ஊமைச்செந்நாய், சினிமாத் தலைப்பு

https://www.vishnupurampublications.com/

அன்புள்ள ஜெயமோகன்,

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத் தலைப்புக்கு ஜெயகாந்தன் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கும் செய்தியை பார்த்திருப்பீர்கள்.

மற்றொரு அதிர்ச்சியாக “ஊமைச்செந்நாய்” என்ற தலைப்பில் ஒரு படம் போன வாரம் வெளியாகி உள்ளது. அந்த தலைப்பை தற்போது கூகிள்ளில் தேடி பார்த்தால் முதலில் அந்த படமே காட்டுகிறது தங்களது பொன்னான படைப்பை பின்னுக்கு தள்ளி. இத்தனைக்கும் அந்த படத்திற்கு ஒரு விக்கி பேஜ் கூட கிடையாது. எங்கோ ஒரு சினிமா சைட்டில் இருந்து விபரம் எடுத்து அதை முதலில் போட்டுறிக்கிறா ர்கள். சினிமாவுக்கு சர்ச் வெப்சைட்கல் தரும் முன்னுரிமை மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஊமைச் செந்நாய் என்பது சாதாரண புழக்கத்தில் இருக்கும் வார்த்தை கிடையாது. தங்களிடம் அனுமதி பெற்றுள்ளார்களா? சட்டப்படி அவ்வாறு திரைபடத்திற்கு பெயர் வைக்கலாம் என்று இருந்தாலும், தங்கள் படைப்பை பின்னுக்கு தள்ளியது குறித்து வருத்தமே !

ஜெயகாந்தன்  குடும்பத்தினரின் கவலை இப்போது எனக்கு புரிகிறது. அவரது படைப்பை பின்னுக்கு தள்ளி விடுகிறது படம்.

அன்புடன்

சக்தி மதுரை

 

அன்புள்ள சக்தி,

சினிமா தயாரிப்பு நெறிகளின்படி அது குற்றம் அல்ல. பழைய சினிமாப் பெயர்களையே குறிப்பிட்ட காலம் கடந்தபின் வைக்கலாம். ஆயிரத்தில் ஒருவன் என்றால் பலருக்கு செல்வராகவன் படமே நினைவுக்கு வரும்.

ஏற்கனவே பல பெயர்கள் அப்படி பயன்படுத்தப்பட்டுள்ளன. வெகுஜன எழுத்தில் ஒரு கல்ட் கிளாஸிக் என்று சொல்லத்தக்க பொன்னியின் செல்வன் தலைப்பே வேறொரு படத்துக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

என்னுடைய அறம், வெள்ளை யானை உட்பட பல நூல்பெயர்கள் ஏற்கனவே சினிமாவுக்கு வைக்கப்பட்டுள்ளன. ஊமைச்செந்நாய் என பெயர் வைத்தவர்கள் என் பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்கவில்லை என நண்பர்கள் சொல்லி அறிந்தேன். இதழாளர்கள் கேட்டபோது  ‘2.0 எழுத்தாளரா, அவர் கதை எல்லாம் எழுதியிருக்கிறாரா?’ என இயக்குநர் வியந்ததாகச் சொன்னார்கள். எவரோ இணையத்தில் எங்கிருந்தோ தேடிச் சொல்ல, நன்றாக இருக்கிறதே சரி இருக்கட்டும் என்று வைத்திருப்பார்கள். படமும் அதற்கேற்ப அசட்டுத்தனமாகவே எடுக்கப்பட்டிருக்கிறது.

நான் இதைப் பொருட்படுத்துவதில்லை. இலக்கியம் நீண்டகாலம் நிலைநிற்பது. சினிமா சிலகாலமே நிலைநிற்கும்- அது ஒரு மாபெரும் வெற்றிப்படம், கிளாஸிக் என்றாலும்கூட, ஒரு தலைமுறையைக் கடக்காது. ஏனென்றால் அது ஒரு காலகட்டத்தின் ரசனைக்கேற்ப, அக்காலத்து மக்களைக் கவரும்பொருட்டு எடுக்கப்படுகிறது. இலக்கியம் என்றுமுள்ள சில உணர்வுகளை தொடுகிறது, சில வினாக்களை எழுப்புகிறது, சில படிமங்களை உருவாக்குகிறது

[அரிதான விதிவிலக்கு தில்லானா மோகனாம்பாள். சினிமா அந்த நாவலை கடந்து நிலைகொண்டுவிட்டது]

சினிமாவின் தற்காலிக கவனக்கலைப்பைக் கடந்து என்  கதைகள் நிலைகொள்ளும் என்றே நம்புகிறேன். அவ்வண்ணம் நிலைகொள்ளும் படைப்பு மட்டும் என்னுடையதென எஞ்சினால் போதும். காலத்தின் ரசாயனச் சோதனையை படைப்புகள் தாண்டவேண்டும். காலம் உருவாக்கும் சோதனைகளில் ஒன்றுதான் இதுவும்.

யோசித்துப் பாருங்கள், பொன்னியின் செல்வன் என்று ஒரு சினிமா வந்ததை நீங்கள் நினைவுறுகிறீர்களா என்ன?

ஜெ

ஊமைச்செந்நாய்- கடிதம்

ஊமைச்செந்நாய் மலையாளத்தில்…

ஊமைச்செந்நாய் – மலையாளத்தில்

ஊமைச்செந்நாய்- ஒரு கடிதம்

“ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்

ஊமைச்செந்நாய் -வாசகர் கடிதம்

ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்

ஊமைச்செந்நாய் (சிறுகதைத்தொகுப்பு)

ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்

ஊமைச்செந்நாய், கடிதங்கள் மீண்டும்

ஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும்

ஊமைச்செந்நாய்:மேலும் கடிதங்கள்

ஊமைச்செந்நாய்:கடிதங்கள்

முந்தைய கட்டுரைஇருளர்களுக்கு நிலம்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்