வசந்த், மாற்று சினிமா- கடிதம்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:வசந்த் சாய்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினராக என் பிரியத்துக்குரிய இயக்குநர் வசந்த் சாய் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி. நான் அவருடைய ஆர்ப்பாட்டமில்லாத திரைமொழிக்கு ரசிகன். தமிழில் அவருடைய இடமே அந்த ஃப்ளோவை அவர் இயல்பாக உருவாக்குவதனால்தான். அவருடைய கேளடி கண்மணி, ஆசை ரிதம் எல்லாம் நல்ல அனுபவங்களாக நினைவில் நிற்கின்றன.

பிற்பாடு அர்பன் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை எல்லாம் டிவி சீரியலுக்குரிய விஷயங்களாக மாறின. டிவி சீரியல்களில் அவற்றையெல்லாம் பேசிப்பேசியே சலிக்க வைத்தனர். ஆகவே சினிமா ரௌடியிசம் நோக்கிச் சென்றது. அதெல்லாம் வசந்துக்கான ஏரியா இல்லை. வன்முறையை ஜாஸ்தியாகக் காட்ட அவரால் முடியாது. பக்கா கமர்சியல்களும் ஒத்துவராது. அவருடையது காட்சிவழியாகவே செல்லும் திரைமொழி. டிவி அவருக்கு ஒத்துவராது. ஆகவே அவருக்கு பின்னடைவு உருவானது.

ஆனால் இப்போது சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும் வழியாக வசந்த் ஆற்றலுடன் திரும்பி வந்திருக்கிறார். எந்த வெளிநாட்டு இயக்குநரின் பாதிப்பும் இல்லாமல், இயல்பாக உருவான திரைமொழி. அசோகமித்திரனின் நடை போல அப்படியே வாழ்க்கை என்று தோன்றச் செய்வது. நான் மூன்றுமுறை அந்த சினிமாவைப் பார்த்தேன். வசந்த் இயக்கிய பாயசம் படம் [நவரசாவில் ஒன்று] முக்குயமானது.

எதையுமே அழகுபடுத்தி, அதற்கான லைட்டிங் யோசித்து அமைத்துக் காட்டுவதே நாம் அறிந்த சினிமா. ஆபாசம் குரூரம் ஆகியவற்றையே கூட அதற்கான அழகுடன் காட்டுவார்கள்.  உண்மையில் லைட் போட்டாலே யதார்த்தம் அடிபட்டுவிடும். ஜன்னலில் ஒரு பழைய திரையை போட்டு அதன்மேல் லைட் விழும்படிச் செய்தாலே அழகு உருவாகிவிடும். சினிமா தெரிந்தவர்களுக்கு தெரியும். சினிமாவில் அழகு இல்லாமல் எடுப்பதுதான் உண்மையான முயற்சி தேவைப்படும் செயல்

’அழகே’ இல்லாமல் அப்பட்டமாக எடுக்கப்பட்டதுபோல் இருப்பதுதான் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் சினிமாவின் முக்கியத்துவம். காமிரா நேரடியாக வாழ்க்கையை காட்டியதுபோல் இருக்கிறது. அதுவும் சலிப்பூட்டக்கூடிய அன்றாடத்தைக் காட்டி, சர்வசாதாரணமாக ஆகிவிட்ட அழகில்லாத தன்மையை காட்டுவது முக்கியமானது.

கொடூரம், இருட்டு என்றெல்லாம் காட்டுவதும் ஒருவகை ரொமாண்டிசிசம்தான். அதை நெகட்டிவ் ரொமாண்டிசிசம் எனலாம். கிம் கி டுக் இரண்டு வகையான ரொமாண்டிசிசத்தைத்தான் எடுப்பார். ஆனால் அது ஒரு செயற்கையான வாழ்க்கை. நம் வாழ்க்கை என்பது சலிப்பூட்டக்கூடிய, சர்வதாசாதாரணமான யதார்த்தம். அதை எடுப்பதற்கு அதற்குரிய ஏஸ்தெடிக்ஸ் வேண்டும். அதைத் தேடி கண்டடைந்திருக்கிறார் வசந்த்.

உதாரணமாக சரஸ்வதி வாழும் அந்த வீடு. இடுங்கலான ஒண்டுக்குடித்தனம். அந்த மாதிரி வீடுகளில் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் வாழ்கிறார்கள். அதைப்போன்ற வீடுகள்தான் சென்னையில் 90 சதவீதம். இடுங்கல் நெரிசல்தான் அவற்றின் இயல்பு. அங்குள்ள மனிதர்கள் அங்கே வாழ்ந்து வாழ்ந்து அதற்குப் பழகியிருக்கிறார்கள். அங்கே மகிழ்ச்சியாகவும்கூட இருக்கிறார்கள். அவர்களின் மனசுகள் அப்படி ஆகியிருக்கின்றன

ஆனால் அப்படிப்பட்ட வீடுகள் எந்த சினிமாவிலாவது வந்திருக்கின்றனவா? மெயின்ஸ்டிரீம் சினிமாவுக்காகச் செட் போட்டு எடுப்பார்கள். ஆகவே குடிசைகள்கூட அகலமாக இருக்கும். ஒண்டுக்குடித்தன வீடு பெரிய கூடமாக இருக்கும். இதே வாழ்க்கையைக் காட்டிய விசுவின் படங்களை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். அவள் ஒரு தொடர்கதை முதல் இன்றைக்கு வரும் டிவி சீரியல் வரை வீடுகள் அப்படித்தான் இருக்கும்.

