சின்ன வீரபத்ருடு- கடிதங்கள் 3

சின்ன வீரபத்ருடு கவிதைகள்-4

அன்புள்ள ஜெ

தெலுங்கில் இருந்து ஆங்கிலம் வழியாக ஒரு கவிதை தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படும்போது என்ன இழப்புகள் உருவாகுமென தெரிகிறது. சொல்லாட்சிகள், மொழியழகு எல்லாமே போய்விடும். மூலத்தில் என்ன வகையாக அக்கவிதை இருந்திருக்கும் என்றுகூடச் சொல்லமுடியாது. ஆனாலும் கவிதை ஏதோ ஒரு வகையில் எஞ்சிவிடுகிறது. அழகான ஒரு பெண்ணின் படம் தினத்தந்தி புகைப்படத்திலேயே அந்த அழகென்ன என்று காட்டிவிடும்.

இன்றுவந்த கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இடிமுழக்கம் சொன்னதென்ன என்ற கவிதை ஒரு அக அசைவை உருவாக்கிவிட்டது. மாமரத்தின் அடியில் தூங்கிக்கொண்டிருப்பவனை சித்திரை மாதம் கோடையின் முதல் இடியோசை எழுப்பிவிடுகிறது. முதல் இடியோசை என்பது ஒரு மகத்தான அனுபவம். தமிழில் எவராவது அதை எழுதியிருக்கிறார்களா? மாவோ அவருடைய பல கவிதைகளில் அதைச் சொல்லியிருக்கிறார். சீனக்கவிதைகளிலும் ஜப்பானியக் கவிதைகளிலும் அடிக்கடி வருகிறது.

அந்த இடியோசையை அவர் சொல்லியிருக்கும் அடுக்கு சுவாரசியமானது. மழையில் முதல் காளான் முளைப்பது போல அவ்வளவு மென்மையாக, மெதுவாக தொடங்கி கதவுகள் அடித்துக்கொள்வதுபோல அவ்வளவு படபடப்பாக அது மாறுகிறது.

இடியை ஒரு பூமரத்தின் மேல் வண்டுகள் முனகும் ஒலியுடன் ஒப்பிடுவது கவிதை உருவாக்கும் விந்தைதான். ஆதித்தொல்மொழியில் அர்த்தமுள்ள ஓர் உரையாடலை நிகழ்த்தியபின் அமைதியடையவேண்டும் என்கிறது கவிதை. அந்த அர்த்தம் ஒரு நறுமணம் போல எஞ்சிவிடுகிறது. அவ்வளவு ஓசையில்லாததாக. அற்புதமான கவிதை

ஸ்ரீனிவாஸ்

 

அன்புள்ள ஜெ,

சின்ன வீரபத்ருடு அவர்களின் மகாபலிபுரம் கவிதை எனக்கு ரொம்ப பிரத்யேகமான ஒன்று. நான் முதன்முதலாக 1992ல் மகாபலிபுரம் கோயில்களைப் பார்க்கும்போது அவை அச்சிடப்பட்ட கவிதைவரிகள் போல இருந்தன. அதை நான் சொன்னபோது என் நண்பர்கள் சிரித்தனர். அந்த மேலே இருக்கும் கல்குமடு ஒரு கவிதையின் தலைப்பு மாதிரி. கீழே அடுக்கடுக்காக வரிகள். கடல் ஒரு நீலநிற நோட்டுப்புத்தகப் பக்கம் போல அந்த வரிகளை அதில் அச்சிட்டிருக்கிறது.

சின்ன வீரபத்ருடு அந்த கோயில்களை கவிதை என்று சொன்னபோது எனக்கு ஒரு சிலிர்ப்பு உருவானது. வார்த்தை வார்த்தையாக கவிதை எழுதுவதுபோல சொல் சொல்லாக காலத்தில் அடுக்கப்பட்ட கவிதை என்கிறார். கவிதை தொடர்ந்து எதிரொலிக்கிறது. அதை பொருள்கொள்ள
யார் வருகிறார்கள் என்று சொல்கிறார். அங்கே வந்துகொண்டே இருக்கிறார்கள். அனைவருக்கும் கொஞ்சம் அர்த்தம் கிடைக்கிறது. முழு அர்த்தமும் எவருக்கும் கிடைப்பதில்லை.

சிவராம் கே

சின்ன வீரபத்ருடு – கடிதங்கள்

தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு

சின்ன வீரபத்ருடு கவிதைகள்

சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2

சின்ன வீரபத்ருடு கவிதைகள் -3

 

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன் ஆவணப்பட முன்னோட்டம்
அடுத்த கட்டுரைஜா.தீபா பற்றி கல்பனா ஜெயகாந்த்