நம் நண்பர்கள் வெவ்வேறு அறக்கட்டளைகள், சேவை அமைப்புக்களுடன் தொடர்புகொண்டு பொதுப்பணிகள் செய்து வருகிறார்கள். அவை பெரிய நிறுவனமாக ஆகாமல், தனிநபர் சார்ந்த பணிகளாகவே நிகழவேண்டும் என்பது என் எண்ணம். ஒரு குறிப்பிட்ட தேவைக்கென மட்டுமே நிதி பெற்று அதை அதற்கு மட்டுமே செலவழிப்பதே அறக்கட்டளைகள் சீராகச் செயல்பட சிறந்த வழி.
நண்பர் ஷாகுல் ஹமீது அவர் செயல்படும் அறக்கட்டளையின் பொருட்டு இருளர்களைப் பற்றி ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். இருளர்களுக்காக… இத்தகைய செயல்பாடுகளுக்கு அரசுஅமைப்புகள், பெருநிறுவனங்களின் உதவி அமையாது என்பது என்னைப்போன்றவர்களின் பொதுவான நம்பிக்கை. ஆனால் அந்தப் பதிவு வெளியானதுமே அரசின் தலைமையில் இருந்து தொடர்பு கொண்டனர். ஆவன செய்வதாகச் சொன்னார்கள். அதன் அடிப்படையில் உதவ முன்வந்தவர்களிடம் பின்னர் வேறு கோரிக்கைகளுக்காக தொடர்பு கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு கூறியபடி உடனடியாக இருளர்களுக்காக கோரப்பட்ட 12 நிலப்பட்டாக்களும் நேரடி அரசு உதவியாகவே வழங்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் உடனடியாக வழங்க ஏற்பாடுகள் நிகழ்கின்றன. இது அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கை அல்ல, ஒரு பொதுக்கோரிக்கைதான். அதையே கருத்தில்கொண்டு இத்தனை விரைவில் ஆவன செய்தது நிறைவூட்டுகிறது.
இந்த அரசின் செயல்திறனுக்கான சான்றென இதைக் கொள்கிறேன். முன்பில்லாத ஓர் அக்கறை ஆட்சியாளர்களிடம் இருப்பதைக் காண்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி