வசந்த், மாற்று சினிமா- கடிதங்கள்

வசந்த், மாற்று சினிமா- கடிதம்

இன்று ஜெ தளத்தில் சிவரஞ்சனியும் சில பெண்களும் திரைப்படம் குறித்த யெஸ், ராம்குமார் அவர்களின் பார்வை முக்கியமானது. அதே சமயம் சில எல்லைகளையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக கீழ் கண்ட வரிகளில் அந்த எல்லை துலங்குவதைக் காணலாம்.

சிவரஞ்சனியும்… படத்திலுள்ள கண்டெண்ட் மேல் எனக்கு சிறு விமர்சனம் உண்டு. அந்த படங்கள் மூன்றுமே கொஞ்சம் முற்போக்குப் பெண்ணியமாக முடிக்கப்பட்டுள்ளன. அது ஆசிரியரின் குரல்…இலக்கியம்போலவே சினிமாவுக்கும் சப்டெக்ஸ்ட் முக்கியமானது என்பது என் கருத்து.

‘இலக்கிய வாசகனாக’ நின்று கலைச் சினிமாவை ரசனை மதிப்பபீடு செய்வதால் உருவாகும் எல்லை இது. இலக்கியத்தை அடிப்படையாக கொண்ட மாற்று சினிமா என்பது மொழி வெளிப்பாடான அந்த இலக்கியத்தை ‘அப்படியே’ காட்சியாக மாற்றிக் காட்ட வந்த ஒன்று அல்ல. ஏன் ஓவியத்தையோ இசையையோ நாடகத்தையோ கூட அப்படியே காட்சியாக ‘காட்ட’ வந்த ஒன்று அல்ல.

‘தன்னுடைய’ ‘சினிமா எனும் தனித்த கலைக்கு’ அதன் உயிர்ப்பொருளுக்கான அடிப்படையை உருவாக்க அவ்வியக்குனர் ஓவியம், நாடகம், இசை, இலக்கியம் இவற்றில் இருந்தெல்லாம் எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டும் எடுத்துக் கொள்கிறார். சிலவற்றை மறு வார்ப்பு செய்கிறார். அப்படித்தான் சினிமா ‘இயக்குனர்’ கலை என்று மாறுகிறது.

இந்த மறு வார்ப்பில் கேளிக்கை சினிமா ஓடை கோருவது எதுவோ அப்படி மறு வார்ப்பு செய்யப்பட்ட இலக்கிய கதையை கொண்ட படம் அசுரன் எனக் கொண்டால், கலைச் சினிமா ஓடை கோரும் (அங்கேயும் கணக்குகள் உண்டு. உதாரணமாக வெற்றி மாறனின் விசாரணை எந்த ‘பிரிவில்’ இடம் பெற்றது என்பதை அவதானிப்பதில் இருந்து அறியலாம். அந்த மாற்று ஓடைக்கும் அது வெளியாகும் பிளாட்பாரம் களில் ‘லேபில்கள்’ உண்டு. அந்த லேபில்களை ஒப்பு கொள்ளும்படி படம் இருக்க வேண்டியது அந்த ஓடையின் வணிக விதி)   மறு வார்ப்பு எதுவோ அதையே வசந்த்தும் செய்திருக்கிறார். அந்த விதிகளுக்கு உட்பட்டு அதே சமயம் ‘over do’ செய்யாமல் ஒரு கலைப்படம் எடுத்திருக்கிறார் வசந்த்.

இந்த அடிப்படையில் இந்த சினிமாவைப் பார்க்கும் போது மூல இலக்கியத்தில் வெளிப்படும் ‘அதே’ சப் டெக்ஸ்ட் இதில் வெளிப்படா விட்டாலும், இந்தக் கலைப்படம் ‘காட்சி வழியே’ பொதிந்து வைத்துள்ள சப் டெக்ஸ்ட் என்பதும் முக்கியமானதே.

உதாரணமாக முதல் கதையில் நெருப்பு உக்கிரமாக எரிய, அதை கக்கும் புகை போக்கி கொண்ட ஆலையும் சரஸ்வதியும் சில் அவுட் இல் நிற்கும் காட்சி.

இரண்டாம் கதையில் முதலில் வீட்டுக்கு உள்ளே மாடியில்  பரண் மேல் இருளில் யார் கண்ணிலும் படாமல் கிடக்கும் பந்து இறுதியில் தெருவில்  கிடக்கும் காட்சி.

மூன்றாம் கதையில் நாயகி தான் ஓடிய பிரம்மாண்ட மைதானத்திலிருந்து புழுதி அடைந்த குடோனில் வந்து அமர்ந்திருக்கும் காட்சி. அவள் இருக்கும் வீட்டின் கதவு ஒரு கிளி  கூண்டின் கதவு போலவே இருப்பது, இப்படி படத்திலிருந்து நிறைய சொல்லிக்கொண்டே போக முடியும். இப்படி எல்லா வகையிலும் இப்படம் உலக அரங்கில் தமிழ் நிலத்திலிருந்து ஒரு படம்  என்று முன்வைக்க மரியாதைக்குரிய முன்னோடி முயற்சிதான்.

எனினும், இது இவ்வாறாக இப்படி ஒரு உரையாடல் நிகழ வேண்டும் என்றாலும் கூட அதற்கு இன்று தமிழில் இருக்கும் ஒரே வெளி jeyamohan. in தளம் மட்டுமே. விஷ்ணுபுரம் நண்பர்கள் கூடி, டு லெட், மாடத்தி, கூழாங்கல், சிவரஞ்சனி இந்த நான்கு படங்களின் இயக்குனர்களை ஒரு மேடையில் அமர்த்தி அவர்களுக்கு ஒரு நாள் ரசனை விமர்சன அரங்கத்தோடு இணைந்த பாராட்டு விழா ஒன்றை எடுக்க முயலலாம். ஜெயகாந்தன் உள்ளிட்ட தமிழின் கலைச்சினிமா முன்னோடிகள் குறித்து அங்கே பேசலாம்.  யார் அறிவார், தமிழின் மாற்று சினிமா ஓடைக்கான தளம் என்ற ஒன்று நாளை அமையுமானால், அதன் உற்று முகம் இவர்களே எனும் வரலாற்று பதிவாக அது அமையவும் கூடும்

கடலூர் சீனு

 

அன்புள்ள ஜெ

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் பற்றி ராம்குமாரின் கடிதம் கண்டேன். நல்ல கடிதம். ஆழமான சில பார்வைகளை முன்வைத்திருந்தார். முக்கியமாக நாம் நம்முடைய சூழலுக்கு உகந்த ஒரு திரைமொழியை உருவாக்கிக் கொள்ளவேண்டிய தேவை பற்றி எழுதியிருந்தார். அது ஒரு முக்கியமான பார்வை. நாம் இன்று ஹாலிவுட் உருவாக்கிய பரபரப்பான திரைக்கதை, அறைந்து இழுக்கும் காட்சிமொழி ஆகியவற்றுக்கு பழகிவிட்டோம்.

அந்த காட்சிமொழி உருவாக்கும் உலகம் ஒரு ஃபேண்டஸி. அதில் நம் வாழ்க்கையின் உண்மைகளைச் சொல்ல முடியாது. நமக்கான சினிமா மொழியை ரே.கட்டக், அடூர் போன்றவர்கள் உருவாக்கினார்கள். ஆனால் இன்றைய சினிமா ரசிகர்களுக்கு அந்த மொழி அன்னியமாக உள்ளது. அவர்கள் அவற்றிலிருந்து விலகி கவற்சியான காட்சிமொழிக்கு வந்துவிட்டனர். அந்த மரபு அறுந்துவிட்டது. இன்றைக்கு ‘நல்ல சினிமா’ என்று சொல்லப்படுவதெல்லாம் பரபரப்பான சினிமா, கவற்சியான சினிமா, சிக்கலான திரைக்கதை கொண்ட சினிமாதான்.

நாம் ஒருவகையான அப்பட்டமான, எளிமையான சினிமாவை உருவாக்கவேண்டும். அதை ரசிக்கும் பயிற்சியை அடையவேண்டும். மக்கள் பழகிப்போயிருக்கிறார்கள்., விரும்புகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு பிடித்த சினிமாபாஷையில் நாம் பேச ஆரம்பித்தால் நம் உலகைப் பேசமுடியாது.

ஏனென்றால் சினிமா என்பது காட்டுவது. ஒரு லொக்கேஷனை மாற்றினால் சினிமாவே மாறிவிடுகிறது. சிவரஞ்சனியும் கதையில் அந்த மூன்றுகதைகளுக்கும் இடையேயான வேறுபாடே அவர்களின் வீடுகள் வேறுவேறு என்பதுதான்.

அதைச் சொல்லும்போது ஒன்றைச் சொல்லவேண்டும். சினிமாவின் சப்டெக்ஸ்ட் வேறு, இலக்கியத்தின் சப்டெக்ஸ்ட் வேறு. இலக்கியத்தின் சப்டெக்ஸ்ட் அதன் மொழியிலும் அது கூறாது விட்டதிலும் இருக்கிறது. சினிமாவின் சப்டெக்ஸ்ட் அதன் காட்சிகளில் உள்ளது. சரஸ்வதியின் கொல்லைப்பக்கம் – வீட்டு முகப்பு இரண்டுக்குமான வேறுபாட்டை சினிமா காட்டுகிறது. அதன் சப்டெக்ஸ்ட் அங்கேதான் இருக்கிறது.

மேலோட்டமாக சினிமா பார்ப்பவர்களுக்கு சிவரஞ்சனி மீண்டும் ஓடுகிறாள், அவளுடைய ஓட்டத்திறன் இதுக்குத்தான் பயன்படுகிறது என்று தோன்றும். சப்டெக்ஸ்ட் என்பது அவள் விட்டுவிட்ட சிலவற்றை துரத்திப்பிடித்துவிட்டாள், அவளால் முடியும் என உணர்ந்துவிட்டாள் என்பது.

அருண்குமார்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:வசந்த் சாய்

முந்தைய கட்டுரைசின்ன வீரபத்ருடு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅருண்மொழியின் முதல் புத்தகம்- அ.முத்துலிங்கம் முன்னுரை