விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்
அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு,
‘விஷ்ணுபுரம் விருது விழா-2021’ எனக்கோர் முதல் அனுபவம் – இவ்வாண்டின் முதன்மை அனுபவமாகவும் ஆகிவிட்டது. இலக்கியக் கொண்டாட்டம் எத்துணை இனியது – மொழியாலும் உணர்வுகளாலும் ஒன்றிணைந்த உள்ளங்களின் ஒருமைச் செயல்பாட்டில், செயல் நேர்த்தியில் ஒவ்வொரு தருணமும் உச்சம் தொட்டது.
வியந்து நோக்கும் இலக்கிய ஆளுமைகள், தங்களின் வலைத்தளம் மூலம் அறியப்பட்ட எழுத்தாளுமைகள், இலக்கிய வட்ட நண்பர்கள் என ஒரு சங்கமம். புதிய இடத்திற்கு வந்ததாகவோ புதிய மனிதர்களை சந்தித்ததாகவோ துளியும் தோன்றவில்லை.
இரண்டு நாட்களின் இலக்கிய அமர்வுகளும் பள்ளிக்குச் சென்று வந்த உணர்வையே தந்தன- நுண்ணுணர்வு மிக்க வாசகர்களின் நுட்பமான கேள்விகளும், அவற்றுக்கான உண்மையான பதில்களும் என, உரையாடல்கள் நிறைய கற்றுத் தந்தன. அமர்வுகளில் பகிரப்பட்ட எழுத்தாளுமைகளின் அகப்பயணங்கள், அன்றாட உலகியல் செயல்பாட்டிற்கும் படைப்புலக வெளிப்பாட்டிற்குமான ஊடாட்டத்தை கோடிட்டுக் காட்டின.
ஓரோர் சமயம் கண்களை மூடிக்கொண்டு கேட்டால், பதிலிறுப்பவர்கள் படைப்பாளிகள் மட்டுமல்ல – சித்தர் அல்லது யோகியர் என்றே எண்ணத் தோன்றியது. “இட் ஐஸ் எ ப்ராஸஸ்” என்று சொன்ன சுஷீல் குமார்; “விமர்சனங்களை உள்வாங்கி, படைப்புகளை மேம்படுத்த முயல்கிறேன்” என்று சொன்ன காளி பிரசாத்; கால்குலேட்டர் மட்டுமேயாக இருந்துவிடாமல் இருப்பதற்குப் பிரயத்தனப்படும் திருச்செந்தாழை; கவிஞனாக வெளிப்படும்போது “அந்தர்யாமி”யாக ஒருவன் உள்ளிருந்து செயலாற்றுவதைக் குறிப்பிட்ட கவிஞர் வடரேவு சின்ன வீரபத்ருடு, “உண்மையாக இருக்கிறேன்” என்று ஒலித்த சோ. தர்மன்; “நான் என்பது தானாடும் பொய்யாட்டத்தைத் தானே காண்பது” என்ற வசந்த் சாய்; தன்னைத் தானே கண்டு நகைக்கும் சிறு குழந்தையென இயல்பாய் இருந்த விக்கி அண்ணாச்சி; அதிகாரச் செயல்பாட்டில் இருந்து விலகிய பின் எதிர்கொண்ட சவாலைக் கையாண்ட ஜெயராம் ரமேஷ் – என சொல்லிக் கொண்டே போகலாம்.
வரவேற்பு, தங்குமிடத்தைப் பகிர்ந்தளிப்பது, உணவு மற்றும் தேநீர் உபசரிப்பு, நேர மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு, அரங்க அமைப்பு, அரங்கினுள்ளேயும் வெளியேயும் நிழ்ந்த அன்பான உள்ளமார்ந்த உரையாடல்கள் என அனைத்துமே வெகு நேர்த்தி. தன்னார்வலர்களாய் ஒத்திசைவும் பொருந்தமைதலும் கொண்டு செயல்பட்ட நண்பர்களின் தன்னலமற்ற பங்களிப்பால், ‘குதூகல முகங்கள் தவழும் வெளியில் இரு நாட்கள்’ என இனியதோர் அனுபவம்.
இதனை இங்கே இவ்வண்ணம் நிகழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பலப்பல.
அன்புடன்
அமுதா
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஆயிரம் வணக்கங்கள். விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
ரீஸ்டார்ட்:
எங்கோ ஒரு காட்டு மரத்தின் இலை, கடல் காணும் ஆசையில், பெய்த மழையில், சேர்ந்த பெருநதியில், நீரின் போக்கில், மிதந்தே கடலில் சேர்ந்ததாம்.