அப்படி இருந்தால்தான் வெவ்வேறு கோணங்களில் ஷாட் கம்போஸ் பண்ண முடியும். ஒரு காமிரா டீம் வேலை செய்ய முடியும். ஆகவே அதை காட்டுகிறார்கள். உண்மையான வாழ்க்கையை இன்றைக்கும் சினிமாவில் காட்ட முடியாது. கமர்ஷியல் சினிமாவில் நாம் அதை விரும்புவதுமில்லை.

சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும் அவ்வகையில் ஒரு முக்கியமான தொடக்கம். இன்று அதன் முக்கியத்துவத்தை நாம் அறியவில்லை. நாம் இப்போதும் நமது கலைப்படங்கள் அமெரிக்க ஐரோப்பிய சினிமாக்கள் போல இருக்கவேண்டுமென நினைக்கிறோம். இந்த சினிமாதான் உண்மையில் நமது சினிமா. இது ஒரு ஸ்கேலை உருவாக்குகிறது. யதார்த்தம் என்றால் என்ன என்று கண்டடைய முயல்கிறது. அதன் வாய்ப்புகளையும் சிக்கல்களையும் நேர்மையாக எதிர்கொள்கிறது இங்கிருந்து தொடங்கி மேலும் மேலும் ஆழமான வாழ்க்கைச் சிக்கல்களுக்குள் செல்லமுடியும்.

நம்முடைய மாற்று சினிமா என்பது மெயின்ஸ்ட்ரீம்  சினிமாவின் நிர்ப்பந்தங்கள் சிலவற்றில் இருந்து விலகிச் செல்வதாகவே இருக்கமுடியும். கதைநாயகனை மையமாக்கியே கதைச் சொல்வது, பரபரவென ஓடும் நிகழ்வுகளால் கதை சொல்வது, பலவிதமான கோணங்களில் காட்சிகளை அமைக்கும் திரைமொழி ஆகிய மூன்றும் வணிகசினிமாவுக்கு உரியவை. அவை இல்லாமல் மெயின்ஸ்ட்ரீம்  சினிமா இல்லை. அவற்றை தவிர்க்காமல் மாற்றுசினிமா எடுக்கமுடியாது.

இன்றைக்கு சிவரஞ்சனி பற்றி வந்துகொண்டிருக்கும் ஏராளமான விமர்சனங்களில் பாதிக்குமேல் மெயின்ஸ்ட்ரீம்  சினிமாவின் ஸ்கேல்களை வைத்து இதை மதிப்பிடுவதுதான். கதையில் வேகம் இல்லை, அடுத்தது என்ன என்ற பரபரப்பு இல்லை, காட்சிக்கோணங்களில் புதுமை இல்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த வழக்கமான டெம்ப்ளேட்களுக்கு வெளியே நின்று நம் வாழ்க்கையைக் காட்டுவதற்கான முயற்சி இது என அவர்களுக்கு தெரியவில்லை.

மாற்றுச் சினிமா பேசுபவர்களிடமும் அந்தத் தெளிவு இல்லை. அதற்கான காரணமும் உண்டு. சென்ற இருபதாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக உலகசினிமாச் சூழலில் மெயின்ஸ்டிரீம் சினிமா கலைப்படம் என்ற வேறுபாடு அழிந்துவிட்டது. கலைப்படம் என்பது ரசிகனை கவர முயற்சிசெய்யாமல் உண்மையைச் சொல்வது. அதுதான் அதன் டெஃபனிஷன். அந்தவகையான சினிமாக்கள் ஏராளமாகவே வந்தன.

ஆனால் இன்றைய உலகத்தில் டிவிக்குப் பிறகு விஷுவல் மீடியா மிகப்பிரம்மாண்டமாகப் பெருகியிருக்கிறது.  இப்போது இன்னும் பிரம்மாண்டமாக ஆகிவிட்டது. ஆகவே பார்வையாளர்களைக் கவர பெரிய போட்டி வந்துவிட்டது. கலைச்சினிமாகூட ரசிகனை கவரவேண்டும், அவனை உட்கார வைக்கவேண்டும். அதற்கு அது விசித்திரமான காட்சிக்கோணங்கள், ஒளியமைப்புகள், வேகமாக ஓடும் whatnext திரைக்கதை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தது.

