விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ்
2021 ஜனவரி இறுதியில், நாடெங்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் இயக்கம் மூன்று நாட்கள் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்த இந்த இயக்கம், 17 கோடிக் குழந்தைகளுக்கு மூன்று நாட்களில், போலியோ நோய்த்தடுப்புச் சொட்டு மருந்தை கொடுத்துச் சாதனை செய்தது. 24 லட்சம் தன்னார்வலர்கள், 1.7 லட்சம் கண்காணிப்பாளர்கள், உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், ரோட்டரி மற்றும் தன்னார்வல நிறுவனங்கள் பங்கு பெற்ற மகத்தான நிகழ்வு.
இது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவில் மிகப் பெரும் சமூக இயக்கமாக நடைபெற்று வருகிறது. 1980 களில், உலகின் 70% போலியோ நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவில் இருந்தார்கள். 20 ஆம் நூற்றாண்டில் இந்தியா காலடி எடுத்து வைக்க வேண்டுமானால், ஆரோக்கியமான குழந்தைகள் இருப்பது முக்கியம் என்பதை அரசு உணர்ந்தது.
டிப்தீரியா, கக்குவான், டி.பி, போலியோ, மீஸில்ஸ், டெட்டனஸ் என அன்று இந்திய மக்களைப் பெரிதும் பாதித்துக் கொண்டிருந்த நோய்களுக்கெதிரான தடுப்பூசிகளைப் பெருமளவில், இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாகப் போட வேண்டும் என்னும் கொள்கை முடிவை அரசு எடுத்தது.
அன்று, இந்தியாவில், மிகச் சில தடுப்பூசிகளே உற்பத்தி செய்யப்பட்டன. பெரும்பாலான தடுப்பூசிகள், வெளிநாட்டில் இருந்தது அதிகச் செலவில் இறக்குமதி செய்யப்பட்டன. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டுமெனில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் தேவைப்படும். இது அந்நியச் செலாவணியைக் கோரும் செயல் என உணர்ந்து, இந்தியாவிலேயே தடுப்பூசிகளைத் தயாரித்துக் கொள்ள அரசு முடிவெடுத்தது.
ராஜீவ் காந்தி அரசு, சாம் பிட்ரோடா என்னும் தொழில்நுட்ப வல்லுநர் தலைமையில், தொழில் நுட்ப இயக்கம் என்னும் ஒரு புதிய அணுகுமுறையை முன்னெடுத்தது. குடிநீர், தடுப்பூசி, எண்ணெய் வித்துக்கள், தொலைத்தொடர்பு, கல்வி என்னும் துறைகளில் பெரும்பாய்ச்சலை நிகழ்த்த வேண்டும் என்னும் நோக்கத்துடன், திட்டங்கள் வகுக்கப்பட்டன.
தடுப்பூசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நோக்கத்தோடு ரஷ்யா, ஃப்ரான்ஸ் நாடுகளின் உதவியோடு முதலில் போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசிகளைத் தயாரிக்கத் தொடங்கியது அரசு. உயிர்த் தொழில்நுட்பத் துறை என்னும் துறை புதிதாக உருவாக்கப்பட்டு, பேராசிரியர் எம்.ஜி.கே மேனன் தலைமையில் திட்டங்கள் உருவாகத் தொடங்கின.
இதில், தடுப்பூசித் திட்டம், குறிப்பாக போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தை அரசின் தரப்பில் இருந்து உருவாக்கி, அதை மாநில அரசுகளின் துணையுடன் நிர்வகிக்கும் பொதுநலத்திட்டத்தை முன்னெடுக்க உதவியாக இருந்தவர் ஜெய்ராம் ரமேஷ். அனைவருக்குமான இலவசத்தடுப்பூசி இயக்கம், பல அரசுகளைத்தாண்டி, இந்தியாவின் மிக வெற்றிகரமான பொதுநலத்துட்டங்களுள் ஒன்றாக மாறியது. 2013 ஆம் ஆண்டு, இந்தியாவில் போலியோ நோய் ஒழிக்கப்பட்டது.
ஜெய்ராம் ரமேஷ் 1954 ஆம் ஆண்டு சிக்மகளூரில் பிறந்தவர். தந்தை ரமேஷ் மும்பை ஐஐடியில் கட்டுமானத் துறைப் பேராசிரியராக இருந்தார். சிறு வயதில், ஜவஹர்லால் நேருவின் அறிவியல் அணுகுமுறையின் பால் ஈர்க்கப்பட்டவர். பால் சாமுவேல்சன், கன்னர் மிர்டால் போன்ற பொருளாதார அறிஞர்களின் புத்தகங்களை இளம் வயதிலேயே படித்திருந்தார். அவரின் உலகப் பார்வையை அவைப் பெருமளவில் பாதித்தன. மும்பை ஐஐடியில் இயந்திரவியல் படித்தவர், மேற்படிப்புக்காக, தன் துறையை விடுத்து, பொதுநலத் திட்டம் மற்றும் மேலாண்மைத் துறையைத் (Public Policy and Public Management) தேர்ந்தெடுத்து, அமெரிக்காவின் கார்னகி மெல்லான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அதன் பின்னர், முனைவர் பட்டம் படிக்கும் நோக்கத்தில், மாசாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். குடும்ப நெருக்கடி காரணமாக, படிப்பைத் தொடர முடியாமல், இந்தியா திரும்பினார்.
இந்திய அரசாங்கத்தில் பொதுநலத் திட்டங்களை உருவாக்கும் பணியில் 1979 ஆம் ஆண்டு சேர்ந்து தொழில்துறை, சக்தி, திட்டக்குழு என பல்வேறு துறைகளில் பணிபுரிந்தார். சாம் பிட்ரோடாவின் தொழில்நுட்ப இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தார். வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில், பிரதமரின் விசேச அலுவலராக (Officer on Special Duty) பணி புரிந்தார்.
1991 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர், பி.வி.நரசிம்மராவின் அலுவலத்திலும், விசேச அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடிவெடுத்த நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கினார். ஆனால், முக்கியமான தொழில் துறையைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள முடிவெடுத்தார். ஜெய்ராம் ரமேஷை, புதிய தொழில்கொள்கையைப் பற்றிய ஒரு திட்டக் குறிப்பை எழுதச் சொன்னார்.
(1988 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணிச் சிக்கல் பெரிதாகத் தொடங்கிய போதே, நாட்டின் திட்ட உருவாக்குநர்கள், மற்றும் பொருளியல் அறிஞர்களிடையே, பொருளாதாரக் கொள்கைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்பது பற்றிய ஒருமித்த கருத்துகள் உருவாகத் தொடங்கியிருந்தன. இடது சாரித் தரப்பில் இருந்தது இதற்கான எதிர்ப்பும் இருந்தது. வி.பி.சிங் காலத்திலேயே, பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்வைக்கும் ஒரு திட்ட வரைவை செயலர் மாண்டெக் சிங் அலுவாலியா உருவாக்கியிருந்தார். அது, அதிகார வளாகங்களில், ‘எம் டாக்குமெண்ட்’, என ரகசியமாக அழைக்கப்பட்டது)
ஜெய்ராம் ரமேஷ், திட்டக் குழுவின் இன்னொரு உறுப்பினரான ராகேஷ் மோகனுடன் இணைந்து, ஒரு புதிய தொழிற் கொள்கைத் திட்ட வரைவை எழுதி நரசிம்ம ராவிடம் சமர்ப்பித்தார். அது இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வழியே, நரசிம்மராவ் அரசின் பட்ஜெட் வெளியாகும் அன்று காலை கசிய விடப்பட்டது.
பட்ஜெட் பாராளுமன்றத்தில் பாசாகி விட்டாலும், கட்சியில் பெரும்பூகம்பம் வெடித்தது. நரசிம்மராவின் அரசியல் எதிரிகள், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் காங்கிரஸ் கட்சியில் சோசலிசக் கொள்கைகளுக்கு எதிராக உள்ளன என, பல்வேறு வகைகளில் முட்டுக் கட்டைகள் போட்டார்கள். அரசின் திட்டங்கள் மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என நரசிம்மராவ், சிதம்பரம் இருவரைத் தவிர, மந்திரிசபையில் மற்றவர்களால் முடிவெடுக்கப்பட்டது.
அந்தப் பொறுப்பு ஜெய்ராம் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி, படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் கனவு என மானே தேனெ பொன்மானே எல்லாம் போட்டு, முதலில் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைவையே சிற்சில மேலோட்டமான மாற்றங்களுடன் மீண்டும் மந்திரிசபையில் சமர்ப்பித்தார். இம்முறை அது பலத்த கரகோஷத்துக்கிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதற்குப் பிறகு, அரசின் பல்வேறு துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். 1996-98 ஐக்கிய முன்ணணியின் நிதியமைச்சரான ப.சிதம்பரத்தின் ஆலோகராகப் பணியாற்றினார்
ஜெய்ராம் ரமேஷ் என்னும் அரசியல்வாதி /அமைச்சர்:
2004 பாராளுமன்றத் தேர்தல்களில், காங்கிரசின் தேர்தல் திட்டக்குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தார். தேர்தல்களில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், தேசிய ஆலோசனைக் குழுவின் (National Advisory Council) உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இந்தத் தேசிய ஆலோசனைக் குழு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல் திட்டத்தை வகுத்தது. அதன் முக்கியக் குறிக்கோள்கள், பெருமளவில் மக்கள் நலத்திட்டங்களையும் உழவர்கள் மேம்பாட்டுக்கும் புதிய திட்டங்களையும் வகுப்பதாகும்.
இதன் உறுப்பினர்களாக, சிறந்த அரசு நிர்வாகிகள் (என்.சி.சக்சேனா), பொருளாதார அறிஞர்கள் (ஜான் ட்ரெஸ்), மக்கள் நல தன்னார்வலத் தலைவர்கள் (அருணா ராய்), தொழிலதிபர்கள் (அனு ஆகா), வேளாண் அறிஞர்கள் (டாக்டர்.எம்.எஸ்.ஸ்வாமிநாதன்) சூழலியல் அறிஞர்கள் (மாதவ் காட்கில்) போன்ற பல துறைகளின் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதன் தலைவரான சோனியா காந்தி, கேபினட் அந்தஸ்தைக் கொண்டிருந்தார். எனவே அமைச்சரவைக் குறிப்புகள் அனைத்தும் சோனியா காந்திக்கும் செல்லும் என்னும் அளவில், அவர் அரசு நிர்வாகத்திலும் இருப்பார் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமரிசித்தன. வழக்கமான அரசு ஆதரவு நிலையை எடுக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிக்கைகளும் இதைக் கடுமையாக விமரிசித்தன.
இந்தத் தேசிய ஆலோசனைக்குழு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மிக முக்கியமான மக்கள் நலச் சட்டங்களை, திட்டங்களை உருவாக்கின. அவற்றுள் முக்கியமானவை:
- டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன் தலைமையிலான, உழவர்களுக்கான தேசியக் குழு
- தகவலறியும் உரிமைச்சட்டம் ஜூலை 2005
- ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செப்டெம்பர் 2005
- வன உரிமைச் சட்டம் டிசம்பர் 2006
- கல்வியுரிமைச் சட்டம், ஆகஸ்ட் 2009
- உணவுப் பாதுகாப்புச் சட்டம், செப்டெம்பர் 2013
- அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான சரியான நஷ்ட ஈடு வழங்கும் சட்டம் 2013
- மனிதர்கள் மனிதக் கழிவை அகற்றுதல் தடைச் சட்டம் 2013
இதில் ஸ்வாமிநாதன் கமிட்டி, உழவர்களுக்கான சரியான விலையைக் கொடுக்கும் ஒரு திட்ட வடிவைத் தயாரித்தது. ஆனால், இன்றுவரைஅது சரியாக நிறைவேற்றப்படவில்லை.
அதையடுத்து இயற்றப்பட்ட 7 சட்டங்கள், இது வரை இயற்றப்பட்ட சட்டங்களில் இருந்து அடிப்படையில் மாறுபட்டவை..அதுவரையில், மக்கள் நலச் சட்டங்கள், தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களாக கொண்டுவரப்பட்டன.. அதாவது, மக்களுக்குத் தேவை என்ன என்பதை அரசு உணர்ந்து, அதைப் பூர்த்தி செய்ய முற்படுவது.
ஆனால், 2004 முதல் 2014 வரையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டுவரப்பட்ட மேற்சொன்ன சட்டங்கள் அனைத்தும், மக்கள் உரிமைச் சட்டங்கள். இது ஒரு அடிப்படை மாற்றமாகும் (paradigm shift).
இதற்கு முன்னால் இருந்தவை திட்டங்கள்.. அரசு விரும்பினால் நிறைவேற்றலாம். விரும்பவில்லையெனில், யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், மேற்சொன்ன மக்கள்நலத் திட்டங்கள், பயனாளிகளுக்கான உரிமைச்சட்டங்கள். சட்டப்படி பயனாளிகளுக்கான நிவாரணம் கிடைக்கவில்லையெனில், அவர்கள், நீதி மன்றத்தை நாடும் உரிமையை இச்சட்டங்கள் சாதாரண மனிதருக்கு வழங்குகின்றன.
’ஆனால், இவை உரிமைச் சட்டங்களாகத் தொடக்கத்திலேயே திட்டமிடப்படவில்லை. இன்று பின்னோக்கிப் பார்க்கையில், அப்படி ஒரு ஒருங்கமைவு (retrospective coherence) உருவாகி வந்துள்ளது தெரிகிறது’, என நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.
வழக்கமாக மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி முன்னுரிமை கொடுக்கப்பட்டால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். பொருளாதார வளர்ச்சியடைந்த பிறகே மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி கிடைக்கும் என்பது போன்ற கருத்துக்களை இந்தக் காலகட்டம் தவறு என நிரூபித்தது. 2004 முதல் 2014 வரையிலான பத்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 7.7% வளர்ந்துள்ளது. இது இந்திய வரலாற்றில் இல்லாத ஒரு தசாப்த தொடர் வளர்ச்சி.
பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு என்ற போதும், இச்சட்டங்கள் அனைத்துமே, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டவை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்
உரிமைச் சட்டங்கள் என்னும் முறையை கொஞ்சம் விமரிசனப்பார்வையுடன் அணுகலாம்.. எடுத்துக்காட்டாக, சமூகத்தில், மக்களுக்கு வருடம் 100 நாள் திறனில்லா வேலையை (unskilled work), மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உரிமையாக வழங்குகிறது. இது கிடைக்கவில்லையெனில், வேலைவாய்ப்புக் கிடைக்காத ஒரு கிராமத்து மனிதர் கோர்ட்டுக்குப் போக முடியுமா என ஒரு விமரிசகர் கேள்வியெழுப்பலாம். நடைமுறையில் சாத்தியமில்லை. ஆனால், அவர்கள் சார்பாக ஏதேனும் தன்னார்வல நிறுவனம் நீதிமன்றம் செல்ல முடியும். இந்த சாத்தியமே, அரசுகளை இந்தத் திட்டத்தைக் குறைந்த பட்ச நாட்களேனும் நடைமுறைப்படுத்தும் கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.
அதே போல, தகவலறியும் சட்டம், குடிமக்கள் கேட்கும் தகவல்களை, குறித்த காலத்துக்குள் ஒவ்வொரு அரசு அலுலவரும் தந்தாக வேண்டும். இல்லையெனில், அதற்கு அபராதம் விதிக்கும் விதிகள் சட்டத்துள் உருவாக்கப்பட்டன.
இவ்விரண்டு சட்டங்களும், இந்தியச் சமூகத்தில் அரசியலில், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், உலகின் மிக முக்கியமான மக்கள் நல மேம்பாட்டுத் திட்டமாகச் சொல்லப்படுகிறது. பன்னாட்டு நிதியமைப்புகள், இக்காலகட்டத்தில் வறுமை பெருமளவு குறைந்து, கிட்டத்தட்ட 14 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்தார்கள் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
தகவலறியும் சட்டம், ஆளும்கட்சிக்குத் தீராத தலைவலியைத் தந்த ஒன்று. ஆளும் கட்சிகளின் ஊழல்களை வெளியில் கொணர இந்தச் சட்டங்கள் பெருமளவு உதவின.
