விழா- ஒரு கோரிக்கை

விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?

விஷ்ணுபுரம் விழாவின் பங்கேற்பாளர்கள் இவ்வாண்டு மேலும் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் விருதுவிழாவின் அளவும் பங்கேற்பும் இரண்டு மடங்கு ஆகிக்கொண்டே செல்கிறது.கூடவே செலவும். இம்முறை மிகப்பெரிதாகிவிட்டது. ஆகவே கூடவே வரும் கவலைகளும் பெருகுகின்றன. மிகுந்த உழைப்பும் கைப்பொருள் செலவுமாக நண்பர்கள் ஒருங்கிணைக்கும் விழா இது. ஆகவே இதை முழுமையான பொறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்திக்கொள்ளவேண்டியது எழுத்தாளர், வாசகர்களின் கடமை.

டிசம்பர் 25 ஆம் தேதி காலையில் வந்து எழுத்தாளர் சந்திப்புகளில்  பங்குகொண்டபின் இரவு தங்கி மறுநாள் விருதுவிழாவில் பங்கெடுக்க விழையும் அயலூர் நண்பர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முன்னர் இத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த படிவத்தை நிரப்பியிருக்கவேண்டும். ஏனென்றால் பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கையளவுக்கே அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசுத்துறைகளுக்கும் நாங்கள் தகவல்களை அளிக்க வேண்டியிருக்கிறது.

இவ்விழாவின் முதன்மைச் செலவென்பது தங்குமிடமே. ஆகவே வருகையாளர்கள் அதை உகந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே பதிவுசெய்யாத எவரையும் கூட்டிவர வேண்டாம். இந்த தங்குமிடம் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமே. எனவே பதிவுசெய்துகொண்டு வருபவர்கள் கருத்தரங்கிலும், விழாவிலும் கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும். அதை கருத்தில்கொள்ள நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

முன்பு வேறு அமைப்பினரின் நிகழ்ச்சிகளில் இத்தகைய வசதிகள் செய்யப்படும்போது அதை வெறுமே சுற்றுலாவுக்கும் குடிக்கேளிக்கைக்கும் பயன்படுத்திக் கொண்ட ஒருசிலர் அந்த அமைப்புக்களை காலப்போக்கில் அழித்தனர். எவ்வகையிலும் அவர்களை இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நாங்கள் அனுமதிப்பதில்லை. அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாகத் தவிர்த்தே இதை நிகழ்த்துகிறோம். இம்முறையும் அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்களை உடனடியாக வெளியேற்றவே எண்ணம் கொண்டிருக்கிறோம்.

இது கடுமையான நிலைபாடு. ஆனால் பதினொரு ஆண்டாக விஷ்ணுபுரம் விழா தொடர்ச்சியாக, வெற்றிகரமாக நிகழ காரணம் தகுதியானவர்களுக்கு மட்டும் இடமளிப்பதும், வெறுமே இலக்கியச்சூழலின் வசதிகளை பயன்படுத்திக் கொள்பவர்களை தவிர்ப்பதும்தான். உண்மையில் அவர்கள் இலக்கியமெனும் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல, வெறும் ஒட்டுண்ணிகள். அவர்களை அகற்றுவதன் வழியாகவே இத்தனை ஆர்வமுள்ள புதியவர்களை உள்ளே கொண்டுவர முடிந்திருக்கிறது. எங்கள் இலக்கு இலக்கிய ஆர்வம் கொண்ட இளம்படைப்பாளிகள், வாசகர்கள் பங்குபெறும் ஒரு கொண்டாட்டம்தான்.

எந்த ஒரு அறிவார்ந்த சந்திப்பும் பேராசான் சொன்னபடி ’உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதலாகவே’ இருக்க முடியும். அது கற்றலில், நட்பில் எழும் இன்பம். ஆகவே கடுமையான மோதல்கள், தனிப்பட்ட முரண்பாடுகள், பூசல்கள் ஆகியவை நிகழலாகாது என்று கூற விரும்புகிறேன். எந்தக் கருத்துக்கும் இலக்கியமெனும் விரிந்த பரப்பில் ஏதோ ஓர் இடம் உண்டு என்னும் புரிதல் இருக்குமெனில் அந்த சமநிலை கைகூடும். நட்புடன் இருக்கையில் மட்டுமே கற்கிறோம். பூசல்களில் உண்மையில் மறுப்பு மட்டுமே வலுவடைகிறது. நம்மை இறுகவைத்து எதையும் அறியமுடியாதவர்களாக ஆக்குகிறது. ஆகவே இனிய நட்புரையாடலாகவே அத்தனை பேச்சுக்களும் அமையவேண்டும். கடும் விமர்சனங்களை தவிர்க்கவேண்டும்.

இன்று விஷ்ணுபுரம் விழா மட்டுமே இன்று மிக இளம்வாசகர்கள் ஆர்வமும் தயக்கமுமாக வந்து கலந்துகொள்ளும் நிகழ்வாக உள்ளது. அவர்களுக்கு முன்னால் இங்கே ஏற்கனவே எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்களை முன்வைக்கிறார்கள். அதனூடாக ஓர் அறிவியக்கத்தை முன்னெடுக்கிறார்கள். அந்த தன்னுணர்வு அவர்களுக்கு இருந்தாகவேண்டும். பேசத்தயங்குபவர்களிடமும் பேசுங்கள் என அனைத்து மூத்த எழுத்தாளர்களிடமும் கோருகிறேன். அவர்களில் பலர் உங்கள் மிகச்சிறந்த வாசகர்கள் என்பதைக் காண்பீர்கள்.

