நான் கவிதையாய் மாறும் தருணம்
நாள் முழுதும்
எங்கு சென்றாலும் ஏது செய்தாலும்
பிரார்த்தனை நேரம்
மேற்திசை நோக்கும்
என் சோதரன் போல,
நான் கவிதையாய் மாறும் நேரம்
வான்திசை நோக்குவேன்.
உங்களிடமிருந்து எனை நான்
துண்டித்துக்கொள்ளும் தருணம் அது.
யாரை சந்தித்தாலும், பேசினாலும்
நாள் முழுவதும் இறைக்கிறேன்,
எண்ணற்ற குறிப்புகள், குரல்கள்,
சில இனிமையானவை சில கடுமையானவை.
ஆழிமேற்பரப்பின் அலைகளென
உருக்கொண்ட உடனேயே
உடைந்து சிதறுபவை.
பெருகிய உணர்வுகளின்
தடங்கள் ஏதும் எஞ்சுவதில்லை.
சொர்க்கத்தை சில கணங்கள்
வேண்டி அழைக்கிறேன்.
தலைவனின் சொற்கள் முன்
திரண்டெழும் குடிகளின் நிசப்தம் போல,
மௌனம் எனது நாடி நரம்புகளில் ஊடுருவுகிறது,
உடலே செவியாகிறேன்.
ஒற்றைக் குரலைக் கேட்கிறேன்.
அதுவரை அலைக்கழித்த
பல ‘நான்’கள்
உடைந்து சிதறி பொடிந்து கரைய
தனித்த ‘நான்’ எழுகிறது,
விந்தை! அறிந்தோரும் அயலாரும்
அம்முகத்துடன்
அடையாளம் காண்கிறார்கள்
… ஒரே போல.
மகாபலிபுரக் கடற்கரையில் ஒரு கோவில்
கடற்புறத்து விதானத்தின்
வரைதிரையில்
யாரோ ஒரு கவிதையை
செதுக்கி விட்டுச் சென்றார்.
வார்த்தைக்கு வார்த்தை
மொழியில் புகுத்தப்பட்ட
எண்ணம் போல ,
ஒவ்வொரு கல்லாய்
அமைத்தார்.
ஒவ்வொரு மாலையும்
அங்கு குழுமும் கூட்டம்.
கவிதை தொடர்ந்து எதிரொலிக்கிறது.
அதை பொருள்கொள்ள
யார் வருகிறார்கள்?
கண்ணில் படும்
சில கிளிஞ்சல்கள்
உல்லாசக் குதிரைகள்
நீந்துபவர்கள்
காதலர்கள்
ஒரு உறைந்த கவியும்
கரைந்து இடையறாது பாயும்
அவரது கவிதையும்
நானும் ஒரு மாலை அங்கு சென்றேன்
அக்கவிதையின் நறுமணம்
வாழ்வுக்கும் எனை நீங்காது.
இடி உரைத்த சொல்
ஒரு சித்திரை முன்மதியம்
கிராமத்து மாந்தோப்பின்
நிழலின் கீழ்,
தூக்கத்தின் அலைகளில்
நான் சோம்பிக் கிடந்தபோது
இடி தன் உரையாடலைத்
தொடங்கியது.
கோடை முதல் மழையில்
முளைத்தெழும் காளான் போல,
யுகங்களாய் உறங்கிய நினைவுகள்
உயிர்கொண்டது போல,
ஆண்டுகளாய் ஓரிடத்தில்
நின்றுவிட்ட ரயில்
உறக்கத்திலிருந்து உலுக்கப்பட்டது போல;
துருப்பிடித்து வலுவிழந்த
திருகுகளில் இருந்து
விடுதலையடைந்த கதவுகள்
அடித்துக்கொள்வது போல,
இடிமுழக்கம் உள்ளே கிளர்த்திட்ட சஞ்சலங்கள்.
சுட்டெரிக்கும் சூரியன் மேல்
கனத்த முகில்திரை வீசி
பழகிய இருள் பகலைக் கவ்வ,
மறந்துவிட்ட சமிக்ஞைகள் உயிர்கொள்கின்றன.
ஆதியில் நீ பேசக்கற்றுக்கொண்டதை விடத்
தொன்மையான மொழியில்
அமைந்ததச் சொற்கள்.
செவிகளைவிட
நினைவின் அடுக்குகளைக் கொண்டே
கேட்க இயலும்
இடியின் செய்தியை.
இதுவரை மக்களின் பேச்சைக்
கேட்பதின் ஆயாசத்தில் இருந்தாய்,
அவர்களது வாக்கியங்களைப்
பொருள் கொள்ள
முயன்று கொண்டிருந்தாய்.
அவர்களது கருத்து
உன் செவிகளைத் தொடும் முன்னரே
முடிவுற்றிருந்தன உரையாடல்கள்.
அன்று மதியம்
அந்த இடி
உரையாடிய நேரமெல்லாம்,
நிறைமலர்ந்த பூமரத்தின் மீது
தேனீக்கள் முனகுவது
போலிருந்தது.
நீ எதிர்பார்த்தது
வார்த்தைகளின் சலசலப்பு அல்ல,
தேனின் இனிமையான ஒரு துளியை.
அதுவரை ஒருவருடன்
அர்த்தமுள்ள உரையாடலில்
இருந்ததன் அடையாளமாக
ஒரு நறுமணக் காற்றின் கீற்று
உன்னைச் சூழ்கிறது.
இடி உரைத்ததென்ன என்ற
உலகத்தின் கேள்விக்கு
சொற்களைக் குறைக்காதே,
விளக்கவும் முயலாதே.
ஏதும் பேசாமலிருந்துவிடுவது நல்லது.
சொர்க்கத்தின் புல்வெளிகளில்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய்.
மாமர நிழலைத்
துணையெனக் கொண்டு
நீ கேட்டதனைத்தையும்
நினைவுமீட்டு.
ஆங்கிலம் வழி தமிழில் சுபஸ்ரீ
தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு