திட்டங்கள் என்ன?

அன்புள்ள ஜெ.,

என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்? ஐந்தாண்டுத் திட்டம் போல எதுவும் உள்ளதா?

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்   

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,

ஐந்தாண்டு? முன்பெல்லாம் எனக்கு ஐம்பதாண்டு திட்டங்கள்தான் இருந்தன. பின்னர் இருபதாண்டுத் திட்டங்கள். பின்னர் பத்தாண்டுத்திட்டங்கள். இனிமேல் ஐந்தாண்டுக்கு திட்டமிடவேண்டுமோ?

என் ஐம்பதாண்டுக்காலத் திட்டம் என்பது வெண்முரசு. அதை முடித்துவிட்டேன். அது பி.கே.பாலகிருஷ்ணனிடம் சொன்னது. இலக்கியத்துக்கு என ஓர் இயக்கம், ஓர் அமைப்பு என்பது இன்னொரு ஐம்பதாண்டுகாலத் திட்டம். அது எம்.கோவிந்தனிடம் சொன்ன ஒருவகை வஞ்சினம். அதையும் செய்துவிட்டேன். அதை மேலும் செம்மை செய்யவேண்டும் என்பதே எஞ்சியிருக்கிறது. வரும் ஆண்டில் அது இன்னும் விரிவடையும். ஆனால் அதில் நான் ஆற்றவேண்டிய பணி கொஞ்சமே. என்னைவிட ஆற்றல் மிக்கவர்களிடம் அது சென்றுவிட்டது.

அரைகுறையாக நின்றிருக்கும் இரு வேலைகள், ஒன்று அசோகவனம். இன்னொன்று கீதை உரை. அவற்றை முழுமைசெய்யவேண்டும். அதைத்தான் வரும் ஆண்டுக்கான திட்டமாக வைத்திருக்கிறேன்.

இவ்வாண்டு தமிழுக்கு என ஓர் இணையக் கலைக்களஞ்சியம் உருவாகும். விக்கிப்பீடியாவை விட அதிகாரபூர்வமானதாக. பிழையற்றதாக. அதற்கும் உரிய நண்பர்களை ஒருங்கிணைத்துவிட்டேன்.

தமிழ் நாட்டார்தெய்வங்களாலான ஒரு நாவல், ஒரு புராணம் என்றும் சொல்லலாம், எழுதவேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறது. அதன் வரைவை இலங்கை நாடகப்பேராசிரியர் மௌனகுரு அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். அதன்பொருட்டு இருபதாண்டுகளாக சேர்த்த ஆய்வுகள் உள்ளன. அறிஞர் தொடர்புகள் உள்ளன. அவை வேறுநூல்களும் ஆகியிருக்கின்றன. ஆனால் தொடக்கமென ஒன்றும் நிகழவில்லை. நிகழ்ந்தால் நல்லது. இல்லையேல் ஒன்றும் குறையில்லை. இப்போதைக்கு தென்திசை வலம் என்னும் பெயர் மட்டுமே கையில் இருக்கிறது.

எந்தத் திட்டமும் இல்லாமல் எழுதியவை சமீபத்திய நூற்றுநாற்பது கதைகள். மூன்று சிறுநாவல்கள். அதைப்போல தன்னிச்சையாக ஏதாவது புனைவெழுத்து தோன்றினால் எழுதலாமென எண்ணியிருக்கிறேன். புனைவெழுத்து என ஏதும் எழுதவில்லை என்றாலும் இனி ஒன்றும் குறைவில்லை. என் அகம் சென்றிருக்கும் இடம் புனைவுக்கு மிகமிக அப்பால். புனைவை எளிய மானுடவிளையாட்டெனப் பார்க்கும் சில உச்சங்கள் வாய்த்துள்ளன.

மற்றபடி பெருந்திட்டங்கள் ஏதுமில்லை. எல்லாவற்றையும் விட்டு விலகவேண்டும் என்ற விசைதான் உண்மையில் வலுவாக உள்ளது. அதை இப்பக்கம் இழுத்து இன்னும் இரு என வைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது மெய்யாகவே ஆர்வமிருப்பது அடுத்த தலைமுறையினரில் இருந்து வருபவர்களைப் பற்றித்தான். இலக்கியம், சமூகப்பணி ஆகியவற்றில் அடுத்த ஐம்பதாண்டுகளில் சாதிக்கக்கூடியவர்களை அறியவேண்டும் என்று, அவர்களிடம் பேசவேண்டும் என்று விரும்புகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- பாவண்ணன்
அடுத்த கட்டுரைஅருண்மொழிநங்கை நூல் வெளியீட்டு விழா-ஒத்திவைப்பு