மழை தழுவும் காட்டின் இசை

விஷ்ணுபுரம் பதிப்பகம்

சமீபத்தில் காடு இரண்டாம் முறை வாசிக்க ஆரம்பித்து நேற்று முடித்தேன். முதல் முறை போலவே இம்முறையும், அந்த இசைமழை ஆரத்தழுவி என்னை மூழ்கடித்தது. இந்த முறை சற்று அதிகமாகவே.

முதல் வாசிப்பு நிகழ்ந்தது ஓசூரில். அநேகமாய் 2004 அல்லது 2005-ல் இருக்கலாம். ஜெ-யின் எழுத்துக்களுடன் அறிமுகமில்லாத காலம். ஓசூர் நூலகத்தில் உறுப்பினராகி மூன்று கார்டுகளில் புத்தகங்களை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன். ஓசூர் நூலகம் அப்போது தளி ரோட்டில் பெரிய ஏரியை ஒட்டி இருந்தது. எப்போதுமே நூலகத்தில் புத்தக அடுக்குகளில் நல்ல புத்தகங்களைத் தேடி எடுக்க முடியாது. அதனால் புத்தகங்கள் மாற்றச் சென்றால், முதலில் நூலகருக்கு அருகில் மற்றவர்கள் திருப்பியிருக்கும் புத்தகங்களில்தான் தேடுவது. ரமணி சந்திரன்களுக்கும், சுஜாதாக்களுக்கும் நடுவில் ஒருநாள் அப்படிக் கிடைத்ததுதான் காடு.

வீட்டிற்கு எடுத்து வந்து, அவ்வார இறுதியில் சனி இரவு படிக்க ஆரம்பித்தேன். கீழே வைக்கவே முடியாமல், அதிகாலை இரண்டு மணி வரை வாசித்துக்கொண்டிருந்தேன். அம்மு எழுந்து வந்து “இன்னும் தூங்கலயா பாவா? எட்டு மணிக்கு ஆஸ்ரம் போகணும் இல்லயா?” என்றார்.

***

அன்று ஞாயிறு ஆஸ்ரம் போகும்போது காடையும் உடன் எடுத்துச் சென்றேன். ஆஸ்ரமத்தின் மரங்களினடியில், விநாயகர் மண்டபத்தில், பரந்த தியான அறையில், வசிப்பிட குடில்களுக்கு மத்தியில்…எல்லா இடங்களிலும் காடு-டன்தான், காட்டை வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். இயல் ஊஞ்சலிலும், ஆஸ்ரமத்தில் வேலை செய்யும் சாரதாவோடும் விளையாடிக் கொண்டிருந்தார். மல்லிகா சமையலறையில் கலாம்மாவுக்கு உதவி செய்துகொண்டிருந்தார். காடு – அபாரமான வாசிப்பனுபவம் தந்தது. மனம் முழுவதும் பசுமையாகி விட்டது மாதிரி, விரிந்து பரவி…சின்னப் புற்களெல்லாம் விஸ்வரூபமெடுத்து புன்னகைத்தன. மரங்களின், செடிகளின் இலைகள் ஆனந்தப் பச்சையாக மாறியிருந்தன. ஆஸ்ரமத்திலிருந்து மாலை கிளம்பும்போது தூறல் போட்டது. வழியெல்லாம் இரண்டு பக்கமும் பச்சை. குளித்துத் தலைதுவட்டி, கூந்தல் தொங்க விட்டு உலர்த்தும் அடர் பச்சையின் யௌவனம். மனது மிகவும் சந்தோஷமாயிருந்தது.

எனக்கு, மனதில் முதலில் சட்டென்று ஒட்டிக்கொண்டது அந்த பசுமைக் குறிஞ்சிதான். மழை பெய்யும் காடு…என் கல்லூரி வாழ்க்கையில் மறக்கமுடியாத இரு பயணங்கள்/இரு வகுப்புகள் குறிஞ்சியில் நான் கழித்த நாட்கள். ஒன்று வால்பாறையில் நாங்கள் பங்குகொண்ட தேயிலை தொடர்பான பயிற்சி வகுப்புகள். மற்றொன்று ஏற்காட்டில் – காபி பயிர் தொடர்பாக. பயிற்சிக் காலங்களில் தோட்டக்கலை ஆராய்ச்சிப் பண்ணைகளில் அங்கேயே தங்கியிருப்போம். அந்த நாட்களில் நான் அடைந்த பரவசங்களை, இனிய நினைவுகளை எல்லாம் காடு மேல் கொண்டு வந்தது. தடியன் குடிசை, பேச்சிப் பாறை, கல்லார் மற்றும் பர்லியார், குன்னூர்…வகுப்புகளுக்காகப் பயணித்த எல்லா இடங்களும் அந்த அடர் வனத்தின், குளிரின் மணத்தோடு உள்ளெழுகின்றன.

***

குட்டப்பனின் வாழ்வு கிரி சொன்னதுபோல் ஒரு ஜென்ம ஈடேற்றம்தான்.

குரிசு பற்றி, குட்டப்பன் “அவனுக்க வாசிப்பும் அவனும். கேட்டுதா கொச்சேமான்…இண்ணேத்து இவன் ஒரு தாளைக் காட்டி, குட்டப்பா இது என்னலே எளுத்து எண்ணு கேக்குதான். எளுத்தை சொரண்டி கையில குடுத்தேன். கொசுவு செத்து ஒட்டியிருக்கு ஏமான்…” – சிரித்து கண்ணீர் வந்துவிட்டது. குட்டப்பன் சட்டென்று அணுக்கமாகி ஆரம்பத்திலேயே மனதில் நெருங்கியிருந்தான்.

“…துக்கங்களில சீக்கிரம் மறக்குத துக்கம் மரணம்தான்னு அப்பன் சொல்லியதுண்டு…” குட்டப்பனின் வார்த்தைகள் இன்னும் மனதில் சுழல்கின்றன. குட்டப்பனின் பேச்சு எல்லாமே அனுபவங்களின் வண்ணம் கொண்டு நிகழின் குரல்போல ஞாபகத்தில் எழத்தான் செய்கின்றன.

குரிசை வளர்த்த ஃபாதரின் கதை குட்டப்பனின் வார்த்தைகளில் விரியும்போது மேலும் சிரிப்பு.

“அதொக்க ஒரு காலம் ஏமானே. இனியிப்பம் கரஞ்சாலும் வராது. இப்பமும் அவனெக் கண்டாலும் எனக்கு சங்கில ஒரு குளிரு வரும். செத்து மன்ணடஞ்சாலும் அது மறக்குமா? ஏமான் கண்டுட்டுண்டா, சின்னாளப் பட்டுக்கு நெறமும் பூவும் ஒக்கெ கீறி நாறிப் போனாலும் கரை மட்டும் மங்காம இருக்கும். வலிஞ்சு நாறி அடுக்களை துணிக்கு சீலயாட்டு ஆனாலும் எடுத்து பாத்தா கரயும் சுட்டியும் கன்ணு முளிச்சு பாக்கும். அது மாதிரியாக்கும்.”-சிநேகம்மை பேசும்போது எனக்கும் சிநேகம்மையின் கைபிடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

அந்த ஐந்தாம் அத்தியாயம், காஞ்சிர மரம், அட்டகாசமான ஒரு சிறுகதை. “திருவனந்தபுரம் அரண்மனையில் இளையராஜா பாலராமா வர்மாவுக்கு பதினெட்டு வயதில் தீராத வாத ரோகம் வந்தது…“ வரியில் ஆரம்பித்து, சரசரவென்று விரைந்த மனம், “அதாக்கும் சங்கதி, கேட்டுதா ஏமானே…“ என்ற குட்டப்பனின் குரல் கேட்டுத்தான் நிலை திரும்பியது. கச்சிதமான, விறுவிறுப்பான…என்னை மயக்கிய அத்தியாயம். ஒரு குறுநாவலை, ஒரு அத்தியாயமாய் சுருக்கியது போல்… ஜெ வார்த்தைகளையும், வாக்கியங்களையும் எப்படி அமைத்திருக்கிறார் என்று கவனிப்பதற்காகவே மறுபடி மறுபடி வாசித்துக்கொண்டிருந்தேன்.

முதல் வாசிப்பில் நீலியின் “அய்யோ ஞாக்கு நேரமாயி. அச்சன் வருந்ந சமயமாயி…” சிணுங்கல்கள் மனதில் நிறைந்திருந்ததென்றால், இரண்டாம் வாசிப்பில் குட்டப்பன் மனம் முழுக்க பரவி நிறைந்திருந்தான்.

கிரியின் காட்டின்/மலையின் அனுபவங்கள், நீலியுடனும், அய்யருடனும், குட்டப்பனுடனும், கபிலருடனும் ஒரு உணர்வுகள் மிகுந்த கவிதை என்றால், கீழே அவன் வாழ்வு 180 டிகிரி திரும்பிய, பசுமை நிறமிழந்து தரைதொட்டு பழுப்பு நிறம் கொண்ட, உலகியலின் நிதர்சனத்தை அப்பட்டமாய் மனதில் அறையும் அத்தியாயங்கள். இரண்டுமே நிஜம்தான் இல்லையா?. கிரி காட்டில் இருக்கும்போதான அத்தியாயங்களில் சட்டென்று உயர் எழுந்து பறந்த மனது, நாவலின் முடிவான அத்தியாயங்களில் நிதர்சனத்தை உணர்ந்து, வாழ்வின் முழுமையை தரிசித்தது. நீலியின் உன்மத்தம் பிடித்த கிரியின் எண்ணங்களை ஜெ எப்படி எழுதியிருக்கிறார் என்று இம்முறை கூர்ந்து கவனித்தேன்.

***

கல்லூரியில் படிக்கும் போது தேயிலை பயிர் பயிற்சிக்காக வால்பாறையில் தங்கியிருந்தபோது, ஒருநாள், பக்கத்திலிருக்கும் தனியார் பண்ணையைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். கல்லூரிப் பேருந்தில் சென்று இறங்கியதும், பண்ணையின் மேலாளர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, பண்ணை இயங்கும் முறைகள் பற்றி சிறு அறிமுகம் தந்துவிட்டு, பண்ணையை சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றார். நானும் கொஞ்சதூரம் சென்றுவிட்டு, சரிவுகளில் ஏறி இறங்க முடியாமல், திரும்பி வந்து பேருந்து அருகில் நின்றுகொண்டேன். மழை வரும்போலிருந்தது. மேகங்கள் அடர்த்தியாய் மூடியிருந்தன. ஸ்வெட்டரை மீறியும் குளிர் இருந்தது. பேருந்து ஒரு மரத்தினடியில் நிறுத்தப்பட்டிருந்தது. அருகில் ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டிடம். அலுவலகமாகவோ ஸ்டோராகவோ இருக்கவேண்டும். பக்கத்தில் சிமெண்ட் தளம் போட்ட நீண்ட அகலமான களம்.

மழை மெலிதாய் தூற ஆரம்பித்தது. பேருந்தினுள் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூரத்தில் சரிவில் வரிசை வீடுகள் தெரிந்தன. மலைப்பிரதேசங்களில் பயணிக்கும்போதெல்லாம் ஏன் மனம் சட்டென்று அமைதியாகி விடுகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு நிதானம் புகுந்துவிடுகிறது. குன்னூர், ஊட்டி பயணிக்கும் ஒவ்வொரு முறையும் இந்த வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறேன். மேட்டுப்பாளையம் வரை இருக்கும் மனது வேறு. மேலே ஏற ஆரம்பித்ததும் மனம் வேறு தளத்திற்கு நகர்ந்துவிடும்.

