சின்ன வீரபத்ருடு கவிதைகள்-5

வார்த்தையைத் தேடி

உன்னைத் தொந்தரவு செய்யும் அந்த ஒரு வார்த்தையைத் தேடி

எத்தனையோ பகல்களை எதிர்கொள்கிறாய்

யார்யாரையோ சந்திக்கிறாய்,

எவற்றையெல்லாமோ தியாகம் செய்கிறாய்.

 

சரியான வார்த்தை உன் மனதினில் ஒளிர

படகுமீனவனைப்போல்

கடலை ஒவ்வொரு நாளும் சலித்தெடுக்கிறாய்

 

புலரி வெளிச்சத்தின் முதல் தளிர்களுக்காக காத்திருக்கிறாய்.

 

பனி மூடியுள்ளது.

இரவில் பொழிந்த

மதியொளி குளமாகி

தொடுவானத்தின் எல்லை வரை நீள்கிறது

அதில் அவ்வப்போது எழும் சிற்றலைகளில் வெள்ளி மினுக்கு

தூரத்து கண்டாமணிகளின் ஒலிகளாக

 

தூரத்து பாய்மரம் முதல்முறை தெரிவதுபோல்

கன்னிக்கதிரொன்றை காண்கிறாய் நீ.

உடனே,

மறுகரையிலிருந்து வலை வீசி மூடியதுபோல்

ஒளிநிழல்களின் சட்டகம் ஓழுகிச்செல்கிறது

 

வானின் சாளரங்கள் ஒவ்வொன்றாக திறந்துகொள்கின்றன

பட்டுக்கை ஒன்று கண் முன் தோன்றி

மரஉச்சிகளின் மேல் உள்ள இலைத்திரைகளை விலக்குகின்றன

அப்போது

மொக்கவிழும் இனிய சுருதி ஒன்று

கேட்கிறது

 

புதிய உவமைக்காக

சுற்றி எங்கும் இலையுதிர்ப் பருவம்.

பட்டைக்குள்ளும், தண்டுக்குள்ளும், ஒவ்வொரு உயிரணுவின் ஆழத்தில் உரையும் உயிர்ப்புக்குள்ளும்

பசுமை திரும்பியாக வேண்டிய காலம்

கண்முன்னே இதுவரை ஒலித்துக்கொண்டிருந்த சங்கீதங்கள்

சகடையில் சுருட்டி எடுப்பதுபோல் இடையறாமல் சுழன்று பின்வாங்குகின்றன

 

பனிக்காலம் முடிகிறது. சருகுகள் எழுந்தாடும் குளிர்க்காற்று.

வெளிர்ந்துபோன சோகையடைந்த நடனம்.

பீங்கான் ஜாடிகளை சாலையோரம் அடுக்கிவைத்தாற்போல் மரங்கள்

பழைய, கறைபடிந்த பித்தளைச் சாமானுக்கிடையில்

பூஜாடிகளைப்போல் பெத்தோடியா பூக்கள்.

 

பின்வாங்கிச்செல்லும் ஒவ்வொரு பருவத்தின் முன்னாலும்

கைக்கூப்பி நின்றுகொண்டு என்ன பிரார்த்தனை செய்கிறாய்?

கவர்ச்சி ஒளிரும் காட்சி ஒவ்வொன்றிலும்

ஏன் அத்தனைத் தீவிரமாகக் கண் பதிக்கிறாய்?

வெறிகொண்டு காலத்தை சல்லடைப் போடுவதெல்லாம்

உன் கவிதைக்கு ஒரு புதிய உவமை தோன்றுவதற்காகத்தானே?

 

பிறந்துகொண்டிருக்கும் பாடல்

 

பகல் இன்னும் புலரவில்லை

மலையடிவாரத்துக் கோயிலிலிருந்து சுப்ரபாதம் ஒலிக்கிறது

 

காலைப்பனியில் நகரம்

தன் கனவுகளின் எடையில் கவிழ்ந்துவிடாமல் இருக்கப்

படகென மிதக்க,

சுழலும் இசை ஒன்று அதை கரை நோக்கி இழுக்கிறது

வானமும் பூமியும் ஒன்றையொன்று அணைத்துக்கொண்டு

ஆழமான உறக்கத்தில் இருக்கின்றன.

வீடுகளும் மரங்களும்

விழிப்புக்கு முந்தைய ரெம் தூக்கத்தின் நெடுமூச்சில்

விம்முகின்றன.

 

சீக்கிறமே வீடுகளெல்லாம் ரீங்கரிக்கத்தொடங்கும்

நகரஒளிகள் மின்னிச்செல்லும் நீரோட்டத்தில் மூழ்கிவிடும்

நான் சுப்ரபாதத்தில் லயித்திருக்கிறேன்

விடியல் சற்றுநேரம் பிந்தக்கூடாதா

என்று ஏங்கிகிறேன்

 

நாள் தொடங்குகிறது.

கடிதங்கள், வரவேற்புகள், அறிவுறுத்தல்கள், ஒப்படைப்புகள்

எல்லாம் என்னைக் கடந்து செல்கின்றன

எதுவுமே உள்ளே இறங்கவில்லை

 

இரவு ஆழம்கொள்கிறது

என் மேஜையிலிருந்து கடிதங்களெல்லாம் கிளம்பிவிட்டன.

அப்போது

 

சுப்ரபாதம் நினைவுக்கு வருகிறது

மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும்

ஆத்மதோழியின் கடிதத்தைப்போல்

உள்ளே ஓடத்தொடங்குகிறது

அதிகாலை கருக்கிருட்டில்

என்னை கட்டி இழுத்தக் கொடி

பின்னிரவில் பூக்கிறது

 

அதன் நறுமணத்தை நுகர்ந்தபடி

மீண்டும் விடியல் வரை காத்திருக்கிறேன்

அது என்ன பூ என்று அறிய.

 

ஆங்கிலம் வழித் தமிழாக்கம்  சுசித்ரா 

 

தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு

சின்ன வீரபத்ருடு கவிதைகள்

சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2

சின்ன வீரபத்ருடு கவிதைகள் -3

சின்ன வீரபத்ருடு கவிதைகள் -4

முந்தைய கட்டுரைசின்ன வீரபத்ருடு -கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைஆசியஜோதியின் வரலாறு – முன்னுரை