2009 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. இந்த முறை, ஜெய்ராம் ரமேஷ், சுற்றுச் சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அவரது செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள் என, செயல்தளத்தில், அவருக்கு எதிராக நின்று பல போராட்டங்களில் கலந்து கொண்ட சுற்றுச் சூழல் செயல்பாட்டாளரான நித்யானந்த் ஜெயராமன் அவர்களைக் கேட்டேன். ஜெய்ராமுக்கு வேண்டப்பட்ட விரோதியான அவரது மதிப்பீட்டை கீழே தருகிறேன்.
’சுற்றுச் சூழல் அமைச்சராக, ஜெய்ராம் ரமேஷ், மிகவும் எளிதில் அணுகக் கூடியவராக இருந்தார். தனது கருத்துக்களில் உறுதியாக இருந்த அதே சமயத்தில், எதிர்த்தரப்பின் கருத்துக்களை, திறந்த மனதுடன் கேட்கக் கூடியவராக இருந்தார்.
அவர் அமைச்சராக இருந்த காலத்தில், இரண்டு முக்கியமான நடந்த இரண்டு முக்கியமான விஷயங்களை நான் குறிப்பிட வேண்டும்,
- மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் மற்றும் கடற்கரை நிர்வாகம் தொடர்பான சட்டங்களை உருவாக்குகையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று, பொதுமக்கள் குரல் கேட்பு நிகழ்வுகளை நடத்தினார். அது மக்களாட்சியின் மாண்பை மதித்த செயல்.
- அவரது காலத்தில் அவர் தொடங்கிய ஆய்வுகள் இந்தியச் சுற்றுச் சூழல் துறையில் மிக முக்கியமானவை. அதில், இந்தியக் கடற்கரையின் உயர் அலை எல்லை (Mapping of High Tide line) களை அளந்து குறித்தது மிக முக்கியமான செயலாகும். இன்று கடற்கரை ஆக்கிரமிப்புகளைக் கண்டறியப் பெரிதும் உதவுகிறது
அதேபோல, செயற்கை கோள் துணையுடன், இந்தியாவின் நீர் நிலைகள், நீர்ப்பாசனப் பகுதிகள், அபாயகரமான தொழிற் பகுதிகள் முதலியவற்றை அளந்து குறிக்கும் ஆய்வுகளைச் செய்து முடித்தார். இந்த அடிப்படைத் தரவுகள், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும், திட்டமிடுதலுக்கும் மிக முக்கியமானவை
7-8 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருந்தால், அவரைப் பற்றிய எனது மதிப்பீடு மிக எதிர்மறையாக இருந்திருக்கும். இன்றைய சூழலை வைத்துப் பார்க்கையில், அவர் ஒரு நல்ல சுற்றுச் சூழல் அமைச்சராக, சமூகத்தின் பல்வேறு எதிர்பார்ப்புகளையும் அணைத்துச் செல்பவராக இருந்தார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது’, என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.
ஆனால், ‘ஜல்லிக்கட்டு’, க்கான தடையும் இவர் காலத்தில்தான் நடந்தது. இது போன்ற பிரச்சினைகளில், இவர் மேட்டிமை நோக்கு கொண்டவர் என்னும் விமர்சனங்கள் எழுந்தன.
வரலாற்றாசிரியர்:
நமது பத்திரிக்கைகளின் தரம் என்பது மிக மேலோட்டமான மேட்டிமை வர்க்கத்தால் நிரப்பப்பட்டது. அவர்களின், தங்கள் பார்வையில், சமூக அரசியல்த் தளங்களில் நிகழும் வம்புகளைப் பற்றி எழுதுவதே பெரும்பாலான மக்களைச் சென்றடைகின்றன. சமகாலத்தில் நடந்த, நடக்கும் அரசியல், பொருளாதார நிகழ்வுகளின் உண்மையான பின்ணணி, அலகு போன்றவை சாதாரண மனிதர்களைச் சென்றடைவதில்லை.
சமகால அரசியல், பொருளாதாரம், சமூக மாற்றம் பற்றிய ஆழமான எழுத்துக்களும், விவாதங்களும் மிகவும் சீரிய அறிவார்ந்த ஏடுகளில், செறிவான மொழியில் நிகழ்கின்றன. அவையும் சாமானிய மனிதர்களைச் சென்றடைவதில்லை.