விஷ்ணுபுரம் விருது ராஜ் கௌதமன் அவர்களுக்கு அளித்த ஆண்டுதான், நான் உங்களின் புறப்பாடு வழியாக வாசிப்பிற்குள் நுழைந்தேன். அதற்கு முன்னர் சென்னையில் புழுங்கிக் கொண்டிருந்த மூன்று வருட காலம், எதிலுமே நிச்சயமின்மை, வாழ்க்கையில் நம்பிக்கை எனும் சொல்லிற்கே இடமில்லை. தினமும் இரவு பாண்டி பஜார் சௌந்திரபாண்டியன் நகர் மதுக்கடையில் இரவுகளில் கூடடைந்த காலம்.
ஒரு நாள் அண்ணன் நந்தகுமார் சென்னைக்கு வந்த நேரம், நான் என்ன செய்கிறேன்? என அம்மாவின் வற்புறுத்தலால் அறிய வந்திருப்பான் என்றே இன்றும் நம்புகிறேன். புலம்பித் தள்ளினேன். எதிலுமே பிடித்தம் இல்லை. நாகர்கோயில் வந்துவிடவே மனம் வெப்ராளப்படுகிறது எனக் கூறினேன். அன்றைக்குத்தான் அவன் என்னை எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் மிதவை படிக்க சொன்னான். ஆனாலும் வாசிப்பு ஆரம்பிக்கவில்லை.
காலம் வேகமாக நகர, ஒரு நிரந்தர வேலையும் கிடைக்க, அதன் வாயிலாய் எனக்கு திருமணமும் நடந்தது. அவள் பிரசவத்திற்காக தாய்வீடு நாகர்கோயில் வந்திருந்தாள். சென்னையில் இருந்து வாரம் ஒருமுறை நாகர்கோயில் வர ஆரம்பித்தேன். எல்லா வாரமும் வெள்ளி மாலை சென்னையில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்து, பிறகு ஞாயிறு மாலை சென்னை கிளம்ப வேண்டும். ஆக வாரத்திற்கு இருபத்து நான்கு மணி நேர பயணம். அப்போதுதான் உங்கள் புறப்பாடில் ஒரு பகுதியில் ஒழுகினசேரி எனும் என் ஊரின் நினைவுகள் வருகின்றன எனத் தெரியவே அதைப் படிக்க ஆரம்பித்தேன். சினிமா ஒன்றில் நாம் அறிந்த ஏதோவொன்று காட்சியிலோ, வசனத்திலோ வருகிறது என்றால் அதைப் பார்க்க இயல்பாகத் தோன்றும், அது போலவே இரயிலில் புறப்பாடை கையில் எடுத்தேன். அப்போது அதன் இலக்கிய முக்கியத்தன்மை என்ன என்றெல்லாம் தெரியாது. இன்றைக்கும் இலக்கியம் எனக்கு குழப்பமான ஒன்றுதான். என்னவளோ அன்றைக்கு ஏற்கனவே உங்களை அறம் வாயிலாக அறிந்திருந்தாள். இப்போதும் ரப்பர் காடுகள், அந்த மாணவர் விடுதி, தண்டவாளம், அலைந்து திரிந்தவனின் சொற்கள் என்றைக்கும் என்னுள் நிறைந்து இருக்கிறது. ஓடும் இரயிலில் ஒவ்வொரு அத்தியாமும் இரயிலின் ஓட்டத்தோடு கொஞ்சம் கொஞ்சமாய் அதிர செய்தது. இன்றைக்கும் அதிர்வின் கீறல் உள்ளுண்டு.
உங்களில் இருந்தே தொடங்கியது எனது பயணம். புறப்பாடில் ஆரம்பித்து மிதவையில் தொடர்ந்தது. எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் மொழி, என் கைப்பிடித்து ‘அ’ போடச்சொல்லிக் கொடுத்த, நான் பெயர் மறந்த சத்திரம் பள்ளிக்கூடத்தின் (இப்போது கலைவாணர் என்.எஸ்.கே உயர்நிலைப் பள்ளி) ஒன்றாம் வகுப்பு ஆசிரியையை நினைவுப் படுத்தும். வாசிப்பு அப்படித்தான் ஆரம்பித்தது. ஒவ்வொரு புத்தகம் வாசித்ததும் அண்ணனோடு ஒரு சிறிய உரையாடலை ஆரம்பிப்பேன், என் பார்வையை சொல்லுவேன். அவன் அவனுடைய பார்வையை தெரிவிப்பான். முற்றிலும் வேறான ஒரு நிலைப்பாடு அவனுடையது. இன்றைக்கும் இது தொடர்கிறது. இப்படியே வாசிப்பும் தொடர்ந்தது. உண்மையில் தினமும் உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன் நானல்ல. ஆனாலும் வாரம் இருமுறையாவது உள்நுழையலாவேன்.
