ஜா.தீபா – கடிதங்கள்-4

ஜா தீபா- விக்கிப்பீடியா

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

https://www.vishnupurampublications.com/

ஜா.தீபா கடிதங்கள்

ஜா.தீபா கடிதங்கள்-2

ஜா தீபா கடிதங்கள் 3

இனிய ஜெயம்

விஷ்ணுபுரம் நாவலுக்கு 25 வயது. கிட்டத்தட்ட அதில் பாதி வயது விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு. நினைக்க நினைக்க தித்திப்பது விஷ்ணுபுரம் நாவலில் துவங்கி அகத்திலும் இந்திய நிலத்திலுமாக நான் சென்ற தொலைவு. எண்ண எண்ணப் பரவசம் அளிப்பது விழா வழியே நான் சந்திக்க நேர்ந்த எழுத்தாளர் சிவப்ரகாஷ் முதல் இக்கா வரையிலான ஆளுமைகள் உடன் கழித்த நேரம். இதோ விக்கி அண்ணாச்சிக்கு அடுத்த விழா. உண்மையில் தமிழ் நிலத்தின் மொத்தக் கவிகளும் கூடிக் கொண்டாட வேண்டிய விழா. அண்ணாச்சி விமர்சன மதிப்புரை அளிக்காத முக்கிய நவீன தமிழ் இலக்கிய கவிஞர் நூல் என ஒரு சிலவே எஞ்சும். அண்ணாச்சியை முதன் முறையாக பார்க்கப் போகிறேன். இரண்டு வருடம் கழித்த நண்பர்கள் சந்திப்பு. இம்முறை விழாவில் நான் (வழக்கம் போல கேள்விகள் கேட்டு கதற வைப்பது)  ‘பங்கேற்க’ போவதில்லை. ‘பார்வையாளன்’ மட்டுமே.ஒரு ஓரமாக அமர்ந்து விழா கொண்டாட்டம் மொத்தமும் வேடிக்கை பார்க்க முடிவு செய்திருக்கிறேன். இரண்டு நாட்கள் ஒரு இலக்கியத் திருவிழாவை வேடிக்கை பார்க்க வேண்டும். அப்படி ஒரு தருணம் இதுவரை எனக்கு அமைந்ததே இல்லை. எனவே அந்த வேடிக்கை பார்க்கும் குதூகல அனுபவம் அதற்காகவே இம்முறை வருகிறேன்.

விழா விருந்தினர் எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக அவர்கள் எழுத்துக்களை மீண்டும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த வரிசையில் ஜா. தீபா அவர்களை முதன் முறையாக வாசிக்கிறேன். முதல் கதையாக ஒற்றைச் சம்பவம் சிறுகதையை, முதல் எஸ் மற்றும் இரண்டாவது சக்திவேல் இருவரது பார்வைக் கோணம் வெளியான கடிதங்களை வாசித்த பிறகு மறுமுறை வாசித்தேன்.

முதல் கடிதத்தில் கதையிலிருந்து ஒரு கற்பனையை உருவாக்கிக்கொண்டு அதன் வழியே வாழ்க்கைக்குள் சென்று பார்க்கும் நோக்கு தொழில்படுகிறது என்றால், இரண்டாம் கதையில் தனது சொந்த வாழ்விலிருந்து கதைக்குள் சென்று, அக்கதை பேசும் சிக்கலை அணுகுகிறது.

முதல் கடிதத்தில் இக் கதையின் தொழில்நுட்பம்  சார்ந்து சொல்லப்பட்ட கருத்துக்களில் அப்படி ஒரு ‘வாய்ப்பாடு’ வழியாக  இலக்கியக் கதைகளை அணுகுவதில் உள்ள ‘எல்லைகள்’ துலங்குகிறது.

