குமரித்துறைவி பற்றி…

நல் எழுத்துக்களால் நெகிழ்ந்து உளம் கரைந்து அழுவது ஒரு இனிய வரம்.அப்படியோரு தருணம் சமீபத்தில் குமரித்துறைவி என்ற குறுநாவல் வாசிக்கையில் ஏற்பட்டது. வெகு நாட்கள் கழித்து முழுக்க நேர்மறை நினைவுகளை நெஞ்சில் விதைத்த எழுத்து.

நாவல் மதுரை மீனாட்சி பற்றியது. ஒரு படையெடுப்பிலிருந்து காப்பதற்காக மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் திருச்சிலைகள் பாண்டிய நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு வேணாட்டிலிருக்கும் ஆரல்வாய்மொழியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. 69 வருடங்களுக்கு பிறகு மதுரையில் நாயக்கர் ஆட்சியில் அமைதி திரும்புகிறது. மக்கள் தங்கள் அன்னை மீண்டும் நகர் திரும்ப கோருகிறார்கள். மகாமங்கலையான மீனாட்சியினை வேணாட்டு மக்கள் தங்கள் மகளென பாவித்து மதுரை வாழ் சொக்கனுக்கு மணமுடித்து அனுப்புவதே கதை சாரம்.

இதற்குள் நிகழும் மனித மன உணர்ச்சிகளே கதையின் அடி நாதம்.மீனாட்சி என்றுமே என் மனதிற்கு இனியவள்.நான் விரும்பும் பரிபூரண பெண்மை அவள் இருப்பு.அவள் வெவ்வேறு வடிவங்களில் நம் இல்லங்களில் வாழ்கிறாள். நம் மகளென அன்னையென நம்மை காக்கிறாள்.

நாவலில் ஓர் உரையாடல் வரும். “இவள் தெய்வம் தான் ஆனால் எனக்கு செல்ல குட்டி மகளாட்டம் தெரியறா சாமி. இது தப்பா சாமி? ” என்று.அதற்கு பதிலாக அப்படி தோண்றாவிட்டால் தான் தப்பு என்று சொல்லப்படும். எனக்கும் அப்படி தான் தோன்றியது. அவள் சன்னதியில் ,அந்த அகல் விளக்கொளியில் அவளை மிக நெருக்கத்தில் பார்த்த போது எனக்கு அவள் ஒரு செல்ல மகளாக தான் தோன்றினாள். அதனால் தான் சட்டென்று அம்மையே என்னோட வீட்டுக்கு வா என்று தான் வேண்ட தோன்றியது. ஒவ்வொரு முறை என் மகளை பார்க்கும் போதும் மீனாட்சியாக தான் அவள் கண் நிறைக்கிறாள்.அதனால் தான் இந்த எழுத்து என்னை காலத்தில் முன்னோக்கி கொண்டு சென்றுவிட்டது.

என் ஒவ்வொரு உணர்விலும் நிறைந்திருந்தது என் மகள் மட்டுமே. நான் நெகிழ்ந்த அத்தனை தருணங்களும் அவளுக்காகவே.நிறைய காலம் இருக்கிறது. ஆனால் என்றாயினும் என் மீனாட்சியும் அவள் சொக்கன் இல்லம் செல்ல தானே வேண்டும்?இத்தனை உணர்வுகளுக்கும்,நல்ல எழுத்துக்கும் நன்றி ஜெயமோகன்

திவ்யா சுகுமார்

குமரித்துறைவி நாவலை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். அதன் சரித்திரப்பின்னணி பற்றி எனக்கு தெரியாது. அந்தக் கலாச்சாரமே பழக்கமில்லை. ஆனால் கண்ணீர் வழிய அந்நாவலை வாசித்துக்கொண்டே இருந்தேன். ஏன் அப்படி கண்ணீர் வழிகிறது என்றே தெரியவில்லை. நாவலில் எதிர்மறையாக ஒரு வார்த்தைகூட இல்லை. சோகத்தருணமே இல்லை. கொண்டாட்டம் மட்டும்தான். சிறமடம் நம்பூதிரி பேச ஆரம்பித்த இடத்திலே உருவான கண்ணீர்.

பக்தி என்று இதைச் சொல்லமுடியாது. எனக்கு மதநம்பிக்கையெல்லாம் இல்லை. என்னுடைய கண்ணீர் நான் மனிதனின் மேன்மை மிகுந்த பக்கங்களில் சிலவற்றை இந்த நாவலில் கண்டடைந்தேன் என்பதனால்தான். நெருக்கமான உறவினர் ஒருவருக்கு உடல் நலமில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்தார். பார்க்கப்போகும்போது என்ன கொண்டுபோகலாம் என்று சிந்தித்து இந்நாவலை வாங்கி கொண்டுசென்று அளித்தேன். “நம்பிக்கையையும் நிறைவையும் அளிக்கிற நூல். இப்போது இந்நாவல்தான் உங்களுக்குத்தேவை” என்று எழுதிக்கொடுத்தேன்.

அவர் மூன்றுநாட்களுக்குப்பின் ஃபோனில் சொன்னார். தினசரி காலை அதை படிப்பதாக. மூன்றுமுறை படித்துவிட்டேன் என்று சொன்னார். குமரித்துறைவி போல வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் காட்டும் இன்னொரு நாவலே இல்லை. நூறு அறம் சிறுகதைகளுக்குச் சமம் இது

ராஜ்கண்ணன்

ஜெயமோகன் நூல்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

முந்தைய கட்டுரைஜப்பான்- ஒரு கீற்றோவியம்-தமிழ்செல்வன் இரத்தினம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- கடிதங்கள் 10