விஷ்ணுபுரம் விழா என்றைக்கும் ஆச்சர்யம் அளிக்கும் ஒரு பெரும் நிகழ்வு. அதைப் பற்றிய குறிப்புகளை உங்கள் தளத்தில் படிக்கும் போது என்றாவது ஒரு நாள் நானும் அதில் கலந்து கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தேன். உண்மையாக சொன்னால் அதன் அறிவுத்தளத்தின் உயரம், என்னைப் பற்றிய மதிப்பீட்டில் என் தாழ்வுணர்ச்சி, அங்கே வரவிடாமல் தடுத்தன. அதையும் மீறி என்னை நான் மாற்றிக் கொள்ள நேர்ந்தது, எழுத்தாளர் சுஷில் குமார் அண்ணனோடு ஏற்பட்ட அழகான நட்பின் வாயிலாய். அதன் காரணமாய், இந்த ஆண்டு அதுவும் மதிப்பிற்குரிய பெருந்தகப்பன் கவிஞர் விக்கிரமாதித்யன் அய்யாவிற்கு விருது அளித்த ஆண்டில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
எழுத்தாளர் சுஷில் குமார் அண்ணன் கோவையில் இருக்கவே வியாழன் இரவு கிளம்பி, வெள்ளி காலை கோவை வரத் திட்டமிட்டு இருந்தேன். அதே இரயிலில் நீங்களும் இருந்தீர்கள், கப்பல்காரன் சாகுல் அண்ணனை வியாழன் இரவே இரயிலில் சந்தித்தேன். முதல் சந்திப்பிலே என்னை எவ்வித பதட்டமுமின்றி இயல்பாக பேசவைத்தார். அவர் பேசியதில் எங்களைப் பற்றிய சுயவிவரங்களையும், அவரின் கப்பல் அனுபவங்களையும் தவிர்த்தால், அதில் முழுக்க முழுக்க நீங்கள் மட்டுமே நிறைந்து இருந்தீர்கள். காலை அவர் மூலமே உங்களைச் சந்தித்தேன். இரயிலில் உங்களைப் பார்த்த நொடியில் எண்ணங்கள் எதுவுமே என் கட்டுப்பாட்டில் இல்லை. நீங்கள் இரயில் நிலையத்தில் இறங்கும் போதே உங்களை அழைத்து செல்ல விஷ்ணுபுரம் நண்பர்கள் வந்திருந்தார்கள். நீங்களும் அவர்களும் ஒருவருக்கொருவர் அன்புடன் அணுகி, உரையாடியத் தருணம் ஏன் விஷ்ணுபுரம் எனும் இயக்கம் தமிழ் இலக்கிய சூழலில் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது என்பதனை உணர வைத்தது.
விழாவிற்கு முந்தைய நாளே வந்திருந்ததால் உங்களை இன்னும் நெருங்கிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. காலை நான் ராஜஸ்தான் அரங்கில் உங்கள் அறைக்கு வந்த போது, மியான்மரைப் பற்றி தம்பி சூர்யாவுடன் பேசிக் கொண்டிருந்தீர்கள். இடையிடையே அவனைப் பற்றிய அக்கறைகளும் உங்களிடம் இருந்து எழுந்தன. இந்த விழாவின் சூத்திரதாரிகள் விஷ்ணுபுரம் நண்பர்களை நேரில் சந்தித்ததில், ஒருவருக்கொருவரிடையே ஒரே அலைவரிசையில் ஓடும் விழா பற்றிய சிந்தனையோட்டம் ஆச்சர்யப் படுத்தியது. அதுவே அவர்களை வெகுவாகப் பிணைக்கிறதோ! எனத் தோன்றுகிறது. ஒருவர் நினைப்பதை அவர் கூறாமலே, இன்னொருவர் புரிந்துக் கொண்டு அதன்படி செயலாற்றுகிறார்கள். சங்கிலியின் ஒவ்வொரு கண்ணியும் முக்கியமானது.