நாஞ்சில் நாடனின் யாம் உண்பேம், அழகிரிசாமியின் ராஜா வந்திருந்தார், பஷீரின் ஜென்ம தினம் இவை எல்லாம் தொழில் நுட்பங்கள் மீது அக்கறை கொண்ட கதைகளா என்ன? அது எதை பேசுகிறதோ அதை தொட்டு மீட்டி உச்சத்தில் நிறுத்த வில்லையா? கடிதம் குறிப்பிடும் கதையின் ‘வெளிப்பாடு’ அது பிரச்சார தொனி எனும் விமர்சனம் இத்தகு வாய்ப்படுகள் வழியே கதையை அணுகுவதால் நிகழும் எல்லைகளில் மற்றும் ஒன்று. ஒரு வக்கீல் உங்களை விசாரித்தால் ‘உங்கள் தரப்பு’ நியாயத்தை மட்டுமே சொல்லுவீர்கள். ஒரு போலீஸ் உங்களை விசாரித்தால் ‘உங்கள் தரப்பு’ உண்மையை மட்டுமே சொல்லுவீர்கள். அதுவே இக்கதையிலும் உள்ளது. இதில் உள்ளது மணிமாலா தரப்பு. அந்த மணிமாலா தரப்பு எதுவோ அதைப் பற்றிய, அதை மட்டுமே மையம் கொண்ட கதை. கதையில் இந்த தரப்பு, இந்த மையம் பேசப்பட்ட வெளிப்பட்ட விதம் அதை மதிப்பீடு செய்ய, அதன் வாதமாக அதற்கு எதிரான மற்றொரு மையம் கதைக்குள் பேசப்படவில்லை என்பது திறனாய்வு வாதம் ஆகாது.

இரண்டாவது கடிதத்தில் உள்ளது ஒரு தன்மைய நோக்கு. இந்த நோக்கு அக் கதையின் ‘சரியான’ இலக்கிய இடம் எதுவோ அதை காண்பதில் எல்லையை வகுத்து விடும்.

இவ்விரு பார்வைகளுக்கும் இடையே வைத்து ஒற்றைச் சம்பவம் கதையை மதிப்பிட்டால் நான் இவ்வாறு சொல்லுவேன். ஒற்றைப் படைத் தன்மை கொண்ட கதைகளை எழுதக்கூடாது என்ற இலக்கியத் தொழில்நுட்ப  விதிகள் ஏதும் இல்லை.கதை அது கையாளும் கருப்பொருளை பரிசீலித்து அது பண்பாட்டின் எந்த உயரத்தை சென்று தொடுகிறது, அல்லது மானுடம் என்பதின் அடி வண்டலை எந்த ஆழம் வரை சென்று தோண்டுகிறது என்பதை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். அதற்கு இயைந்த தொழில் நுட்பம் எதுவோ அதுவே அக் கதைக்கான தேவை.

இந்தக் கதையில் அது கையாளும் சிக்கல் முக்கியமானது. முக்கியமானது தானே தவிர தனித்துவம் கொண்ட ஒன்று அல்ல. இதே கருப்பொருள் முன்னர் பல முறை கையாளப் பட்டிருக்கிறது. இப்போது நினைவில் எழுவது ஜெயகாந்தன் எழுதிய ‘கருணையினால் அல்ல’ நெடுங்கதை.

இக் கதை பேசும் சிக்கல் வாசகரை கேளிக்கை செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல. அது அக்கதையின் ஆசிரியரை அலைக்கழிக்கும் உண்மையான சிக்கல். அந்த சிக்கலை வெளிப்படுத்த அவர் தேர்வு செய்த களமே இக் கதை சூழல்.

இக் கதை (ஒற்றைச் சம்பவம்) பேசிய இதே சிக்கல்கள்களை  பேசிய முந்தைய கதைகளில் இருந்து இக்கதை வேறுபட்டு, இதே சிக்கலின் புதிய கோணங்களை திறக்க இயலாமல் போனதன் முதல் காரணம் இக் கதையின் ‘சுருக்கம்’. குறைந்த பட்சம் குறுநாவலாக எழுத்தப்பட்டிருக்க வேண்டிய கதை. கதைக் கரு கோரும் விரிவு அதைக் கையாண்டால் மட்டுமே அக் கதைக்குள் ‘ஆர்க்’ என்று சொல்வோமே ‘பரிணாம மாற்றம்’ அது நிகழும். அந்த மாற்றம் நிகழாததே இக் கதையின் மைய பலவீனம்.

