகில் நின்று கவனித்தேன
6.வாசகர்களுக்கு தங்குமிடம், உணவு கொடுத்து இலக்கிய விருந்து படைப்பது தமிழகத்தில் விஷ்ணுபுரம் நிகழ்வு மட்டுமே .
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு பேரனுபவம்.கடைசி வரை உங்களுடன் பேச முடியாமல் போனது மட்டும் என் துரதிருஷ்டம்.
மாறாத அன்புடன்
ஆ.செல்வராஜ்
பட்டுக்கோட்டை
திசையெட்டும் தமிழ்.