இதனாலே, விழா முழுக்க ஒரு ஒழுங்கோடும் ஒத்திசைவோடும் நிகழ்ந்தது. மாபெரும் அறிவியக்கம் சூழ்ந்திருக்கும் ஒரு அரங்கில் எப்படிப்பட்ட இலக்கிய, நேர்மறையான சிந்தனைகள் நிரம்பியிருக்கும். அது விழாவின் எல்லா நிகழ்விலும் பிரதிபலித்தது. இப்படிப்பட்ட கூட்டங்களில் ஒருங்கிணைப்பது என்பதும் மிகப் பெரிய வேலை, ஆனால் திட்டமிடல் வலுவாக இருந்தமையால் அதுவும் எளிதானது. நேரம் தவறாமை, பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுதல், சுயஒழுங்கு, எல்லோரிடமும் காணப்பட்டது. எத்தனை ஆளுமைகள், எத்தனை கேள்விகள் நிரம்பியிருந்த அரங்கில் இலக்கிய அமர்வில் எவ்வளவு ஆரோக்கியமான விவாதங்கள் நிகழ்ந்தன. நேர்மையான, தன்னளவில் உண்மையான பதில்களே கிடைத்தன. எனக்குள் இருந்த கேள்விகளுக்கு, வேறு கேள்விகளின் வழியாக விடைகள் கிடைத்தன, எத்தனை தெளிவுகள், விளக்கங்கள், கோணங்கள். இரண்டு நாளும் சோர்வு என்பதே இல்லை. ஏன் இரண்டு நாளும் இவ்வளவு வேகமாக ஓடியது என இயற்கையிடம் கோபப்படத்தான் தோன்றுகிறது.
ஒரு அரங்கம் முழுக்க பெரும் இலக்கிய ஆளுமைகளும், வாசகர்களும். சிந்தனைகள் அறிவியலின் படி மின்காந்த அலைகள் என வைத்துக் கொண்டால், அங்கே நிரம்பியிருந்தவை நேர்மறையான பலத்தரப்பட்ட இலக்கிய எண்ணங்கள், கோயிலிலுக்கு செல்வது நேர்மறையான சிந்தனைகளுக்காக என வைத்துக் கொண்டால், இது போன்ற நிகழ்வுகளில் ஒரு வாசகனுக்கு கிடைப்பதும் இலக்கியத்தில் ஒருவித தெய்வீக உணர்வு தானே.
இரண்டு நாளும், முழுஅரங்கும் எல்லா அமர்விலும் நிரம்பியிருந்தது. தங்கும் இடம், உணவு எல்லாமுமே நேர்த்தியான முறையில் திட்டமிடப்பட்டு இருந்தது. அரங்கில் எந்தப் பக்கம் நகர்ந்தாலும் ஒரு இலக்கிய மேடை கிடைத்தது, அதில் வயது வித்தியாசமுமில்லை, முழுக்க இலக்கிய விவாதங்கள் தான். பெரும் இலக்கிய ஆளுமைகள் பொறுமையாக, தன்மையாக இளம்வாசகர்களின், எழுத்தாளர்களின் மனதில் எழும் ஐயப்பாடுகளை விலக்கினர். எத்தனை புதிய நண்பர்கள், அவர்களின் வாசிப்பு, சிந்திக்கும் தரம் ஒருவித பிரமிப்பை அளித்தது.
விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவருமே புதிதாய் விழாவிற்கு வந்தவர்களை எப்படி இவ்வளவு குறைவான நேரத்தில் பதட்டத்தில் இருந்து விடுவிக்கிறார்கள் என்பதனை உங்களோடு விழா தவிர்த்து முந்தைய மற்றும் பிந்தைய நாட்களில், நண்பர்களோடு நீங்கள் உரையாடிய சமயங்களில், அதன் காரணத்தை தெரிந்து கொண்டேன்.
ஐ.டி துறையில் சர்வர் ஒழுங்காக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்றால் எல்லோரும் கொடுக்கும் முதல் சொல்யூசன், அப்ளிகேஷன் இன்ஸ்டன்ஸை ரீஸ்டார்ட் செய்வது, அது தேவையில்லாமல் நினைவகங்களில் (heap) நிரம்பி நிற்கும் மெமரியை அழித்து விடும். அறுபது சதவிகிதம் இதன் மூலமே பிரச்சனையை சரி செய்து விடலாம்.
அதே போல இந்த விழா என்னை ரீஸ்டார்ட் செய்துவிட்டது. 2022 ஆண்டை ஒரு புதிய ஆண்டாக தொடங்க இதுவே போதுமானது. இது போன்ற விழாக்கள் நம் எண்ணங்களை சீர்ப்படுத்தி ஒருங்கிணைக்கும். என்ன இங்கு வர நமக்கு காந்தியைப் போல பெரிய காதுகள் வேண்டும்.
விஷ்ணுபுரத்தின் அத்தனை நண்பர்களுக்கும், உங்களுக்கும், வந்திருந்த மாபெரும் இலக்கிய ஆளுமைகள் அனைவருக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்கள் எல்லோருக்கும் சிரம் தாழ்ந்த நன்றியும், அன்பும்.
வைரவன் லெ ரா.