இந்த விழாவில் அதிகாரபூர்வ விருந்தினராகக் கலந்துகொள்பவர்களை தவிர்த்துகூட ஏராளமான படைப்பாளிகள் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் உகந்தவர்கள் அனைவருடனும் இளம் படைப்பாளிகளும் வாசகர்களும் கலந்துரையாட வேண்டும். இளம்வாசகர்களுக்கு இருக்கும் தயக்கங்களை நான் அறிவேன். அத்தயக்கங்களை வென்று அவர்கள் அறிமுகத்துக்கும் உரையாடலுக்கும் முயலவேண்டும்.

இதையொட்டி ஒன்று சொல்வதற்கிருக்கிறது. பல இளம் படைப்பாளிகள் “நான் இப்ப என்னை எப்டி அறிமுகம் செஞ்சுக்கறது? நான் இப்ப சொல்லும்படியான ஒரு ஆள் இல்லை. அதனாலே யார்கிட்டையும் அறிமுகம் பண்ணிக்கலை. நானும் ஒரு ஆள்னு ஆன பின்னாடி பேசுறேன்” என்று சொல்வதுண்டு. உண்மையில் இது தன்னடக்கம்போல தோன்றினாலும் வெறும் ஆணவமே. அதை நாமே நம்மைக் கூர்ந்து கவனித்தால் உணரலாம்.

எண்ணிப்பாருங்கள், நாம் ஓர் இலக்கியப்படைப்பாளியிடம் ஏன் வெறும் வாசகனாக, இலக்கிய ஆர்வலராக அறிமுகம் செய்துகொள்ளக் கூடாது? ஏன் நாமும் ஒரு ‘ஆள்’ ஆக இருந்தாகவேண்டும் என நினைக்கிறோம்? வாசகனாக, சாமானியனாக நின்றிருக்க நம்மை தடுப்பது எது? என் இளமையில் மேதா பட்கருடனோ சுந்தர்லால் பகுகுணாவிடமோ ஜெகன்னாதனிடமோ லாரி பேக்கரிடமோ அண்ணா ஹசாரேயிடமோ நான் சென்று அறிமுகம் செய்துகொள்ளும்போது வெறும் வாசகனே. அதீன் பந்த்யோபாத்யாயவை, சிவராம காரந்தை  பஷீரை வெறும் வாசகனாகவே சந்தித்தேன். க.நா.சுவை நான் சந்திக்கும்போது அவருக்கு என் எழுத்தைப் பற்றி தெரியாது, நான் சொல்லிக்கொள்ளவுமில்லை. அவை என் நினைவுப்புதையல்கள் இன்று. என்னை உருவாக்கிய களங்கள் அச்சந்திப்புகள்.

இலக்கிய உரையாடல்கள் எல்லாமே கல்விதான். அதன் பெறுபயன் நமக்கே. நம் வெற்று ஆணவத்தின் விளைவான தயக்கத்தால் அதைத் தவிர்த்தால் இழப்பும் நமக்கே. கூடுமானவரை செவிகொடுக்கவும் உரையாடவும் முயல்வோம். நாம் சாதிக்கையில் நமக்கான மேடைகள் அமையும் என்பதை உணர்வோம். இன்று விஷ்ணுபுரம் மேடையில் எழுத்தாளர் என அமர்ந்திருப்பவர்கள் பலர் வாசகர்களாக சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தவர்களே.

எங்கள் விழாக்களில் முதன்மையிடம் வாசகர்கள், அரங்கத்தில் இருப்பவர்களுக்கே. நிகழ்வு அவர்களுக்குப் பயனுள்ளதாக அமையவேண்டும். ஆகவே எக்காரணத்தாலும் வகுத்தநேரம் மீறி எவரையும் பேச விடுவதில்லை. வாசகர் சந்திப்புகளின் நோக்கம் அந்த எழுத்தாளரின் கருத்தை அறிவதுதான். ஆகவே மிகச்சுருக்கமான வினாக்கள், பொருத்தமான விவாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வருகையாளர்கள், அந்நேரத்தை தாங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பெரும்செலவு பிடிக்கும் விழா இது. அச்செலவை வாசகர்களிடமிருந்தே பெற்றிருக்கிறோம். சொந்தப்பணத்தையும் செலவிடுகிறோம். ஆகவே முடிந்தவரை பயனுள்ளதாக விழா அமையவேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதற்கு இதுவரை வாசகர்களும் எழுத்தாளர்களும் பெரும் ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்கள். இனிமேலும் அது தொடரவேண்டும்

இதை ஒவ்வொரு நண்பருக்கும் என் தனிப்பட்ட கோரிக்கையாகவும் முன்வைக்கிறேன்.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரை1879: ஆசியாவின் ஒளி, நூல் பகுதி
அடுத்த கட்டுரைவிக்கிபீடியாவிற்கு வெளியே