விக்கிப்பீடியா போன்ற ஒரு பெரிய தளம் நவீனத் தமிழிலக்கியத்திற்கான தரவுத்தொகுதியாக அமைய முடியும். ஆனால் அங்கே ஒரு பெரும் புல்லுருவிக்கூட்டம் அமர்ந்திருக்கிறது. எதையுமே வாசிப்பவர்கள் அல்ல. எதைப்பற்றியும் அடிப்படை அறிவுகொண்டவர்களும் அல்ல. ஆனால் நவீன இலக்கியம் மீது பெரும் காழ்ப்புடன் இருக்கிறார்கள்.
இவர்கள் ஒரு வரிகூட எழுதமாட்டார்கள். ஆனால் வெறிகொண்டவர்கள் போல தரவுகளை அழிக்கிறார்கள். திரிக்கிறார்கள். தமிழுக்கு நவீனத் தொழில்நுட்பம் அளிக்கும் வாய்ப்புகளை தடுக்கிறார்கள். நேற்று தரவுகளை அழித்த ஆள் ஒரு டாக்டர். தமிழில் எழுதும் எந்த எழுத்தாளரையும் அவருக்கு தெரியவில்லை. என் பெயர் மட்டுமல்ல,வேறெந்த எழுத்தாளரின் பெயரும்.
இதை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. விக்கிபீடியாவின் செயல்முறை இது. அதில் எவரும் பங்களிப்பாற்றலாம். ஆகவே எதையுமே அறியாத மண்ணாந்தைகள்தான் பெருவாரியாக உள்ளே செல்கின்றன. மொழி தெரியாது. கலாச்சாரம் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தத குப்பைகளை நிரப்புகிறார்கள். அவர்களுக்கு புரியாதவற்றை அழிக்கிறார்கள். அவர்கள் நம்பும் அறிவுகெட்ட கொள்கைகளைக் கொண்டு அத்தனை அறிவுச்செயல்பாடுகளையும் மாற்றியமைக்கிறார்கள்.
ஏற்கனவே ம.நவீன் இவர்களின் செயல்பாடுகளை கண்டித்திருக்கிறார். அதற்கு முன்னர் நான் பலமுறை எழுதியிருக்கிறேன். [ ஒருநாள் இந்த அயோக்கியர்களின் பெயர்களையும் தகவல்களையும் சேகரித்து வெளியிடவேண்டும் என்று இருக்கிறேன். வருந்தலைமுறை இவர்கள் செய்வதென்ன என்று அறியட்டும்.]
நான் விக்கியை இலவசமாக பயன்படுத்துபவன் அல்ல, பல ஆயிரம் ரூபாய் ஆண்டுதோறும் நன்கொடை அளிப்பவன். என் குடும்பத்தின் எல்லா உறுப்பினர்களும் தனித்தனியாக நன்கொடை அளிக்கிறார்கள். ஆனால் இந்த நச்சுக்கும்பல் அழிப்பதற்கே அதில் தொற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய சூழலில் இந்தக் கூட்டத்திடம் நாம் போரிட முடியாது. அசடுகள் ஒருபக்கம் இருக்க, மிகச்சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட மொழியறியாத மொழியடிப்படைவாதக் கும்பல் ஒன்றும் விக்கிப்பீடியாவை கைப்பற்றி வைத்திருக்கிறது. ஆகவே இதற்கு மாற்றுவழிகளைத்தான் கண்டடையவேண்டும்
பங்க்ளாப்பீடியா என்னும் இணையதளம் ஒன்று உள்ளது. வங்க இலக்கியம், பண்பாடு பற்றிய பிழையற்ற அதிகாரபூர்வமான தரவுகள் அதில் உள்ளன. குறைந்தபட்சம் நவீனத் தமிழிலக்கியத்திற்கு மட்டுமாவது அவ்வாறு ஒன்றை உருவாக்கவேண்டும். இதைப்போல காழ்ப்புக்கும்பல் செய்யும் ஒவ்வொரு அழிவுவேலையில் இருந்தும் புதிய பெருஞ்செயல் நோக்கி எழும் அறைகூவலையே நான் பெற்றிருக்கிறேன். இம்முறையும் அவ்வாறே எண்ணுகிறேன்.
விக்கிபீடியாவின் அதே டெம்ப்ளேட்டில் நவீனத் தமிழிலக்கியம் சார்ந்த நூல்கள், ஆசிரியர்கள், அமைப்புகள், செய்திகளை தொகுக்கும் ஒரு தளம் அமைவது அவசியம் என்று நினைக்கிறேன். குறிப்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும். தொடர்ச்சியாக எழுதும் இருபது நண்பர்கள் இருந்தால், ஐந்தாண்டுகளில் முழுமையான ஒரு தரவுத்தளத்தை உருவாக்கிவிட முடியும். அது இன்றைய காலகட்டத்தின் தேவை. இல்லையேல் இந்த வைரஸ்கள் நம் இருப்பையே அழித்துவிடுவார்கள்.