விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்
அன்புள்ள ஜெ
முதன் முதலா விஷ்ணுபுரம் நிகழ்வு. இரண்டு நாட்கள் வேற எந்த சிந்தனையுமே இல்லை. போட்டோ எடுத்தது தவிர போன் உபயோகமே இல்லை. ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா, மனைவி எந்த ஞாபகமும் இல்லை. வாய் பிளந்து எல்லாரையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். இரம்யா, சுபஸ்ரீ, லோகமாதேவி, அன்பரசி, ஷாகுல், விக்னேஷ் இவர்களை மறக்க முடியாது.
இத்தனை வருடங்கள் வேஸ்ட் பண்ணிவிட்டேன் என்று ரொம்ப துயரப் பட்டேன். 24 தேதி இரவு ரயில் ஏறி விடிகாலை முதல் ஆளாய் விழா நடக்கும் இடத்திற்கு வந்து இருட்டிலேயே ரூம் சாவி வாங்கி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து உடனே கிளம்பி கீழே வந்துவிட்டேன். உங்கள் அறையின் வெளியில் நின்று அனைவருடனும் பேசிக் கொண்டிருந்த இடத்தில் நானும் நின்றுக் கொண்டேன். அதன்பின் ஒவ்வொரு அமர்வுகள், அதனுடைய கட்டுப்பாடு, நேர ஒழுங்கு எல்லாம் கச்சிதமாக இருந்தது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வாய் விட்டு சிரித்தபோதுதான் தெரிந்தது இப்படி நான் சிரித்ததே இல்லை என்று.
ஒரு வாரம் முன்பதாக பங்கேற்கும் ஒவ்வொரு எழுத்தாளர் எழுதிய படைப்புகள் பற்றிக் குறிப்பு எழுதி வைத்திருந்தேன். கிளம்பும் அன்று பரீட்ச்சைக்கு முன்னால் படித்தது எல்லாம் மறந்து போவது மாதிரி எல்லாம் மறந்துபோனது. சரி பரவாயில்லை, அடிச்சுக்கூட சொன்னாலும் யாரிடமும் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் என்று முடிவு பண்ணிக்கொண்டேன். அதை அப்படியே கடைபிடித்தேன். என்னைப் போல் நிறைய பேர் இருந்ததிலும் ஒரு மகிழ்ச்சி. சென்னையில் இருந்து வந்திருந்த செந்தில், அமுதா, ரம்யா, அன்பு, k j அசோக் குமார் போன்றவர்களுடன் நட்பு அமைந்தது. செல்வராணி கூட நானே போய் பேசினேன். எங்களை ஒரு சிறிய பயணம் அழைத்துப்போகிறதாய் சொல்லி இருக்காங்க.
உங்களிடமும், சுனில், நாஞ்சில்நாடன் சார் ஆகியோரிடம் புத்தகத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டேன். நீங்கள் கையெழுத்துப் போடும்போது பேரைக் கேட்டு என்னை ஞாபகமாய் சொன்னது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. உங்களோடு என்னை ஒரு போட்டோ அன்பரசி எடுத்தது. எனக்கு மிகவும் பிடித்த போட்டோவாய் அமைந்தது. கொண்டு வந்திருந்த எல்லா பணத்துக்கும் புத்தகம் வாங்கிவிட்டேன்.
எல்லாருமே எழுத்தாளர்கள்தான். எல்லா அமர்வும் ஒரே போல்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் வித விதமாய் அமைந்து இருந்தது. எம் கோபால கிருஷ்ணன் சார் பேசியது, கேள்வி கேட்டவர்கள்க்கு ஒரு கவுன்ட்டர் கொடுத்து பதில் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த திருசெந்தாழையின் அமர்வு கிருஷ்ணன் சார் கலக்கி எடுத்தார். முந்தைய வருடங்களில் கேள்விகள் வேறு திசையில் போகும்போது அதை நேர் பாதைக்கு கொண்டுவர தேவைப்பட்ட கவனம் கூட இந்த வருடம் இல்லை.