இரண்டாவது காரணம். பாயிண்ட் ஆப் வியூ. இக் கதை ‘நான்’ என்று துவங்கி கதையின் நாயகியின் சொல்லாகவே சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படி சொல்லப்பட்டிருந்தால் அவள் ‘உள்ளே’ என்னவாக இருக்கிறாள் அதே சமயம் ‘வெளியே’ என்ன சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என்பதை சித்தரிப்பதன் வழியே இக் கதை கையாளும் சிக்கலின் ஆழத்துக்கு ஆசிரியர் எளிதாக இறங்கிச் சென்றிருக்க முடியும்.

என்னளவில் இவ்விரு பலவீனங்கள் கடந்து கதையில் இயங்கும் கருப்பொருளின் உண்மைத் தன்மை, அதன் மீதான ஆசிரியரின் தீவிரம் இவ்விரண்டு மட்டுமே போதும் இக் கதையை தீவிர இலக்கிய வட்டத்துக்குள் நிறுத்த.

ஜா. தீபா அவர்களின் பிற கதைகளை இனிதான் வாசிக்க வேண்டும். மீண்டும் ஒரு கொண்டாட்ட விழா வருகிறது. அங்கே சந்திப்போம்

கடலூர் சீனு

 

அன்புள்ள ஜெ

 

ஜா.தீபாவின் கதைகளை வாசித்தேன். அவருடைய தொகுதியையும் வாங்கி வாசித்தேன். நான் வாசித்த அவருடைய முதல் கதை வாஞ்சிநாதனைப் பற்றியது. மறைமுகம். அதை வாசித்ததும் அடடா என்று இருந்தது. இன்றைக்கு கதை எழுதுபவர்களில் இருக்கின்ற மிகப்பெரிய சிக்கல் என்பது விகடன் வகை கதைகளின் பாதிப்புதான், நடையில் அது தெரியும். இவர்கள் மொழி உருவாகும் காலகட்டத்தில் வாசிப்பது இந்தக்கதைகளைத்தான். அவற்றின் மொழிநடை உள்ளே போய் உட்காந்துவிடுகிறது. அதை வெளியேற்றுவதுதான் இன்றைக்குக் கதை எழுதுவதிலுள்ள மிகப்பெரிய சவால். அதற்கு ஆழமாக இலக்கியப்படைப்புக்களை வாசிக்கவேண்டும். சொந்த நடையை திட்டமிட்டு மாற்றவேண்டும். அதிலுள்ள க்ளீஷேக்களைக் களையவேண்டும். இந்தக்கதையில் அதெல்லாம் இல்லை. அற்புதமான இலக்கியக் கதை. கதையிலே கருத்து சொல்லவில்லை. சொல்லப்பட்ட கதை கதைக்குள் கதையாக இருக்கிறது. உணர்வுகள் மென்மையாகவும் பூடகமாகவும் இருக்கின்றன. அழுத்தலான நடை.

ஆனால் அதன்பின் நான் வாசித்த அவருடைய கதைகள் எல்லாமே கொஞ்சம் ஏமாற்றம்தான். அவற்றில் எல்லாம் விகடன் நடையின் நெடி உள்ளது. பெரும்பாலான கதைகள் ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை கதாபாத்திரம் வழியாக வலியுறுத்தும் கதைகள். இந்தக்கதைகள் பற்றிய என் எண்ணம் இவற்றில் வாசகனை குறைத்து மதிப்பிடும் பார்வை உண்டு என்பதுதான். இந்தக் கருத்து வாசகனுக்கு தெரியாது, நாம் சொல்கிறோம் என்று ஆசிரியர் நினைக்கிறார். அந்த நினைப்பே தவறானது. வாசகனும் ஆசிரியன் அளவுக்கே தெரிந்தவன். அவனும் உலக இலக்கியம் வாசித்தவன். நான் ரேமண்ட் கார்வரின் வாசகன். எனக்கு கதையில் இருந்து உணர்ச்சிகளின் நூதனத்தன்மைதான் வேண்டுமே ஒழிய ஆசிரியரின் அபிப்பிராயங்கள் அல்ல. மறைமுகம் ஜா தீபா வந்தடைந்த சிறந்த புள்ளியாக இருக்கலாம். அவர் அதிலிருந்துதான் மேலே செல்லவேண்டும்.

 

ஆர்.ஸ்ரீனிவாஸ்


 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 

முந்தைய கட்டுரைதூர்வை எனும் நாவல்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன் -நாடோடியின் கால்த்தடம்