அன்பும் மதிப்பும் மிக்க ஆசிரியருக்கு,
பல முறை தங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று எண்ணம் மனதில் எழும். நான் மிகவும் மதிக்கின்ற ஆளுமை தாங்கள் என்பதால் ஒரு பொழுதும் தங்களின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கக் கூடியதாக இருக்க கூடாது என்பதற்காக பலமுறை சிந்தித்த பிறகே எழுதுகிறேன்.ஈரோட்டில் நடைபெற்ற சில இலக்கிய கூட்டங்களில் தங்களை அருகாமையிலிருந்தும், தொலைவிலிருந்தும் பார்த்திருக்கிறேன். தங்களை நெருங்குவதற்கு அவ்வளவு தயக்கம் என்னுள் இருந்தது. “விஷ்ணுபுர இலக்கிய” விழாவில் இரண்டு முறை கலந்து கொண்ட பொழுதும் கூட தங்களின் பேச்சையும்,நிகழ்வையும் அரங்கின் கடைக்கோடியிலிருந்து கேட்டுக் கொண்டும், நிகழ்வை கவணித்துக் கொண்டும் இருந்திருக்கிறேன்.எப்பொழுதும் அந்த பேரறிவுப் பிரமாண்டத்தின் முன் நான் சிறு துரும்பு என்றே கருதுகிறவன்.
தங்களின் “தன்மீட்சி” நூல் வாசிப்பு அனுபவம் குறித்து ஒரு கட்டுரை எழுதி மதுரையில் சித்திரை முதல் நாளன்று நடைபெற்ற “கல்லெழும் விதை” நிகழ்வில் தங்களிடம் பரிசும் ஆசியும் பெற்ற அந்த கணம் அவ்வளவு நெஞ்சினிக்க கூடியதாக நினைவில் பதிந்திருக்கின்றது. சில வார்த்தைகள் பேசிவிட்டு தங்களின் தொலைபேசி எண் வழங்கினீர்கள். ஒரு நாள், ஒரு பொழுது, ஒரு கணம் என்றாலும் ஒரு மாணவனாக தங்கள் முன், தங்களின் எழுத்தின் முன் முழுமையாக ஒப்புக்கொடுத்த நாள் அது. முன்பே வாசித்திருந்த “வெள்ளையானையும்”, “இரவும்” மீண்டும் வாசிக்கையில் பிறிதொரு பரிமாணத்தைக் காட்டின.
ஒரு தனியார் கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கும் நான் மாணவர்களிடம் வாசிப்பு ஆர்வத்தை உருவாக்கவும், வளர்க்கவும் தங்களின் “அறம்” சிறுகதைகளை வகுப்பில் சொல்வதுண்டு, உண்மையில் கணிப்பொறியியல் ஆசிரியனான நான் அன்றைக்கான பாடங்கள் முடிந்தபிறகு பெருவிருப்பத்தோடு அதை செய்திருக்கிறேன். பிறகொரு சமயம் சில காரணங்களை முன்னிட்டு வேறு பணிகளுக்கு மாறலாம் என முடிவுசெய்த பொழுதும் கூட எனக்கான ”சொதர்மமாக” நான் கண்டறிந்த ஆசிரியப்பணியை விட்டு விலக மனம் ஒப்பவில்லை.. அதன் நீட்சியாகவே தமிழ் மொழியை பிழையற பேசவும், எழுதவும் குழந்தைகளுக்கு கற்றுத்தரும் எண்ணம் உதித்தது. என்றும் அன்பிற்குறிய வழிகாட்டிஅண்ணன் சிவராஜ் அவர்களின் மேலான வழிகாட்டுதலோடும், முதுகலை தமிழ் இலக்கியமும், இளங்கலை கல்வியியலும் படித்திருக்கின்ற என் மனைவி உமாமகேஸ்வரி அவர்களின் ஒத்துழைப்புடனும் ஒரு குருபூர்ணிமா தினத்தில் உங்களிடத்திலான என் மானசீக ஆசி வேண்டுதலோடு ஒரு பேரெண், ஒப்பற்ற, முடிவிலி என்கின்ற பொருள்படும்”அதுலம்” என்ற பெயரில் இணைய வழி தமிழ் கற்றல் மையம் அண்ணன் பழனியப்பன் ராமநாதன் அவர்களின் இரண்டு மகன்கள் ஆதிநாராயணன், மணிகண்டன் ஆகியோரை மாணாக்கர்களாகக் கொண்டு துவங்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழ்நாடு, வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என மாணவர்கள் பல இடங்களில் இருந்து வகுப்புக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.
வகுப்புகளுக்கு மாணவர்கள் வரத்துவங்கிய பிறகு நான் இன்னும் மொழியை தீவிரமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். யாப்பிலக்கணம் கற்றுக்கொள்ள சில இளைஞர்கள் வருகிறார்கள். சிறுகதை எழுதுவது குறித்து சிலர் பயிற்சியளிக்க கேட்டபொழுது தங்களின்”சிறுகதை ஒரு சமயற்குறிப்பு” படித்து விட்டு பயிற்சியளித்தேன். வகுப்பிற்கு வருகின்ற மாணவர்கள் பலரின் பெற்றோர் பலர் உங்களது வாசகர்களாக இருப்பதும் என்னோடு தொலைபேசியில் பேசும் பொழுது தங்கள் படைப்புகள் குறித்து உரையாடுவதும் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
யதார்த்தத்தில் தான் வாழும் வாழ்க்கைக்கும், தான் பேசும் மொழிக்கும் இடையேயான தூரம் என்பது குழந்தையின் மனநிலையில் குழப்பத்தைத் தரக்கூடியது. ஆகவே, தகுந்த திறன்பெற்ற ஓர் ஆசிரியர் வாயிலாகத் தாய்மொழியின் அடிப்படைகளை லயித்துக் கற்கும்பொழுது, ஓர் மொழியில் ஒளியடையும் ஆத்மவிளைவு அக்குழந்தைக்குப் புலப்படும். அதன்பின் அக்குழந்தை எல்லா மொழியையும் நேசிக்கத்துவங்கிவிடும். அதுலம்’ தமிழ் கற்றல் மையம், தமிழை ஆழமுறக் கற்பிப்பதற்கான பெருமுயற்சிப்பாதையில் தன்னை செலுத்திக்கொள்கிறது. இந்த முன்னெடுப்பிற்கான முயற்சியில் தங்கள் பங்களிப்பை வழங்கிய குக்கூ நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கும் இந்த கணம் இந்த முன்னெடுப்பு தொடரவும் அதுலம் மேலும் வளரவும் தங்கள் ஆசியை கோருகிறேன்.
ம.கோவர்த்தனன்
சு.உமாமகேஸ்வரி கோவர்த்தனன்
அதுலம் இணையவழி தமிழ் கற்றல் மையம்,ஈரோடு
8012361168, 9944484988