பேருந்தை நோக்கி ஒரு குட்டிப்பெண் ஒரு ப்ளாஸ்டிக் கூடையைத் தூக்கிக்கொண்டு வருவது தெரிந்தது. நான் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். பேருந்து அருகில் வந்து “மாமா…” என்றது. நான் கீழிறங்கி “என்ன பாப்பா…” என்றேன். முகத்தில் தூய்மையும், விகசிப்பும். கூடையை என்னிடம் கொடுத்து “அம்மா எல்லாருக்கும் கொடுக்கச் சொன்னாங்க…” என்றது. கூடை நிறைய பழங்கள்; ஆரஞ்சுகளும், ஆப்பிள்களும். நான் வாங்கிக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் குட்டி…மழை தூறுதே… அப்பறமா வந்துருக்கலாமே…” என்று சொல்லிவிட்டு “பாப்பா பேரென்ன…வீடு எங்கயிருக்கு?” என்றேன். “கயல்” என்று சொல்லிவிட்டு தூரத்து வரிசை வீடுகளை சுட்டிக்காட்டியது. நண்பர்களும், மேலாளரும் மழையினால் சீக்கிரமே திரும்பினர். “இவங்க கயல்…நமக்கு ஃப்ரூட்ஸ் கொண்டு வந்துருக்காங்க…” என்று நண்பர்களிடம் சொன்னேன். நண்பிகள் கயலின் கன்னம் நிமிண்டினார்கள். கயல் சிரித்துக்கொண்டும், நெளிந்துகொண்டும் எங்கள் மத்தியில் குட்டி தேவதை போல் உரையாடியனார். காலி கூடையை திரும்ப வாங்கிக்கொண்டு குடுகுடுவென்று ஓடினார். இன்னும் கொஞ்சம் வெளிச்சம் குறைந்து தூறல் அதிகமாகியது. தூரத்தில் கயல் விரைவது தெரிந்தது. பேருந்தினுள், பையில் ஸ்நாக்ஸ்கள் இருந்தன. கயலுக்கு கொடுத்திருக்கலாம்.

எனக்கு அம்மாவின் ஞாபகமும், வகுப்புத் தோழி மைத்ரியின் முகமும் மனதுக்குள் மேலெழுந்தது. மைத்ரி என்ன செய்கிறார் என்று கண்கள் அலைபாய்ந்து தேடியது. மைத்ரி கலாவிடம் பேசிக்கொண்டு எப்போதும்போல் உதடுகள் பிரியாமல் புன்னகைத்துக் கொண்டிருந்தார். மைத்ரி, கிட்டத்தட்ட குறிஞ்சியின் நீலி. ஆனால் சிவந்த நீலி. ஊட்டியைச் சேர்ந்தவர். படுகர் வகுப்பு. உடன் இளமறிவியல் தோட்டக்கலை படித்துக்கொண்டிருந்தார். ”சுனைப்பூ குற்று தைஇவனக்கிளி…” கபிலனின் பெருமூச்சுடன் தலைகுனிந்துகொண்டேன்.

ஏற்கனவே மலையின், மழையின் நெகிழ்விலிருந்தேன். மனம் இன்னும் அமைதியில் ஆழ்ந்தது. குறிஞ்சிப் பூக்களைப் பார்க்க நீலியுடன், கிரி மரக்கிளைகளினூடே செல்லும் அந்த மழைப் பயணம் ஈரமாய் மனதில் இன்னும்…

#”இதுதான் தேவலோகம்” என்றேன். “கீழே மேகங்கள் பாத்தியா?”

“தேவலோகம்நு வச்சா?”

“தெய்வங்கள் இருக்கிற இடம்?”

“தெய்வங்ஙள் காட்டிலல்லே.”#

ஆம்…தெய்வங்கள் காட்டில்தான்…காடு கடவுள்தான்..

வெங்கடேஷ் சீனிவாசகம்

முந்தைய கட்டுரைடிசம்பர், பொன் முத்துக்குமார்
அடுத்த கட்டுரைதளிருலகு