சின்ன வீரபத்ருடு, கடிதங்கள்-5

 

சின்ன வீரபத்ருடு கவிதைகள்-5

அன்புள்ள ஜெ

சின்ன வீரபத்ருடுவின் கவிதைகளை வாசிக்கிறேன். உண்மையில் அக்கவிதைகளைப் பற்றிய கடிதங்கள் வர ஆரம்பித்த பிறகுதான் அவை எனக்குப் பிடிபட ஆரம்பித்தன. அவற்றை வாசிப்பதற்கான mode பிடிகிடைத்தது.அதன்பின்னர் கவிதைகள் சரசரவென திறந்துகொண்டன. கவிதை வாசிப்பிலேதான் நாம் இந்த அளவுக்கு கான்சர்வேட்டிவ் மற்றும் யூஷுவல் ஆக முடியும். ஏனென்றால் நாம் கவிதையை மிகவும் அன்கான்ஷியஸ் ஆகத்தான் வாசிக்கிறோம். நான் நினைப்பதுண்டு. கிரிக்கெட்டில் காட்ச் பிடிப்பதுபோலத்தான் கவிதை வாசிப்பு. நிறைய பிராக்டீஸ் வேணும். ஆனால் ஆட்டமாடிக் ரிஃப்ளக்‌ஷனாகத்தான் காட்ச் பிடிக்க முடியும்.

சின்ன வீரபத்ருடுவின் இந்தக்கவிதைகளில் கவிதை, சொல், படிமம் எல்லாம் உருவாகி வரும் விதம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில் அன்கான்ஷியஸில் இருந்து மொழியும் இந்த புறவுலகமும் உருவாகி வருவதைத்தான் எழுதியிருக்கிறார். ஆகவே மூன்று கவிதைகளும் சேர்ந்து ஒரே கவிதைபோல ஆகியிருக்கின்றன. கடலை சலித்தெடுக்கும் மீனவன் போல பகல் முழுக்க வார்த்தைக்கான தேடல். ஆனால் இரவில் நிலவொளி பெய்கிறது. பகலில் குளமென்றாகி அலையடிக்கிறது. அன்கான்ஷியஸ் மொழியாக ஆவதைப்பற்றிய மிகச்சிறந்த உவமை இது. ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். இரவில் கனவின் ஆழத்தில் பெய்யும் ஒரு வகை ஒளியின் விரிவுதான் பகல் என்று தோன்றும். இந்த நனவு என்பது நம் கனவின் விரிவான வடிவம் என்று கவிதை ஒன்று உண்டு.

அற்புதமான ஒரு முடிவுபோல் இருக்கிறது சுப்ரபாதம் என்னும் கவிதை. அதிகாலையில் அது கேட்கிறது. நாளை தொடங்கி வைக்கிறது. ஆனால் நாளுடன் இணைவதில்லை. இரவில் மீண்டும் அது ஒலிக்கிறது. அந்தியில் அது ஒரு நாளை தொடங்கிவைக்கிறது. அதிகாலை கருக்கிருட்டில் என்னை கட்டி இழுத்தக் கொடிபின்னிரவில் பூக்கிறது. அந்த நறுமணம் என்ன என்று இரவெல்லாம் மனம் அலைகொள்கிறது.

இன்று முழுக்க இக்கவிதைகள் அப்படி உடனிருக்கும்

சுந்தர்ராஜன் மகாதேவன்

 

அன்புள்ள ஜெ

சின்ன வீரபத்ருடுவின் கவிதைகளை புரிந்துகொள்ள அவற்றை நாம் அறிந்த கவிதையின் டிக்‌ஷனுக்குள் மீண்டும் அமைக்க வேண்டியிருக்கிறது. பருவங்களின் மாற்றங்களை ஏன் கவிஞன் கவனிக்கிறான்? வெறிகொண்டு காலத்தை சல்லடைப் போடுவதெல்லாம்

உன் கவிதைக்கு ஒரு புதிய உவமை தோன்றுவதற்காகத்தானே? ஆனால் முக்கியமானது, அந்த உவமை எதைப்பற்றி? பருவங்கள் மாறுவதன் வழியாக தன்னை இங்கே நிகழ்த்திக்காட்டும் ஏதோ ஒன்றைப்பற்றிப் பேசுவதற்காகத்தானே? அல்லது அதைச் சொல்லிவிடுவதற்காகத்தானே? காலத்தின் இசையை சகடையில் நூல்கண்டை சுற்றி எடுப்பது ஒரு அபாரமான உவமை. அதைப்போல பல ஆயிரம் உவமைகளால் சொல்லியும் தீராமல் மிஞ்சுவதைச் சொல்வதற்கான ஓர் உவமை, சரிதானே?

ஸ்ரீனிவாஸ்

சின்ன வீரபத்ருடு -கடிதங்கள் 2

சின்ன வீரபத்ருடு – கடிதங்கள் 1


தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு

சின்ன வீரபத்ருடு கவிதைகள்

சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2

சின்ன வீரபத்ருடு கவிதைகள் -3

சின்ன வீரபத்ருடு கவிதைகள் -4

முந்தைய கட்டுரைஆழத்தின் விதிகள் – விஷால் ராஜா
அடுத்த கட்டுரைதிருச்செந்தாழை கதைகள் பற்றி…