ஆனந்த்குமார் ‘அணிலோசை’- மயிலாடுதுறை பிரபு

ஓடும் நீர்

துள்ளிப் பார்த்தது

ஒரு துளி காட்டை

 

சேர்ந்து பின்

செல்லுமிடமெல்லாம்

சலசலவென பேச்சு

 

-ஆனந்த்குமார்

அன்பின் ஜெயமோகன்,

ஊர் திரும்பியதும் விழாவில் நேற்று தன்னறம் அங்காடியில் வாங்கிய ‘’டிப் டிப் டிப்’’ கவிதைத் தொகுப்பை வாசிக்க எடுத்தேன். பின்னட்டையில் உள்ள உங்களுடைய வரிகளை வாசித்தேன். நேராக கவிதைகளுக்குள் செல்ல வேண்டும் என்று விரும்பினேன். எனினும் அது இயலவில்லை. தங்களுடைய ‘’மொக்கவிழ்தலின் தொடுகை’’யை வாசித்து விட்டு தொகுப்புக்குள் சென்றேன்.

கவிதை என்னும் நிகழ்வு அல்லது செயல் ஒரு பெருவியப்பெனில் அது காலந்தோறும் ஏன் கணந்தோறும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது என்பது அதனினும் பெரிய வியப்பு.

கவிஞர் ஆனந்த்குமார், வாசகன் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும் போதே அவனுக்குள் அவன் மனநிலையை அவன் புரிதலை அவன் வாழ்க்கைப் பார்வையை அற்புதமாக்கும் ரசவாதத்தைச் செய்து விடுகிறார். இந்தத் தொகுப்பைக் குறித்து எழுதும் போது தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளை இக்கடிதத்திலேயே எழுதி அது எனக்குள் உருவாக்கிய சலனங்களைக் குறிப்பிடுவது கவிதைத் தொகுப்புக்கு நான் செய்யும் நியாயமாகுமா என்ற கேள்வி எழுந்து இதனை எந்த வடிவத்தில் எழுதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. அதனை எழுத்துத் துவக்கமே முடிவு செய்யட்டும் என்று எழுதத் துவங்கினேன்.

ஒரு ஜென் கவிதை உண்டு.

 

நேற் றிரவும் அல்ல

இன்று பகலும் அல்ல

பூசணிப்பூக்கள்

மலர்ந்தது

 

இரவும் அல்லாத பகலும் அல்லாத இரவும் பகலும் மிக நுட்பமாய் சந்திக்கும் சந்தித்துக் கொள்ளும் கணம் ஒன்றில் மலர்கிறது ஒரு மலர். கவிதை என்பதை அத்தகைய நுட்பமான மென்மையான நிகழ்வாக அணுகும் ஒரு கவிதைப்பாணி உலகெங்கும் உள்ளது.

ஆனந்த்குமாரின் சொற்கள் இந்த உலகத்தை மேலும் அழகாக்குகின்றன. மேலும் மேலும் அழகாகும் சாத்தியங்கள் கொண்டது இவ்வுலகம் என்பதை மென்மையான மிக மென்மையான சொற்களில் உச்சரிக்கின்றன. காலை அந்தியில் ஒரு மண் சாலை மீது நிறைந்திருக்கும் மௌனமும் அந்த மண்சாலையின் இருபுறங்களிலும் பரவி விரிந்திருக்கும் நெல்வயல் வரப்புகளின் மீது வளர்ந்திருக்கும் புல்லின் நுனியில் கிரீடமாய் அமர்ந்திருக்கும் பனித் துளியும் இவற்றைத் தீண்ட வானிலிருந்து தன் கைகளை நீட்டும் சூரியனும் பட்சிகளும் சேர்ந்து சமைக்கும் பிரகிருதியின் சன்னிதானம் ஒவ்வொரு நாளும் நம் வாழிடத்திலோ அல்லது நம் வாழிடத்துக்கு மிக அருகிலோ அல்லது சற்று தொலைவிலோ அல்லது தொலைவிலோ நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அந்த சன்னிதானம் அனாதி காலமாக மானுடனை அங்கே வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறது.

தொகுப்பில் ‘’பலாப்பழம்’’ என்ற கவிதை.

 

பலாப்பழம்

——————-

 

வைத்துப் பார்த்திருந்து

ஒருநாள் பனிக்குடம் போல்

உடைந்தது அதன் மணம்

நாங்கள் அதை

வெட்டித் திறந்தோம்

வீடெல்லாம் தவழ்கிறது

அந்தப் பலாப்பழம்

 

ஒரு குட்டி டப்பாவில்

கொஞ்சம் அடைத்து

இப்போது உங்கள் வீட்டு

அழைப்பு மணியை

அழுத்துவது நான்தான்

 

உங்களுக்குச் சம்மதம் என்றால்

இவளை இங்கே கொஞ்சம்

விளையாட விடுகிறேன்

*

 

பலாப்பழ வாசனையை ஒரு பெண் குழந்தையாக்கும் கவி மனம் ஆனந்த்குமாருடையது.

ஆனந்த்குமாருடைய இன்னொரு கவிதை . இந்த கவிதையை வாசித்த போது இது தேவதேவனுடையதும் கூட என்று தோன்றியது.

 

என்னை

துயரடைய வைக்கும் சொல்

உன்னிடம் உண்டா

அப்படியாயின்

உன்னிடமே உண்டு

அத்தனை காதலும்

 

ஒளியின் துளிபோலும் ஒழுகாமல்

நீ முகிலாய்ச் சூழ

என்னிடமும் உண்டு

யுகயுகமாய் விரித்தெடுத்த வெம்மை

 

உன்னை

உள்ளிருந்து எரிக்கும் ஒன்று

எனது காட்டையும் எரிக்கிறது

இரண்டையும் சேர்த்தணைக்கும் நீரே

நான் தீராமல் பருகுவது

*

 

அன்புடன்,

பிரபு மயிலாடுதுறை   

டிப் டிப் டிப் வாங்க

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- ஷிமோகா பாலு
அடுத்த கட்டுரைசிகண்டி- விதையற்ற கனியின் வேர்ச்சுவை- ராஜகோபாலன்