சோ. தர்மன் அமர்வில் நீண்ட பதிலை சொல்லிவிட்டு நெறியாளரை அவர் திரும்பிப் பார்த்தது அவையை சிரித்து வெடிக்க வைத்தது.எல்லாருமே பதில் சொல்லும்போது வாசகர்கள் மேல் ஒரு பிரமிப்புடன்தான் பதில் சொன்னார்கள். கேள்வி கேட்கவில்லைஎன்றாலும் அந்த வாசகர் கூட்டத்தில் நானும் ஒருத்தி என்பது மிகவும் பெருமையாய் இருந்தது. சுபஸ்ரீயின் ஆங்கிலம் மிகவும் நன்றாய் இருந்தது.
முதல் நாள் சிரித்தது ஒன்றுமே இல்லை என்று விழா நேரம் நிரூபித்தது. சோ. தர்மன் அவர்கள் அண்ணாச்சியை பற்றி சொல்லும்போது என்னமோ அவருடைய போர் பரணியைக் கேட்பதுபோன்று அண்ணாச்சி உருண்டு சிரித்தது அவ்வளவு அழகாய் இருந்தது. மனசில் ஒன்றும் வெளியில் ஒன்றும் வைத்திருப்பவர்கள் அப்படி சிரிக்க முடியாது. சின்னப் பிள்ளையைப்போல் ஒவ்வொரு தடவையும் புரை ஏறுமளவு சிரிக்கிறார்.
விழா முடிந்ததும் பகவதி அம்மாவின் கையைப்பிடித்துக்கொண்டு பேசினேன், அவங்களோடு படம் எடுத்துக் கொண்டேன். அவங்களும் அவங்க சினிமா அனுபவங்களைப் பேசினார்கள். சிரித்துக்கொண்டே இருந்தேன். அண்ணாச்சியிடம் பேசும்போது பிள்ளைகளைப்பற்றி கேட்டார். நானே கேட்டு என் தலையில் கைவைத்து ஆசியளிக்க சொன்னேன். வேளாங்கன்னி அம்மையைக் கும்பிடு. அவதான் உனக்கு அம்மை என்று சொன்னார். நாங்கள் பெந்தகோஸ்தே பின்னணியில் இருந்ததால் யேசுவைத் தவிர வேறே தெய்வங்கள் இல்லை. ஆனால் அது ஒரு சித்தரின் ஆசியாய் எடுத்துக்கொண்டு அம்மையைப் பிடித்துக்கொண்டேன்.
கடைசியாய் ஒரு முக்கியமான நபர் ஷாகுல். நானே என்னை அறிமுகம் செய்துகொண்டு பேசும்போது நீங்கள் அவரைப்பற்றி எழுதியிருந்த “சரியான நேரத்தில் தப்பான கேள்வியைக் கேட்பவர்” நீங்கதானே என்று சொன்னபோது அப்படியே பூரித்து அவர் அப்படிக் கேள்விகேட்ட அனேக சம்பவங்களைப் பற்றி பெருமையாய் சொன்னார். எங்களுக்கும் ஒரு திருஷ்டாந்தம் காண்பித்தார். முதல் நாள் இரவு எங்களுகுக் கொடுத்த அறையில் நானும் ரம்யாவும் தூங்கிக் கொண்டிருந்தபோது முதலில் இரண்டு ஆண்கள் கதவைத்தட்டி இங்க ஆண்கள்தான் இருக்காங்க, அறையைப் பயன்படுத்திக்கோங்கனு சொல்லி அனுப்பினார்கள் என்று சொன்னார்கள். இல்லை நாங்க பெண்கள்தான் இருக்கிறோம் என்று சொல்லி அனுப்பி விட்டோம்.
கொஞ்ச நேரம் கழித்து ஷாகுல் படபடவென்று கதவைத்தட்டி எப்படி இந்த அறையில் பெண்கள் இருக்க முடியும், கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நான்தான் இரண்டு பேரை சாவி கொடுத்து அனுப்பினேன் எப்படி நீங்கள் வந்தீங்க. உங்க ரெண்டு பேர் பேரும் என்ன? யார் உங்களுக்கு அறை கொடுத்தது? எப்ப வந்தீங்க? என்று போலீஸ் விசாரணை மாதிரி கேட்டு ஒரு சந்தேகத்துடனே போனார். அப்புறம் காலையில்தான் தெரியவந்தது அவர் சாவி கொடுத்து அனுப்பி வைத்தது அறை எண் 402 சண்டை போட்டது 204. சிரித்து உருண்டோம்.
