ரொம்பப் பெரிய தனவந்தர்கள் இல்லை. சற்றே வசதியான குடும்பம், அவ்வளவுதான். ஆனால், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் ஆளுமையின் மதிப்பையும், அவருடைய முக்கியத்துவத்தையும் அவர்கள் உளமாற உணர்ந்திருந்தனர். அதுதான் இந்நற்செயல்களுக்கான உத்வேகமாக உருக்கொண்டிருக்கிறது. “ஜீவா நினைவைப் போற்றும் வகையில் அவர் ஈடுபாடு காட்டிய, ஒவ்வொரு விஷயத்திலும் காரியங்கள் தொடர எங்களால் ஆனதைச் செய்திருக்கிறோம். இது ஜீவாவின் நினைவகமாக மட்டுமல்லாமல், அவர் விட்டுச்சென்ற பணிகளுக்கான உயிரகமாகவும் இருக்க வேண்டும்” என்றார் அவர் தங்கை ஜெயபாரதி.
ஜீவா நினைவேந்தல்: ஆளுமைக்கு மரியாதை
நீண்ட கால உறவு என்று சொல்லிட முடியாது. ஐந்து ஆண்டுகளுக்குள்ளாகத்தான் ஜீவாவும் நானும் அவ்வளவு நெருக்கமாகிப்போனோம். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் அவருடைய பணிகள் வாயிலாக அவரை நான் அறிந்திருந்தேன்; என்னை அவர் என் எழுத்துகள் வாயிலாக அறிந்திருந்தார். சில சமயங்களில் செல்பேசி வழியாகப் பேசியிருந்தோம்.