ஆகவே இன்றைக்கு கலைச்சினிமாவே இல்லை. உதாரணம் கிம் கி டுக். அவர் பார்வையாளனை ரசிகனாக பார்ப்பவர். அவனை அதிரடிக்க வைப்பவர். அது சினிமாக்கலையின் வழிமுறை அல்ல. அது ஒருவகையான தெருமுனை வித்தை.

இந்தவகையான சினிமாக்களே இன்றைக்கு எல்லா இளைஞர்களாலும் பார்க்கப்படுகின்றன. இளம் சினிமாவிமர்சகர்கள் கூட இவற்றையே பார்த்திருக்கிறார்கள். சத்யஜித் ரே அல்லது அடூர் கோபாலகிருஷ்ணன் படங்களைப் பற்றிப் பேசுபவர் இல்லை. ஆகவேதான் கலைப்படத்திலும் நாம் மெயின்ஸ்ட்ரீம் சினிமாவின் உத்திகளை எதிர்பார்க்கிறோம். [நான் கமர்ஷியல் சினிமா என்று சொல்ல மாட்டேன். எல்லா சினிமாவும் கமர்ஷியல்தான்]

ஆனால் நாம் நம் வாழ்க்கையைச் சொல்லவேண்டியிருக்கிறது. அப்பட்டமாகவும் நேர்மையாகவும்  நம்மைப்பற்றிப் பேசவேண்டிய தேவை உண்டு. அதற்கான அழகியல் என்பது நிதானமானதும் அழகுபடுத்திக்கொள்ளாதுமான விஷுவல்களால்தான் இருக்கும். அந்த முயற்சியாகவே நான் சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும் படத்தைப் பார்க்கிறேன். அந்த சினிமாமொழியை நாம் மேலெடுத்தால் நம்மால் நம்மை உலகுக்குக் காட்டமுடியும். இல்லாவிட்டால் உலகம் நமக்கு காட்டுவதை நாம் திரும்ப எடுத்து அவர்களிடம் காட்டிக்கொண்டிருப்போம்.

சிவரஞ்சனியும்… படத்திலுள்ள கண்டெண்ட் மேல் எனக்கு சிறு விமர்சனம் உண்டு. அந்த படங்கள் மூன்றுமே கொஞ்சம் முற்போக்குப் பெண்ணியமாக முடிக்கப்பட்டுள்ளன. அது ஆசிரியரின் குரல். வசந்தின் சினிமாமொழியில் உள்ள நுட்பமும் அடக்கமும் திரைக்கதையில் இல்லை. சரஸ்வதி கதையில் கணவனிடம் அவள் ம் என்று சொல்கிறாள். அந்த ஒரு உருமல் அவனை பிரித்துவிடுகிறது. அந்த சத்தம் எப்படி வந்தது, என்ன செய்தது என்பதுதான் கதை. தேவகிச்சித்தியின் டைரி கதையில் அந்த டைரியில் என்ன இருந்தது என வாசகன்கூட கேட்கக்கூடாது என்பதுதான் கதை.

ஆனால் சினிமாவில் அவை இரண்டு புள்ளிகளும் கடந்து செல்லப்படுகின்றன. சரஸ்வதியின் பிந்தைய வாழ்க்கை சேர்க்கப்பட்டுள்ளது. தேவகியின் கதையில் அவள் அந்த டைரியில் இன்னொசெண்டான சிலவற்றையே எழுதினாள் என்று இயக்குநர் சொல்கிறார். அவளுடைய வாழ்க்கையும் மேலும் சொல்லப்படுகிறது.

இந்த அம்சங்களால்தான் இன்று இந்த சினிமா பெண்களாலும் பல விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது என்பதும் உண்மையே. தமிழில் இப்போது இந்தப் பார்வையை முன்வைக்கவேண்டும் என்பதும் உண்மை. அதற்கான தேவை உண்டு. ஆனால் இலக்கியம்போலவே சினிமாவுக்கும் சப்டெக்ஸ்ட் முக்கியமானது என்பது என் கருத்து.

நான் இந்த சினிமாவிலே காண்பது இதிலுள்ள அசலான திரைமொழி. நமக்கு நாம் எப்படி சினிமா எடுக்கவேண்டும் என்று காட்டுகிறது அது.அதன் இயல்பான ஃப்ளோவும் காட்சிகளின் திறமையான எடிட்டிங் வழியாக உருவாக்கப்படும் சரியான யூனிட்டியும் முக்கியமானவை.

வசந்த் ஒரு முன்னோடியாக இருக்கிறார். நாம் இந்தப் பாதையில் இனிமேல் முன்னால் செல்வோமா என்பதுதான் கேள்வி

எஸ். ராம்குமார்

சிவரஞ்சனியும் இன்னும் சிலபெண்களும்- கடிதம்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் விகடன்

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் காமதேனு

 

முந்தைய கட்டுரைஜீவா நினைவாக ஒரு நாள்
அடுத்த கட்டுரைஜா.தீபா – கடிதங்கள்-3