முதன் முதலில் நிர்மால்யா அவர்களைப் பார்த்தபோது அவருடன் பேசுவதற்கு முன்னாலேயே அவரைப் பிடித்துவிட்டது. அதேபோல்தான் ஷாகுலும். அதிகம் பேசாமலேயே ஒரு இனிய நண்பராய் மாறிவிட்டார். திரும்பி இரவு ரயிலில் வரும்போது உளம் பொங்கிக் கொண்டே இருந்தது. கண்ணை மூடவே முடியல. நாலு நாள் ஆச்சு. ஆனாலும் மனம் அங்கேயேதான் இருக்கிறது.
நன்றி சார்.
டெய்ஸி.
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் நிகழ்வுக்கு வந்தது என் வாழ்க்கையின் மிகமிக முக்கியமான ஒரு திருப்புமுனை என்று நினைக்கிறேன். நான் வாழும் சூழல் அப்படி. வேலை தொழில் குடும்பம் டிவி சாப்பாடு தவிர எந்த அக்கறையுமே இல்லாத மக்கள். ஆகவே மிகப்பெரிய சலிப்பு. அந்தச் சலிப்பு குடிக்கோ வம்புக்கோ கொண்டுசெல்கிறது. அரசியல்வம்பு இல்லாவிட்டால் சினிமா வம்பு இல்லாவிட்டால் தனிநபர் வம்பு. நானும் அதிலேதான் இருந்தேன். ஆனால் தன்னறம் வெளியீடாக வந்த யானைடாக்டர் வாசித்தேன். அதிலிருந்து இலக்கியத்துக்குள் வந்துவிட்டேன். அப்படியே இரண்டு ஆண்டுகளாக வாசிக்கிறேன்.
விஷ்ணுபுரம் விழாவில் இத்தனை இளைஞர்கள் என்பது ஆச்சரியம் அளித்தது. எவ்வளவு பெரிய முயற்சி. ஒரு பெரிய உத்வேகம் வந்தது. தீவிரமான விஷயங்களில் மூழ்கியிருக்கவேண்டும். அதுதான் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் என்று நீங்கள் உங்கள் தன்மீட்சி நூலில் சொல்கிறீர்கள். அதுவே உண்மை. அதை அங்கே உணர்ந்தேன்.
மிகச்சிறப்பான உணவு, மிகச்சிறப்பான ஏற்பாடுகள். இந்தக் கொண்டாட்டம் என்றும் நீடிக்கவேண்டும். நான் விஷ்ணுபுரம் விழாவுக்குப் போவதைப்பற்றிச் சொன்னபோது வாசகசாலை நண்பர் ஒருவர் சொன்னார். “அது அரசியல்கூட்டம், போகாதே” என்று. நான் அவரிடம் “அங்கே அரசியலே ஒரு வார்த்தைகூட பேசப்படவில்லை” என்று சொன்னேன். ”பேசமாட்டார்கள், குறிப்பால் உணர்த்துவார்கள்” என்று சொன்னார். “வாசகசாலை கூட்டங்களில் பெரியார், அண்ணா, கலைஞர் என்றுதான் புத்தகவிமர்சனம் வைக்கிறீர்கள். அது அரசியல் இல்லையா?”என்று கேட்டேன். “இல்லை அவர்கள் எல்லாம் சிந்தனையாளர்கள்” என்றார். நான் மேற்கொண்டு பேசவில்லை.
பல நண்பர்களுக்கு இங்கே நடப்பது என்னவென்றே தெரியவில்லை. எவராவது அரசியல்காழ்ப்புடன் சொல்வதைக் கேட்டு அவர்களும் நின்றுவிடுகிறார்கள். அவ்வாறு தவிர்ப்பது அவர்களுக்குத்தான் இழப்பு.
சந்திரகுமார்