விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்-7

விஷ்ணுபுரம் விழா -1
விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

வணக்கம். விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்கள் பேச்சை கேட்டேன். மிகச் சிறந்த பேச்சு. அத்தனை அடர்த்தி. ஒருசொல் மிகை இல்லை. அத்தனை தகவல்கள். மூன்றுதரம் கேட்டேன். ஒரு நல்ல சிறுகதைபோல சிறப்பாக செதுக்கப்பட்டிருந்தது. ஒரு பேச்சு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான நல்ல உதாரணம்.

புதுவருட வாழ்த்துகள்.

அன்புடன்

அ. முத்துலிங்கம்

ப்ரியம்வதா

அண்ணாச்சியுடன் இரண்டுநாள்- யோகேஸ்வரன் ராமநாதன்.நன்றி யோகேஸ்வரன். ஒரு குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல மூன்று நாட்களும் அவருடன் உடனிருந்து வழி அனுப்பி வைத்தீர்கள். இறுதியாக நீங்கள் அவர்கள் இருவரிடமும் ஆசி வாங்கும் போது உங்களை பிள்ளை போல “நல்லா இருடா யோகா” என்று சொன்னார்கள்.

இந்நேரம் அண்ணாச்சி டீ குடிக்க ஆசப்படுவார் என்று கூப்பிட்டு போகும் போது கூட பரவாயில்லை… இந்நேரம் அவருக்கு ஒரு சிகிரெட் தேவைப்படும் என்று நீங்கள் அவரை அழைத்துச் சென்றது தான் ஆச்சரியமாக இருந்தது…

அவர் சொன்ன தேவைகளையும் சொல்லாதவைகளையும் பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தீர்கள். நிஜமாகவே ஒரு குழந்தையைப் பார்த்துக் கொள்வது போலத்தான் இருந்தது…

ரம்யா

நிகிதா

அன்புள்ள ஜெ

விக்ரமாதித்யன் ஆவணப்படம் மிகச்சிறப்பாக இருந்தது. உண்மையில் இதற்கு முன்னால் வந்த ஆவணப்படங்களை என் நண்பர்களுக்கு பரிந்துரை செய்தேன். அவர்களால் பார்க்கமுடியவில்லை. ஏன் என்று உங்கள் குறிப்பில் இருந்து புரிந்துகொண்டேன். இது ஏற்கனவே விக்ரமாதித்யன் அவர்களை கவிதை வழியாக அறிந்தவர்களுக்காக எடுக்கப்படுவது. இன்னொருவர் பார்த்தால் என்ன ஏது என்றே தெரியாது.

காரில் செல்லும்போது விக்ரமாதித்யன் ததும்பிக்கொண்டே இருக்கிறார். என்ன சொல்கிறார் என்பதுகூட முக்கியமல்ல. அந்த உணர்ச்சிகள், உடலசைவுகள். அதே போல பகவதி அம்மா அவருக்கே உரிய நையாண்டியுடன் பேசிக்கொண்டே இருந்தவர் விக்ரமாதித்யன் உள்ளே இருப்பதை ஒரு சிறு அசைவு வழியாக வெளிப்படுத்துகிறார். இந்த வகையான நுட்பங்கள் ஆவணப்படத்தில்தான் வரமுடியும். சினிமாவில் அவை நடிப்பாகவே இருக்கும். இயல்பாக வராது.

ஆனந்த்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

செல்வக்குமார்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழா அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டது. மொத்த தமிழகத்தில் இருந்தும் இலக்கியம் வாசிக்கும் இத்தனைபெர் வந்து ஓர் இடத்தில் தங்கி சாப்பிட்டு இலக்கியம்பேசி கொண்டாடிவிட்டுச் செல்வதென்பது மிக மிக அரிதான நிகழ்வு. தமிழில் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்கின்றதா என்பதே சந்தேகம்தான்.

நான் விழாவில் திளைத்தேன் என்றுதான் சொல்லவேண்டும். அரங்குகளில் விவாதங்களைக் கேட்பது, வெளியே புத்தகங்களைத் துழாவுவது, புதிய நண்பர்களைக் கண்டடைவது எல்லாமே பெரிய கொண்டாட்டங்களாக இருந்தன. விழா முடிந்தபோது வந்த ஆறுதல் இனி கோவை புத்தகக் கண்காட்சி வரும், அதில் கொஞ்சம் திளைக்கலாம் என்பது மட்டும்தான்.

டைனமிக் நடராஜன்

விழாவில் நான் கண்ட குறை பல அறியப்பட்ட எழுத்தாளர்கள் அவையில் தொடர்ச்சியாக இல்லை என்பதுதான். அவர்களால் இன்னொருவர் பேசுவதைக் கேட்க முடியவில்லை. அவர்கள் வந்து அமர்ந்ததுமே எழுந்து சென்றார்கள். அல்லது முழுநேரமும் வெளியே நின்றிருந்தனர். ஓர் இளம் எழுத்தாளர் பேசும்போது அடுத்த தலைமுறை எழுத்தாளர் அவையில் இருந்து கவனிப்பதென்பது மிகமிக முக்கியமானது. இரண்டுபேருக்குமே அது உதவியானது. அவ்வாறுதான் தலைமுறைத் தொடர்ச்சி உருவாகிறது,

போகன், லக்ஷ்மி மணிவண்ணன், அமிர்தம் சூரியா, சு.வேணுகோபால் ஆகிய நால்வரும்தான் மெய்யான ஆர்வத்துடன் அத்தனை அரங்குகளிலும் இருந்து பங்களிப்பாற்றியவர்கள். அவர்களுக்கு எழுத்துமேல் இருக்கும் பேஷன் ஆச்சரியமானது. அவர்களைப்போன்றவர்களால்தான் இலக்கியம் வாழ்கிறது.

செந்தில்வேல்

விஷ்ணுபுரம் விழா-2

விஷ்ணுபுரம் விழா -1

அண்ணாச்சியுடன் இரண்டுநாள்- யோகேஸ்வரன் ராமநாதன்

முந்தைய கட்டுரையார் தருவார் எனக்கான ஓலைச் சிலுவையை ?
அடுத்த கட்டுரைடோட்டோ சான் – கடிதம்