இந்த இரண்டு தளங்களுக்குமிடையில் மிகப் பெரும் இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியை இட்டு நிரப்பும் எழுத்துக்கள் ஜெய்ராம் ரமேஷ் அவர்களுடையது.
அறிவார்ந்த அபுனைவு எழுத்துக்களை, சுவையான நடையில், பொருட்சேதமில்லாமல் எழுதுவது பரவலான வாசகத் தரப்பைச் சென்றடையும் சாத்தியங்கள் கொண்டது.
அந்த வரிசையில், ஒரு முக்கியமான வரலாற்று எழுத்தாளராக மிளிர்பவர் ஜெய்ராம் ரமேஷ். இதுவரை ஏழு நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் நான்கு, அவர் அரசாங்கத்தில் பணிபுரிந்த அனுபவத்தின் பின்ணணியில் எழுதப்பட்டவை.
எளிமையான நடையில், சரித்திரத் தரவுகளின் பின்ணணியில், அவர் உருவாக்கும் சித்திரங்கள் இதுவரை பொதுவெளியில் பத்திரிக்கைகளால் உருவாகியிருக்கும் பிம்பங்களை உடைக்கின்றன.
Intertwined lives – Indira and Haksar என்னும் புத்தகத்தில், வங்காளப் போரில் அரசுத் தரப்பு எப்படிச் செயல்பட்டது என்பதை அவர் தரவுகளுடன் விளக்குகையில், பத்திரிக்கைகள் கட்டிய பிம்பங்கள் சரிவதைக் காண முடியும்.
எடுத்துக்காட்டாக, இந்திரா காந்தி, (1971 ஏப்ரலில்) மானெக்ஷாவை பங்களா தேஷ் மீது உடனடியாகப் படையெடுத்துச் செல்ல அவசரப்படுத்தியதாகவும், டிசம்பருக்கு முன்னால் செல்ல முடியாது என அவர் மறுத்ததாகவும் ஒரு நாடோடிக்கதை உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜெய்ராம் தரவுகள் மூலமாக வைக்கும் சித்திரம் முற்றிலும் வேறாக இருக்கிறது.
Indira – a life in nature என்னும் புத்தகம், இந்தியாவில் சுற்றுச்சூழல் நிர்வாகம் உருவான வரலாறும், இந்திய அரசாங்கம் எப்படி, இந்தத் துறையில் பல முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டது என்பது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அரசியலும், அரசாங்கமும் ஊழல் நிறைந்தவை என்னும் பிம்பமே பொதுவெளியில் உள்ளது. ஆனால், உண்மையில், அரசாங்கத்தின் திட்டங்கள் உருவாகும் தளங்களில், மிகச் சிறந்த அறிஞர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களின் பங்களிப்புகள், பொது வெளியில் அதிகம் பேசப்படாதவை. அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் பொதுவெளியில் பேசப்படுமளவுக்கு, எம்.ஜி.கே மேனும், ராஜா ராமண்ணாவும், எம்.எஸ்.ஸ்வாமிநாதனும், மாதவ் காட்கில்லும் பேசப்படுவதில்லை. அவர்களை நிர்வாகத்தில் அமர்த்திய முடிவுகளின் பின்ணணி அரசு நிர்வாகத்தின் செயல்திறனை நமக்குக் காட்டுகின்றன.
ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள், அரசின் கோப்புக் கருவூலங்களில் மட்கிக் கொண்டிருக்கும் ஏடுகளில் இருந்தது, பேசப்படாத பல பேரறிஞர்களின், நிர்வாகிகளின் பங்களிப்பை மிகச் சுவையான வரிகளில் பொதுவெளியில் வைப்பது மிக முக்கியமான பணியாகும்.
இதுவரை எழுதிய புத்தகங்களின் தளத்தில் இருந்தது விலகி, ’The light of Asia – The poem that defined Budhha’, என்னும் முக்கியமான ஒரு புத்தகத்தை மிகச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். பௌத்த மதத்தினால் ஈர்க்கப்பட்ட இவர் தன்னை இந்து-பவுத்தன் எனச் சொல்லிக் கொள்கிறார். தலாய் லாமாவின் ஆசியோடு வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம் விமரிசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் கூறும் நல்லுலகம் இதுவரை கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.